சாரு, கடிதம்

அன்புள்ள ஜெ,

சில வருடங்களுக்கு முன் ஈரோடு வந்திருந்தேன். அது ஒரு சாவு வீடு. வயதானவர்வீட்டின் வெளி அறையில் குளிர் பெட்டியில் உடல் வைக்கப்பட்டிருந்தது. பெட்டியைச் சுற்றி அவருடைய நான்கு பெண்களும் உறவினர்களும் அமர்ந்திருந்தனர். பையன்கள் மூவர் அறை வெளியிலும் வாசலிலுமாக சோகத்தில் நின்றுகொண்டிருந்தனர்.

அறைக்குள் சோகம் ஒரு பெருமழை போல அடர்ந்திருந்தது. தொடர்ந்த விசும்பல்கள், உறவின பெண்கள் உள் நுழையும் போது உறவின் நெருக்கத்தைப் பொறுத்து உயர்ந்து இறங்கும் அழுகை சத்தம். அறைக்கு வெளியே ஆண்கள் ஒவ்வொருவராக இறந்தவரின் மகன்களின் கைபிடித்து தேற்றுதல், சிலரின்நீதானே குடும்பத்துக்கு தைரியம் கொடுக்கனும்என்ற வார்த்தைகள். யாரோ ஒருவர் மற்றவரிடம்விறகு வாங்கி கொடுத்திட்டியாபோன்ற கேள்விகள், அடுத்த சொந்தத்தின் வருகையை அறிவிக்கும் பெருமழை என்று மிக வழக்கமான காட்சிகள். ஒவ்வொன்றிலும் பலகாலம் தொடர்ந்துவந்த சம்பிரதாயமான செயல்முறைகள்.

அப்படியிருந்த நேரத்தில் வெளிநாட்டில் வசிக்கும் அவருடைய மகள் வழிப் பேத்தி ஆறு வயது மதிக்கத்தக்க சிறுவனுடன் ஆட்டோவிலிருந்து இறங்கி அழுதுகொண்டே உள்ளே நுழைந்தாள். சத்தம் உச்சத்தில் கேட்டது. வெளியே ஆட்டோவின் அருகில் தனித்து விடப்பட்ட குழந்தை எதுவும் புரியாமல் சிறிது நேரம் விழித்து அம்மா சென்ற வழியில் அறைக்குள் நுழைந்தது.

துரு துருவென அலைபாயும் பால் வெள்ளைக் கண்கள் கொண்ட அந்த சிறுவன் உள்ளே சென்ற சில நிமிடம் எதுவும் புரியாமல் அதிர்ச்சியில் நின்றான். சுற்றிச் சுற்றிப் பார்த்தான். பிறகு ஆரம்பித்துவிட்டான்அடுத்தடுத்து சரமாரியான கேள்விகள். இது யார். எதற்கு உள்ளே படுத்திருக்கிறார். ஏன் எல்லோரும் அழுகிறார்கள், எதற்கு பூ போட்டிருக்கிறார்கள் என்று அழும் அவனது அம்மாவின் தாடையை இழுத்து சத்தமாக கேட்டான். மடியில் இழுத்து வைத்துக் கொள்ள முயன்றவளிடமிருந்து அந்த நொடியிலேயே குதித்து வெளியேறினான்.

எவராலும் ஒரு நிமிடம் கூட சிறுவனை இருத்தி வைக்க முடியவில்லை. நடந்து கொண்டிருப்பவரின் கையிலிருக்கும் கண்ணாடிக் குவளைத் தண்ணீர் போல தழும்பிக் கொண்டிருந்தான். அந்த குளிர் பெட்டியில் ஏறி உட்கார முயற்சிப்பதும், பேட்டியில போட்டிருந்த பூ மாலையை இழுத்துச் சுற்றி விளையாடுவதும், தண்ணீர் கொண்டுவா என்று அவனுடைய அம்மாவை இழுப்பதுமாக அந்த இடத்தின் தன்மையை நிமிடத்தில் மாற்றிவிட்டான்அவனுடைய சேட்டைகள் அந்த இடத்திற்கு பொருந்தாதவை போலத் தோன்றினாலும் குழந்தைக்கே இயல்பான துறுதுறுப்பு, எந்த தடையும் இல்லாது மனதிலிருந்து நேரடியாக கொந்தளித்து வரும் எண்ணங்கள், இறுக்கத்தை உடைக்கும் செயல்கள், மறுக்க இயலாத, அடிப்படையை புரட்டிப் போடும் கேள்விகள்.

