தற்கல்வியும் தத்துவமும்-5

 

தற்கல்வியும் தத்துவமும்-1

தற்கல்வியும் தத்துவமும்-2

தற்கல்வியும் தத்துவமும்-3

தற்கல்வியும் தத்துவமும்- 4

 

சில நாட்களுக்கு முன் ஒரு சாதாரண சந்திப்பில் நூல்கள் வழியாக நிறைய தத்துவம் படிக்ககும் நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். ‘துரியாதீத நிலைக்கும் சமாதி நிலைக்கும் என்ன வேறுபாடு?’

அப்போது அவரை சீண்டி, உறுத்திச் சொன்னாலொழிய நான் நினைத்ததை அவரிடம் புரிய வைத்துவிட முடியாது என்ற எண்ணியதால் அவரிடம் கேட்டேன். ‘இப்போது நீங்கள் இதில் எந்த நிலையில் இருக்கிறீர்கள்?’

அவர் சிரித்து ‘அப்படியெல்லாம் இல்லை’ என்றார்.

‘எனில் இதை எதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இவற்றை தெரிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது? அல்லது இவற்றை விளக்கினால் தான் உங்களால் புரிந்துகொள்ள முடியுமா? உண்மையிலேயே ஒரு மெய்ஞானி அதை உங்களுக்கு விளக்கினால்கூட நீங்கள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றாகத்தானே அதை விளங்கிக்கொள்வீர்கள்?’

‘அப்படி இல்லை…’ என்று அவர் மறுபடியும் தொடங்கினார்.

‘நீங்கள் இப்போது இருக்கும் நிலை, இதிலிருக்கும் வினாக்கள், இதற்கான வழிகளைப்பற்றி அன்றி வேறேது பேசினாலும் அது வெட்டிப்பேச்சுதான் .வெறும் கருத்துருவமாக இவற்றை அறிந்துகொள்வதனால் உங்களுக்கு எந்தப்பயனும் இருக்கப்போவதில்லை. ..இத்தகைய விவாதங்களுக்கு தத்துவத்தில் இடமே கிடையாது.’

ஆனால் என்னுடைய பதிலால் அவர் திருப்தி அடையவில்லை என்பது தெரிந்தது. நான் கடுமையாகச் சொன்னேன் என்று எண்ணி அப்போதைக்கு அவர் அமைதியடைந்தார். அவ்வளவு எளிதாக அவர் அந்த கருத்துருவங்களிலிருந்து வெளியே வர முடியாது. ஏனெனில் நூல்கள் இத்தகைய விஷயங்களை திரும்பத்திரும்ப விவாதித்துக்கொண்டே இருக்கின்றன.

‘The Thing’ ,‘The Process’ என்று ஜே.கிருஷ்ணமூர்த்தி சொன்னாலும் சரி, துரியம், துரியாதீதம் ,சமாதி, பரிநிர்வாணம் போன்ற வார்த்தைகளை வேறு ஆன்மீகப் பயிற்சியாளர் சொன்னாலும் சரி; அவை எல்லாமே வெறும் வார்த்தைகள். வெறும் கருத்துருவங்கள். இத்தகைய கருத்துருவங்களை கற்று, தொகுத்து, தங்களுக்குள் நிறைத்துக்கொண்டு, அவற்றை உசாவி, அவற்றை ஒன்றுக்கொன்று தங்கள் மனம் போன போக்கில் கற்பனை செய்துகொண்டு, அவற்றை வெவ்வேறு தளங்களில் பேசி, தங்களுக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு சென்று கொண்டிருக்கும் இச்சூழலை நான் புத்தகக் கல்வியின் மிக முதன்மையான எதிர்விளைவென்று கருதுகிறேன்.

தத்துவம் அல்லது மெய்யியலை கற்றுக்கொள்வதற்கான வழிகள் என்ன ?

தெளிவாகவே அதற்கு இரண்டு வழிகள்தான் உள்ளன. முதல்வழி என்பது முழுக்க முழுக்க தன்னுடைய அனுபவங்களினூடாகவே கற்றுக்கொள்ளுதல். அப்படி ஒன்று உண்டு. அது சாத்தியம்தான். ஆனால் அனைவருக்கும் அல்ல. மிக அரிதாகவே அத்தகையோர் பூமியில் நிகழ்கிறார்கள். அவர்கள் தன்னியல்பிலேயே மெய்யியலை நோக்கிச் செல்லக்கூடிய மன அமைப்பு கொண்டவர்களாக, மெய்யியல் அல்லாத பிற அனைத்தையுமே தவிர்க்கக்கூடிய பண்பு கொண்டவர்களாக இருப்பார்கள். உலகியல், அதன் வெற்றிகள், அதன் ஆணவ நிறைவு எதிலும் அவர்களுக்கு ஆர்வம் இருக்காது.

