தற்கல்வியும் தத்துவமும்-3

புத்தகங்கள் வழியாக தத்துவத்தை பயில்வதிலுள்ள குறைபாடுகளை மட்டும் முதலில் சொல்கிறேன். உண்மையில் தீங்குகளென்றே இவற்றைச் சொல்லவேண்டும். ஆனால் ஒரு விவாத மதிப்பிற்காக குறைபாடுகள் என்று கூறுகிறேன். முதலில் இந்த நூல்களை பயில்கையில் நாம் பெரும்பாலும் கைக்கு கிடைத்த வரிசையில் பயிலத்தொடங்குகிறோம். நீங்கள் ஜே.கிருஷ்ணமூர்த்தியையோ ஓஷோவையோ எப்படி பயிலத்தொடங்கினீர்கள் என்று பாருங்கள் தற்செயலாகக் கிடைத்த ஒரு நூலிலிருந்து நீங்கள் தொடங்கியிருப்பீர்கள். அந்த நூல் அவர் உருவாக்கும் விவாதத்தின் ஏதோ ஒரு பகுதியைச்சேர்ந்தது.

ஆக ஏதோ ஒரு மூலையிலிருந்து நீங்கள் அவர்களுடன் தொடர்பு கொள்ளத் தொடங்குகிறீர்கள். அந்நூலில் ஏதோ ஒரு பகுதி உங்களுக்கு உவப்பானதாக இருப்பதனால் அத்தொடர்பு உருவாகிறது. இது மிக நுண்ணிய ஆபத்து கொண்டது. நீங்கள் ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் படிக்கத் தொடங்கும்போது இவர் சரியானவற்றை சொல்கிறார்,சரியானபடி சொல்கிறார் என்று எண்ணி மேற்கொண்டு ஆர்வம் கொண்டு அவரைப்பயில்கிறீர்கள். ஆனால் அந்த முடிவை எப்படி எடுத்தீர்கள்? உங்களுக்கு உவப்பான ஒன்றை, ஏற்கனவே நீங்கள் அறிந்து நம்பும் ஒன்றை ஜே.கிருஷ்ணமூர்த்தி சொன்னார் என்பதனால்தான். இது எப்படி ஜே.கிருஷ்ணமூர்த்திக்கான உண்மையான மதிப்பீடாக ஆகும்?

ஏனெனில் நீங்கள் கற்கத்தொடங்கும்போது உங்களைக்கு அவரைப்பற்றி எதுவுமே தெரியாது. நீங்கள் தத்துவார்த்தமாகவோ ஆன்மிகமாகவோ எந்தத் தகுதியும் கொண்டவரல்ல. நீங்கள் நினைப்பதை அவர் சொல்கிறார் என்பதனால் அவரை ஏற்கிறீர்கள் என்றால் உண்மையில் வெறும் ஆணவத்தால் ஒருவரை நீங்கள் ஏற்கிறீர்கள். உங்களை அடையாளமாகக் கொண்டு ஒருவரை புரிந்துகொள்ள முயற்சி செய்கிறீர்கள் இல்லையா?

இங்குள்ள மிக முக்கியமான பிழை என்னவெனில் நீங்கள் ஏற்கனவே ஏற்று உங்களுடைய தரப்பு என கொண்டிருப்பது கூட உங்கள் அனுபவத்திலிருந்து வந்ததல்ல என்பதே. நீங்கள் கொண்டிருக்கும் கருத்து அதுவரைக்குமான உங்கள் சூழலிலிருந்து தற்செயலாக உங்களிடம் வந்தடைந்தவையாக இருக்கும். அங்குமிங்குமாக நீங்கள் அறிந்தவையாக இருக்கும். சில அனுபவங்களில் இருந்து கிடைத்த முழுமையற்ற புரிதலாக இருக்கும். அவற்றின் தொகுப்பே நீங்கள் உங்கள் தரப்பென நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். இடதுசாரிப்பார்வையோ, திராவிடப்பார்வையோ, இந்துத்துவ பார்வையோ, மரபு சார்ந்த மதப்பார்வையோ எதுவாக இருந்தாலும். ஆக உங்களை ஏற்கும் ஒரு ஆசிரியரை நீங்கள் ஏற்பீர்கள் என்ற முன் நிபந்தனையுடன் தான் நீங்கள் படிக்கத்தொடங்குகிறீர்கள். அங்குதான் முதற்பெரும் பிழை தொடங்குகிறது.

