வணக்கம் கிருஷ்ணன்,
வாசிப்பு முகாம் மிகவும் சிறப்பாக உங்களுக்கே உரிய கறார் தன்மையுடன் நடத்திவிட்டீர்கள். அந்த இரண்டு நாள் ஒரு ணித்துளிக்கூட வீணாகவில்லை என்ற நிறைவுடன்தான் ஊர் வந்து சேர்ந்தேன். இது எவ்வளவு அரிதான ஒரு விஷயம்! காலையில் எழுந்தது முதல் உறங்கும் வரையிலும் இலக்கியம், வாசிப்பு பற்றி மட்டுமே பேசுவது அன்றாட வாழ்க்கையில் நினைத்தே பார்க்க முடியாத விஷயம் இல்லையா.
இலக்கியம் மட்டும் அல்ல அங்கு இருக்கும் போது எந்த ஒரு துறை சார்ந்து பேச்சு சென்றாலும் அதில் ஒரு தீவிரத்தை தொட்டது. எதை எடுத்தாலும் அதில் ஆழத்தை பார்ப்பது ஜெ.மோ.வின் வாசகர்களுக்கே உரியது என்று நினைக்கிறேன். சாப்பாடு சாலையில் உங்களுக்கும், விக்னேஷுக்கும் நடந்த உரையாடல் அது போன்றதுதான். இங்கிலாந்தில் brain dead-ஆன ஒரு பையனுக்காக அவனின் தாய் தந்தையிருக்கும், மருத்துவருக்கும் இடையில் நடந்த விவாதம், அந்த நாட்டில் இருக்கும் சட்டம் இந்த விஷயத்தில் எழக்கூடிய அறக்கேள்விகள், இந்தியாவில் அதை எப்படி பார்ப்பார்கள் என்ற உங்கள் கேள்வி அதை சார்ந்து சுற்றியுள்ள வர்களெல்லாம் எழுப்பிய ஐயங்கள், வினாக்கள் எல்லாம் ஒரு நல்ல கட்டுரைக்கு உகந்தவை.
திரு கோபால கிருஷ்ணன் அவர்கள், ராஜ கோபாலன் அவர்களுடன் அரங்குகளுக்கு அப்பாற்பட்ட நட்பு கூடலில் இதே அளவு தீவிரத்தை பார்க்க முடிந்தது. ராஜ கோபால் அவர்களிடம் முதல் நாள் அன்று ஒரு பத்துபேர் இரவு 10.00 முதல் 12.30 வரைக்கும் கவிதை வாசிப்பில் உள்ள போதாமைகள் பற்றியே பேசிக்கொண்டு இருதோம். முகாமிற்காக போகன் சங்கர் அவர்கள் தேர்ந்தெடுத்த கவிதைகளை வாசித்தோம். எத்தனையோ திறப்புகளை அளித்தது அவருடனான அந்த கூடல்.
அரங்குகள் எல்லாமே சிறப்புதான், அனீஸ் கிருஷ்ணன் அவர்களின் அரங்குகள் நேர உணர்வே இல்லாமல் செய்தன. வாசிப்பு சார்ந்து இருக்கும் முன்முடிவுகள், தவறான புரிதல்களை சுட்டிக்காட்டின. போகன் சங்கரின் கதைக்கு அவர் செய்த அந்த பெண்ணிய atopsy என்றும் நினைவில் நிற்கும் ஒன்று!
வெளியில் அது எந்த துறை சார்ந்த கூடல் என்றாலும், அறிமுகமாகும் எவரானாலும் ஒரு சில வார்த்தைகளுக்கு பிறகு அவர்களின் பேச்சு சினிமா சார்ந்து தான் திரும்பும். ஆனால், நான் முகாமில் இருந்த அந்த இரண்டு நாளும் ஒரு வார்த்தை கூட அதை பற்றி எழவில்லை. இத்தனைக்கும், ஜெ.மோ. பணியாற்றிய ஒரு பெரிய திரைப்படம் அதற்கு முந்தய நாள் வெளியாகி இருந்தது.
