பொன்னிப்பெருக்கு
நுகர்வுக்கு அப்பால்
அன்புள்ள ஜெ
உங்கள் நீண்டபதில் (நுகர்வுக்கு அப்பால்) ஆச்சரியமளிக்கவில்லை. ஒரு பொதுவாசகன் பொதுவாக நூல்களைப் பற்றிப் பேசும்போது என்னென்ன அபத்தங்கள் செய்யக்கூடும் என்றுதான் கேட்டேன். ஏனென்றால் நீங்களே எழுதியபடி ‘இதை விட அது பெட்டர் ‘ ‘பாதிக்குமேல் ஸ்லோவா போகுது’ ‘டைலாக் விறுவிறுப்பா இல்லை’ என்றெல்லாம் புத்தகங்களுக்கு மதிப்புரைகள் வந்துகொண்டிருக்கும் காலம் இது.
உங்கள் பதிலில் மிக விரிவான சித்திரம் இருந்தது. இந்தவகை அபிப்பிராயங்கள் நுகர்வோர் மனநிலையிலிருந்து வருபவை, நுகர்வு மனநிலையில் இருந்து விடுதலை பெறாமல் கல்வியும் ரசனையும் சாத்தியமே இல்லை.
இந்த கடிதத்தை அந்தக் கட்டுரைக்கு ஒரு நீட்சி வேண்டும் என்று எழுதுகிறேன். ஒரு நல்ல இலக்கிய வாசிப்புக் கட்டுரையில் நீங்கள் என்னென்ன இருக்கும், அந்த மனநிலை எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?
அன்புடன்
எஸ்.ராஜ்குமார்
*
அன்புள்ள ராஜ்குமார்
இந்தக் கேள்விக்கு நான் அளிக்கும் பதில் ‘இலக்கணப் படுத்தல்’ ஆகுமா? ஆமாம், இலக்கணம்தான். ஆனால் இலக்கணம் என்பது குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. படைப்பூக்கம் அதைக் கடந்துசெல்லலாம். அறிவின்மையால் அதற்கு குறைவாக எழுதப்பட்டால் அது பிழையானது, பயனற்றது. இலக்கணம் செயல்படும் வழிமுறை இதுவே.
நான் முந்தைய பதிலில் சொன்னேன். ஒருவர் எதைப்பற்றியும் அபிப்பிராயம் சொல்லலாம். அது அவருடைய இடம்,தரம் ஆகியவற்றையே காட்டுகிறது. எனக்கு இப்படி படுகிறது என்று சொல்லிவிட்டால் அதன்பின் அபிப்பிராயம் சொல்வதை எவரும் கட்டுப்படுத்த முடியாது. ஒரு கூற்று ஒருவரின் தனிக்கருத்து எனில் அதை பொருட்படுத்தாமல் செல்லும் உரிமையும் நமக்குண்டு.
விமர்சனம் அல்லது கருத்துரை என்பது இன்னொருவருக்காகச் சொல்லப்படுவது. அறிவுச்சூழலில் முன்வைக்கப்படுவது. ஆகவே அதை முன்வைப்பவர் அறிவுச்சூழலின் நெறிகளை அறிந்திருக்கவேண்டும். அவருக்கு அடிப்படையான அறிவுத்தரமும் ரசனையும் அவர் சொல்லும் விஷயத்தில் பயிற்சியும், கவனமும் இருந்தாகவேண்டும்.
ஒரு நூலை, அல்லது கலைப்படைப்பை விமர்சிப்பவரிடம் நான் எதிர்பார்க்கும் அடிப்படைக்கூறுகள் இவை.
அ. வகைமை பிரித்தல்.
ஒரு படைப்பை மதிப்பிடும்போது முதலில் செய்யவேண்டிய வகைகை (Genre) பிரிப்பதுதான். அதைச்செய்யத் தெரியாவிடில் அம்மதிப்பீட்டாளருக்கு நுழைவுத்தகுதியே இல்லை, அவர் பாமரர் என்றே பொருள்.
