விஷ்ணுபுரம் விருது விழாவிற்கான நன்கொடையில் என்னுடைய சிறு பங்களிப்பென 500 ரூபாய் அனுப்பியுள்ளேன். ஒவ்வொரு வருடமும் நான் பங்கெடுக்க விரும்பும் கனவு விழாக்களில் ஒன்றது.
முதல்முறை 2019 இல் எனக்கும் ஒரு தனிமடலில் அழைப்பு விடுத்திருந்தீர்கள். இன்றும் பரவசத்துடன் நினைவு கூரும் நிகழ்வாக என் நெஞ்சில் இருக்கிறது. அன்றிலிருந்து வரவேண்டும் என்ற விருப்பம் அணையாது உள்ளது. சென்ற ஆண்டு நடந்த விழாவுக்கு அழைத்து போங்கள் என்று அழுது அடம்பிடித்தெல்லாம் பார்த்தேன். எதுவும் நடக்கவில்லை. இவ்வாண்டும் என் கனவு சாத்தியபடுமா என்று தெரியவில்லை. இப்போது உள்ள நிலைக்கு சாத்தியம் இல்லை என்ற நிலையே உள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் சூழல் மாறினால் என் கனவு நிறைவேறும். முயற்சித்து பார்க்கிறேன். முடிந்தால் விழாவில் உங்கள் அருகமரும் வாய்ப்பமையும்.
அப்புறம் இந்த தொகை மிக சிறியது. இது ஒன்றும் பெரிது அல்ல. இத்தொகையை கூட அரசாங்கம் எனக்கு தரும் உதவித்தொகையில் இருந்து தான் எடுத்தேன். இன்னும் வீட்டில் வேறு சொல்லவில்லை:) சொன்னால் போகாத இடத்திற்கு பணம் அனுப்புகிறாயா ? என்பார்கள். அதனால் நானே முடிவு எடுத்து அனுப்பி விட்டேன். இப்போது மெதுவாக நேரம் பார்த்து அம்மாவிடம் சொல்ல வேண்டும்:) சுயமாக நானே பொருளீட்ட முடியுமெனில் முடிந்தளவு பெரிய தொகையை அனுப்புவதே என் விருப்பம். ஏனெனில் விஷ்ணுபுரம் விருது விழா நீங்கள் எங்களுக்களித்த மகத்தான விழாக்களில் ஒன்று. அது மேலும் பெருகவும் செழுமையுறவும் செய்வது இலக்கிய வாசகனாக தங்கள் மாணவனாக என் கடமை என்றே எண்ணுகிறேன்.
அன்புடன்
சக்திவேல்
*
அன்புள்ள சக்திவேல்,
உங்கள் கடிதம் நெகிழ்வை அளிக்கிறது. உங்களுடைய நன்கொடை என்பது ஓர் அடையாளம். அது உங்கள் பங்களிப்பு.
முன்பு பல ஆண்டுக்காலம் நாங்கள் சில நண்பர்களே விஷ்ணுபுரம் விருதுச் செலவை பகிர்ந்துகொண்டிருந்தோம். பெருந்தொகை என்னுடையதாக இருந்தது. நன்கொடை வாங்கவேண்டாமென எண்ணினோம். ஆனால் நன்கொடை வாங்க ஆரம்பித்தபோது பெருவாரியாக பலர் அதில் பங்களிப்பதைக் கண்டோம். அது ஒரு சிறந்த விஷயம் என தோன்றியது. தமிழ் எழுத்தாளன் ஒருவனை தமிழகமே கூடி கௌரவிப்பது போன்றது அது. ஆகவேதான் பெருந்தொகைகளாக கார்ப்பரேட் நிதியை பெறவேண்டியதில்லை என முடிவுசெய்தோம். இதிலுள்ள பரவலான பங்கேற்பே இதன் பெருமை.
உங்கள் பங்கேற்பு இதில் பெரியது. நன்றி
ஜெ