நுகர்வுக்கு அப்பால்

பொன்னிப்பெருக்கு

அன்புள்ள ஜெ,

பொன்னியின் செல்வன் பற்றிய உங்கள் கட்டுரை பொன்னிப்பெருக்கு பொதுவாகவே சினிமாவைப் புரிந்துகொள்ள ஒரு முக்கியமான வழிகாட்டுதலாக இருந்தது. நீங்கள் சினிமா பற்றி எழுதுவதில்லை. இங்கே எழுதும் ’அறிவுஜீவிகள்’ பலருக்கு சினிமா பற்றி ஒன்றும் தெரியாது என்பது என்னைப்போன்ற எளிமையான வாசகர்களுக்கே தெரியும். இப்படி எப்போதாவது நீங்கள் எழுதும் குறிப்புகளில் இருக்கும் தெளிவும், தொழில்நுட்பச்செய்திகளும் , சுட்டிகளும்தான் ஒரு பார்வையை அளிக்கின்றன.

என் கேள்வி, சினிமா பார்க்கும்போதும் விமர்சிக்கும்போதும் இந்த lag, Goosebumps போன்ற சொற்களை பயன்படுத்துவது அறியாமையைக் காட்டும் என்று சொல்லியிருந்தீர்கள். genre பிரித்துப் பார்ப்பதே நல்ல ரசனை என சொல்லியிருந்தீர்கள். இலக்கியத்திற்கும் அதைப்போன்ற அடிப்படைகள் உள்ளனவா? அதையெல்லாம் இலக்கியத்திற்குச் சொல்லமுடியுமா?

எஸ்.ராஜ்குமார்

*

அன்புள்ள ராஜ்குமார்,

எல்லா கலைக்கும் பொருந்தும் விதிகள்தான் அவை. அவை உண்மையில் ரசனைக்கும் கற்றலுக்கும் உரிய விதிகள்.

முதலில் ரசனை, நுகர்வு இரண்டுக்கும் வேறுபாடுண்டு என புரிந்துகொள்ள வேண்டும். நுகர்வு என்பது ஒரு வணிகப்பொருளை விலைகொடுத்து வாங்கி அனுபவித்தல். அங்கே நாம் நுகர்வோர் மட்டுமே. ரசனை என்பது ஒரு கலையை அல்லது இலக்கியத்தை நாம் உணர்வதும் அறிவதும். அங்கே நாம் பார்வையாளர், ரசிகர், வாசகர் என்னும் நிலையில் இருக்கிறோம். இரண்டுக்கும் மிகப்பெரிய வேறுபாடுண்டு.

நுகர்வு என்பது ஒரு பொருளியல் செயல்பாடு. உற்பத்தி – வினியோகம் – நுகர்வு என பொருளியல் செயல்பாடு மூன்று நிலைகள் கொண்டது. நவீன முதலாளித்துவச் சூழலில் அவற்றில் நுகர்வே முதன்மையானது. அதுவே உற்பத்தியையும், வினியோகத்தையும் தீர்மானிக்கிறது. நுகர்வோரின் தேவை, ரசனை ஆகியவற்றின் அடிப்படையிலேயே பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நுகர்வில் நுகர்பவன் தன் இடத்தில் நிலைகொள்கிறான். அவன் மாறுவதில்லை. அனைத்தும் அவனை நோக்கி வருகிறான். அவன் தன் தேவையின் அடிப்படையிலும் ரசனையின் அடிப்படையிலும் எதையும் ஏற்கவோ மறுக்கவோ உரிமை கொண்டவன். எதையும் அவன் விமர்சிக்கலாம், கருத்துச் சொல்லலாம். அவையெல்லாம் உற்பத்தியாளர்களால் கருத்தில்கொள்ளப்படும். அதற்கேற்ப உற்பத்தியாளர்களால் பொருட்களின் அமைப்பும் பயன்பாடும் மாற்றியமைக்கப்படும்.