ஓர் ஆசிரியரை மெய்யாகவே பயிலத் தொடங்குகையில் அதிலிருப்பது உங்களுடைய ஆணவ அழிப்பு. உங்கள் கல்வி அழிப்பு. உங்களுக்குள் இருக்கும் ஒன்றை எடுத்து வெளியே வைத்துவிட்டு அந்த இடத்தில் தான் அவர் ஒன்றை உள்ளே வைக்கமுடியும். மாறாக உங்களுக்குள் இருப்பவற்றுடன் அவரும் சிலவற்றை சேர்த்தாரெனில் அவர் உண்மையில் உங்களுக்குக் கற்பிக்கவில்லை. உங்களுடைய ஆணவத்தைப் பெருக்குகிறார். உங்களுடைய கல்வி சார்ந்த சுமையைக் அதிகரிக்கிறார்.

அத்துடன் ஒரு குறிப்பிட்ட சிந்தனையாளரைப் பயிலும்போது அவருடைய சிந்தனையின் பரிணாமத்தையோ, அவருடைய ஒட்டுமொத்த விவாதத் தன்மையையோ அறியாமல் தற்செயல்களை நம்பி உள்ளே செல்வதனால் பெரும்புரிதல் பிழைகள் ஏற்படும். அங்கும் தடை என்றாவது உங்களுடைய ஆணவம்தான்.உங்களுக்கு ஒரு சிந்தனையாளரின் புத்தகம் கையில் கிடைக்கிறது அது அவருக்கு அச்சிந்தனையாளரின் முந்தைய விவாதத்தின் தொடர்ச்சி. அந்நூலிலிருந்து அவர் மேலும் முன்னகர்ந்து ஒரு விவாதத்தை உருவாக்கியிருப்பார். நீங்கள் அந்த புத்தகத்தை படிக்கும்போது அந்நூலுக்கு வெளியே இருக்கும் அனைத்தையுமே உங்கள் கற்பனையாலும் ஊகத்தாலும் நிரப்பிக்கொள்கிறீர்கள். நீங்கள் உருவாக்கிக்கொண்ட ஒரு கருத்துக்களத்தின் ஒரு கட்டத்தில் அந்நூலில் உள்ள அக்கருத்துகளைப் பொருத்தி புரிந்துகொள்கிறீர்கள். அது எவ்வகையில் சரியானது என்று பரிசோதித்துக்கொள்ளவோ, பெரும் பிழைகள் நிகழ்ந்திருந்தால் அவற்றை திருத்திக்கொள்ளவோ உங்களுக்கு வாய்ப்பு அமைவதில்லை.

கூர்ந்து பார்த்தால் ஒரு சிந்தனையை எங்கு தொடங்கினாலும் என்னால் புரிந்துகொள்ள முடியும் என்ற உங்கள் ஆழ்ந்த தன்னம்பிக்கைதான் அந்த நூலை உங்களை ரசிக்கச்செய்கிறது. இன்னும் சொல்லப்போனால், முன்பின் தொடர்ச்சியில்லாது இருக்கும் அந்த புத்தகம் உருவாக்கக்கூடிய மாபெரும் புதிர்த்தன்மை உங்களை ஈர்க்கிறது. அந்தப் புதிரை உங்கள் கற்பனையால் நிரப்பிக்கொள்ளும் பயிற்சி அளிக்கும் சுவாரசியம் அந்தப்புத்தகத்தை ஆழமானதாக உங்களுக்கு தோன்றச்செய்கிறது. நீங்கள் அதில் மிக அதிகமாக மூளையைச் செலுத்தி பணியாற்றிவிட்டீர்கள் என்பதனாலேயே அது முக்கியமானதாகிறது. நான் முன்னரே சொன்னது போல நீங்கள் சிரமப்பட்டு ஏறிய மாமரத்தின் கனி அது, அது இனிக்கத்தான் செய்யும்.

