பொன்னிப்பெருக்கு

அன்புள்ள ஜெ,

முன்பெல்லாம் எல்லாவற்றுக்கும் ‘ஊர் என்ன பேசும்’ என்கிற பிரக்ஞையுடனே பலரும் திரிந்ததைப் போல, நாட்டில் என்ன நடந்தாலும் சமூக வலைதளப் புரட்சியாளர்கள் என்ன பேசுவார்கள் என்கிற பிரக்ஞையோடு அணுகும் மனநிலை எனக்குள் உருவாகி விட்டது. என் பயமெல்லாம் அவர்கள் பேசுவது பற்றியல்ல. அவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்று நான் யூகித்திருப்பதை உடைத்து அதற்கு மாற்றாக நியாயமாகப் பேசி என்னை ஏமாற்றி விடுவார்களோ என்கிற பயம்தான் எனக்கு. இந்த விசயத்தில் அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். ஏனென்றால் அவர்கள் என்னை ஒரு போதும் ஏமாற்றியதில்லை. பொன்னியின் செல்வன் வெளியாகும் முன்பே இது குறித்து என்னவெல்லாம் பேசப்படும் என்பது குறித்து நான் யூகித்திருந்ததை சிலர் அப்படியே பேசியிருந்ததைக் கண்டு நெகிழ்ந்து போனேன்.

பொதுவாகவே சமூக வலைதளச் சூழலில் இயங்குகிறவர்கள் தங்களைப் பல்துறை மேதாவிகளாக நினைத்துக் கொண்டு, எது சார்ந்தும் தன்னால் பேசவும், விமர்சிக்கவும் முடியும் என்றெண்ணிக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல குடவாயில் பாலசுப்ரமணியத்துக்கே வரலாற்றுப் பாடம் நடத்துகிறவர்கள் இவர்கள். ஒவ்வொரு இயக்குநர் சார்ந்தும் தான் வைத்திருக்கிற கருத்து நிலையின் அடிப்படையில் உருவாக்கிக் கொண்டுள்ள முன் முடிவோடுதான் படத்தையே பார்க்க ஆரம்பிக்கிறார்கள். உறுமீன் வரும் வரையில் வாடியிருக்கும் கொக்காய், தொக்காக ஏதாவது பிழை, முரண் சிக்காதா என்றே படத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். இவர்களது மேம்போக்கான கருத்தியலில் முரண்படுகிற ஒரு அம்சம் சிக்கி விட்டாலே போதும் அதை எடுத்துப் போட்டு அடி வெளுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதனைத் தொடர்ச்சியாகப் பார்த்து ஒரு வித சலிப்புக்கு ஆளாகிய நான் நாளடைவில் இதற்கு அவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்கிற யூக விளையாட்டைத் தொடங்கினேன். நான் யூகித்திருப்பவற்றை எவரேனும் எழுதி விட்டார்கள் என்றால் எனக்கு ஒரு புள்ளி என்கிற கணக்கில் இந்த விளையாட்டு நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது.

இலக்கியம், திரைப்படம் என்கிற இருவேறான கலை வடிவங்களுக்கு கதை மட்டுமே பொது அம்சமாக இருக்கிறது. தமிழில் அதிகம் பேரால் வாசிக்கப்பட்ட ஒரு சரித்திர நாவலைப் படமாக்குவதில் பெரும் சவால் உள்ளது. பாகுபலி ராஜமவுலியின் கதை. சரித்திர, தொன்மக் கதைகளின் தாக்கத்தின் வழியே அக்கதையை ராஜமௌலி எழுதினார். அக்கதாப்பாத்திரங்களை வடித்தார். அத்திரைப்படத்தின் வாயிலாகத்தான் அமரேந்திர பாகுபலியும், பல்வாள் தேவனும் பார்வையாளருக்கு அறிமுகமாகிறார்கள்.

