ஒரு விமர்சகனுக்காகக் காத்திருத்தல்

ஒரு கதையை எழுதியதுமே அதை எவர் மதிப்பிட்டுச் சொல்லமுடியும் என்றும் நமக்குத் தோன்றிவிடும். மற்றக் கருத்துகளை தனித்தனியாக நாம் பொருட்படுத்துவதில்லை. ஒட்டுமொத்தமாக என்ன என்பதே நம் எண்ணமாக இருக்கும். அப்படி நான் எதிர்பார்த்திருந்த கருத்துக்களில் ஒன்று இது. மலையாள மனோரமாவில் திரை விமர்சகர் சி.பி.சுதாகரன் எழுதியது.

கேரளம் சினிமாவின் நிலம். நூற்றுக்கணக்கான சினிமா ரசனைப்பட்டறைகள். ஆண்டுதோறும் பதி னைந்துக்கும் மேல் சினிமாவிழாக்கள். அரசே நடத்தும் மாபெரும் திரைப்பெருவிழா.  ஆண்டுக்கு நூறுக்குமேல் சினிமாநூல்கள்.வலுவான கலைப்பட இயக்கம், இடைநிலைப்பட இயக்கம், வணிகப்பட இயக்கம் என மூன்று அடுக்குகள். உலகைத் திரும்பிப்பார்க்க வைத்த சினிமாச்சாதனைகள். மிகமிக விரிவான திரைப்பட விமர்சன மரபு அங்குள்ளது.

இவர் எழுதியதுமே எனக்கு அனுப்பி வைக்கும்படிச் சொல்லியிருந்தேன். குறையாக இருக்காது என தெரியும். இருந்தாலும் சிறு பதற்றம். வாசித்ததும் ஒரு மெல்லிய தளர்வுடன் அந்த இனிய உணர்வை அனுபவித்தேன்.

மிகக்கறாரான விமர்சனம். பொன்னியின் செல்வனை கிளாஸிக் என்றெல்லாம் சொல்லவில்லை. ஒரு பாப்புலர் கிளாஸிக் என வரையறை செய்து, அந்த வகைமைக்குள் இதன் இடமென்ன என ஆராய்கிறார். அதற்குமுன் பொன்னியின் செல்வன் நாவலின் மொழியாக்கத்தை படித்து முழுமையாக தன்னை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

வழக்கமான ஒற்றைவரி அபிப்பிராயங்கள், எல்லா படத்துக்கும் சொல்லப்படும் தேய்வழக்குச் சொற்கள் ஏதும் இல்லை.  முக்கியமாக, ‘நான் யார் தெரியுமா? எனக்கெல்லாம் ரொம்ப சினிமா தெரியும்’ என்னும் பாவனையே இல்லை. சினிமாவை சினிமாவாகப் பார்ப்பதில் இருந்து எந்த வட்டார உணர்வும் விமர்சகரை தடுக்கவில்லை. அவருக்கு தமிழ் சினிமாவும் கொரியன் சினிமாவும் எல்லாம் சினிமா மட்டுமே. சினிமாவைப் பற்றிய மொத்தையான கருத்து அல்ல அவர் முன்வைப்பது. இந்தச் சினிமாவை சரியான வகைமைக்குள் கொண்டுவந்து இதேபோன்ற உலகப்படைப்புகளுடன் ஒப்பிட்டு விவாதிக்கும் இந்த தெளிவுதான் விமர்சனம் செய்வதற்கான தகுதி.

’PS1 shows in tribe and clan, caste and gender that everybody is potentially both a victor and a victim’ என ஒற்றைவரியில் முழுநாவலின், சினிமாவின் சாரத்தையும் வரையறுத்துக்கொண்டு பேசமுற்படுபவனே உண்மையில் விமர்சகன். ஏன் ஆதித்த கரிகாலன் பழுவேட்டரையர் மேல் படைகொண்டுவரவில்லை? ஏன் சுந்தர சோழர் சிற்றரசர்களை ஒன்றும் செய்யவில்லை? எல்லா கேள்விக்கும் அந்த ஒற்றைவரியே பதில்.

