தற்கல்வியும் தத்துவமும்- 4

கார்லோஸ் கஸ்டனாடா

நூல்களினூடாக தத்துவத்தைக் கொள்வதன் இன்னொரு சிக்கல் என்னவெனில் வழிகாட்டுவதற்கான ஆசிரியர் அங்கு இல்லை என்பது தான். ஏனெனில் தத்துவக்கல்வி மிக அகவயமானது. தனிநபர் சார்ந்தது. புறவயமான மொழிக்கட்டுமானத்திலிருந்து ஒருவர் முற்றிலும் தனக்குரிய அர்த்தத்தை எடுத்துக்கொள்வது தத்துவக்கல்வியில் நிகழ்கிறது. இதைக்கூர்ந்து கவனித்திருக்கிறேன். தத்துவத்தில் மிக தெளிவாக மிக மிகப் புறவயமாக வரையறுக்கப்பட்டுவிட்ட வரி கூட பத்து பேரால் படிக்கப்படுகையில் பத்து பொருளை அளிக்கிறது.

இன்னும் விந்தையான ஒன்றுண்டு. புறவயமான வரிகளை விட அகவயமான உவமைகள் இன்னும் தெளிவானவை. கயிற்றரவு என்னும் உவமை சங்கரர் சொல்ல வந்ததை ஒரு முமுட்சுவுக்கு தெளிவாகக் கடத்தும். ‘பிரம்ம சத்யம், ஜகன் மித்யை’ என்ற வரி பொருள்குழப்பத்தை உருவாக்ககூடும். ஆகவே தான் சங்கரர் உவமானத்தை அடிப்படை பிரமாணங்களில் ஒன்றாக திரும்ப திரும்ப சொல்கிறார். ஏனெனில் அகவயமான அறிதலுக்கு அகவயமான உவமை போன்ற கருவிகள் துணைபுரிகின்றன. புறவயமனான வரையறைகள் அகவயமான புரிதலுடன் சரியாக ஒத்திசைவு செய்வதில்லை.

இந்நிலையில் நூல்களாக தன்போக்கில் பிறர் உதவியில்லாமல் மெய்யியலையும் ஆன்மிகத்தையும் கற்கும் ஒருவர் மிக அடிப்படையான பிழைகளை தொடக்கத்திலேயே நிகழ்த்தி விடுவார். ஒரு மாதத்துக்குள் அவர் நிறைய படித்துவிடுவார் என்றால் அந்த பெரும்பிழை பலமடங்கு பெருகி பேருருவாகி அவரைச்சூழ்ந்து இருக்கக்கூடும். அது அவருக்கு இல்லமும் சிம்மாசனமும் ஆடையுமாக ஆகி எவ்வகையிலும் விடுதலை செய்யமுடியாததாக மாறிவிடக்கூடும்.

நித்ய சைதன்ய யதி ஒருமுறை உரையாடலில் இதைக்குறிப்பிட்டார். ஒருவருக்கு தீரா வயிற்றுவலி இருந்து அறுவை சிகிச்சைக்கு முன் சிறுநீரகத்திலிருந்து நெல்லிக்காய் அளவுள்ள கல் வெளியே எடுக்கப்பட்டது. அதை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு வைத்திருந்தார். வருவோர் போவோரிடமெல்லாம் காட்டி அதைப்பற்றி பேசி மகிழ்ந்தார். பெருந்துன்பத்தை அளிப்பதாக இருந்தாலும் கூட அது அவரால் உருவாக்கப்பட்டது. அவருடைய உடலின் ஒரு பகுதி. இப்புவியில் அவர் படைத்துவிட்ட ஒன்று. கிட்டத்தட்ட அவருடைய குழந்தை அது.

பிழைகளும் அவ்வாறே. பிழைக்கு உரியவர் தன்னுடைய ஆளுமையிலிருந்து அந்தப்பிழையை உருவாக்குகிறார். தன்னுடைய கற்பனை, தன்னுடைய ஊகத்திலிருந்து அவர் நிகழ்த்திக்கொள்வது அது. ஆகவே அதைப்பிழையென சுட்டிக்காட்டப்பட்டால் அவரால் ஏற்கமுடிவதில்லை. அப்பிழையை அவர் மேலும் மேலும் வளர்த்து பெரிதாக்கிக்கொண்டிருந்தார் என்றால், அவருடன் விவாதித்து அதை மீட்கவே முடியாது. ஏனெனில் விவாதம இணையான மறுதரப்பை உருவாக்கும். தீவிர விவாதம் தீவிரமான மறுப்பை உருவாக்கும். ஒருவரின் பிழைப்புரிதல்கள் காலப்போக்கில் அவரது கொள்கையாகவும் நிலைபாடாகவும் மாறிவிட்டிருந்தால் அவற்றை மறுப்பது அவருடைய கல்வியையும் ஆளுமையையும் மறுப்பதாக ஆகிவிடும். அவருடைய ஆணவம் புண்படும். சீற்றமும் ஆவேசமும் கொண்டு எதிர்ப்பார்.