நுகர்வோன் எதையும் கற்றுக்கொண்டாகவேண்டும் என்னும் கட்டாயம் இல்லை. நுகர்வோனுக்கு அந்நுகர்பொருள் பற்றி கொஞ்சம் ஏதாவது தெரிந்தாகவேண்டும் என்றால் உற்பத்தியாளரும் வினியோகம் செய்பவரும் சேர்ந்து அவனுக்கு அதை கற்பிப்பார்கள். அதை விளம்பரம் வழியாக திரும்பத் திரும்பச் சொல்வார்கள். அவன் விரும்பாவிட்டாலும் அவனுக்குள் புகுத்திவிடுவார்கள்.

நவீனப்பொருளியல் ஒவ்வொருவரையும் நுகர்வோனாக ஆக்குகிறது. எத்தனை அதிகமாக ஒருவரை நுகரச்செய்கிறதோ அந்த அளவுக்கு பொருளியல் வளர்கிறது. ஆகவே இடைவிடாது நம்மைச் சூழ்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பது அனைவரையும் நுகர்வோர் ஆக மாற்றும் செயல்பாடுதான். அந்தச் செயல்பாட்டையே நாம் விளம்பரம் என்கிறோம்.

நாம் நம்மை அறியாமலேயே நுகர்வோர் ஆக மாறிவிட்டிருக்கிறோம். மிக இளமையில், குழந்தைப் பருவத்தில் இருந்தே நுகர்வோராக பழக்கப்படுத்தப் படுகிறோம். அதுவே இயல்பானது என நினைக்கிறோம். நுகர்வோராக இருப்பது என்பது ஓர் அதிகாரம் என்றும், நுகர்வோரின் தேவைகள் நுகர்வோரின் உரிமை என்றும் நினைக்கிறோம். ஆனால் இந்த உளநிலைகளெல்லாமே நமக்கு விற்பனையாளர்களால் அளிக்கப்படுபவை என்றும் நாம் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் மட்டுமே என்றும் அறிவதில்லை.

இந்த நுகர்வோர் மனநிலை இரண்டு விஷயங்களுக்கு முற்றிலும் எதிரானது. பெரும் தடையாக அமைவது. ஒன்று, ரசனை. இரண்டு, கல்வி. நுகர்வோர் மனநிலையை கடக்காதவரை எவரும் இவ்விரண்டின் உள்ளே நுழையவே முடியாது.

என்ன காரணம்? முதன்மையாக ஒன்றே. நுகர்வோர் ஒரு மையம். அவன் சுரண்டப்படுபவன். ஆனால் அச்சுரண்டலை சேவை என நம்பவைக்கப் பட்டிருக்கிறான். ஆகவே அனைத்தும் அவனை நோக்கி வருகின்றன. அவனை கவர முயல்கின்றன. அவனுக்குப் பிடித்தபடி இருக்க முயல்கின்றன. அவனுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்கின்றன. ரசனை, கல்வி இரண்டிலும் ரசிகனும் மாணவனும் தாங்களே தேடிச்செல்லவேண்டும். தங்களை தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டும். தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். தாங்களே முயற்சி எடுத்துக்கொண்டு உழைக்கவேண்டும்.

ஒரு கல்விநிலையத்தில் நீங்கள் ஆசிரியரை உங்களுக்கு ஒரு சேவையை விற்பவர் என நினைத்தால், அங்கே கிடைக்கும் கல்வியை பணம்கொடுத்து வாங்கும் நுகர்பொருள் என கருதினால் உண்மையான கல்வியைப் பெறவே முடியாது. ஏன்? காரணம், உண்மையான கல்வி என்பது ஓர் ஆக்கச்செயல்பாடு மட்டுமல்ல ஓர் அழிவுச்செயல்பாடும்கூட. நீங்கள் ஏற்கனவே அறிந்த சிலவற்றை மறுத்து, அவற்றை உடைத்து அழித்து, அவற்றை நீக்கம் செய்து அந்த இடத்தில்தான் புதிய கல்வி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியும். கல்வியழித்தல் இல்லாமல் கல்வி இல்லை.

