தற்கல்வியும் தத்துவமும்-1

குர்ஜீஃப்

தமிழகத்தில் இன்று தத்துவக் கல்வி பற்றிப் பேசியதுமே ‘தத்துவப் பயிற்சியில் ஈடுபாடு உண்டு’ என்று சொல்பவர்கள் பலர் முன்வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தத்துவ ஆசிரியர்கள், ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள் மற்றும் இறைஞானம் கொண்டவர்கள் என அறியப்படும் ஆளுமைகளின் புகழ்பெற்ற நூல்களை வாசித்தவர்கள். பலர் மிகத்தீவிரமாகவே அவற்றை வாசித்திருக்கிறார்கள்.

இவ்வாறு வாசிப்பவர்களின் இயல்புகள் சில உள்ளன. வாழ்க்கையின் ஒரு தருணத்தில் நிலைக்கோளுக்காக தேடித் தவிக்கையில் இத்தகைய நூல்களை கண்டடைபவர்கள் உண்டு. அந்த வாசிப்பினூடாக அறிமுகமாகும் அடிப்படையான தத்துவநோக்கே அவர்களை விடுவித்துவிடும். பிரச்சினைகளை எளிய உணர்ச்சிகள், அன்றாட அரசியல்கள் ஆகியவற்றைக் கடந்து சென்று நோக்கும் ஒரு நிலைப்பேறை அவர்கள் அடைவார்கள்.

இந்நூல்களின் முதற்பெரும் பயன் என்பது இதுவே. ஆகவே இவை மிக உதவியானவை என்பதே என் எண்ணமாகும். நம்மை நிரந்தரமான எதிர்மனநிலைக்கு தள்ளி, செயற்கையான பதற்றத்திற்கும், விளைவான உளச்சோர்வுக்கும், நீண்டகாலக்  கசப்புக்கும் ஆளாக்கும் கட்சியரசியல் நூல்களை வாசிப்பவர்களைவிட இந்நூல்கள் மிகமிக மேலானவை. அவற்றை வாசிப்பவர்கள் நம்பிக்கையுடன் வாழ்க்கையை அணுகவும், அடைந்தவற்றில் அகநிறைவு கொள்ளவும் வழியமைக்கின்றன இந்நூல்கள்.

ஆன்மிகதத்துவ நூல்களை வாசிப்பவர்களில் சிலர், அவர்கள் தேடுவதென்ன என்று அறியாமலேயே வாசித்துக் கொண்டிருப்பார்கள். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு, ஒரு ஞானியிலிருந்து இன்னொருவருக்குச் சென்றுகொண்டிருப்பார்கள். அவர்களில் சிலர் ஒருவரில் இருந்து இன்னொருவருக்குச் செல்லும்போது முந்தையவரை கடந்து சென்றுவிட்டதாக நினைத்துக்கொள்வார்கள். ‘ஓஷோ கொஞ்சநாள் வாசிச்சிட்டிருந்தேன். இப்ப ஜே.கிருஷ்ணமூர்த்தி கிட்ட வந்ததும் அவரை கடந்தாச்சு’ என்று சொல்பவர்களைக் கண்டிருக்கிறேன்

உண்மையில் அவர்கள் கடந்து செல்லவில்லை. ஒரு ஞானியை மெய்யாகவே கடப்பதென்பது அவர் இருந்த நிலையை அடைந்து கடந்தால் மட்டுமே இயல்வது. ஓஷோவை ஓஷோவை விட பெரியவர்களே கடக்க முடியும். ஒஷோவைக் கடந்துவிட்டதாக எண்ணுபவர் ஓஷோவின் வழிமுறையில், உரையாடலில் இவர் தேடும் ஒன்று இல்லை என்று கண்டடைந்திருக்கிறார், அவ்வளவுதான்.

அவர் தேடுவதென்ன என அவருக்கே தெளிவில்லை என்பதனால் அவர் முன்னகர்கிறாரா , சுற்றிச்சுற்றி வருகிறாரா என அவருக்கே தெரியாது. சிலசமயம் அவர் சிக்கிக்கொண்டிருக்கவும் கூடும். ஆனால் அவர் எப்படி எதை வாசித்தாலும், அந்த தொடர் வாசிப்பாலேயே அவர் தன்னுள் வளர்ந்துகொண்டும் இருப்பார். பிற எந்தச் செயலைவிடவும் இந்த வாசிப்பு அவரை ஒருங்கமையச் செய்யும். ஒருவரின் கவனத்தை குவியச்செய்யும் எதுவும் ஏதோ ஒருவகையில் அவரை விடுவித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இந்தவகையான வாசிப்புகள் எந்நிலையிலும் பயனுள்ளவையே. அவை அறிஞர்களின் சிந்தனைகள், ஞானியரின் சொற்கள் என்பதனாலேயே அவை பெரும் ஆசிகள். ஆகவே அவை அரியவை.