படைப்புகள் அவற்றின் பேசுதளம், வெளிப்பாட்டுமுறை சார்ந்து வகைமை பிரிக்கப்படுகின்றன. சினிமா போன்ற தொழில்நுட்பக் கலைகளில் அவை வெளிப்படும் ஊடகமும் வகைமையை உருவாக்குகிறது. உதாரணமாக, ஒரு சினிமாவுக்கும் சின்னத்திரை சினிமாவுக்கும் இலக்கணம் வேறுவேறு.
(ஒரே உதாரணம், சின்னத்திரை சினிமாவில் தொலைவுக்காட்சிகள் (Longshot) உகந்தவை அல்ல. அண்மைக் காட்சிகள் (Closeup) திரையின் நடுவே அமையவேண்டும். அதேசமயம் கதாபாத்திரங்களின் பார்வைக்கோணம் அவ்வளவு முக்கியம் அல்ல. இந்த தொழில்நுட்ப அம்சம் அதன் அழகியலையே இன்னொன்றாக ஆக்கிவிடும்)
ஏற்கனவே இருக்கும் வகைமைகளில் ஒன்றுக்குள் ஒரு படைப்பை பொருத்தி புரிந்துகொள்ளலாம். அல்லது புதிய வகைமையையோ புதிய துணைவகைமையையோ உருவாக்கலாம். ஆனால் ஒவ்வொரு இலக்கியப்படைப்பும் அதற்குரிய தனித்தன்மைகள் கொண்டது என்றும், வகைமைக்குள் நிறுத்தி நோக்கினால் மட்டுமே அந்த தனித்தன்மைக்கு மதிப்பு உருவாகிறது என்றும் ஒருவர் புரிந்துகொள்ளவேண்டும்.
உதாரணமாக, நகுலனின் நினைவுப்பாதை, தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள், நீல.பத்மநாபனின் உறவுகள் மூன்றுமே நாவல்கள். ஆனால் மூன்று வெவ்வேறு வகைமையைச் சேர்ந்தவை. சாண்டில்யனின் ஜீவபூமி, பி.வி.ஆரின் கூந்தலிலே ஒரு மலர், சுஜாதாவின் நைலான் கயிறு மூன்றுமே பொதுவாசிப்புக்குரிய நூல்கள். ஆனால் மூன்று வகைமையைச் சேர்ந்தவை.
நினைவுப்பாதை ஒரு தனிநபரின் குறிப்புகள், அக ஓட்டங்கள் மட்டுமே அடங்கியது. கட்டற்ற மொழியில் அக அலைச்சலையும் ஆளுமைப்பிளவையும் சித்தரிப்பது. ஒரு பொதுவகைமையாக அதை ’தனிநபர் குறிப்பு நாவல்’ (Diary novel) என வகைமை பிரிக்கலாம். அல்லது தன்வெளிப்பாட்டு நாவல் (Confession novel ) என வகைமை பிரிக்கலாம். அந்த வகையான நாவல்கள் உலகமெங்கும் உள்ளன.
தமிழில் நினைவுப்பாதையுடன் இரு நாவல்களை ஒப்பிடலாம். தனிநபர் குறிப்பு வகைமை என்றால் ஜே.ஜே.சிலகுறிப்புகள். தன்வெளிப்பாட்டு வகைமை என்றால் சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரி.
அம்மா வந்தாள் அழகியல் ரீதியாக ‘யதார்த்தவாத’ ( Realism) நாவல். அதன் புனைவு உத்தி என்பது சித்தரிப்புத் தன்மை கொண்டது. அந்நாவலை பொதுவாக அசோகமித்திரனின் தண்ணீர், ஆ,மாதவனின் கிருஷ்ணப்பருந்து ஆகியவற்றுடன் ஒப்பிடலாம்.
சாண்டில்யனின் ஜீவபூமி வரலாற்றுக் கற்பனாவாத நாவல். (Historical Romance) சாகசநாவல் (Adventure Novel) பி.வி.ஆரின் கூந்தலிலே ஒரு மலர் பரப்பியல் யதார்த்தவாத நாவல். (Popular Realism) சுஜாதாவின் நைலான்கயிறு மர்மநாவல் (Mystery) அல்லது பரபரப்பு (Thriller) நாவல். அவற்றின் இலக்கணங்கள் வேறு.