ஆகவே நீங்கள் உண்மையான கல்வியைக் கற்கிறீர்கள் என்றால் உங்களுக்குள் ஓர் ஆணவ உடைவு நிகழும். அதன் விளைவான கொந்தளிப்பு நிகழும். எந்த புதிய விஷயத்தையும் நாம் மறுப்போம். வலுவான கல்வி அந்த மறுப்பை ஊடுருவி நம்மை வந்தடையும். எந்த நல்ல ஆசிரியனும் முதலில் நமக்கு ஓர் ஒவ்வாமையை உருவாக்குவான். அதை நாம் கடக்கும்போதே அவன் நம்மை கவர்வான். நம்மைச் சீண்டாத நல்லாசிரியனே இருக்க முடியாது.

நாம் நுகர்வோராக நம்மை நிறுத்திக்கொண்டால் நமக்கு கற்பிப்பவர் நம்மை சீண்டமாட்டார். நம் ஆணவத்தை உடைக்க மாட்டார். நமக்கு ஒவ்வாததைச் சொல்ல மாட்டார். நாம் விரும்பியதையே சொல்வார். நம் கருத்துக்களை அவரும் ஆமோதிப்பார். நம் ரசனைக்கும் தேவைக்கும் ஏற்ப அவர் தன்னையும் தான் சொல்வதையும் மாற்றிக்கொள்வார். அந்நிலையில் நாம் ஏற்கனவே அறிந்ததையே மீண்டும் அறிந்துகொண்டிருப்போம். நம் அறியாமை உடையவே உடையாது. அது மேலும் மேலும் கெட்டிப்படும்.

ஆசிரியர் நம்மை மேம்படுத்த முயல்பவர். நேர்மாறாக, நமக்கு நுகர்பொருளை விற்பவர் நம்மை சுரண்டி அவர் லாபம் அடைய முயல்பவர். இதுவே வேறுபாடு. நாம் நுகர்வோராக இருந்தால் நமக்கு ஆசிரியர் அமையமாட்டார். விற்பனையாளரே அமைவார். அங்கே கல்வி நிகழவில்லை. தகவல் விற்பனை, கருத்துவிற்பனை , பயிற்சி விற்பனை நடைபெறுகிறது. அத்தகைய பல ‘பயிற்சிகள்’ இங்கே உள்ளன. ஆனால் அவை கல்வி அல்ல என்னும் தெளிவு நமக்குத் தேவை.

இதுவே ரசனைக்கும் பொருந்தும். இயற்கையை ரசிப்பதைக்கூட நுகர்வாக எண்ணிக்கொள்ள நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஊட்டி ஏரியை பார்த்து ‘கொடுத்த காசுக்கு ஒர்த்துடா!” என்று சொல்லும் பலரை நான் கண்டிருக்கிறேன். அம்மனநிலை ரசனையை முற்றாக அழிப்பது.

ஏனென்றால், நுகர்வு என்பது நாம் விரும்பும் பொருளை நம் விருப்பப்படி ஆக்கிக்கொண்டு அனுபவிப்பது. நம் விருப்பத்தையே பொருளாக ஆக்கி நுகர்ந்து மகிழ்கிறோம். ரசனை என்பது நாம் அந்த ரசிக்கப்படும் விஷயம் நோக்கி முன்னகர்வது. ரசனை என்பது நம்மை சற்றேனும் மேம்படுத்தவேண்டும். நுகர்வில் நாம் வளர்வதில்லை.

நுகர்வுக்கும் ரசனைக்கும் அடிப்படை மனநிலையிலேயே வேறுபாடு இருப்பதை நாம் காணலாம்.  நுகர்வோர் தான் ஏமாற்றப்படுகிறோமா என்று கவனமாக இருக்கிறார். கொடுத்த பணத்துக்கு நிகரான ‘அனுபவம்’ கிடைக்கிறதா என்று கண்காணித்துக்கொண்டே இருக்கிறார். அவருக்கு அந்த அனுபவம் எப்படி இருக்கவேண்டும் என ஒரு முன் அனுமானம் உள்ளது. அந்த அனுமானப்படியே அனுபவம் நிகழ்ந்தாகவேண்டும். இல்லையேல் தன் பணத்துக்கான மதிப்பு கிடைக்கவில்லை என நினைக்கிறார்.