பொன்னியின் செல்வனைப் பொறுத்தவரை 70 ஆண்டுகளாக பல கோடிப்பேரால் வாசிக்கப்பட்ட நாவல் அது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதாப்ப்பாத்திரத்தின் சித்திரம் மனதில் உருவாகியிருக்கும். அதனை வைத்துக்கொண்டு குந்தவையாக திரிஷாவை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்று படம் வருவதற்கு முன்பே நடிகர்கள் தேர்வு குறித்த விமர்சனங்கள் எழுந்தன. டீசர் வெளியான போதும், ட்ரெயிலர் வெளியான போதும் இங்கு எழுந்த சலசலப்புகள் எல்லாம் நிறுவியது ஒன்றே ஒன்றைத்தான். மணிரத்னம் இயக்கும் திரைப்படத்தை ஏற்றுக்கொள்ளவியலாத மனநிலை. இவர்களுக்கு மணிரத்னத்தின் மீதான வெறுப்பு ஒரு பகுதி என்றால் திரைக்கதையிலும், வசனத்திலும் நீங்கள் இடம்பெற்றிருப்பது இன்னொரு பகுதி.

படம் வெளியான அன்று நண்பர்களுடன் பார்த்தேன். தமிழ்சினிமாவின் நெடுங்காலக் கனவொன்று ஈடேறிய நாளாக அது இருந்தது. இந்தக் கனவுத் திட்டத்தில் தாங்களும், கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் மற்றும் நண்பரும் ஆய்வாளருமான ஜெயக்குமார் பரத்வாஜ் ஆகியோர் அங்கம் வகித்திருப்பதில் மேலும் உவகை கொண்டேன்.

பெரும்பாலும் வந்த நேர்மறையான விமர்சனங்களைப் பார்த்து மகிழ்ந்தாலும், என் விளையாட்டுக்கு வேலை இல்லையோ என்று நினைக்கத் தோன்றியது. ‘ஜெயமோகனையும், குமரவேலையும் தவிர்த்திருந்தால் படம் நன்றாக வந்திருக்கும்’ ‘பொன்னியின் செல்வன் பரிதாபமான வரலாற்றுப் படமாக உருவாகியிருக்கிறது’ என்பது சில பதிவுகள் கண்ணில்பட்டதும்தான் நிம்மதியடைந்தேன். எனக்கு ஒவ்வொரு புள்ளிகளாக கிடைத்தபடி இருக்கின்றன. கல்கியையே தவிர்த்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் என்று ஏதேனும் பதிவு கண்ணில் படுமா என்கிற ஆவலுடன் காத்திருக்கிறேன். அப்படியொரு பதிவு இடப்படுமாயின் 5 புள்ளிகளை எடுத்துக் கொள்வேன்.

கி.ச.திலீபன்

அன்புள்ள திலீபன்,

பொன்னியின் செல்வன் வெளியான நாளன்று நான் என் செல்பேசியை அணைத்தே வைத்திருந்தேன். காலை பத்துமணிக்கு படம் மாபெரும் வெற்றி என்பதை மட்டுமல்ல தோராயமாக எவ்வளவு வசூலாகும் என்றும் சொல்லிவிட்டார்கள். (எல்லா தொழிலுக்கும் அதற்கான கணக்குகள் உண்டு. வெளியே டிராக்கர்கள் என இருக்கும் அப்பாவிகளுக்கு இந்த உலகமே தெரியாது.) அதன்பின் தெரிந்துகொள்வதற்கு ஒன்றும் இல்லை. பகல் முழுக்க தமிழ் விக்கி பணிகள்தான். விளாத்திக்குளம் சுவாமிகள், தி.த.கனகசுந்தரம் பிள்ளை என பல பதிவுகள்.

என்ன காரணம் என்றால் தமிழ் சினிமாவின் உதவி இயக்குநர்கள், இயக்குநர் கனவுகொண்டவர்களின் அழைப்புகளை தவிர்ப்பதுதான். அவர்கள் அனைவருக்கும் எதிர்கால மணி ரத்னம் என நினைப்பு. ஒருவர் அழைப்பை தவறுதலாக எடுத்துவிட்டேன். பிஆர்ஓ என சேமித்திருந்தமையால் நடந்த குளறுபடி.