நீங்கள் ஓர் சிந்தனையாளரின் முதல் புத்தகத்தை எத்தனை மனக்கிளர்ச்சியுடன் படித்தீர்கள் என்பதை நினைத்துப்பாருங்கள். அந்த நூலை இப்போது திரும்பிச் சென்று படித்துப்பாருங்கள், அது எத்தனை சாதாரணமாக இருக்கிறது என்று காண்பீர்கள். அந்த உளக்கிளர்ச்சி எங்கிருந்து வந்ததென்று உங்களுக்கு புரியவே புரியாது. அந்த உளக்கிளர்ச்சி அதனுடைய ’பாதி புரிந்த’ நிலையில் இருந்து உருவானது. நீங்கள் அதற்கு அளித்த கற்பனை மற்றும் ஊகத்தின் விளைவாக உருவானது. அந்நூல் பாதிதான், எஞ்சியது நீங்கள் உருவாக்கிக்கொண்டதுதான். மிகச்சுவையான இனிப்பு நம் குருதிதான்.

உண்மை, அவ்வாறு கற்பனையாலும் ஊகத்தாலும் நிரப்பிக்கொள்வதென்பது ஒரு சிறந்த உளப்பயிற்சியும் அறிவுப்பயிற்சியும்தான். ஆனாலும் அது மெய்மை நோக்கி கொண்டு செல்வதல்ல. முழுமையான அறிவை அடையச்செய்வதும் அல்ல. அத்தகைய துண்டுக்கல்வி தத்துவத்திற்கு எதிரானது.  ஏனெனில் அந்த ஊகத்தை அறிவையும் நீங்கள் அதற்கு முன் உங்களுக்கு இருந்த கல்வி மற்றும் கற்பனைப்பயிற்சியால் செய்துகொள்கிறீர்களே ஒழிய எந்த மெய்யனுபவத்தாலும் அல்ல. அந்நூலின் அத்தனை இடைவெளிகளிலும் உங்கள் ஆணவத்தைப்போட்டு நிரப்பிக்கொள்கிறீர்களே ஒழிய, எந்த அறிதலையும் கொண்டு அல்ல. அந்த நூலின் இடைவெளிகளை நீங்கள் புதிய அறிதல்களால் கட்டமைக்கவில்லை, ஏற்கனவே அறிந்தவற்றை மறுதொகுப்பு செய்து கட்டமைக்கிறீர்கள். இதுவே நூல் சார்ந்த மெய்யியல் கேள்வியின் முதல் பெரும் பிழை.

இரண்டாவதாக மெய்யியல் சார்ந்த எந்த ஒரு கல்வியும் உடனடியாக நடைமுறை சார்ந்ததாகவும், அதுவரைக்குமான மரபுடன் இணங்கியும் மறுத்தும் நிலைகொள்ளும் விதமாகவு புரிந்துகொள்ளப்படவேண்டும். அதன்மீது நீங்கள் செய்யும் உளப்பயிற்சி அல்லது அறிவுப்பயிற்சி என்பது அதுதான். ஒரு தத்துவக்கருத்து மெய்யாகவே உங்களுக்கு எந்தவகையில் பொருட்படுகிறது, உங்கள் வாழ்க்கை யை எவ்வளவு விளக்குகிறது, ஒரு கருத்தாக அன்றி ஒரு அனுபவமாக உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் மாற்றி அமைப்பதாக அது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்பதே அதை ஆழ்ந்து பயில்வதற்கான வழிமுறையாக இந்திய சிந்தனைமுறைகளில் சொல்லப்படுகிறது.