ஆகவே பெரும்பாலான நுகர்வோர் எப்போதுமே அதிருப்தி நிலையிலேயே இருப்பதைக் காணலாம். ’இதைவிட நன்றாக அங்கே கிடைக்கிறது’ ’போனதடவை இதைவிட நன்றாக இருந்தது’ என்னும் இரு வரிகளையே திரும்பத் திரும்ப நுகர்வோர் சொல்வதைப் பார்த்திருப்போம். நுகர்வோர் உண்மையில் ரசிப்பதே இல்லை. அவர்கள் செய்வது ஒரு வணிகம். வணிகத்தில் ரசனையே இல்லை. பேரம் மட்டுமே.

ரசனையை புறவயமாக, திட்டவட்டமாக மதிப்பிட முடியாது. வெங்கடேஷ் குமாரின் இசையை இத்தனை ரூபாய் மதிப்புள்ளது என எவரேனும் வரையறை செய்ய முடியுமா? ஓர் இசை ரசிகனுக்கு அது விலைமதிப்பற்றது. இசையறியாதவனுக்கு அது மதிப்பே அற்றது. இங்கே பிரச்சினை ரசிகனின் தகுதிதான். அவன் எவ்வகையில் தன்னை ரசிகனாக பயிற்றுவித்திருக்கிறான், எந்த அளவு இசைக்குச் செவிகொடுக்கிறான் என்பதுதான் கேள்வி.

இலக்கியம், கலைகள் இரண்டுமே ஒரே சமயம் ரசனை, கல்வி ஆகிய இரு தளங்களும் கொண்டவை. ஆகவே நுகர்வோர் மனநிலை என்பது இவற்றில் முற்றிலும் எதிர்மறையான ஒன்று. நுகர்வோர் மனநிலையின் சிறு கூறு இருந்தால்கூட கலையிலக்கியங்களுக்குள் நுழைய முடியாமலாகும்.

கலை, இலக்கியங்களுக்கு இங்கே விலை போடப்படுகிறது. அவை சந்தையில் விற்கவும்படுகின்றன. அவற்றுக்கு விளம்பரமும் உள்ளது. ஏனென்றால் அவை உற்பத்தி செய்யப்படுகின்றன, வினியோகம் செய்யப்படுகின்றன. அவற்றில் மூலப்பொருள், உழைப்பு, அமைப்பு ஆகியவை உள்ளன. ஆகவே அவற்றில் கூலி, லாபம் ஆகியவை இருந்தாகவேண்டும்.  முதலாளித்துவ அமைப்பில் வேறு வழி இல்லை.

அவை விலைக்கு விற்கப்படுகின்றன என்பதனாலேயே அவை நுகர்பொருட்கள் என நம்புவதுதான் நம் காலகட்டத்தின் மிகப்பெரிய மாயை. ‘அவை விலைக்கு விற்கப்படுகின்றன, அப்படித்தான் நுகர்பொருளாக அவற்றை நான் பார்ப்பேன்’ என ஒருவர் சொன்னால்  ‘சரி, உன் விருப்பம்’ என்றுதான் சொல்லமுடியும். ஏனென்றால் இழப்பு அப்படிச் சொல்பவருக்குத்தான்.

நுகர்பொருளாகக் கலையையும், இலக்கியத்தையும் கண்டு சொல்லப்படும் எல்லா கருத்துக்களும் அபத்தமானவைதான். கலைக்கும் இலக்கியத்திற்கும் நேர் எதிரானவைதான். நுகர்வுப்பொருளாகக் கலையையும் இலக்கியத்தையும் கண்டு சொல்லப்படும் எதிர்மதிப்பீடுகள் மட்டுமல்ல, பாராட்டுக்கள்கூட அசட்டுத்தனமானவை.