அவர்கள் அனைவருமே ஒன்றையேதான் சொல்வார்கள். எந்த சினிமாவுக்கும். அவர் “நல்ல படம் சார். ஆனா செகண்ட் ஹாஃபிலே கொஞ்சம் lag அடிக்குது. கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்” என்றார். அதேதான்.

நான் கொஞ்சம் உற்சாக மனநிலையில் இருந்தேன். நடைப்பயிற்சியும் செய்துகொண்டிருந்தமையால் நேரம் இருந்தது.  “சரி தம்பி, எந்தெந்த சீன் லாக், எதை தூக்கலாம், சொல்லுங்க” என்றேன்

அவர் ஒரு காட்சி சொன்னார். “அதை தூக்கினா இந்த விஷயம் எப்டி கம்யூனிகேட் ஆகும்? ஆதித்த கரிகாலன் கதையே புரியாம ஆயிடுமே?”

“ஆமா சார்” என்றார். யோசித்து “இந்த சீனை தூக்கலாம்” என இன்னொன்றைச் சொன்னார்

“என்ன சொல்றீங்க? அதானே இன்னொரு காட்சிக்கு லீட்?”

“ஆமா” என்றபின் இன்னொன்றைச் சொன்னார். அதுவும் அப்படித்தான் என்றேன். அடுத்த காட்சியை சொன்னபோது அவரே உடனே “அத தூக்கினா அங்க இடிக்கும்” என்றார்.

“சொல்லுங்க…” என்றேன்

“தோணலை சார்” என்றார்

“நீங்க சொன்ன நாலு சீனை தூக்கினாலும் கூட மொத்தமா மூணு நிமிஷம் கூட சேவ் ஆகாது” என்றேன்

“ஆமா சார்…”

“மூணுநிமிஷம் லேக் குறைக்கலாம், இல்ல?”

அவர் ஒன்றும் சொல்லவில்லை.

“ஒண்ணு பண்ணுங்க…ஒரு அஞ்சு சீன் கண்டுபிடிச்சு சொல்லுங்க…ஒருநாள் எடுத்துக்குங்க. உங்கள அடுத்த மணி ரத்னம் படத்திலே அசிஸ்டெண்டா நானே சேத்துவிடுறேன்…ரெண்டு வருஷத்திலே நீங்களே சொந்தமா படம் பண்ணிடலாம்…ஒரு சான்ஸ் தர்ரேன்”

அவர் பலவீனமாக “சரி சார்” என்றார்

ஒரு குரூர மகிழ்ச்சியுடன் மறுநாள் நானே அழைத்தேன். “என்ன தம்பி கண்டுபிடிச்சாச்சா?”

“இல்ல சார்…”

“என்ன நீங்க? உங்க பேரக்கூட மணி கிட்ட சொல்லிட்டேனே”

“சார்!” என அலறிவிட்டார். “அய்யய்யோ சார்!”

இந்த நிலையில்தான் இங்கே எல்லா விமர்சகர்களும் இருக்கிறார்கள். எனக்கு இங்குள்ள சாமானிய சினிமா ரசிகர்கள்மேல் நம்பிக்கை இருக்கிறது. தொழில்முறை சினிமா விமர்சகர்கள், உலகசினிமா ஆர்வலர்கள் , அரசியல் வன்மர்கள், சாதிக்காழ்ப்பர்கள் எல்லாருமே எளிமையான, அப்பாவியான மனிதர்கள் மட்டுமே. ஏதோ தங்களை முன்வைக்க முயல்கிறார்கள். அவ்வளவுதான்.

ஆனால் இவர்கள் திரும்பத் திரும்ப சிலவற்றைச் சொல்லிச் சொல்லி சாமானிய ரசிகர்களில் ஒரு சாராரை சினிமா பார்க்க முடியாதவர்களாக ஆக்கிவிடுகிறார்கள். சில சொற்களை கேட்டாலே கசப்பாக இருக்கிறது. ஒன்று கூஸ்பம்ப் (Goosebumps). இன்னொன்று லாக் (Lag). ஒரு நல்ல படத்தை வாழ்நாளில் உண்மையிலேயே ரசித்துப் பார்த்த எவரும் இந்தச் சொற்களைச் சொல்லமாட்டார்கள்.

