சங்கப்பேரிசை

 

சங்கச் சித்திரங்கள் வாங்க


பேராசிரியர் ஜேசுதாசன் தமிழ் விக்கி

எம்.வேதசகாய குமார். தமிழ் விக்கி

1998-ல் பேராசிரியர் ஜேசுதாசனை அவருடைய புலிப்புனம் இல்லத்தில் சென்று சந்தித்தபோது தனது கவிதைரசனையைப் பற்றி அவர் பேசினார். முதன்மையாகக் கம்பனைப்பற்றி. “திருக்குறளில தொடங்கணும், கம்பனில முடிக்கணும், போதும்” என்றார்.

தமிழின் பிற்காலச் சிற்றிலக்கியங்களைப்பற்றி அவருக்குப் பெரும்பாலும் எந்த மதிப்பும் இல்லை. பெரும்பாலான தமிழ் மத இலக்கியங்களைப் பற்றியும் உயர்கருத்து கிடையாது. “திரும்பத் திரும்ப ஒண்ணுதான். நெத்தின்னா பிறைதான் .கழுத்துன்னா சங்குதான்” என்று சொல்லி சிரித்தார். பின்னர் “சங்க இலக்கியம் இப்போ நெறய பேரு சொல்றாங்க. அதிலயும் ஒண்ணுமில்ல” என்றார்.

கேட்டுக்கொண்டிருந்த எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. “சங்க இலக்கியத்தையா சொல்றிங்க?” என்று கேட்டேன். “ஆமா அதத்தான். கம்பராமாயணத்துக்கு சமானமா ஒரு பாட்டு உண்டா அதில?” என்றார்.

“கம்பன் பெரிய கவிஞன் தான். ஆனா கபிலன் தமிழுடைய முதல் கவிஞனில்லையா?” என்று நான் கேட்டேன்.

“அவன் என்ன எழுதிருக்கான். எல்லாம் போட்டோகிராஃபி ரைட்டிங் தானே?” என்றார் பேராசிரியர்.

அதன் பிறகு அவர் மொத்த சங்க இலக்கியமுமே வாழ்க்கையின் சித்திரங்களை அளிப்பது மட்டும்தான் என்றும், கவிதைக்கு வாழ்க்கையின் சித்திரங்கள் எவ்வகையிலும் முக்கியமல்ல என்றும் சொன்னார். திருக்குறளுக்கு முன்னோடியாக அமைந்தது என்ற வகையில் சங்கப்பாடல்களிலுள்ள பொருண்மொழிக்காஞ்சி திணையும் சில நீதிசொல்லும் பகுதிகளும் முக்கியமானவை என்றார். மற்றபடி எந்தவகையிலும் சங்க இலக்கியத்திலிருந்து தான் பெற்றுக்கொள்ள எதுவுமில்லை என்பது அவருடைய எண்ணமாக இருந்தது.

அவருடன் நான் விவாதிப்பதில்லை. திரும்ப வரும்போது வேதசகாயகுமார் சொன்னார். “இது இங்க ஒரு பாப்புலர் ஸ்கூல் ஆஃப் தாட். இங்க பல கம்பன் அடிப்பொடிகள் இதைத்தான் சொல்வாங்க. அவங்களுக்கு ரசனைன்னா கம்பன் தான். கம்பன்லேருந்து சங்க இலக்கியத்துக்கு போனா அப்படித்தான் தோணும் போல இருக்கு. டி.கே.சிக்கும் சங்க இலக்கியம் பெரிசா அப்பீல் ஆகல. புதுமைப்பித்தனும் ஒரு எடத்துல வெறும் போட்டோகிராஃபி பொயட்ரின்னு சங்க இலக்கியம் பத்தி சொல்றான்”

அதன் பிறகு பல குரல்களிலிருந்து இந்த தரப்பை நான் கேட்க நேர்ந்திருக்கிறது. தென்தமிழகத்தில் கவிராயர் மரபுகளில் இக்கருத்து இன்றும் வலுவாக உள்ளது. தமிழகத்தில் பொதுவாக மற்ற பகுதிகளில் தொடர்ச்சியான கவிராயர் மரபு இல்லை. ஆகவே சங்க இலக்கியம் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டபோது நவீன வாசிப்பு வழியாக அவர்கள் அதிலுள்ள பண்பாட்டு செய்திகளை எடுக்கத்தொடங்கினார்கள். அதையே கவிதை வாசிப்பென்றும் மயங்கினார்கள். தென்னகத்தில் உருவான எதிர்ப்பு அங்கெல்லாம் உருவாகவில்லை.

