தமிழ் விக்கி, கிறிஸ்தவர்கள்,ஆபிரகாம் பண்டிதர் -கடிதம்

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்

து. ஆ.தனபாண்டியன் 

அன்புள்ள ஜெ,

நலமா? இக்கடிதத்தில் தமிழ் விக்கி குறித்து சில எண்ணங்களை பகிர்ந்துக் கொள்கிறேன். இதனை எழுதுவதாகச் சொல்லி மிகுந்த கால தாமதமாகிவிட்டது. தமிழ் விக்கி பற்றி சொல்லும் முன் சிறிதே சொந்த கதை. மன்னிக்கவும். “ஆபிரகாம் பண்டிதர், தமிழிசை இயக்கத் தலைமகன்” என்ற தலைப்பிட்ட உங்கள் கட்டுரையும் அதிலிருந்த விக்கி இணைப்புகளும் இனிய ஆச்சர்யம்.

ஆபிரகாம் பண்டிதர் பற்றி நீங்களும் பிறரும் நிறைய எழுதியிருக்கிறார்கள் ஆதலால் அவரைப் பற்றி ஒரு விக்கி பக்கம் உருவானது ஆச்சர்யமல்ல. அதே கட்டுரையில் நீங்கள் ஆபிரகாம் பண்டிதரின் வழித் தோன்றலான டி.ஏ. தனபாண்டியன் குறித்தும் ஒரு விக்கி உருவாக்கி சுட்டி அளித்திருந்தது பெரும் ஆச்சர்யம். பொதுவாக பண்டிதர் பற்றி பேசத் தலைப்படும் யாரும் இன்றும் தஞ்சையில் “பண்டிதர் குடும்பம்” என்றறியப்படும் அவரின் வாரிசுகளைப் பற்றியோ அவர்களின் இசைப் பங்களிப்புப் பற்றியோ பேசுவதில்லை. அறிந்திருக்க கூட மாட்டார்கள் என்பதே நிஜம்.

என் சந்தோஷத்துக்கு காரணம் பண்டிதர் குடும்பத்துடனான அப்பாவின் நெருங்கிய நட்பு. தனபாண்டியனின் மகள் எங்களுக்கு பக்கத்து வீடு. அதுவுமல்லாமல் தனபாண்டியனின் மகன் துரைபாண்டியனும் அவர் மனைவி மல்லிகா பாண்டியனும் அப்பாவுக்கு நெருக்கமான நண்பர்கள். அக்குடும்பத்தார் எல்லோருமே கர்நாடக சங்கீதத்திலும் மேற்கத்திய செவ்வியல் இசையிலும் பெரும் தேர்ச்சிப் பெற்றவர்கள். அநேகர் அபாரமான பாடகர்கள்.

எண்பதுகளில் அப்பா முதலில் 2-in- டேப் ரெக்கார்டர் வாங்கிய போது அவர் வைத்திருந்த காலி டேப்புகளில், அக்காலத்தில் அவை சொற்ப பணமல்ல, நானும் என் தம்பியும் வானொலியில் வரும் சினிமா பாடல்களையும் கதை வசனத்தையும் டேப் செய்து விட்டோம். ‘இசை’ என்றாலே தமிழ்த் திரையிசை எனும் வளையத்துக்குள் நாங்கள் சிக்குண்டிருப்பது அப்பாவுக்குப் புரிந்தது. எல்லா டேப்புகளையும் துரைபாண்டியனிடம் கொடுத்து மேற்கத்திய செவ்வியல் இசையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புகளை பதிவுச் செய்யச் சொல்லி வாங்கி வந்து எங்களிடம் “இதையும் கேட்டுப் பாருங்கள்” என்றார். 80-களில் தஞ்சையில் David Oistrakh, Vivaldi, என்று பெயர்களையே அப்போது தான் கேள்விப் பட்டோம்.

எதிலும் அப்பாவுக்கு நேர்த்தி முக்கியம். ஒரு இசை துணுக்கை ரெக்கார்ட் செய்யும் போது இடம் போனாலும் பரவாயில்லை முழுத் துணுக்கும் ஒரே சைட்டில் (Side A / Side B) வருமாறு ஒலிப்பதிவுச் செய்ய சொன்னார். “டேய், இசையைக் கேட்கும் போது நடுவில் போய் அடுத்தப் பக்கம் மாற்ற வேண்டியிருந்தால் அனுபவம் சிதைந்து போகும்” என்றார். அப்பா இறந்த பின் தஞ்சை தூய பேதுரு ஆலயத்தில் தான் இறுதிச் சடங்கு. தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாது துரைபாண்டியன் அவர்கள் தானே வந்து பியானோ வாசித்தார். அற்புதமான மனிதர்கள்.