விவாதிக்கப்பட வேண்டிய வினா  என்னவென்றில்  அவற்றை வாசிப்பது தத்துவக் கல்வி ஆகுமா என்பதே. அல்லது தத்துவத்தை அவற்றினூடாக கற்றுக்கொள்ள முடியுமா? தனக்குத்தானே ஒருவர் தத்துவத்தை கற்றுவிடுவது இயல்வதா? எந்த அளவுக்கு தத்துவத்தில் தற்கல்விக்கு இடமுண்டு?

முதல் பதில், தத்துவத்திற்குள் நுழைய அந்த ஆன்மிகதத்துவ நூல்களின் மீதான வாசிப்பு நல்ல வாசல் என்பதுதான். அத்தகைய நூல்கள்தான் நமக்கு உடனே அறிமுகமாகின்றன. ஆகவே இயல்பாக வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அவற்றுக்குள் நுழைகிறோம். அவை நமக்கு நம் வாழ்க்கையை முழுமையாக எடுத்து ஆராயவும், அடிப்படைகள் சார்ந்து பார்க்கவும், முதன்மை வினாக்களை எழுப்பிக்கொள்ளவும் உதவுகின்றன. அந்தப் பயிற்சி தத்துவத்தை நோக்கி நம்மை கொண்டுசெல்லக்கூடும்.

இலக்கிய வாசிப்பும், இலக்கிய எழுத்துப்பழக்கமும் கொண்ட ஒருவருக்கு ஆன்மிகதத்துவ நூல்களின் வாசிப்பு மிக உதவியானது. ஏனெனில் மிக அருவமான, மிக மிக அகவயமான, முற்றிலும் நுண்ணுணர்வு சார்ந்த ஒன்றை புறவயமான மொழியில் சொல்வதற்கான தொடர்முயற்சிகள் இத்தகைய நூல்களில் இருக்கும். இலக்கியம் என்பதும், கவிதை என்பதும் அதைத்தான் செய்யமுயல்கின்றன.

ஆகவே தத்துவ நூல்களில் இருக்கும் மொழிவெளிப்பாடு கவிதைக்கு நிகரானதாக இருக்கும். சுருக்கமும் செறிவும் கொண்டதாக இருக்கும். மொழியின் மிக உயரிய சாத்தியங்கள் அவற்றில் வெளிப்படும். அரவிந்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்குச் சமானமான ஆங்கிலமொழியாட்சி இந்தியாவின் எந்த இலக்கிய எழுத்தாளரிடமும் இல்லை. அந்த மொழிநடை எழுத்தாளனின் மொழியை அவனை அறியாமலேயே கூர்மைப்படுத்தும்.

நான் ஒன்றைக் கவனித்திருக்கிறேன். இத்தகைய வாசிப்பு கொண்டவர்கள் எப்போதும் அவர்கள் உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டிருக்கும் அரிய வரிகளை குறிப்பிடுவார்கள்.  மொழி வெளிப்பாடுகளாகவே அவற்றை நினைவில் சேமித்திருப்பார்கள். பெரும்பாலான தத்துவவாதிகளை, மறைஞானிகளை அவருடைய முத்திரை பதிந்தவை என்று சொல்லத்தக்க சில வரிகளாகவே நினைவு வைத்திருக்கிறோம். அவ்வரிகளைக்கொண்டே அவரை வகுத்திருப்ப்போம். அது இலக்கியவாசகன் என்ற வகையில் சரியானதும் இயல்பானதும்தான்.

தத்துவமொழி மிகச் செறிவாக ஒன்றைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில் ஒரு தத்துவக்கொள்கை அதன் செறிவை இழக்கும்போது அதன் தத்துவத்தன்மையே இல்லாமலாகிறது. இவ்வியல்பை தத்துவத்தை அறிந்தவர்கள் கூர்ந்து பார்த்திருக்கலாம். மிகச்செறிவாக ,குறைந்த சொற்களில், கூரிய மொழியில் சொல்லப்படும்போது ஒரு தத்துவக்கூற்று ஒரு தரிசனம் என நிலைகொள்கிறது. ஒரு வரையறையும் அறிவிப்பும் ஆகிறது. அதையே எளிய மொழியில் பலபக்கங்களுக்கு விரித்துரைத்தால் ஒரு குறிப்பிட்ட வகையான விவாத முறையாகவே அது தோற்றமளிக்கிறது.

இதை காந்தி தன்னுடைய ஓர் உரையாடலில் சொல்கிறார். பியாரிலாலுடன் மார்க்சியம் பற்றி உரையாடும்போது ‘இவர் சொல்வது ஒரு எளிமையான வாதம்தான். ஆனால் செறிவான மொழியில் சொல்வதனால் அது கொள்கையாகத் தோற்றமளிக்கிறது’ என்று காந்தி குறிப்பிடுகிறார்.

காந்தியைப்பொறுத்தவரை எப்படிச் சொன்னாலும் தன்னளவில் ஒரு தரிசனமாகவே நிலைகொள்ளும் ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். அறிவார்ந்த விவாதங்கள் வழியாக மட்டுமே நிலைகொள்ளக்கூடிய ஒன்று உண்மையாக இருக்க முடியாது. அது நடைமுறைக்கு வரும்போது பலவகையில் அது நீர்த்துப்போகும்.  ஏனென்றால் நடைமுறை வாழ்வில் பலவகையில் பலமொழிகளில் மறுபடியும் மறுபடியும் சொல்லப்படும். அப்போது அது தன் மதிப்பை இழக்குமெனில் அது ஒரு அறிவுத்தள வெளிப்பாடன்றி மெய்த்தள வெளிப்பாடல்ல.

