ஒரு நாவல் எழுதத் தொடங்கியுள்ளேன். ‘மகுடம்’ அதன் தலைப்பு. பெருந்தெய்வங்களில் இருந்து சிறு தெய்வம், நாட்டார் தொன்மங்கள், கலைஞர்களின் வாழ்வு என நாவல் அமையலாம் என யோசித்திருக்கிறேன். முன் திட்டம் என எதுவும் இப்போதில்லை. ஆரம்பித்து இரண்டு அத்தியாயங்கள் எழுதியுள்ளேன். சிவனிலிருந்து சுடலை மாடன் எழுந்து வருவதும், சுடலை மாடனிலிருந்து கணியான் பிறந்து வருவதுமான ஒரு புனைவு.
நாவல் இனி எங்கே கூட்டிச் செல்லும் என்ற பரவசமும், பதட்டமும் ஒருங்கே உள்ளது. இனி வரும் நாட்களில் நாவலின் விசையோடே பயணம் செய்ய உள்ளேன். இத்தருணத்தில் தங்கள் அன்பையும், ஆசியையும் கோருகிறேன்.
நன்றி,
நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.
*
அன்புள்ள நவீன்
ஒரு நாவலை தொடங்குவதென்பது ஒரு புதிய வாழ்க்கையை தொடங்குவதுபோல. அந்த வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும், எப்படி முடியவேண்டும் என நீங்கள் முன்னரே முடிவுசெய்ய முடியாது. கூடாது. வாழ்க்கையை நம்பிக்கையுடன் உற்சாகத்துடன் அகக்கூர்மையுடன் தொடங்குவதே ஒரே வழி.
ஒவ்வொரு நாளும் எழுதுங்கள். எழுத்தை அதன்போக்கில் விடுங்கள். எழுதும்போது தேவையாக ஆகும் செய்திகளை சேகரியுங்கள். நாவல் எழுத ஆய்வும் எழுத்தும் ஒரே சமயம் நிகழவேண்டும். நாவலை கட்டுப்படுத்தாதீர்கள். அதுவே செல்லட்டும். அதன் போக்கில் விரியட்டும்.
ஏராளமாக எழுதிய பின் நாவலின் மையத்தை கண்டடைவீர்கள். உச்சத்தை அடைவீர்கள். அதன்பின் அந்த மையத்தின் அடிப்படையில் அந்நாவலின் கட்டமைப்பை உருவாக்குங்கள். தேவையில்லாதவற்றை நீக்குங்கள். நாவலாகிவிடும்.
வாழ்த்துக்கள். நாவல் எழுதுவதென்பது நாம் நம் வாழ்க்கையை ஒளியும் ஒழுங்கும் உள்ள ஒரு வாழ்க்கையாக மறுசித்தரிப்பு செய்துகொள்வது. நம்மை நாமே உருவாக்கிக் கொள்வது. நம் உலகையும் நாமே வடிப்பது
அதற்குரிய ஆற்றல் இருப்பதனால் நாவலெழுதும்போது நாம் தெய்வம்
ஜெ