‘வெங்கடேஷ்குமார் பாட்டு கேட்டேன், ஆயிரம் ரூபாய்க்கு ஒர்த்து’ என ஒருவர் சொன்னால் அவர் ஒரு மொண்ணை என்று மட்டுமே பொருள். ‘அசோகமித்திரன் நாவல் படிச்சேன், செகண்ட் ஹாஃப் ஸ்லோ” என்று சொன்னால் அவர் பரிதாபத்துக்குரிய ஓர் ஆத்மா, அவ்வளவுதான்.

ஓர் இலக்கியப் படைப்பை அல்லது கலைப்படைப்பை தன்னுடைய தரம் நோக்கி இழுக்க முயல்பவன் அதன் வாசகனோ ரசிகனோ அல்ல. அதைநோக்கி முன்னகர்ந்து செல்ல முயல்பவனே வாசகன், ரசிகன். அதற்கு தன்னை தயாரித்துக் கொள்பவன் அவன். ஏற்கனவே தான் அறிந்தவற்றில் இருந்து மேலும் முன்னே செல்ல அவன் தயாராகவேண்டும். தன் நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்ய, தன் ரசனையை கொஞ்சம் மறுவார்ப்பு செய்ய அவன் முயலவேண்டும்.

அவ்வாறன்றி, தன்னிடமுள்ள மாறாத ரசனை மற்றும் அறிவுத்தளத்தைக் கொண்டு கலையிலக்கியங்களை மதிப்பிடும் ஒருவன் ஒருவகையில் அவற்றை நிராகரிப்பவன். கண்களை மூடிக்கொண்டு ஓவியம் பார்ப்பவன். அவன் சொல்லும் வரிகளுக்கு எந்த மதிப்பும் இல்லை.

அந்த கலைப்படைப்பு, இலக்கியப் படைப்பு என்ன கோருகிறது என்பதை அவன் அறிந்திருக்கவேண்டும். சில நூல்கள் பொறுமையான வாசிப்பை கோருகின்றன. இந்துஸ்தானி இசை பொறுமையாக, சிந்தனையை அழித்து , காலத்தை கணக்கிடாமல் அமர்ந்திருக்கும் ஒரு நிலையை கோருகிறது. சில நூல்கள் அறிவார்ந்த உழைப்பை கோருகின்றன.சில நூல்கள் அறிவழிந்து, உணர்ச்சிகரமான நிலையில் வாசிக்கக்கோருகின்றன. சில நூல்கள் கூரிய மொழி வெளிப்பாடு கொண்டவை. சில நூல்கள் மயங்கிக்குழம்பும் மொழிப்படலம் போல் அமைந்தவை. சில நூல்கள் மொழிவழியாக மறைஞானத்தன்மையை சென்று அடைய முயல்பவை, ஆகவே உளறலாகவே அமைபவை. சில கலைகள் ஒருங்கிணைவை அளிப்பவை. சில கலைகள் நிலைகுலைவை அளிப்பவை. சில கலைகள் கொண்டாட்டமனநிலை கொண்டவை. சில கலைகள் தனித்த தியானநிலையை அளிப்பவை. சில கலைகள் நேர்நிலை உணர்ச்சிகளை உருவாக்குபவை. சில கலைகள் ஆழ்ந்த இருளை அளிப்பவை. சோர்வூட்டுபவை. கலையிலக்கியங்களில் எல்லா வகையும் உண்டு.

கலைப்படைப்புகளை அணுகும்போது அவற்றுக்குரிய ஏற்புநிலையை வாசகன் அல்லது ரசிகன் பயின்று அடையவேண்டும். அவன் தன்னை மாணவனாகவும் ரசிகனாகவும் நிறுத்திக்கொள்ள வேண்டும். மாணவனுக்குரியது தன்னை கல்விக்கு அர்ப்பணிக்கும் உளநிலை. ரசிகனுக்குரியது தன்னை கலையின் முன் திறந்த உள்ளத்துடன் நிற்கும் உளநிலை. அந்த உளநிலை இல்லாதவனுக்கு கலையும் இலக்கியமும் கிடைக்காது. அவன் அந்நிலையில் அதிலிருந்து தனக்கு உகந்த, தனக்கு புரிந்த எதையோ எடுத்துக்கொண்டு நிறைவடைகிறான். அல்லது அப்படி ஏதும் கிடைக்காமல் ஏமாற்றம் கொள்கிறான்