சாண்டில்யன் கதையில் நீண்ட வர்ணனைகள் இருக்கும். ஏனென்றால் அது சரித்திரகாலகட்டத்தை கண்ணால் காட்டவேண்டும். நைலான் கயிறு சமகாலத்தை காட்டுவது. அது இடப்பெயரை, ஊரை சொன்னாலே போதும்.
கூந்தலிலே ஒரு மலர் பரப்பியல் யதார்த்தத்தை உருவாக்கவேண்டும் என்றால் விரிவான உரையாடலை எழுதிக்காட்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொனியில் பேசுவதை சித்தரிக்கும். நைலான் கயிறில் உரையாடல்கள் கூர்மையாகவும், சுருக்கமாகவும்தான் இருக்க முடியும்.
இவ்வாறு வகைமை பிரிக்க தெரிந்தாலொழிய இந்நாவல்களை ஒருவர் மதிப்பிட முடியாது. நகுலனின் நினைவுப்பாதையை வாசித்துவிட்டு ‘என்ன இது கதையே இல்லை. ஆசிரியர் அவரே என்னென்னமோ பேசிக்கிட்டே இருக்கார். கதாபாத்திரங்களே இல்லை’ என ஒருவர் சொல்வாரென்றால் அவருக்கு விமர்சனம் சொல்லும் தகுதி இல்லை என்றே பொருள்.
ஒருவர் ’சுஜாதா ரத்தினச் சுருக்கமாக எழுதறார், சாண்டில்யன் வளவளன்னு எழுதறார்’ என்றால் அவர் ’அமெச்சூர்’ வாசகர். ’பிவிஆர் எழுதுற உரையாடல்தான் நேச்சுரலா இருக்கு. சுஜாதா உரையாடல் கொஞ்சம் செயற்கை’ என்றாலும் அப்படித்தான்.
அழகியல் முறைகள் மற்றும் உத்திகள் பற்றிய புரிதல்
இலக்கிய ஆக்கங்கள், கலைப்படைப்புகள் அனைத்துமே அவை வெளிப்படுத்தும் உள்ளடக்கத்திற்கு ஏற்க சில அழகியல் முறையை, சில புனைவு உத்திகளை கொண்டுள்ளன. அவற்றைப் பற்றி அடிப்படைப் புரிதல் வாசகனுக்கு இருந்தாகவேண்டும். அழகியல், உத்திகள் ஆகியவற்றைக் கொண்டு படைப்புகள் மேலும் மேலும் துணைவகைமையாக பிரிக்கப்பட்டபடியே செல்கின்றன.
நினைவுப்பாதையின் உள்ளடக்கத்தைக் கொண்டு அந்நாவலை ஆளுமைப்பிளவு நாவல், அகவிவாத நாவல் என வகைமைப் படுத்தலாம். அவ்வகையில் அந்நாவலை மு.தளையசிங்கத்தின் மெய்யுள் என்னும் நூலுடன் ஒப்பிடலாம்.
அம்மா வந்தாள் அழகியல் ரீதியாக ‘யதார்த்தவாத’ நாவல். அதன் புனைவு உத்தி என்பது சித்தரிப்புத் தன்மை கொண்டது. அந்நாவலை பொதுவாக அசோகமித்திரனின் தண்ணீர், ஆ,மாதவனின் கிருஷ்ணப்பருந்து ஆகியவற்றுடன் ஒப்பிடலாம். உறவுகள் நனவோடை உத்தி கொண்ட நாவல். அந்நாவலை சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம் நாவலுடன் ஒப்பிடலாம்.
அவ்வாறன்றி உறவுகளை வாசித்துவிட்டு ‘இதென்ன நாவலிலே சம்பவங்களிலே இல்லை. ஒருத்தன் நினைச்சுக்கிட்டே இருக்கான்’ என்று சொன்னால் அது விமர்சனம் இல்லை. ‘அம்மாவந்தாள் விறுவிறுன்னுபோகும். ஜீவனாம்சம் செம இழுவை. ஒரு மாமி ஆட்டுக்கல்லிலே மாவாட்டிட்டே இருக்கா’ என ஒருவர் எழுதினால் அவர் பயில்முறை வாசகர் மட்டுமே.