இணையான ஒருவர் ஒருபோதும் ஒருவருடைய பிழைப்புரிதலை சொல்லி திருத்திவிடமுடியாது என்பது ஓர் அப்பட்டமான உண்மை. தத்துவத்தில் அவரை திருத்த அவர் ஏற்றுக்கொண்ட ஓர் ஆசிரியரால்தான் முடியும். உண்மையிலேயே அவருக்கு மதிப்பும் ஈடுபாடும் கொண்ட ஆசிரியருக்கு அவர் தனது கீழ்ப்படிதலை அவருக்கு அளித்திருக்க வேண்டும். அவ்வாறில்லையேல் அடிப்படைப் புரிதல்கள் திருத்தப்படாமல் பெருகிப் பெருகி அவரை அடிமைப்படுத்தும். நூல்கல்வியைச் சேர்ந்த பலர் தங்கள் பிழைகளின் மேல் பீடமிட்டு அமர்ந்துகொண்டிருப்பதையும் தங்கள் பிழைகளையே தங்களது தனித்துவமாக எண்ணிக் கொண்டிருப்பதையும் காணலாம்.

இன்னொன்று, தத்துவக்கல்வி என்பது ஒரு முழுமையான செயல்பாடாகவே இருக்கமுடியும். அது ஒன்று இன்னொன்றுடன் தொடர்பு கொண்ட பல நிகழ்வுகளின் ஒட்டுமொத்தம். ஒரு தத்துவக்கல்விக்கு கூடவே தோட்டம் போடுதல் தேவைப்படலாம். ஒரு தத்துவக்கல்விக்கு கூடவே ஒரு மனித சேவை தேவைப்படலாம். ஒரு தத்துவக்கல்வியுடன் ஒரு நீண்ட பயணம் இன்றியமையாததாக இருக்கலாம். ஒரு தத்துவக்கல்வியுடன் தனிமை பரிந்துரைக்கப்படலாம். ‘அகம் பிரம்மாஸ்மி’ என்று உணர்பவன் மறுகணமே ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ என்று உணர்ந்து ‘மாமேகம் சரணம் விரஜ’ என்னும் வரிக்கு  தலைதாழ்த்தி அமரவேண்டியிருக்கலாம். அதை அவரது ஆசிரியமரபு வகுத்தளிக்கவேண்டும்.

உதாரணமாக, அத்வைதத்தில் கைங்கர்யத்தையும் பக்தியையும் இணைத்தால் வருவது விசிஷ்டாத்வைதம். இப்புவி பொய்யானது, பிரம்மமே உண்மையானது என்று உணர்ந்த பின்னர்; எனினும் இப்புவியின் ஒவ்வொன்றும் அழகியது என்றும், ஒவ்வொன்றிலும் செய்ய எனக்கு ஒன்று உள்ளது என்றும் உணர்வது விசிஷ்டாத்வைதம். தூய அத்வைதியான விவேகானந்தர் தத்துவம் பயிலும் அத்வைதி மானுடசேவையையும் உடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்றார். இவையனைத்தும் மாயை என்று உணர்பவன் தன்னருகே வாழ்பவனின் பசியும் மாயை என்று உணர்வானெனில் அவன் தத்துவத்தை புரிந்துகொள்ள முடியாதவனாகிவிடக்கூடும். அப்பசியைப் போக்கும் செயல்களில் ஈடுபடும் ஒருவன் பிரம்மமே உண்மை என்று அகத்தே உணரவும் கூடும்.

அவ்வாறன்றி, வெறும் நூல்களாகவே தத்துவம் பயில்பவர்கள், வெவ்வேறு வணிகம் குடும்பம் போன்ற செயல்களில் ஈடுபட்டுக்கொண்டே, அவற்றிலிருந்து சிறு சமநிலைக்காகவோ விடுதலைக்காகவோ  அதைக் கற்கிறார்கள் என்றால்,; அது வெறும் அறிவுச்செயல்பாடாகவும் மொழிப்பயிற்சியாகவும் நின்றுவிடும். மேற்கோள்திரட்டு அன்றி எதுவும் எஞ்சாது. அது வளர்ச்சி அல்ல, வீக்கம். வளர்ச்சி என்பது எப்போதும் சமநிலைகொண்டதாக, உயிர்ப்பு கொண்டதாக ,நடைமுறை சார்ந்ததாகவே இருக்கும்.

