நலம்தானே?
வள்ளலார் பற்றிய தமிழ்விக்கி பதிவைக் கண்டேன். அருட்பாவுக்கு தனிப் பதிவும், அருட்பா மருட்பா விவாதத்திற்கு தனிப்பதிவும் உள்ளது. தொழுவூர் வேலாயுத முதலியார், தி.ம.பானுகவி போன்ற வள்ளலார் அன்பர்களுக்குத் தனிப்பதிவு உள்ளது. திரிகோணமலை நா.கதிரைவேற்பிள்ளை போன்ற வள்ளலார் எதிர்ப்பாளர்களுக்கும் தனித்தனி பதிவுகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய நூலே தமிழ்விக்கி பதிவுகளில் உள்ளது.
தொழுவூர் வேலாயுத முதலியார் வள்ளலார் பற்றி அளித்திருக்கும் சித்திரம் சிறப்பானது. ஆனால் என் கேள்வி என்னவென்றால் வள்ளலாரின் அருள்மிகு தோற்றம் நிறைய படங்களாக உள்ளபோது நீங்கள் அளித்திருக்கும் முகப்புப்படம் ஒருநூலின் அட்டையில் உள்ளதாக உள்ளது. அது மோசமான அச்சில் கையால் வரையப்பட்டதாக உள்ளது. அதை நீக்கியிருக்கலாம்.
அருட்சோதி பரமானந்தம்
அன்புள்ள அருட்சோதி அவர்களுக்கு,
கலைக்களஞ்சியத்தின் நெறிகளில் ஒன்று எவ்வகையிலும் மாற்றம் செய்யப்படாத புகைப்படங்களையே அந்த ஆளுமையின் தோற்றத்தைக் காட்ட பயன்படுத்தவேண்டும் என்பது. வண்ணம் சேர்க்கப்பட்ட, திருத்தப்பட்ட புகைப்படங்கள் ஆவணங்கள் அல்ல.
புகைப்படங்கள் இல்லாதபோது சிலைகள், ஓவியங்களை அளிக்கலாம். அவற்றை வரைந்தவர் சுட்டப்படவேண்டும். ஓவியம் அந்த ஆளுமை உயிருடனிருந்தபோதே வெளிவந்தது என்றால் அது ஆவணமே.
வள்ளலார் பற்றி புகைப்படங்கள் ஏதுமில்லை. அவர் இருந்தகாலத்தில் வெளிவந்த ஒரு நூலின் அட்டையே அந்தப்பதிவுடன் அளிக்கப்பட்டுள்ளது. அதுவே கிடைப்பவற்றில் தொன்மையானது.
ஆனால் அந்தப்பதிவுடன் பிற்கால ஓவியங்கள் மற்றும் சிலைகளும் அளிக்கப்பட்டுள்ளன
ஜெ