சங்க இலக்கிய படைப்புகளை பற்றி வெவ்வேறு தமிழறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். நான் விரும்பிப் படித்தவை என் இளமைக்காலத்தில் அன்றைய கலைக்கதிர் இதழில் மு.வரதராசன் எழுதியவை. நற்றிணையின் அழகிய கவிதைகளை அவர்தான் முதலில் எனக்கு அறிமுகம் செய்தார். ஆனால் அவர்கள் அனைவருமே அந்தக்காட்சி இன்பத்தில் மயங்கித்தான் இருந்தார்கள். அழகிய நிலக்காட்சி ஓவியத்தை ரசிப்பது போலத்தான் அக்கவிதைகளை நலம் பாராட்டினார்கள்.

சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று ஆய்வு நோக்கில் அன்றைய வரலாற்றை அவை எப்படியெல்லாம் சொல்கின்றன, அன்றைய பண்பாட்டுக்குறிப்புகள் எங்ஙனம் அதிலுள்ளன, அன்றைய சமூக வாழ்க்கையை அதிலிருந்து எவ்வண்ணம் ஊகிக்க முடியும் என்று எழுதினார்கள். அவை இரண்டுமே கவிதை வாசிப்புகள் அல்ல என்ற எண்ணத்தை நான் அப்போதே அடைந்திருந்தேன்.

அந்நாளில் ஒரு முறை ஆற்றூர் ரவிவர்மாவிடம் சங்கப்பாடல்களைப் பற்றி பேசினேன். ”எனக்கு அவை மகத்தான கவிதைகளாகத் தென்படுகின்றன” என்றேன். ”அவை உயர் விழுமியங்களை முன்வைக்கவில்லை. உணர்ச்சிக் கொந்தளிப்புகளை முன்வைக்கவில்லை. தத்துவ சிடுக்குகளோ அடிப்படை வினாக்களோ அவற்றில் இல்லை. அவை வாழ்க்கையின் சித்திரங்களாகவே எஞ்சுகின்றன. ஆனால் வாழ்க்கையை இயற்கையுடன் இணைக்கும் தருணத்தில் அவை முடிவின்மை ஒன்றை திறந்துகாட்டிவிடுகின்றன. உறவுகளின் நுண்தருணங்களை சொல்லும்போது என்றும் உள்ள சிலவற்றை உணர்த்திவிடுகின்றன. அதனாலேயே அவை மகத்தான கவிதைகள்” என்றேன்.

ஆற்றூர் சொன்னார். “கவிதையை வகைபிரிக்க முடியாத விமர்சனக் கோட்பாட்டு தெளிவின்மையே கம்பனுடன் கபிலனை ஒப்பிடச் செய்கிறது. காளிதாசனை வியாசனுடன் ஒப்பிட்டாலும் இதே எண்ணம் எழும். உலகமெங்கும் தொல்காலச் செவ்வியல் சங்கப்பாடல்களைப் போலத்தான் இருக்கும்”.

ஆற்றூருடனான எனது உரையாடல்கள் எனக்கு பெருந்தெளிவை அளித்தவை. ஆற்றூர் ரவிவர்மாதான் கவிதையின் வெவ்வேறு அழகியல் பள்ளிகளைப்பற்றி என்னிடம் விளக்கிச் சொன்னார். சங்கப்பாடல்களை தொடக்ககால செவ்வியல் (Early Classism)  என்று வகைப்படுத்தவேண்டும். உலகமெங்கும் தொடக்ககாலச் செவ்வியல் ஒருவகையான யதார்த்தவாத அழகியலும் உலகியல் தன்மையும் கொண்டதாகவே இருக்கும். தொடக்ககாலச் செவ்வியல் மிகையற்றதாகவும் அதே சமயம் உளஎழுச்சிகளுக்கும் கற்பனைகளுக்கும் இடமளிப்பதாகவும் இருக்கும்.