இந்திய சிந்தனை முறையையே தத்துவப் பயிற்சி (Philosophical Practice) என்று தான் சொல்கிறார்களே ஒழிய தத்துவக் கல்வி ( Philosophical Learning )என்று சொல்வதில்லை. தத்துவ உளவியல் பயிற்சி (Psyhco Philosophical Exercise) என்று அகேகானந்த பாரதி இந்தியாவின் ஒட்டுமொத்த தத்துவக்கல்வியை சொல்கிறார்.

மூன்று கூறுகள் அதிலே உள்ளன. தத்துவப்பயிற்சி, அகப்பயிற்சி, நடைமுறைப்பயிற்சி .இந்த மூன்றும் நிகழாமல் வெறும் மொழி அனுபவமாக, அதாவது வெறும் தத்துவவரிகளாக நீங்கள் ஒரு நூலைப் படித்துக்கொண்டு சென்றால் அது எந்த வகையிலும் உங்களை மாற்றுவதில்லை. உங்கள் சிந்தனையை அது மாற்றிவிட்டது என்று நினைத்துக்கொண்டிருப்பீர்கள். அந்த மாற்றம் உண்மையில் நிகழ்ந்திருக்காது. அந்த நூலை சில ஆண்டுகளில் மிக எளிதாக நீங்கள் மறந்துவிட்டிருப்பதை பார்க்கலாம். ஐந்தாறு ஆண்டுகளுக்குப்பிறகு அந்த நூலின் ஓரிரு வரிகள்  மட்டுமே உங்களுக்கு நினைவிலிருக்கும். அவற்றை கைப்பிடிகள் (Handle) என்று சொல்லலாம். அவ்வரிகளைக் கொண்டு அந்நூலை கையாள்வீர்கள்

இலக்கியப்படைப்புகளை அப்படி சொல்லமுடியுமா? டால்ஸ்டாய் வாசகர் ஒருவேளை போரும் அமைதியும் நாவலை  முழுமையாகவே மறந்துவிடக்கூடும். ஆனால் இலக்கியவாசிப்பு என்பது ’கற்றல் அனுபவம்’ அல்ல,  ‘வாழ்தல் அனுபவம்’, அது ஒரு நிகர் வாழ்க்கை . அந்த வாழ்க்கையினூடாக நீங்கள் கடந்து வரும்போது உணர்வாகவோ அறிவாகவோ நீங்கள் அறிந்தவை உங்களிடம்தான் இருக்கும். நூல்கள் மறக்கப்பட்டாலும் அவ்வனுபவம் சாராம்சமாக எஞ்சினாலே போதும்

ஆனால் ஆன்மிக தத்துவ நூல்கள் நிகர் வாழ்க்கை அனுபவத்தை அளிப்பதில்லை. அவை அறிதல் அனுபவத்தை அளிக்கின்றன. அறிதலை மறந்துவிட்டால் அவை பயனற்றவையாகிவிடுகின்றன. பெரும்பாலும் இந்த நூல்கள் அளிக்கும் ஒரே தொடர்பயிற்சி என்பது அந்நூல்களைப்பற்றி நீங்கள் எழுதும் குறிப்புகளோ அல்லது பிறரிடம் பேசுவதோ தான். ஜே. கிருஷ்ணமூர்த்தியைப்படித்த ஒருவர் ஜே.கிருஷ்ணமூர்த்தி இப்படி சொல்கிறார் அதைப்பற்றி நான் இப்படி நினைக்கிறேன் என்று தன் நண்பரிடம் பேசிக்கொண்டே இருப்பார். அந்தப் பேச்சுதான் அவரிடம் ஜே.கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து பெற்றதாக எஞ்சுமே ஒழிய ஜே.கிருஷ்ணமூர்த்தியின் நூல் அவரிடம் எஞ்சுவதில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பிறகு ஜே.கிருஷ்ணமூர்த்தியாக அவர் உருவாக்கிக்கொண்ட அந்த ஆளுமையை, அந்த கருத்துகளை அவர் சொல்லிக்கொண்டிருப்பாரே ஒழிய அவரில் ஜே.கிருஷ்ணமூர்த்தி வெளிப்படமாட்டார். இதை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அதிதீவிர வாசகர்கள் என்று நான் நம்பும் சுந்தர ராமசாமி, பிரமிள் உட்பட பலரிடம் பார்த்திருக்கிறேன்.