சில விமர்சனங்களும் மறுப்புகளும் இதிலுள்ளன. ஆனாலும் Ponniyin Selvan 1 is a singularly heroic achievement for Mani Ratnam. He makes a nearly exhausted formula of the epic action movie come alive not just because of special effects, but also because there is a great story, good storytelling, and actors who perform as characters, not as themselves. என்னும் வரிகளில் மிகச்சரியாக பொன்னியின் செல்வனை வரையறை செய்திருக்கிறார்.

பொன்னியின் செல்வன் திட்டமிடப்படும்போதே ஒரு செயற்கையான தொழில்நுட்பப் படமாக அமையக்கூடாது, முழுக்க முழுக்க யதார்த்தமாகவே இருந்தாகவேண்டும் என வரையறை செய்யப்பட்டு எடுக்கப்பட்டது. வரைகலைத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் படங்கள் முதல்பார்வைக்கு ஒரு பிரமிப்பை உருவாக்கினாலும் ஓராண்டிலேயே கேலிப்பொருளாக ஆகிவிடும். இது வரலாறு, இது அப்படி ஆவது என்பது நமக்கே நாம் இழிவு தேடிக்கொள்வது.

வரைகலை நுட்பம் (special effects) சில ஆண்டுகளில் பழையதாகிவிடும். மிகையாக இருந்தால் வேடிக்கையாக மாறிவிடும். இந்தப்படம் இருபதாண்டுகளாவது outdate ஆகக்கூடாது, அடுத்த தலைமுறை பார்க்கவேண்டும் என்றார் மணி ரத்னம். ஆகவே யதார்த்தத்தை உருவாக்குவதற்காக மட்டுமே வரைகலை பயன்படுத்தப்பட்டுள்ளதே ஒழிய மிகையாக காட்டுவதற்காக அல்ல. போர் உட்பட எதுவுமே மிகையாக்கப்படவில்லை.

காட்சிகளில் மிகைநாடகத் தன்மை, மிகைசாகசத் தன்மை வந்துவிடவே கூடாது என உறுதியாக இருந்தார். நான் எழுதியதிலேயே இருந்த சற்று மிகையான ‘ஹீரோயிசக்’ காட்சிகள் ஒவ்வொன்றாக தேடித்தேடி அகற்றினார். இதில் கூஸ்பம்ப்ஸ் எல்லாம் இருக்காது. இது ஒரு சீரான ஒழுக்கு மட்டுமே.

இது மணி ரத்னத்தின் கனவு. அது காலத்தில் நீடித்து நிற்கவேண்டும் என்றார்.இன்று பார்ப்பவர்களில் எளிமையான ஒரு சாரார் வழக்கமான வரைகலை உத்திகளில் செய்யப்படும் நம்பமுடியாத சாகசங்களை எதிர்பார்த்து ஏமாற்றமடையலாம். ஆனால் மறுபடியும் பார்ப்பவர்களால் படம் காலத்தை கடக்கவேண்டும் என்று எண்ணினார். அது நிகழ்கிறது. குறிப்பாக பெண்களின் திரளால்.

அந்த புள்ளியில் பொன்னியின் செல்வனின் தனித்துவத்தை அடையாளப்படுத்தி, அதனாலேயே இது இந்திய சினிமாக்களில் முதற்பெரும் வெற்றி என மதிப்பிடும் இந்த விமர்சனக் கட்டுரை மலையாளத் திரைவிமர்சன மரபு பற்றி நான் என்றும் கொண்டிருக்கும் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

Ponniyin Selvan: The arrival of the Indian epic on the screen (Malayala Manorama)

முந்தைய கட்டுரைவெ.த.கா – இன்னும்
அடுத்த கட்டுரைசெய்குத்தம்பி பாவலர் எனும் வியப்புநிகழ்வு