பெரும்பாலான தொடக்ககாலச் செவ்வியல் படைப்புகள் நிகழ்த்துகலைகளுடன் இணைந்திருக்கும். ஏனெனில் அன்று இசை நடனம் இலக்கியம் மூன்றும் ஒன்றாகவே இருந்தன. நிகழ்த்துகலைகளின் பொருட்டு அவற்றுக்கு ஒரு மாறாவடிவமும், அது சார்ந்த மரபுகளும், அணிகளும் உருவாகியிருக்கும். ஆகவே அவை பெரும்பாலும் திரும்பத்திரும்பச் சொல்வது போலிருக்கும். அவற்றின் நுட்பமென்பது நுண்மையாக்கத்தில் (Improvisation) இருக்கும்.

தொடக்ககாலச் செவ்வியல் வரலாற்றின் உருவாக்க காலம் சார்ந்தது. வரலாறு முன்னகர்ந்து, பேரரசுகளும், அவற்றுக்கு அடித்தளமான தத்துவக்கொள்கைகளும் பெருமதங்களும் உருவானபின்  உருக்கொள்வதே பிற்காலச்செவ்வியல். பிற்காலச்செவ்வியல் உயர் விழுமியங்களை முன்வைக்கும் நோக்கம் கொண்டிருக்கும். தத்துவ தரிசனங்களை உருவாக்கும். வாழ்க்கையின் இலட்சிய வடிவங்களை அறிமுகப்படுத்தும். அதன்பொருட்டு உன்னத தருணங்களையும் உச்சகட்ட மொழி வெளிப்பாடுகளையும் தீவிர உணர்ச்சிநிலைகளையும் முன்வைக்கும்.

பிற்காலச் செவ்வியல் பெரும்பாலும் அறிவார்ந்ததும் நூல்களைச் சார்ந்ததுமாக இருக்கும். பிற்காலச்செவ்வியல் படைப்பாளிகளுக்கு இயற்கை இரண்டாம் நிலை அனுபவமாகவே இருக்கும். இயற்கை சார்ந்த கவித்தரிசனங்களே அவர்களுக்கு முதன்மையானவை. அவர்கள் அறியும் இயற்கை மொழியில் திகழும் இயற்கைதான். அனைத்தும் மொழிக்குள் நுழைந்துவிட்டபின் மொழியிலிருந்து உருவாவது பிற்காலச் செவ்வியல். அது மொழியின் ஓர் உயர்நிலை. மொழியில் செயல்படும் பிரக்ஞையின் அதிகூர்மை வெளிப்படும் நிலை

மொழியில் இருந்து விதைகளை எடுத்து மீண்டும் மொழியில் விதைத்து உருவாக்கப்படுபவை பிற்காலச் செவ்வியல் ஆக்கங்கள். தொடக்ககாலச் செவ்வியல் காட்டிலிருந்து பொறுக்கிக்கொண்டு வந்த நல்விதைகளை வயலில் விதைத்து பயிர்செய்து விளை கொய்வது போன்றது. பிற்கால செவ்வியல் என்பது பலமுறை வேளாண்மை செய்து முற்றிலும் மேம்படுத்தப்பட்ட விதைச்செல்வம் கொண்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள். ஆகவே காட்டிலிருந்து நெடுந்தூரம் வந்துவிட்டவை.

கபிலனுக்கும் கம்பனுக்குமான வேறுபாடு இதுதான். இவ்வேறுபாட்டை உணர்ந்த ஒருவன் கம்பனைக் கொண்டு கபிலனை அளவிட மாட்டான். கபிலனைக் கொண்டு கம்பனையும் அளவிடமாட்டான். இன்று கபிலனைக் கொண்டு கம்பனை நிராகரிப்பதும் சிலரால் செய்யப்படுகிறது.