அத்தகையோர் ஒருநூலையும் கற்காமல், ஒரு விவாதத்தையும் நிகழ்த்தாமல், ஒரு கருத்துருவத்தையும் கண்டடையாமல், தன்னியல்பாகவே எது மெய்மையோ அதைக் கண்டடைய முடியும். ஏனெனில் ’அது’ இங்குதான் இருக்கிறது. குருடர்கள் புழங்கும் ஓர் அறைக்குள் நடுவில் இருக்கும் தெய்வச்சிலை அது. அந்த அறைக்குள் தட்டுத்தடுமாறாமல் தங்கள் நுண்ணுணர்வால் நேராக அதைநோக்கி அவர்கள் செல்ல முடியும். அது என்றுமுள மாறாத மெய்மை என்பதனால் ஒருவர் சரியாகத்தேடினாலே தன்னளவில் அங்கு சென்று சேர்ந்துவிட முடியும். அத்தகைய எத்தனையோ மெய்ஞானிகளை, சித்தர்களை, யோகிகளை நீங்கள் இந்தியா முழுக்க பார்க்க முடியும். உங்கள் கிராமத்திலேயே அப்படி ஒருவர் இருந்திருப்பார். எங்கோ ஒரு மூலையில் ஒரு சமாதி இருக்கும். ஒரு சிவலிங்கம் நாட்டப்பட்டிருக்கும்.  .

இன்னொரு தரப்பினர் வாழ்க்கையின் வலுவான அடிகள் வழியாக நிலைகுலைந்து, அதுவரை பற்றிக்கொண்டிருந்த அனைத்துமே கைநழுவி விழ, பதறி அலைபாய்ந்து, மலைச்சரிவில் விழுபவன் அள்ளிப்பற்றிக்கொள்ளும் சிறுசெடியென மெய்மையைப் பற்றிக்கொள்வார்கள். துறவிகள், மெய்ஞானிகளில் இத்தகையோர் எண்ணிக்கை பெரிது. பேரனுபவங்கள் உயர்ந்த மரத்தை மின்னல் தாக்குவது போல அவர்களைத் தாக்குகின்றன. பற்றி எரிந்து சுடராகிறார்கள். ஓச்சிற உப்பாவுக்கு ஒருகணத்தில் ஏதோ ஒன்று நிகழ்ந்தது, அவர் சூஃபி மெய்ஞானி ஆனார். வால்மீகி கதை அதைத்தான் சொல்கிறது. அவர்கள் மெய்யியலை தத்துவம் வழியாக அடையவேண்டியதில்லை. மெய்யியல் இங்குள்ளது. அவர்கள் அதை நோக்கி வீசப்படுகிறார்கள். அல்லது அதன்மேல் தடுக்கி விழுகிறார்கள்.

அத்தகையோரைத் தவிர்த்து பிறர் தத்துவத்தை எவ்வாறு கற்க முடியும் எனில் அதற்கு ஒரு வழிதான் உண்டு. தத்துவத்தை அதற்குரிய முறைமையுடன் கற்றுக்கொள்வது. தத்துவத்தைக் கற்பதற்கு ஒவ்வொரு மரபும் ஒரு பாணியை வைத்திருக்கிறது. அந்தப்பாணி என்பது நெடுங்காலம் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டு, பிழைதிருத்தப்பட்டு, சீர்மை செய்யப்பட்டு உருவாகி வந்த ஒன்று. அத்வைத நிறுவனங்களுக்கு ஒரு மரபுள்ளது. சைவ வைணவ அமைப்புகளுக்கு அவர்களுக்கான வழிமுறைகள் உள்ளன.

ஒவ்வொரு மரபிலும் செய்யக்கூடுவன -செய்யக்கூடாதன என சில உண்டு. அவற்றுக்கான பாடத்திட்டம் உண்டு. எது முதலில், எது பிறகு என்று ஒருவகையான அமைப்பும் உருவாகியிருக்கும். அந்த வகையில் மட்டுமே அதைப்பயில முடியும் .ஒவ்வொரு படிநிலையிலும் இயல்பாக உருவாகும் சிக்கல்கள், இயல்பாகவே நடக்கும் பிழைப்புரிதல்கள், குழப்பங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். அவற்றைக்களைந்து முன்னகர வேண்டும்.