ஒருவர் பொன்னியின் செல்வனில் கூஸ்பம்ப் மொமெண்ட் இல்லை என்றார். அவரிடம் அவருக்கு பிடித்த கூஸ்பம்ப் மொமெண்ட் என்ன என்று சொல்லுங்கள் என்றேன். பாகுபலியில் பனைமரத்தை வளைத்து கல்லை வீசுவார்களாம். அது கூஸ்பம்பாம்.

”தம்பி பனைமரம் பார்த்திருக்கியா? அது காத்திலே வளைஞ்சதா கேள்வியாவது பட்டிருக்கியா? ” என்றேன்.

”வளையாதா சார்?” என்றார்.

“ஆமா, ஆனா இருபது டன் கல்லை தூக்குறவன் வளைச்சா வளையுமோ என்னமோ” என்றேன்

(“வணங்கான்” என்பது பனைமரத்தின் பெயர்களில் ஒன்று).

இன்னொன்று ’லாக்’ . எந்த சினிமா என்றாலும் ”செகண்ட் ஹாஃப் லாக். அஞ்சுநிமிசம் கத்திரி போட்டிருக்கலாம்” என்று சொன்னால் சினிமா விமர்சகர் ஆகிவிடுகிறார். சினிமாவில் நுண்ணிய உணர்ச்சிகளையோ, வாழ்க்கைச் சிக்கல்களையோ, உளக்குழப்பங்களையோ, காட்சிப்பிரம்மாண்டத்தையோ காட்டவேண்டுமென்றால் காட்சிகள் கொஞ்சம் மெல்லவே செல்லும். சினிமாவின் அடிப்படை இலக்கணம் அது. லாக் என்ற சொல்லை சொல்லிச் சொல்லி கம்யூட்டர் கேம் தவிர எதையுமே பார்க்கமுடியாதவர்களாக நம் சினிமாரசிகர்களை ஆக்குகிறார்கள் விமர்சகர்கள்.

ஒரு திரைப்படம் பார்க்கும்போது குறைந்தபட்சம் அது என்ன வகைமை (Genre)  என புரிந்துகொள்வது ரசனையின் அடிப்படை விதி. (இலக்கியத்திலும் அப்படியே) பொன்னியின் செல்வன் பார்த்துவிட்டு அதை பாகுபலி அல்லது டிரான்ஸ்பார்மர்ஸுடன் ஒப்பிடுவது அபத்தம். அதை கேம் ஆஃப் த்ரோன்ஸ் அல்லது தோர் படத்துடன் ஒப்பிடுவது மேலும் அபத்தம். அதை அகிரா குரசேவாவின் ரான் போன்ற படங்களுடன் ஒப்பிடுவது அபத்தத்தின் உச்சம்.

கொஞ்சம் சினிமா தெரிந்த ரசிகர்கூட அதை கிளியோபாட்ரா , டிராய் அல்லது எலிசபெத் போன்ற படங்களுடன் ஒப்பிடுவார். அந்த அளவுகோலில் அது எங்கு தேறுகிறது என்று பார்ப்பார். அந்த அடிப்படையை விளக்கக்கூட இங்கே ஒரு மலையாள திரைவிமர்சகரின் கட்டுரையைத்தான் முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. (ஒரு விமர்சகனுக்காகக் காத்திருத்தல் )

ஒரு படத்தின் வகைமைதான் அதன் அழகியலை தீர்மானிக்கிறது. ஒரு மிகைக்கற்பனை படம் அதீத காட்சிப்படிமங்களை உருவாக்கலாம். பாகுபலி போல செயற்கையான நிலப்பரப்புகளை உருவாக்கலாம். காட்டெருதை கட்டி தேரோட்டலாம். அதேபோல ஒரு சாகசப்படம் செயற்கையான நெருக்கடி நிலைகளையும் அதன் விளைவான உச்சகட்டங்களையும் உருவாக்கலாம். கேம் ஆப் த்ரோன் தொடரில் டிராகன் வரலாம்.

