அன்புள்ள ஜெ,
வனவாசம் சிறுகதையை மீண்டும் இன்று வாசித்தேன். அதனுடன் இணைத்து சூழ்திரு, வெண்கடல், கிடா, குருதி சிறுகதைகளையும் வாசித்தேன்.
இந்த ஐந்து கதைகளுக்கும் சரியான பின்புலமான சென்ற கால கிராம வாழ்க்கையே என்னைக் கவர்ந்தது. நானறியாத கிராம வாழ்க்கையின் இனிய தருணங்களை அனுபவிக்க மீண்டும் மீண்டும் நான் செய்வது இது. சுப்பையாவாக பிரிவின் துயரை, அனந்தனாக தந்தையின் கச்சிதமான அருகமைவை, பழனியாக காதலின் இழப்பை, சுடலையின் இயலாமையை, ஜெயனாக செல்லன் மனைவியின் கடைக்கண் பார்வையை பெறுவது என பெரும் உயிர்ப்புடன் வாழ்வுக்கணங்களில் இருப்பது அற்புதமானது.
இந்த சிறுகதைகளில் எவையேனும் திரைப்படமாக எடுக்க சாத்தியமுள்ளதா ?
சங்கரன்
*
அன்புள்ள சங்கரன்
வனவாசம் கதையை சினிமாவாக எடுக்கலாம்தான். உண்மையில் அதை இன்னொரு சினிமாவின் ஒரு பகுதியாக ஆக்கினேன். அதை நடிக்கும்படி பலரிடமும் கோரியும் எவருக்கும் ஆர்வமில்லை.
கதைகள் ஏராளமாக உள்ளன, ஆனால் சினிமாவாக அவற்றை ஆக்கப் பெருந்தடை அவை ‘கதைநாயகத்தன்மை’ கொண்டவை அல்ல என்பதே. நடிகர்கள் விரும்பமாட்டார்கள்.
அதேசமயம் தொலைகாட்சித் தொடர்களிலும் சினிமாக்களிலும் அனுமதியே இல்லாமல் இந்தக்கதைகளை தழுவி காட்சியமைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
ஜெ