உதாரணமாக வேதாந்தம் என்பது ஷட்தரிசனங்களில் ஆறையும் தொடர்புபடுத்தாமல் பயிலக்கூடியது அல்ல. சாங்கியம் பற்றியோ, யோகம் பற்றியோ, நியாய வைஷேஷிகம் பற்றியோ எதுவுமே தெரியாத ஒருவர் அத்வைத நூல் ஒன்றினூடாக அத்வைதத்தை கற்க முடியாது. அத்வைதத்தை விரிவாக அறிய பௌத்த மெய்யியலையும் கற்றாகவேண்டும். ஆனால் விரிவாக அதனுள் செல்லக்கூடாது. அதற்கு தொன்று தொட்டே வகுக்கப்பட்ட எல்லைகளும் உள்ளன

அத்தகைய கல்விமுறைக்குள் சென்று பொருந்தி தத்துவத்தைக் கற்கலாம். அதில் எது உங்களுக்கு உவப்பாக இருக்கிறதோ அதைத் தெரிவு செய்யலாம். அதற்குரிய தத்துவப் பயில்முறைகள், அதை ஒட்டிய உளவியல் பயில்முறைகள், அதை ஒட்டிய நடைமுறைப் பயில்முறைகள் இருக்கும். அவற்றைக் கடைக்கொள்ள வேண்டும். அவற்றுக்கான காலம் ஒன்று உண்டு. சிலருக்கு ஓரிரு ஆண்டுகளில் கற்க முடிலலாம். சிலருக்கு மேலும் பல ஆண்டுகளாகலாம். அந்தக்காலத்தை கொடுத்துத்தான் ஆகவேண்டும். அதற்காக வாழ்க்கையின் ஒரு பகுதியை ஒதுக்கியே ஆகவேண்டும். நேரத்தை, பணத்தை ,உழைப்பை.

அவ்வாறன்றி, அது சமைக்கப்பட்டு, தட்டில் பரிமாறப்படும் என்று எதிர்பார்க்கக்கூடாது. இரு அட்டைகள் நடுவே அச்சிட்ட பக்கங்களாக வீட்டுக்குத் தபாலில் வந்து சேரும் என்று எண்ணக்கூடாது. நூலகத்தில் நூல்களாக ஞானத்தை அடுக்கி வைத்துவிட்டால் நீங்கள் ஞானியாகிவிட முடியாது. உங்களுக்குள் அது குடியேறி, உங்கள் இயல்பாக மாறி ,உங்கள் அன்றாடமாக வெளிப்படும்போது மட்டுமே அது ஞானம்.  .

தத்துவக்கல்வியில் முதலில் தேவை எளிய தத்துவ அறிமுகம், அதன் பிறகு தத்துவத்தின் ஒவ்வொரு தரப்புகளைப் பற்றியும் துல்லியமான புரிதல், அதன்பிறகு தத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகளைச் சார்ந்த உள்வாங்குதல். அதன்பிறகே அதை நடைமுறையாக்குதலுக்கான பயிற்சிகள். கூடவே தத்துவம் சார்ந்த ஊழ்கப்பயிற்சி. இவ்வாறு  வெவ்வேறு படிநிலைகள் உண்டு. இப்படிநிலைகளினூடாக அதைக் கற்பதே சரியான வழியாக இருக்க முடியும்.

பல ஆண்டுகளுக்கு முன் நான் எனது தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்களினால் பெருவிடாயுடன் தத்துவத்தைக் கற்கத் தொடங்கி, வழக்கமான ஆன்மிக தத்துவ நூல்களைப் படித்து, ஒன்றிலிருந்து ஒன்றுக்கு நழுவிச்சென்று கொண்டே இருந்தேன். ஜே.கிருஷ்ணமூர்த்தியைக் கூர்ந்து படிக்கும் பொருட்டு அவருடைய படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறேன். (அம்மொழியாக்கத்தை பின்னர் வேறொருவர் பெயரில் பிரசுரிக்கக் கொடுத்து பணமாக்கிக்கொண்டேன்) . ஆனால் எனது பிழைகள் என்ன என்பதை ஊட்டி குருகுலத்தில் 1992-ல் இரும்பு சுத்தியலை எடுத்து என் தலையை ஓங்கி அறைந்து உடைப்பது போல் நித்யா சொன்னபோதுதான் புரிந்துகொண்டேன்.

அன்றுமுதல் கற்றவற்றை நானாக்கிக் கொள்வதற்கு மேலும் இருபத்தைந்து ஆண்டுகளாகியிருக்கின்றன. நான் கற்றவை என் வாழ்க்கையாக ஆகியிருக்கின்றன என நான் இந்த கால்நூற்றாண்டில் எனக்கே நிரூபித்துக்கொண்டிருக்கிறேன். குன்றாத செயலாற்றலையும், ஒவ்வொருநாளும் நிறைவடையும் வாழ்க்கையையும் நான் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். என் படைப்பாற்றலை பெருக்கிக்கொண்டு, என்னை தொடர்ச்சியாக மீட்டு மேம்படுத்திக்கொண்டு வாழ்ந்திருக்கிறேன். எந்த எதிர்நிலை கூச்சல்களும் என்னை நிலைமாறச் செய்வதில்லை. எந்த காழ்ப்பும் என்னை காழ்ப்புகொண்டவனாக ஆக்கவுமில்லை. நான் எதிர்நிலை கொண்டவனல்ல என்பதனால்தான் இத்தனை தீவிர படைப்புநிலையை எப்போதும் கொண்டிருக்கிறேன். நஅறிந்தவற்றில் இருந்து அறியாதவற்றுக்கு நாள் தோறும் சென்றுகொண்டிருக்கிறேன். தத்துவம் எனக்கு வெறும் நூலறிதல் அல்ல. மேற்கோள்கள் அல்ல. அது என் வாழ்க்கையும்கூட

