உறவுகள், கடிதம்

கணக்கும் காதலும்

அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு,

” கணக்கும்  காதலும் ”  அருமை!

“மணிவிழா / அறுபதாம் கல்யாணம்”  என்பது தாய்க்கும் தந்தைக்கும் நிகழ்வதன்றோ – அது ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் விழா என எப்படிச் சொல்வது? இதில் எங்கிருந்து ஆணுரிமை/பெண்ணுரிமை என்பதெல்லாம் வருகிறது? புரியவில்லை.

இருபதுகளில்* திருமண பந்தம் மூலம் தொடர்புறும் இரு தனிமனிதர்கள், ஒருமித்து இணையராய்ப் பயணித்து இல்லறக் கடமைகளை இனிதே ஆற்றி, கணவனும் மனைவியும் எனத்  தொடங்கி அன்னையெனத் தந்தையென விரிவு கொண்டு,  ஒருவரை ஒருவர் இட்டு நிரப்பி, அவரவர் பாதையில் கனியும் தொடர் பயணத்தின் ஒரு  மைல்கல் தானே அறுபதைக் கொண்டாடும் “மணிவிழா”.

திருமணம் என்றாகி குழந்தை(கள்) பிறந்து பெற்றோர் என்றான பின் தாயெனத் தகப்பனெனத் தன்னையளித்து பேணும் குடும்ப உறவில் ‘நான் ஆண் ‘ ‘நான் பெண்’ என்பது மெல்ல விரிந்து  “நாங்கள்”  என்றானதைத் தொட்டுக் காட்டும் சிறு நிகழ்வு  தானே “மணிவிழா”.

“காதலொருவனைக்   கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து” என்று வரும் பெண்ணும், ” ஏற்றத்திலும் தாழ்விலும் என்றும் உன்னுடன் ஒன்றாய்  இருப்பேன்” என்று சேரும் ஆணும், கைப்பிடித்தவன்(ள்) இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் இன்றும் என் காதலனே (காதலியே) என்று கனிந்ததின்  சின்னப்பிரகடனம் தானே “மணிவிழா”.

தனிமனிதர்களாய் இணைந்த இருவர் கொண்ட ஆளுமை விரிவின் தித்திப்பை நட்பும் சுற்றமும் கொண்டாடும் ஒரு வாய்ப்பே  “மணிவிழா”.  மேலும், நீங்கள் சொல்வது போல தாயின் அறுபதாம்/எண்பதாம் அகவை நிறைவையும் கொண்டாடுவோமே!

(கோவை விழாவில் மேடையில் மாலை மாற்றிய போது அருண்மொழியின் அழகிய கண்கள் – அருந்ததியைப் பார்ப்பது போல் மேலே மேலே சென்று மீண்டன. சியமந்தகக் கட்டுரையில் அவர் குறிப்பிட்ட “பெருநியதியின் பெருங்கருணையை” எண்ணி நன்றி கூறிக்கொள்கிறார் போலும் என்று நினைத்துக்கொண்டேன்.

“சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” சினிமாவின் விமர்சனக்  கூட்டம் பற்றிய கடிதங்களுக்கான பதில் ஒன்றில், “அதில் பேசிய ஒரு பெண்மணி நூறு பெண்களுக்குச் சமம். Believe me.” என்று நீங்கள் குறிப்பிட்டது வெகு அழகு.  புன்னகையுடன் வாசித்தேன்.)

அன்புடன்
அமுதா

அன்புள்ள ஜெ

ஏற்கனவே நான் உணர்ந்திருந்தது என்றாலும் உங்கள் வார்த்தைகள் ஆணித்தரமாக வந்து அறைவதுபோல் இருந்தன. உறவுகள் என்பவை பண்டமாற்று அல்ல. சேமிப்பும் அல்ல. அவை கொடுப்பதனால் மட்டுமே உருவாகின்றவை. கொடுக்கும் உரிமை மட்டும்தான் நமக்கு உள்ளது. எல்லா உயிர்களும் அதைத்தான் செய்கின்றன. விலங்குகள் கூட குட்டிபோட்டு வளர்க்கின்றன. உயிரைப் பணயம் வைத்து அவற்றை வளர்க்கின்றன. எதையும் எதிர்பார்ப்பதில்லை. உறவுகளிலுள்ள இன்பம் என்பது இயற்கையின் நியதி ஒன்றை நாம் செய்கிறோம் என்பது மட்டும்தான். அதில் கணக்கு வைத்துக்கொள்வது இயற்கையுடன் கணக்கு வைத்துக்கொள்வதுபோல. அந்தக்கணக்குகள் நமக்கு புரியாது. மண்டையில் அடிவாங்க நேரிடும்.

எம். கணபதிராமன்

முந்தைய கட்டுரைஅஞ்சலி, பா.செயப்பிரகாசம்
அடுத்த கட்டுரைவலையிலும் வெளியிலும்