ஒரு வாசகன், ரசிகன் கலையிலக்கியம் பற்றி அபிப்பிராயம் சொல்லலாம். எனக்கு புரியவில்லை என்று சொல்லலாம். இப்படி புரிந்துகொண்டேன் என்று சொல்லலாம். இது பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்று சொல்லலாம். அந்த அபிப்பிராயம் அந்த நூலை அல்லது கலைப்படைப்பை அடையாளம் காட்டவில்லை, அந்த வாசகன் அல்லது ரசிகனை அடையாளம் காட்டுகிறது. அவ்வகையில் அந்த அபிப்பிராயம் முக்கியமானதுதான்.

ஆனால் ‘விமர்சனம்’ செய்யவேண்டும் என்றால் வாசிப்பில், ரசிப்பில் பயிற்சி தேவை. அப்படைப்பை அறிவதற்கான உண்மையான முயற்சி தேவை. அது கோருவதை செய்து, அதைநோக்கிச் சென்று, அதை அடைந்து, அதன் பின்னர் சொல்லப்படும்  விமர்சனங்களுக்கே மதிப்பு.

உதாரணம் சொல்கிறேன். ஒரு புத்தகத்தை வாசித்துவிட்டு கீழ்க்கண்ட கருத்துக்கள் சொல்லப்படுகின்றன என்று கொள்வோம்

அ. நாவல் விறுவிறுப்பாக இல்லை. இரண்டாம்பகுதி போர் அடிக்கிறது

ஆ. நாவல் விறுவிறுப்பாகச் செல்கிறது. கீழே வைக்கவே முடியவில்லை

இ. நாவல் இப்படி இருந்திருக்கலாம். இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும்

உ. முடிவு சரியில்லை, சப்பென்று போய்விட்டது

ஊ. முடிவு சூப்பர்.

எ. மொழிநடை சிக்கலாக இருக்கிறது. எளிமையாக எழுதியிருக்கலாம்

ஏ. முடிவை ஊகித்துவிட்டேன்

ஒ. திருப்பங்கள் எதிர்பார்த்தபடி இருக்கின்றன.

ஓ. உரையாடல்கள் சரளமாக இல்லை. அல்லது உரையாடல்கள் இப்படியிப்படி இருந்திருக்கலாம்.

இந்தவகையான எல்லா கருத்துக்களும் எளிய நுகர்வோர் சொல்லும் அபிப்பிராயங்கள். வாசகனோ ரசிகனோ சொல்வன அல்ல. வணிகக்கேளிக்கைக்காக மட்டுமே உருவாக்கப்படும் நூல்களையும் படைப்புகளையும் நுகர்வோர் மனநிலையில் இருந்து அணுகுபவர்களே இதைச் சொல்கிறார்கள். இப்படிச் சொல்லப்பழகியிருக்கிறார்கள்.

மேலே சொல்லப்பட்ட அத்தனை கருத்துக்களிலும் உள்ள பொதுவான அம்சம் என்ன? தன் விருப்பப்படி அந்த படைப்பு அமையவேண்டும் என்னும் எதிர்பார்ப்புதான். அதுதான் நுகர்வோர் மனநிலையின் அடிப்படை. அந்த மனநிலையை கடக்காதவரை கல்வியும் ரசனையும் அமைவதில்லை. அறிதலும் ஆழ்தலும் நிகழ்வதில்லை.

ஒன்று புரிந்துகொள்ளுங்கள், இன்றைய வாழ்க்கையில் நுகர்வோர் மனநிலைக்கு வெளியே சென்று நாம் அடைபவை மட்டுமே உண்மையில் மதிப்புள்ளவை. நுகர்வுக்கு அப்பால் செல்லும்போது மட்டுமே வாழ்கிறோம்.

ஜெ

முந்தைய கட்டுரைஇலட்சுமண பிள்ளையும் எமர்சனும்
அடுத்த கட்டுரைவாசிப்புப் பயிற்சி முகாம், கடிதம்