ஞாயிறு மாலை நானும் நண்பர்கள் விஜயபாரதி, ராம், பாலகணேஷ், ஜெகன் மற்றும் பாலாஜி ஒரு காரில் மலையில் இருந்து கிளம்பினோம். பவானியில் நாங்கள் பிரியும் வரையில். முந்தையநாள் வாசித்த கவிதைகளை பற்றியும், வெண்முரசு கர்ணன் பற்றியும் மட்டும்தான் பேசிக்கொண்டு வந்தோம். இந்த மனநிலை தான் இந்த முகாமின் வெற்றி என்று நினைக்கிறேன். அதில் பங்கு பெரும் வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி கிருஷ்ணன் சார்.
அன்புடன்,
ராஜு
ஐதராபாத்
*
வணக்கம் கிருஷ்ணன் சார்,
ஒவ்வொரு விஷ்ணுபுரம் நிகழ்விழும் எதிர்பார்பது போலவே, இந்த நிகழ்ச்சியிலுல் நடத்தப்பட்ட அமர்வுகள் இலக்கியத்தில் ஆர்வமுள்ள எவருக்கும் மிகவும் பொருத்தமானவை மற்றும் மதிப்புமிக்கவை. அந்தந்த துறைகளில் பாராட்டத்தக்க அனுபவம் மற்றும் நிபுணத்துவம் கொண்ட நிபுணர்களால் அமர்வுகள் வழி நடத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும், இந்த அமர்வுகள் கற்றல் பயணத்தில் திறம்பட பயணம் செய்வதற்கும், வெற்றிகரமாக முன்னேறுவதற்கும் உதவும். இந்த அமர்வுகள் பரவலாக கற்றலில் முக்கியமான அம்சங்கள் மற்றும் அடித்தள அடுக்குகளை உள்ளடக்கியது:
- ஏன் படிக்க வேண்டும் அமர்வு: அறிதல் பகுதி, புரிதல் பகுதி மற்றும் உணர்தல் பகுதி ஆகியவற்றின் அடிப்படை அம்சங்களை மிக தெளிவாக விளக்கியது.
- எப்படி வாசிப்பது அமர்வு: Context புரிதல், செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை, Inter text மற்றும் sub-text அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு கலைச் சொற்களின் வரையறைகள், நுட்பங்கள் அறிதல், மதிப்புரைகளில் பயன்படுத்தப்படும் tools மற்றும் techniques, இலக்கியக் கோட்பாடு போன்றவற்றை மிக தெளிவாக அறிந்து கொள்ள உதவியது.
- சிறுகதை மற்றும் கவிதை வாசிப்பு அமர்வு: நல்ல கவிதை, சிறுகதைக் கட்டமைப்பையும் அதன் அம்சங்களையும் நமக்கு விளக்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை, சிறுகதைகளின் நுணுக்கங்களைத் திறந்து கொள்ள உதவியது.
தொகுப்பாளர்கள் ராஜகோபாலன், அனீஷ் நாயர், போகன், கோபாலகிருஷ்ணன் மற்றும் மோகனரங்கன் ஆகியோருக்கு என் நன்றியையும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அச்சூழல் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மிகவும் பொருத்தமானது, இந்த இடம் Temple of Learning. வீட்டு சூழலை வழங்கிய மணி மற்றும் ஒருங்கிணைப்பு குழுவுக்கு நன்றி. இது போன்ற மதிப்புமிக்க திட்டங்களைக் கொண்டு வர குழுவுக்கு தொடர்ச்சியான ஊக்கமளித்துகொண்டுருக்கும் ஜெ சாருக்கு மரியாதைகள் மற்றும் நன்றிகள்.
இந்தியாவில் உள்ள எந்த பல்கலைக்கழகமும் / கல்லூரியும் தங்கள் இலக்கிய மாணவர்களுக்கு கூட இதுபோன்ற அற்புதமான திட்டத்தை நடத்துவதில்லை. இது ஒரு முன்னோடி பயிற்சி என்று நான் நம்புகிறேன். வரவிருக்கும் வகுப்புகளில் இன்னும் பலர் இதனால் பயனடைவார்கள்.
மீண்டும் நன்றி.
ஆனந்த் கிருஷ்ணன்
திருப்பூர்.
***