இப்படி பல எண்ணங்களை கிளர்ந்தெழச் செய்தது தனபாண்டியன் பற்றியப் பதிவு. தனபாண்டியன் அவர்கள் பாடி நேரில் கேட்டிருக்கிறேன். தஞ்சையில் தூய பேதுரு கோயில் கல்லறையில் தான் அவர் கல்லறையும் இருக்கிறது. அதில் இருக்கும் கல்லறை வாசகத்தில் “Exponent of Carnatic music; research. Scholar, devoutchristian” என்ற வரிகள் இருக்கும். அக்கல்லறையின் புகைப்படத்தை இக்கடிதத்துடன் இணைக்கிறேன். இது நான் 2019-இல் எடுத்தது. அக்கோயில் போன்ற 1-2 நூற்றாண்டுகள் பழமையான சர்ச் கல்லறைகளில் பல சுவாரசியங்கள் இருக்கின்றன. சென்னை கதீட்ரல் போன்ற கோயில் கல்லறைக்கு சென்று பாருங்கள். அது பற்றி தனியே எழுத வேண்டும்.

இப்போது நேரடியாக தமிழ் விக்கி பற்றி. சமீபத்தில் இரண்டு நண்பர்கள் கட்டண சுவருக்குப் பின் உள்ள பத்திரிக்கையில் இரண்டு அற்புதமான கட்டுரைகள் எழுதினார்கள். இருவரிடமும் சொன்னேன்,“இது போன்ற பத்திரிக்கைகளில் எழுதியப் பின் ஒரு கால அவகாசம் கொடுத்தப் பின், அடுத்த இதழ் வெளியாகும் போதாவது, பொது தளத்தில் இக்கட்டுரைகள் வெளிவருவது அவசியம். அப்படி வரும் கட்டுரைகள் தமிழ் விக்கி போன்ற தளத்தில் உசாத்துணைக்கும் நல்ல குறிப்புகள் எழுதப் படுவதற்கும் உதவும். உதாரணமாக என் சில கட்டுரைகள் முதலில் பத்திரிக்கையில் வெளிவந்தாலும் அவை பொதுவான என் தளத்தில் இருப்பதாலேயே தமிழ் விக்கியில் இரண்டு முக்கியமான ஆளுமைகள் பற்றிய குறிப்புகளில் அவை சுட்டிக் காட்ட முடிந்தது. வில்லியம் மில்லர் பற்றிய விக்கி பதிவில் அவருக்கு தலித்துகள் கல்விப் பற்றிய பார்வையும், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி சாதியப் பார்வைக் கொண்டவரல்ல என்பதற்கும் என் கட்டுரைகளை உசாத்துணையாக தமிழ் விக்கி சுட்டிக் காட்ட முடிந்தது அவை இன்று பொது தளத்தில் இருப்பதாலேயே, ஆகவே உங்கள் கட்டுரைகளை வெளியிடுங்கள் அல்லது என்னிடம் கொடுங்கள் உங்கள் பெயருடன் எந்த மாற்றமுமில்லாமல் நானே வெளியிடுகிறேன்” என்றேன். அப்படியான ஒரு கட்டுரை இந்த வாரம் வெளியிடுகிறேன்.

அந்த இருவரில் ஒருவரிடம், நீங்களும் மதிக்கக் கூடியவர் அவர், “நீங்கள் எழுதிய ஆளுமைப் பற்றி ஒரு பத்திரிக்கையில் நீளம் கருதியோ கட்டுக் கோப்பு கருதியோ விடுபட்ட தகவல்களையும் சேர்த்து நீங்களே தமிழ் விக்கியில் அந்த ஆளுமைக்கு ஒரு பக்கத்தை உருவாக்கலாம் அல்லது தமிழ் விக்கி குழுவினரை அனுகினால் யாரேனும் உதவக்கூடும்” என்று நேரடியாக எழுதவும் ஊக்கம் கொடுத்தேன். பார்ப்போம். கட்டுரைகள், பத்திரிக்கைகள் அல்லது கட்டண தளத்தில் வெளியானாலும், தாமதமாகவேனும் பொது தளத்தில் வருதல் அவசியம். இனி காலத்துக்கும் நீலகண்ட சாஸ்திரிய சாதியவாதி என்று யாரேனும் எழுதினால் தமிழ் விக்கி மூலம் அதற்கு ஒரு மறுப்பு சொல்ல முடியும். அப்படி ஒரு பங்காற்ற முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி. நாளை யாரேனும் என் கட்டுரைக்கும் மறுப்பு எழுதக் கூடும், அதன் தரத்தைப் பொறுத்து, தமிழ் விக்கி அதையும் அங்கீகரிக்கும் என்று அறிவேன்.

கீரனூர் ஜாகிர்ராஜா பற்றிய தமிழ் விக்கி அறிமுகம் தமிழ் விக்கிபீடியாவில் இருப்பதை விட மிக நன்றாக வந்திருக்கிறது. தமிழ் விக்கிபீடியாவில் இருக்கும் அவர் பற்றிய பக்கம் மிக சுருக்கமானது, அவரே எழுதியதென்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஆளுமை பற்றியும் தமிழ் விக்கி கட்டுக் கோப்பான சித்திரம் அளிக்கிறது. இது ஆரம்பம் தான். நிச்சயமாக போகப் போக இன்னும் பலர் பங்களிக்கும் போது மேலும் மெருகேறும். அதற்கான இடமும் இருக்கிறது.