எனது ஆளுமையில் இந்த தன்னிறைவை வெண்முரசுக்கு பிறகு நான் அடைந்தேன். அதன்பிறகே இன்னொருவருக்கு இவற்றை சொல்லிக்கொடுக்க என்னால் இயலும் என்ற தன்னம்பிக்கை எனக்கு உருவாகியது.

எனில் நூல்கள் உதவியற்றவையா? நூல்கள் இப்பயிற்சியின் அடிப்படைக் கையேடுகளென பயன்படுபவை. அதன்பொருட்டே சங்கரரும், ராமானுஜரும், நடராஜ குருவும், நித்ய சைதன்ய யதியும் நூல்களை எழுதினார்கள். திரும்பிப் பார்த்தால் அந்நூல்களில் பெரும்பாலானவை பழைய நூல்களுக்கான உரைகள் என்பதைக்காணலாம். அவை விளக்கங்களல்ல. மீண்டும் மீண்டும் ஞானிகள் அவற்றைச் சென்றடையும் பாதைகள். வேறு வேறு திசைகளினூடாக. ஆகவே தான் சங்கரர் உரைக்குப்பின் ராமானுஜர் உரை தேவைப்படுகிறது. அவர்கள் எல்லாரும் உரை எழுதிய பிறகு கூட நடராஜ குருவும், நித்ய சைதன்ய யதியும் எழுத வேண்டியிருக்கிறது. ஒரே மெய்மையை மீண்டும் மீண்டும் கண்டடைவது அது. என்றுமுள ஒன்றுக்குச் செல்ல அக்கணம் தோன்றும் பாதை என்று அதைச்சொல்லலாம்.

அந்நூல்கள் எப்போது உதவியாக இருக்கும்? அடிப்படையான கற்றல் நிகழ்ந்த பிறகு, ஒரு நூல் தெரிவு செய்யப்பட்டு அதில் மூழ்கும் ஒருவனுக்கு அத்தகைய ஆழ்ந்த உரைநூல்கள் தேவைப்படுகின்றன. ஒருவர் கடோபநிஷதத்தையோ, சாந்தோக்ய உபநிஷதத்தையோ, திருக்குறளையோ இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் எடுத்துக்கொண்டு ஆழ்ந்து பயிலுகும்போது இவ்வுரைநூல்கள் அதன் தற்கல்வி (ஸ்வாத்யாயம்) என்னும் பகுதியில் தேவைப்படுகின்றன. பிறகு அவற்றைக்கடந்து மனனமும், தியானமும் செய்யும்போது அந்த நூல் அவனுடையதாகிவிடுகிறது அவனாகி விடுகிறது. அதன்பொருட்டே இத்தனை நூல்கள் எழுதப்படுகின்றன. அவை சுருக்கமான சூத்திர வடிவில் இருப்பது நினைவில் நின்றிருக்கவேண்டும் என்பதற்காக. படித்துப் படித்து கடந்து செல்வதற்காக அல்ல. ஒரு நூல் மொத்தமாக நினைவில் இருந்தால்தான் அது தத்துவக்கல்வியில் பயனுள்ளது. அந்நூலில் உங்களுக்கு பிடித்த சில வரிகள் நினைவிலிருந்தால் அதனால் பயனில்லை. அது சொற்சுமை.

நூல்களில் இருந்து தத்துவ மனநிலையை பெறமுடியும். தத்துவத்தை கற்பதற்கான மொழிப்பயிற்சியை அடையமுடியும். நூல்கள் வழியாக கற்ற தத்துவத்தை விரிவாக்கிக்கொள்ளவும் நினைவில் நிறுத்தவும் முடியும். நூல்களின் எல்லை அவ்வளவுதான். தத்துவம் எப்போதும் நேரடியாக ஆசிரியர் – மாணவர் உறவு வழியாகவே கற்கப்பட முடியும் – அதாவது தத்துவத்தைக் கற்கும் தேவையும் தகுதியும் கொண்டவர்களுக்கு.

((நிறைவு)

முந்தைய கட்டுரைசங்கு சுப்ரமணியம், லட்டு மிட்டாய் வேணுமா?
அடுத்த கட்டுரைவெண்முரசின் சோமம்