சாருவை வாசிக்கும்போது நான் அத்தகைய அனுபவத்தை அடைகிறேன்.

சாரு நிவேதிதாவின்ஸீரோ டிகிரிசமூகத்தின் இறுக்கத்தை, காம எண்ணத்தை, சிந்தனையின் எப்போதுமாக இருக்கும் வழிமுறையைக் கேள்விகேட்கும் நாவல். சமூகபெரிய மனிதர்களின்கரையிடப்பட்ட சிந்தனைகளை உடைத்து, வெள்ளமென, திசையின்மையையே திசையாக கொண்ட நாவல்.

உள்ளே நுழைய முடியாமல் நீண்ட நாட்கள் கையில் இருந்தது. என் நண்பன் நிர்மல்அது ஒரு உருவம் அல்ல, உருவமே இல்லாத ஒன்று ஸீரோ டிகிரி கோணத்தில் நிற்க முயலும் நாவல்என்றான். அதன்பிறகே நாவலின் உள்ளே செல்ல முடிந்தது.

அடிப்படையில்சூர்யா மற்றும் அவந்திகாவின்கதைதான் நாவல் என்றாலும் அது அதன் முழுமை இல்லை. நாவலின் பெரும்பாலான பகுதிகள் தவ்வி தவ்வி செல்லும் வார்த்தைகளாக. வரைமுறை என ஒன்றில்லாத எண்ணங்களாக, வன்முறைகள், காம ஓட்டங்கள், வெறும் கனவுகள் என்று செல்லும் நீண்ட பகுதிகள்.

சூர்யா, முனியாண்டி, மிஸ்ரா நாவலின் கதை சொல்லி யார், நாவல் சொல்லும் சாராம்சம் என்ன அதன் தரிசனம் என்னகல்லூரி வரைபட நோட்டில், சோதனையின் விளைவாக குறித்த புள்ளிகள் கோடாக, வட்டமாக, சதுரமாக என்ற எந்த வடிவத்திலும் வராதபோது தவிக்கும் மாணவனாக எதையாவது கோர்த்துக்கொள்ள என் மரபான மனம் தர்க்கபூர்வமாக முயற்சி செய்து கொண்டே இருந்தது. உண்மையில் அந்த மனதின் தர்க்கத்தை கலைப்பது தானா அதன் நோக்கம்?.

உதாரணமாக நாவலில் தாயுமானவன் என்பவன், கைதிகளின் பிறப்புறுப்பை மெழுகுவர்த்தியால் பொசுக்கி, தீயால் உடற் சதைகளை வேகவைத்து, அதில் மிளகாய் பொடி தூவி, குதப்பிளவில் சூட்டுக்கோல் செருகி, பற்களை பிடுங்கி, மலம் தின்ன வைத்து, பன்றியை புணரச் செய்வதை எந்த வழியில் ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லை. இவை எல்லாம் நம் எண்ணத்தில், மனதின் ஓரத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் பிறழ்வுகளா. மனப் பிறழ்வடைந்த மனிதர்களின் சிந்தனைகள் இப்படித்தான் இருக்குமா.

இவையெல்லாம் புதுமைகள். இதுவரை நான் என் தெரிதல் என்று எண்ணியிருந்த என் எல்லைக்கு அப்பாற்பட்ட செய்திகள் அல்லது அனுபவங்கள்.

புதுமைப்பித்தனின்விபரீத ஆசைகொடுத்த அதிர்ச்சியும், யுவன் சந்திரசேகர் அவர்களின்குள்ளச் சித்தன் சரித்திரம்நாவலில்எழவு வீட்டுக்குள் காமம் ஏறும் என்று சொன்ன அய்யர்கொடுத்த அதிர்ச்சியும்ஸீரோ டிகிரிகொடுத்த அடியில் ஒன்றுமில்லை என்று ஆகிப்போனது.

சாரு என்ற மனிதரை அவரது அன்றாட எழுத்துக்களின் வழியாக நோக்கும்போது “நாவல்களைப் போல்தானே அவர்என்று தோன்றுகிறது. அதன் அடிப்படையில் ஸீரோ டிகிரி நாவலைப் புரிந்துகொள்ள முயல்கையில். “வானத்தில் (உலகியல்) பிடிமானம் இல்லாது நிற்க முயலும் மனம்என்று நினைத்துக் கொண்டேன்.

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா.

முந்தைய கட்டுரைபொற்செல்வன்கள்
அடுத்த கட்டுரைஎஸ்.டி.சுந்தரம்