சமீபத்தில் உங்கள் பழையக் காணொளி ஒன்று, கிறிஸ்தவ மதமாற்றம் குறித்து, மீண்டும் சுற்றலில் வந்திருக்கிறது. பலர் என்னிடமும் அனுப்பி “இப்பொது என்ன சொல்கிறாய்” என்றார்கள். எனக்கு அந்த காணொளியில் நீங்கள் பேசியதுடன் உடன்பாடே கிடையாது. அதையும் சொல்லி மேலும் சொன்னேன் (ஒரு பேஸ்புக் பதிவிலும் இதை எழுதினேன்),“அதை பேசிய அவரே தான் இன்று கிறிஸ்தவர்களே அறியாத பற்பல கிறிஸ்தவ ஆளுமைகள் பற்றியும் இஸ்லாமியர் பற்றியும் தமிழ் விக்கியில் அநேக பக்கங்கள் எழுதி குவித்துக் கொண்டிருக்கிறார். அவரின் அந்த வீடியோ துணுக்கு இன்னும் ஒன்றிரண்டு வருடத்தில் காணாமல் போகும் ஆனால் இப்பணி காலத்துக்கும் நிற்கும். அந்த வீடியோவில் உள்ள கருத்துகள் எனக்கு ஆட்சேபகரமானவையே ஆனால் அது மாதிரி பேசவும் எழுதவும் அன்றாடம் லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் பேச்சும் எழுத்தும் நிலைக்காது. தமிழ் விக்கியில் கிறிஸ்தவப் பங்களிப்புகள் குறித்து எழுதப்படும் கட்டுரைகள் பல்லாண்டு நிற்கும், பேசும். ஒரு கிறிஸ்தவ பங்களிப்பாளரின் பெயரிடப்பட்ட வீதி இன்று பெயர் மாற்றம் பெற்றிருப்பதை பதிவுச் செய்ததே அவர் தான்”. உடனே “கிறிஸ்தவர்களைப் பற்றி கட்டுரைகள் எழுதுவதால் சொல்கிறாய்” என்பார்கள். இங்கே சர்ச்சையின் மையம் தமிழ் கிறிஸ்தவர்கள் என்பதால் சொல்கிறேன் அவ்வளவே.

ஒரேயொரு யோசனை. பொருளாதாரம் இடம் கொடுத்தால் ஒரு வரலாற்று பட்டம் பெற்றவர் ஒருவரை அடிக்குறிப்புகள் மெய்ப்புப் பார்க்க வைத்துக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழ் விக்கி குழுவினருக்கு எனது வாழ்த்துகள்.

ஒரு முக்கியமான தலித் வரலாற்றாய்வாளர் குறித்து இதுவரை தமிழ் விக்கியில் கட்டுரை இல்லை. அதனை எழுத எனக்கு விருப்பம் உண்டு. சம்பந்தப்பட்டவரிடமும் பேசிவிட்டேன். விக்கி குழுவினரை தொடர்பு கொண்டு நிச்சயம் எழுதுகிறேன். இக்கடிதத்தில் சிலரின் பெயர்களை குறிப்பிடாமல் எழுதியதற்கு வாசகர்கள் மன்னிப்பார்களாக.

மிக்க நன்றி,

அரவிந்தன் கண்ணையன்

*

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அரவிந்தன் அவர்களுக்கு,

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் பற்றிய பதிவு இன்னும் முடிவடையவில்லை. அது ஒரு தொடர். அந்தக்குடும்பத்தின் கிளைச்சித்திரம் அப்பதிவில் இருக்கும். அதிலுள்ள பலர் தமிழ்ப்பண்பாட்டுக்கு முக்கியமானவர்கள். அவர்களைப் பற்றியும் தரவுகள் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.

சரித்திரத்தை இப்போதைக்கு தமிழ்விக்கியில் சேர்ப்பதாக இல்லை. பண்பாட்டுக்களம் மட்டுமே எங்கள் எல்லை. ஏனென்றால் சரித்திரத்துக்கு இன்னும் பெரிய களம் தேவை. மேலும் நிபுணர்கள் தேவை. இது ஒரு ’நன்றி’ இல்லாத பணி. பிழைகள் சுட்டிக்காட்டப்படும். ஆனால் பங்களிப்புக்கு தனியான பாராட்டு எதுவும் கிடைக்காது. ஆகவே பங்களிப்பாளர்கள் அனேகமாக எவருமில்லை. சில நண்பர்கள் மட்டுமே தொடர்ந்து பணிபுரிகின்றனர்.

ஜெ

முந்தைய கட்டுரைஅறுபது -சிவராஜ் கடிதம்
அடுத்த கட்டுரைஅன்றைய கனவும் இன்றைய நிகழ்வும்