இறுதியாக ஒன்று. தத்துவக்கல்வியின் வழிமுறைகளில் ‘காலத்தால் நிறுவப்பட்டது’ என்று ஒன்று உண்டு. ஒரு மருந்தை உட்கொள்ளும்போதுகூட எத்தனை ஆயிரம் பேரிடம் அது சோதனை செய்யப்பட்டது, எத்தனை பேருக்கு அது பயனளித்தது என்பது கருத்தில் கொள்ளப்படுகிறது. இன்றுவரை எவருக்கும் பயனளிக்காத, எவரிடமும் சோதனை செய்யப்படாத ஒரு மருந்தை நாம் உட்கொள்வதில்லை. மெய்யியலோ அதற்கான வழிமுறைகளோ இந்த தருணத்தில் நாம் அடைபவை அல்ல, அவை நெடுங்காலமாக பயனளித்திருக்கவேண்டும். அவை மனிதகுலத்தின் பரிணாமத்துடன் தாங்களும் வளர்ந்து வந்திருக்கவேண்டும்.

நாமொன்றும் இப்புவியில் சுயம்புவாக உருவான, முற்றிலும் தனித்தன்மை கொண்ட, முன்பின் இலாத உயிர் நிகழ்வுகள் அல்ல. எப்போது மனிதப் பிரக்ஞை தோன்றியதோ அன்று முதல் மெய்யியலும் ஆன்மீகமும் தோன்றியுள்ளன. அன்றும் மனிதன் இயற்கையையும் பிரபஞ்சத்தையும் தன்னையும் நோக்கி உசாவிக்கொண்டுதான் இருக்கிறான். அன்றைய வினாக்களின் விடைகளின் தொடர்ச்சியாக, ஒவ்வொரு கணமும் என நிகழ்ந்துதான் நம் தலைமுறை வரை மானுட மெய்ஞானம் வந்திருக்கிறது. இன்றுவரை வந்த எதையும் கற்காமல், இன்று வந்த ஒன்றை உடனடியாகக் கற்று ஒருவர் விடுதலை அடைய முடியும் என்பது போல அபத்தம் வேறு இல்லை.

அவ்வாறு ‘முன்பிலாத ஒன்றை’ முன்வைக்கும் தத்துவம் அதை கற்பவனுக்கு ஒன்றைச் சொல்கிறது. ‘நீ அசாதாரணமானவன், தனித்தன்மையனாவன் ,உனக்கு முன்பின் இல்லை, நீ சுயம்பு’. அதைக்கேட்டு அவன் தன் ஆணவத்தால் ‘ஆம்’ என்று சொல்வானெனில் அறிவுத்தளத்தின் மிகப்பெரிய மோசடி ஒன்றில் சிக்கிக்கொள்கிறான். ‘நீ மனிதத் திரளில் ஒருவன் மட்டுமே, முழு மனிதத் திரளுக்கான ஞானமே உனக்கும் இருக்கும், ஞானமென ஒன்றிருந்தால் அது உனக்கு மட்டுமேயானதாக அல்லாமல் உன்னருகே வாழும் ஒவ்வொருவருக்கும் உண்மையாகவே இருக்கும், ஒன்று உண்மை எனில் அது எங்குமிருக்கும், என்றுமிருக்கும்’ என்று நம்மிடம் சொல்லும் தத்துவமே உண்மையில் பயனுள்ளது. ஏனென்றால் அது நம்மிடம் சொல்வது நம் அகத்தில் நாம் ஏற்கனவே உறுதியாக அறிந்த ஒன்றுதான்.

மாறாத ஒன்றே உண்மையெனப்படுமே ஒழிய, கணந்தோறும் மாறுவது உண்மையென நிகழமுடியாது. மனிதருக்கு மனிதர் மாறுபடுவது உண்மையாக இருக்க முடியாது. தன்னை அபூர்வமானவன், தனித்துவமானவன், அசாதாரணமானவன் என்று கற்பனை செய்துகொள்வதைப்போல ஆன்மீகத்துக்கு தடையாவதொன்றில்லை. வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் நிகழும் ஒன்று உண்டுதான். ஆனால் சாராம்சமானது எதுவோ அது அவ்வாறு முன்பிலாதது அல்ல. ஒவ்வொரு உயிருக்கும் நிகழும் ஒன்று உங்களுக்கும் நிகழக்கூடுமெனில் மட்டுமே அது மெய். அது இங்கு எப்போதும் இருந்துகொண்டிருக்கும். எந்த வகையிலோ மீள மீள நிகழ்ந்துகொண்டிருக்கும்.

