வணக்கம் ஜெயமோகன் சார்,
என் பெயர் விக்னேஷ். ஐடி துறையில் பணி செய்கிறேன். நீங்கள் எழுதிய அறம் என்ற தொகுப்பில் நூறு நாற்காலிகள் படித்தேன். என் உணர்வு என்ன என்று வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.
ஆனால் அப்படி ஒரு தாய் கதாபாத்திரத்தை நான் கேட்ட படித்த பார்த்த மிக மிக சில கதைகளில் பார்த்ததே இல்லை. நீங்கள் அந்த தாயை பற்றி ஒவ்வொரு முறையும் மிக நுணுக்கமாக வர்ணித்து எழுதியிருந்தீர்கள். அவளை பார்க்க முடிந்தது. அவளை நுகர முடிந்தது.
அவளின் மிருகத்தனமான பாசம், நாயாடி மக்களின் நிலை என்ன என்று உணர முடிந்தது. அப்படி ஒரு சமூகம் பற்றி இதற்கு முன்னால் எனக்கு தெரியாது. அந்த கலெக்டரை போல நானும் சிக்கி தவித்தேன். இந்தத்தாயை அவன் வைத்துக்கொள்ள வேண்டுமா?! இல்லையா என்று. ஒவ்வொரு முறையும் அந்த தாயின் முகத்தை கற்பனை செய்து பார்க்க முயற்சி செய்தால் எனோ எனக்கு குறத்தி மகன் திரைபடத்தில் வரும் கே.ஆர்.விஜயா நினைவுக்கு வருகிறார்கள். “தம்றானே, கஞ்சி தா தம்றானே” என்ற அவளது கடைசி வார்த்தை மிகவும் கனத்தது. அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் குறத்தி மகன் கே.ஆர்.விஜயா சொல்வது போல் கற்பனை செய்து பார்த்தேன்.
இன்னும் பல உணர்வுகள் இந்த கதையை படிக்கும்போது இருந்தது. மிகவும் ரசித்து படித்தேன். அறம் தொகுப்பில் உள்ள மற்ற கதைகளையும் வீட்டு பாடம் செய்வது போல் தினம் ஒரு கதை விதமாக ஒவ்வொரு மாலையும் படித்து கொண்டிருக்கிறேன். அறம் கதைகளை பற்றி உங்களிடம் என்றாவது ஒரு நாள் நேரில் பேச வேண்டும் என்ற பேராசை!!
இப்படிபட்ட அருமையான கதைகளை தந்தமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி.
இப்படிக்கு,
விக்னேஷ்.
*
அன்புள்ள ஜெ
இத்தனை பேர் பேசிவிட்ட பிறகும் இப்போதுதான் நான் அறம் கதைகளை வாசித்தேன். இரண்டு தளம் கொண்ட கதைகள். மிக நேரடியாக, தீவிரமாக உணர்ச்சிநிலைகளை முன்வைக்கின்றன. ஆகவேதான் பலபேர் அவற்றை கொண்டாடுகின்றனர். ஆனால் எல்லா கதைகளிலும் மேலே உள்ள உணர்ச்சிகரமான கதைக்கு அடியில் ஆழத்தில் இன்னொரு கதை உள்ளது. நூறுநாற்காலிகள் கதையிலும் நான் வாசித்தது நாற்காலியின் பயனில்லாத தன்மையைத்தான். நூறுநாற்காலி என்று அவன் உணர்வது வேறொரு நாற்காலியை என்று தோன்றியது.
அறம் அழகிய வடிவமைப்புடன் புதிய கெட்டி அட்டைப்பதிப்பு சிறப்பு
அரசு அண்ணாமலை
*