இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சீனரை ரயிலில் சந்தித்தேன். அவர் இந்தியாவுக்கு வந்தது ஒரே ஒரு காரணத்துக்காகத்தான். சீனாவில் இருந்து, சீன கம்யூனிசத்தின் ‘உழைப்பாளிமயமாக்கல்’ என்னும் அரசதிகார ஆதிக்கத்தால் அழிக்கப்பட்ட ஒரு கலைக்குச் சமானமான இந்தியக் கலைவடிவம் ஒன்றை பார்க்க. அரையர் சேவை. அதைப்பற்றி படித்திருந்தார். நேரில் பார்த்துவிட்டு சென்னைக்குச் சென்றுகொண்டிருந்தார். “எப்படி இருந்தது?” என்று கேட்டேன். சட்டென்று அழத்தொடங்கிவிட்டார்.