இலக்கிய படைப்பு கோரும் வாசிப்பை அளித்தல்
ஒவ்வொரு படைப்பும் தன்னை எப்படி வாசிக்கவேண்டும் என அதுவே சொல்கிறது. சாண்டில்யன் எடுத்த எடுப்பிலேயே நிதானமான காட்சிரீதியான கற்பனைகொண்ட வாசிப்பை வாசகனிடம் கோருகிறார். சுஜாதா சுருக்கமான சொற்றொடர்களில் இருந்து காட்சிகளை உருவாக்கும்படி கோருகிறார்.
படைப்புகள் அவற்றின் கட்டமைப்பு, அவற்றின் கூறுமுறை வழியாகவே எங்கே வாசகனின் கவனம் நிற்கவேண்டும் என்றும் எங்கே வாசகன் இடைவெளிகளை நிரப்பவேண்டும் என்றும் சொல்கின்றன. அதை அளிப்பவனே அப்படைப்பின் வாசகன். அப்படைப்பு கோருவதென்ன என்று புரிந்துகொண்டு அதற்காக தன்னை தகுதிப்படுத்திக் கொள்பவன், அதை நோக்கிச் செல்பவன் அவன்.
உதாரணம், ஒரு புளியமரத்தின் கதை ‘கிளைமாக்ஸ்’ இல்லாத நாவல். கடலைத்தாத்தா மீண்டும் கடலைவிற்க வருவதே அதன் உச்சம். ஓர் அபத்த உச்சம் அது. சர்வசாதாரணமான முடிவு. அந்த சர்வசாதாரணத் தன்மையே அது முன்வைக்கும் அழகியல். ஒரு வாசகர் அந்த இயல்பை அந்நாவலின் கட்டமைப்பிலேயே காணமுடியும். புளியமரம் இல்லாமலாவதும் சாதாரணமாகவே சொல்லப்படுகிறது.
ஒரு வாசகர் அந்நாவலை வாசித்துவிட்டு ‘சப்புன்னு முடிச்சுட்டார்’ என்று சொல்வார் என்றால் அவர் அந்நாவலுக்குரிய வாசகர் அல்ல. மாறாக பதினெட்டாவது அட்சக்கோடு தொடக்கத்திலேயே இரு கோடுகளை உருவாக்குகிறது. ஒரு கோடு சந்திரசேகரனின் உலகம். இன்னொரு கோடு பிரிவினைக் கலவரம். அவை இரண்டும் சந்திக்கும் புள்ளியே அதன் உச்சமாக அமைகிறது.
இதுவே வணிகக் கேளிக்கை ரசனைக்கும் நிபந்தனை. வெந்து தணிந்தது காடு சினிமாவில் ஒரே வாழ்க்கைப்பயணத்தில் இருந்த முத்துவும் ஸ்ரீதரனும் சவரக்கடையில் அன்னியர்களாகச் சந்திப்பதுதான் கிளைமாக்ஸ். இரண்டே நிமிடம் நீளும் மௌனமான உச்சம். ‘யாரு?’ “தெரியலை” அவ்வளவுதான் அதன் உரையாடல். அதை அந்தப்படம் தொடக்கம் முதலே காட்டி வருகிறது. அங்கே கேஜிஎஃப் படத்தின் கிளைமாக்ஸை எதிர்பார்ப்பவர் அதன் விமர்சனத்தை எழுத தகுதியற்றவர்.
மீண்டும் சொல்லி முடிக்கிறேன். ஒரு நல்ல வாசகர், ரசிகர் ஒருபோதும் நுகர்வோர் அல்ல. அவரை நோக்கி படைப்பை இழுத்தால் அது நுகர்வு மனநிலை. படைப்பை நோக்கிச் செல்வதே வாசிப்பு அல்லது ரசனை. நுகர்வோருக்கு படைப்பு பற்றி விமர்சனம் சொல்ல உரிமை இல்லை, அவர் சொல்வது அபிப்பிராயம் மட்டுமே.
ஜெ
பொன்னியின் செல்வன் தமிழ் விக்கி
ஒரு புளியமரத்தின் கதை தமிழ் விக்கி
ஜே.ஜே.சிலகுறிப்புகள் தமிழ் விக்கி
நினைவுப்பாதை தமிழ் விக்கி