அவ்விவாதத்தின் பயனாக நான் தொடர்ந்து கபிலனை நீண்ட மறுவாசிப்பு செய்து வந்தேன். அப்போதுதான் வீடுகட்டத் தொடங்கினேன். எப்போதும் போல செலவு இருமடங்காகியது. எல்லைக்குட்பட்ட மாதவருமானம் கொண்ட எனக்கு ஒருகட்டத்தில் அன்றாடச் செலவுக்கே கைக்கு காசில்லாத நிலை வந்தமைந்தது. என் நிலையை உணர்ந்து மலையாள மனோரமாவிலிருந்து என்னிடம் அதில் ஏதாவது தொடர் எழுதும்படி சொன்னார்கள். என்னுடைய இல்லப்பணிக்கு உதவும்பொருட்டே அதை அவர்கள் சொல்கிறார்கள் என்று எனக்குத்தெரியும். எனக்கு மலையாளம் எழுதுவதில் நிறைய பயிற்சிக்குறைவு இருந்தாலும் கூட முயன்று எழுதினேன். அது என்னை மீட்டது

அந்நாட்களில் மாத்யமம் இதழிலிருந்தும் என்னை எழுதும்படி கோரினார்கள். அது வார இதழ். ஆகவே தொடர்ச்சியாக ஒரே தலைப்பில் கட்டுரைகள் எழுதினால் ஒரு நூலாக்கலாம் என்ற எண்ணம் இருந்தது. அப்போது கபிலனைப் படித்துக் கொண்டிருந்தேன். ஆகவே சங்கச் சித்திரங்களை மலையாளத்தில் மாத்யமம் இதழில் எழுதத்தொடங்கினேன். 1999 முழுக்க இக்கட்டுரைகள் வெளிவந்தன.

அதன்பின் அவற்றில் மூன்று கட்டுரைகளை விகடனுக்கு அனுப்பி வைத்தேன். விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியம் என்னைத் தொலைபேசியில் அழைத்து அக்கட்டுரைகளைத் தொடர்ந்து விகடனில் எழுதும்படி கேட்டுக்கொண்டார். 2000-ல் சங்கச்சித்திரங்கள் ஆனந்தவிகடனில் தொடராக வந்தது.

இக்கட்டுரைகள் பொதுவாசகர்களுக்கு சென்றடையவேண்டிய வாசிப்புக்குரியவை என்று எனக்குத் தோன்றியமையால்தான் விகடனுக்கு அனுப்பினேன். இலக்கியச்சூழலில் உள்ளவர்களுக்காக மட்டுமல்ல, எல்லா வாசகர்களுக்காகவும் அவை எழுதப்பட்டன. ஆகவே நேரடியான, எளிய, கதை சொல்லும் முறை ஒன்றை கைக்கொண்டேன். சங்கப்பாடல்களை கல்விநிலையங்களில் தமிழாசிரியர்களிடமிருந்து இயந்திரத்தனமாகக் கற்று, பழந்தமிழ் வாழ்க்கை பற்றிய தகவல் தொகுப்பாக மட்டுமே புரிந்துகொண்டு, மனப்பாடச் செய்யுளாக மட்டுமே நினைவில் கொண்டு இருக்கும் தமிழ்வாசகர்களுக்காக சங்கச்சித்திரங்கள் எழுதப்பட்டது.