ஜே.கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய ‘தனித்தன்மையை’ தான் கூறுவனவற்றின்  ’பிறிதொன்றிலாத தன்மை’யை திரும்பத் திரும்பச் சொல்கிறார். அதை ஏற்பவனுக்கு உளவியல் லஞ்சமாக ’என்னைப்போல நீயும் தனித்தன்மை கொண்டவன், பிறிதொன்றிலாதவன்’ என்று சொல்கிறார். அவருடைய வாசகர்கள் அதை உடனடியாக மகிழ்ந்து ஏற்கிறார்கள். இங்கே ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஓரிடத்தில் தன்னைத் துறந்து, தன்னைக் கடந்து, நிறைவு கொண்ட ஞானியரும் சித்தர்களும் யோகிகளும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரிலும் நிகழாத ஒன்று ஜே.கிருஷ்ணமூர்த்தியிலோ தன்னிலோ நிகழ்கிறது என்று ஒருவன் நம்பினான் என்றால் அவன் உண்மையில் எதைத்தான் கற்பனை செய்துகொள்கிறான்?

மெய்மை எதுவோ அது மீள மீள நிகழ்கிறது. ஒவ்வொரு கணமும் நிகழ்கிறது. ஒவ்வொரு இடத்திலும் நிகழ்கிறது. அந்த அழியா மரபொன்றில் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பது முக்கியம். அது ஒரு குறிப்பிட்ட மரபல்ல. அது இந்து சித்தர் மரபாக இருக்கலாம். சூஃபிகளின் மரபாக இருக்கலாம். செயிண்ட் அகஸ்டினிலிருந்து வரும் கிறித்தவ மெய்ஞானிகளின் மரபாக இருக்கலாம். ஆப்ரிக்கப் பழங்குடிகளின் அகப்பயிற்சி முறைகளாக இருக்கலாம். செவ்விந்தியர்களின் வழிமுறைகளாக இருக்கலாம். எங்குமுள்ள ஒன்று. எங்கும் நிகழக்கூடும் வாய்ப்புள்ள ஒன்று. அதுவே மெய்மை. அதில் ஏதோ ஒன்று உங்களுக்கும் தொடர்புறும்போது நீங்கள் ஒரு தொடர்ச்சிக்குள் வருகிறீர்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக பயின்று வந்த தொடர்ச்சி அது. அத்தொடர்ச்சியிலிருந்து மட்டுமே மெய்யியலை கற்க முடியுமே ஒழிய தனிநபர்கள் உருவாக்கும் தனிச்சிந்தனைகளிலிருந்து அல்ல.

ஒருவர் ஆன்மீகமரபை கொண்டிருக்கிறார் என்றால் நீங்கள் எந்த மரபு என்பது மட்டுமே முதல் கேள்வியாக இருக்க முடியும். மரபிலாத ஒருவர் இருக்க முடியாது. அவர் மரபை ஒளிப்பவராகவோ மறைப்பவராகவோதான் திகழமுடியும். நூல்களைப் பயிலும் பெரும்பாலானவர்கள் அப்படி ஒரு நீள்மரபின் தொடர்ச்சியாக எதையும் பயில்வதில்லை. அந்நூலில் தொடங்கி அந்த நூலில் முடியும் ஒரு ஞானத்தை தாங்கள் கற்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். அல்லது அந்த ஆசிரியரில் தொடங்கி அந்த ஆசிரியரில் முடியும் ஒரு ஞானத்தை தாங்கள் கற்பதாக எண்ணிக்கொள்கிறார்கள். ஆகவே மரபின் தொடர்ச்சி என்பதை மறுக்கிறார்கள். அந்த மரபின்மையை நூல் வழியாக மெய்யியலை கற்பதன் அறுதியான பெரும் குறைபாடென்று நான் நினைக்கிறேன்.

(மேலும்)

முந்தைய கட்டுரைஎம்.சி.ராஜா
அடுத்த கட்டுரைஅர்ஜுனனும் கர்ணனும்,கடிதங்கள்