ஆன்மிகதத்துவ நூல்களை பயில்பவர்கள் தங்களை அறியாமலேயே விசைகொண்ட ஒரு மொழியுடன் கூடவே ஓடுபவர்களாக மாறுகிறார்கள். விளைவாக அவர்களுடைய உள்ளத்தில் இருக்கும் மொழி நுண்ணுணர்வு மிகச்சிறப்பான பயிற்சியை அடைகிறது. அது அவர்களுக்கு அறிவுநிறைவை அளிக்கிறது. அந்த அறிவு நிறைவே தாங்கள் ஒரு மெய்யான விஷயத்தை கற்கிறோம் என்னும் எண்ணத்தை அளித்துவிடுகிறது.

நாம் ஒன்றை உழைத்து கற்றுக்கொண்டாலே அது உண்மையானது, மதிப்பு மிக்கது என்று எண்ணுகிறோம். மிகச் சிரமப்பட்டு ஒரு மரத்திலேறி பறிக்கும் கனி இனிப்பல்ல என்று எவராலும் சொல்லமுடியாது. எனில் அந்த முயற்சி வீண் என்று ஒத்துக்கொள்ளவேண்டியிருக்கும். அந்த முயற்சியின் மதிப்பு அக்கனி மேல் அறியாமலேயே ஏறிவிடுகிறது.

ஆனால் மொழி வழியாக அறியப்படும் தத்துவம் என்பது ஒரு மொழியனுபவமே ஒழிய தத்துவ அனுபவம் அல்ல. மொழிக்காக இந்நூல்களை வாசிப்பவர்கள் தத்துவத்தை பயிலவில்லை. அவர்கள் நல்ல வரிகளாக நினைவில் கொள்வனவும், மேலதிகமாக எண்ணி வளர்ப்பவனவும் அளிப்பது தத்துவப்புரிதல் அல்ல.

தத்துவம் என்பது உதிரிக் கருத்துக்களின் தொகுப்பு அல்ல. தத்துவம் என்பது ஒரு கட்டுமானமாகவே எப்போதும் திகழமுடியும். முதன்மையாக அது ஒரு தர்க்கக் கட்டுமானம். அந்த தர்க்கத்திற்கு அடிப்படையாக அது எடுத்துக்கொள்ளும் அறிதல்களின் (பிரமாணங்களின்) கட்டுமானம் அதற்கு அடியில் உள்ளது. அதற்கும் அடியில் உள்ளது ஒரு குறிப்பிட்டவகையான பார்வையின், குறிப்பிட்ட வகையான அனுபவமண்டலத்தின் அடித்தளம்.

தத்துவம் ஒற்றையமைப்பாக , முழுமையாகவே கற்கப்படவும் நினைவுகூரப்படவும் விவாதிக்கப்படவும் முடியும். அதன் ஒரு சிலகூறுகளை மட்டும் கொண்டு கற்பதும் நினைவுகூர்வதும் விவாதிப்பதும் பெரும்பாலும் தத்துவத்தை பிழையாக சென்றடைவதில் முடியும். சமயங்களில் நேர்த்தலைகீழாகச் சென்றடைவதில் முடியும்.

ஒரு குறிப்பிட்ட தத்துவம் அதன் முன்வடிவம் பின்வடிவத்துடன் இணைந்தே உள்ளது. அது எதனுடனெல்லாம் விவாதிக்கிறதோ அதெல்லாம் அதனுடன் இணைந்துள்ளன. அது எங்கிருந்தெல்லாம் எடுத்துக்கொள்கிறதோ அதெல்லாம் அத்தத்துவத்துடன் இணைந்துள்ளன. அத்துடன் ஒரு தத்துவம் அது உருவான ஒட்டுமொத்த தத்துவப் புலத்தில் அமைந்துள்ளது. அத்வைதத்தை ஆறுதரிசனங்களின் புலம் இன்றி புரிந்துகொள்ள முடியாது. பௌத்த, சமண மதங்களின் விவாதக்களம் இன்றி கற்கக்கூடாது.

ஆகவே சமகால ஆன்மிகதத்துவ நூல்களை தனிமனிதர் தன் உளக்குவிப்புக்காக, ஊக்கத்துக்காக, அகநிறைவுக்காக வாசிக்கலாம். இலக்கியவாசகனும் எழுத்தாளனும் மொழிக்காக வாசிக்கலாம். தத்துவத்தின் அறிமுகவாயிலாக அவற்றைக் கொள்ளலாம். ஆனால் அவை தத்துவமல்ல என்றும், தத்துவக் கல்வி முற்றிலும் வேறானது என்றும் நமக்கு தெளிவு தேவை

(மேலும்)

முந்தைய கட்டுரைஅசோகமித்திரன்
அடுத்த கட்டுரைகல்பொருசிறுநுரை