சங்கச்சித்திரங்களின் அமைப்பு அதுவரை தமிழுக்கு அறிமுகம் இல்லாதது. பாடலை எடுத்துக்கொண்டு பதவுரையும் பொழிப்புரையும் கூறுவதல்ல அதன் வழிமுறை. எவ்வண்ணம் எல்லா இலக்கியங்களையும் படிக்கிறோமா அப்படி சங்க இலக்கியத்தை படிப்பது. எப்படி புதுக்கவிதைகளைப் படிக்கிறோமோ, அப்படி அணுகுவது. எல்லா இலக்கியங்களும் வாழ்க்கையிலிருந்தே அணுகப்படவேண்டும். வாழ்வின் தருணங்கள் இலக்கியத்தை அர்த்தம் கொள்ள வைக்கின்றன. இலக்கியம் வாழ்வின் தருணங்களை ஒளிகொண்டதாக்குகிறது. ஒன்றின் நுட்பத்தை இன்னொன்றைக் கொண்டு நாம் புரிந்துகொள்கிறோம். ஒன்று இன்னொன்றாக ஆகிறது. அவ்வண்ணம் வாழ்வுத் தருணங்களிலிருந்து கவிதைக்குச் செல்லும் திறப்புக்கணங்களை மட்டுமே கொண்டது சங்கச்சித்திரங்கள்.

பொது ஊடகத்துக்காக இதை எழுதினாலும் கூட இதன் இலக்கியத் தன்மையை கைவிடக்கூடாது என்ற எண்ணம் எனக்கிருந்தது. வாழ்வனுபவங்களிலிருந்து கவிதைக்குச் செல்லும் ஒரு ரகசிய வழியை இதில் எழுதியிருக்கிறேன். ஒரு இடத்திலும் கவிதையை முற்றாக விளக்கி முடிக்கவில்லை. எங்கும் கவிதைக்கு அறுதியான அர்த்தங்களை அளிக்கவும் இல்லை. வாசகன் சென்றடைவதற்கான ஒரு வழியைச் சுட்டி அந்த இடத்திலேயே நின்றுவிடும் கட்டுரைகள் இவை.

ஆகவே எந்த அளவுக்கு இவை வாசகர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்ற ஐயம் எனக்கு அப்போது இருந்தது. ஆனால் நான் எண்ணியதைவிட மிகப்பெரிய வரவேற்பு இந்தக்கட்டுரைகளுக்கு கிடைத்தது. இந்தக்கட்டுரைகள் தமிழில் என்னை மிகப்பரவலாக அறிமுகம் செய்தன. பிரபல வணிக ஊடகத்தில் நான் எழுதிய முதல் தொடர் இதுவே. இதைப்பாராட்டி அப்துல்கலாம் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதை வியந்தோந்தி மது ச. விமலானந்தம் எழுதிய உணர்ச்சி மிகுந்த கடிதத்தை நினைவு கூர்கிறேன். இன்றும் தொடர்ச்சியாக ஏராளமான வாசகர்களுக்கு சங்கச்சித்திரங்கள் வழியாகவே என்னை அறிமுகம் செய்துகொண்டேன் என்று சொல்வதுண்டு.

இந்தக் கட்டுரைத்தொடருக்குப் பிறகு இதே பாணியில் வாழ்வனுபவங்களிலிருந்து சங்கக்கவிதைகளுக்குச் செல்லும் தன்மை கொண்ட பல கட்டுரைகள் பலரால் எழுதப்பட்டன. அத்தகைய பல நூல்களை நான் கண்டிருக்கிறேன். இது ஒருவகை எழுத்துமுறையாகவே பின்னர் மாறியது. அவ்வகையில் தமிழில் சங்கப்பாடல்கள் மீதான ஒரு புதிய வாசிப்பு முறையை உருவாக்க இந்நூலால் இயன்றது. ஒரு அழகியல் அணுகுமுறையின் முதல் நூலென்று அமைந்தது.

பலமுறை வெவ்வேறு பதிப்பகங்களால் இது வெளியிடப்பட்டுள்ளது. திருமணப்பரிசாக அளிப்பதற்கு உகந்த நூலாக இது கருதப்படுகிறது. நூற்றுக்கணக்கான பிரதிகள் மொத்தமாக இதை வாங்கி பலர் அளித்துள்ளனர். இன்றும் பெரிதும் வாசிக்கப்படும் நூலாக உள்ளது.

இதை முதலில் வெளியிட்ட கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம் அவர்களுக்கும் இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

ஜெ

28.09.2022

முந்தைய கட்டுரைமே.வீ.வேணுகோபாலப் பிள்ளை
அடுத்த கட்டுரைகாதலின் துளிகள் – கடிதம்