ஹலோ சார்,
வணக்கம்.
உங்கள் வலைத்தளம் இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமல்லாமல், நமது கலாச்சாரம், வரலாறு, தத்துவம் மற்றும் அறிவார்ந்த பணி தொடர்பான எதையும் கற்றுக்கொள்வதற்கான ஒரு பொக்கிஷம். இவை இலவசமாகக் கிடைக்கின்றன! எனவே, ஏதாவது பங்களிக்க வேண்டும் என்ற உணர்வில் நான் எப்பொழுதும் இருந்து வந்தேன். கடந்த மார்ச் ஈரோடு நிகழ்வின்போது உங்களுடன் பேச எனக்கு வாய்ப்புக் கிடைத்தபோது, உங்கள் தொலைநோக்கு பணிகளுக்கு சிறிது பங்களிக்க வேண்டும் என்ற எனது ஆர்வத்தை வெளிப்படுத்தினேன். என் பின்னணியைப் பார்த்து, விக்கியின் ஆங்கிலப் பதிப்பை நான் ஆதரிக்க முடியும் என்று சொன்னீர்கள். நான் உடனடியாக இந்த குழுவில் இணைந்து கொண்டேன்.
நான் இப்போது ஆங்கில மொழிபெயர்ப்புகளில் 100 கட்டுரைகளைக் கடந்த ஒரு மைல்கல்லை எட்டியுள்ளேன் என்று கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த எண்ணிக்கை விக்கிப் பெருங்கடலில் ஒரு துளி என்றாலும், தொடர்ந்து பங்களிப்பதற்கான நம்பிக்கையை இது எனக்கு அளிக்கிறது. இப்பயணம் எனக்கு மிகுந்த திறப்பை அளித்திருக்கிறது.
எல்லோறும் ஏற்று கொண்டதுபோல் தமிழ் இலக்கியம், கலை, கலாச்சாரம் ஆகியவற்றைப் பற்றித் துல்லியமாகப் புரிந்துகொள்வதிலும், கற்றுக்கொள்வதிலும் ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் விக்கி இப்போது ஒரு தளமாகத் திகழ்கிறது.
இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி.
அன்புள்ள
ஆனந்த் கிருஷ்ணன்
*
அன்புள்ள ஆனந்த கிருஷ்ணன்
தமிழ்விக்கி மொழியாக்கத்தில் நீங்கள் முதலிடம் என்னும் தகவலை மதுசூதனன் அனுப்பியபோதே அழைத்து பாராட்டவேண்டும் என எண்ணினேன். என் வாழ்த்துக்கள். நாம் செய்துகொண்டிருப்பது வரலாற்று உருவாக்கம். அந்நிறைவை நாம் அகத்தே உணர்ந்தால் இச்செயல்பாடு அளிக்கும் மனநிறைவு மகத்தானது.
ஜெ