இந்திய தத்துவ மரபு அளிக்கு பயிற்சி என்பது மூன்று தளங்களில் நிகழக்கூடியது. அறிதல், உளப்பயிற்சி, நடைமுறை வாழ்க்கை. . எனில் மட்டுமே அது  தத்துவமாக கற்பவரில் மாறும் .அந்நிலையில் பல ஆயிரம் பக்கங்கள் தத்துவ நூல்களைப்படிப்பது இயல்வது அல்ல. அத்தனையையும் நடைமுறைக்கும் உளப்பயிற்சிக்கும் கொண்டு வருவதற்கு ஒருவருக்கு வாழ்க்கை அமைவதில்லை. பெரும்பாலான மரபார்ந்த தத்துவப்பள்ளிகளில் ஒரு நூலே ஒருவருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஒருநாளில் படித்து முடிக்கக்கூடிய ஒரு நூலை வாழ்நாள் முழுக்க பயில்வதாகத்தான் தத்துவ மரபு வகுத்திருக்கிறது. எனில் மட்டுமே அந்த நூலை ஒரு உளவியலாகவும் நடைமுறையாகவும் மாற்றிக்கொள்ள முடியும். மேலே சொன்ன மூன்றையும் ஸ்வாத்யாயம், மனனம், தியானம் என்று குறிப்பிடுகிறார்கள். அறிதல், உளம் வாங்குதல், ஆளுமையாக மாற்றிக்கொள்ளுதல்.

அவ்வாறு நிகழாதபோது அந்த நூல் செரிக்காத உணவு போல உடலில் எஞ்சுகிறது. வெற்று ஊளைச்சதையாக உங்கள் மேல் சுமை கொள்கிறது. ஒரு நூல் உங்களுக்கு அளிக்கும் அனைத்தையும் அவற்றின் மீதான முறையான உளப்பயிற்சியாகவும், ஒவ்வொரு நாளும் அன்றாடத்தில் மாறும் வாழ்க்கைப்பயிற்சியாகவும் மாற்றிக்கொள்வதற்கான ஒரு பயில்முறையை அது அளிக்கவில்லை எனில் அது வெறும் மொழிக்கட்டுமானம் மட்டுமே.

மேலைத் தத்துவ ஞானிகள் பெரும்பாலானவர்கள் இன்று நூல்கங்களில் வெறும் மொழிக்கட்டுமானமாக எஞ்சுகிறார்கள். அவர்களை அடுத்த தலைமுறை தத்துவ மாணவர்கள் மட்டுமே பயில்கிறார்கள். அவர்களிடமிருந்து கிளைத்து திகழ்பவர்கள் இலக்கியவாதிகள் மட்டுமே. அவர்களிடமிருந்து மெய்யியல் வழிகாட்டுதலைப்பெற முடியாது. மெய்யியல் வழிகாட்டுதல் இந்த முப்பட்டை உண்மையைக்கொண்டிருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

(மேலும்)

முந்தைய கட்டுரைஅரையர் சேவை
அடுத்த கட்டுரைஅறுபது -சிவராஜ் கடிதம்