ஒரு வரலாற்றுப்படம் அவ்வாறு உருவாக்கினால் அதன் வரலாற்றுத்தன்மை இல்லாமலாகும். அதைப் பார்ப்பவர் அறியாமலேயே வரலாற்றுக் கற்பனையில் இருந்து விலகிச்சென்றுவிடுவார். ஒரு சாகசப்படம் மிகவேகமாகவே செல்லவேண்டும். ஆனால் உலகில் இன்றுவரை எடுக்கப்பட்ட எல்லா வரலாற்றுப் படங்களும் மிதமான ஓட்டம் கொண்டவையே. வரலாற்றின் பரப்பை அவை ரசிகர்களின் முன் நிறுவியாகவேண்டும். இன்று இல்லாமலாகிவிட்ட நிலக்காட்சியை கண்முன் காட்டவேண்டும். அன்றைய வாழ்க்கைமுறையை காட்டவேண்டும். உண்மையில் பொன்னியின் செல்வன் வேகமான சினிமா. நான் இன்னும் மெல்லச்செல்லும் ஒரு கதையோட்டமே வரலாற்று சினிமாவுக்கு தேவை என்று சொல்வேன்.

ஓர் உதாரணத்துக்கு கிளியோபாட்ரா படத்தையே பார்க்கலாம். மிகமிகமிக மெல்லச் செல்லும் படம் அது. பல காட்சிகளில் காமிரா முக்கால்தாங்கி மேல் அசைவில்லாமல் அமர்ந்திருக்கும். காட்சிச் சட்டகம் மாறுவதே அரிதாகத்தான். ஆனால் மிகப்பிரம்மாண்டமான சினிமா. அந்த பிரம்மாண்டம் நினைவில் பதிந்து கனவுபோல நீடிப்பதே அந்த நிதானமான திரைமொழியால்தான்.

இன்னொன்றும் உண்டு, கொஞ்சமேனும் தொழில்நுட்பப் புரிதலும் சினிமா விமர்சகனுக்கு தேவை. ஒருவர் ’பாகுபலியின் அரண்மனைகள் பிரம்மாண்டமானவை, அவை ஏன் பொன்னியின்செல்வனில் இல்லை?’ என்று எனக்கு எழுதினார். பாகுபலியின் அரண்மனையின் அமைப்பு பழைய எகிப்திய அரண்மனைகளை மாதிரியாகக்க் கொண்டு முழுக்கவே கணிப்பொறியில் உருவாக்கப்பட்டது. பொன்னியின் செல்வனில் உள்ள அரண்மனைகள் உண்மையில் இருப்பவை, தேவையான இடங்கள் மட்டும் வரைகலையால் வெட்டி உருமாற்றப்பட்டு, கூடுதல் கட்டுமானங்கள் சேர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டவை. பாகுபலியின் அரண்மனையின் சுவர்ப்பரப்புகளை (Texture) பார்க்கும் சிறுவர்கள்கூட அது வெறும் கணிப்பொறி வரைகலை என சொல்லிவிடுவார்கள்.

இன்னொருவர் கேம் ஆப் த்ரோன்ஸுடன் ஒப்பிட்டு கேட்டார். இன்னொருவர் விஜய்டிவியின் மகாபாரதம் தொடருடன் ஒப்பிட்டார். தொலைக்காட்சித் தொடருக்கான அரங்க அமைப்பு அல்ல பெரியதிரைக்கு உரியது. குறிப்பாக பொன்னியின்செல்வன் ஐமாக்ஸ் போன்ற மாபெருந்திரைக்குரிய படம். சிறியதிரைக்கு பிளேட்ஸ் எனப்படும் செயற்கையாக உருவாக்கப்பட்டக் காட்சிப்பரப்புகளை பின்ன்னுக்குப்பின்னால் அமைத்து பிரம்மாண்டத்தை காட்டிவிடலாம். மேலும் தொலைக்காட்சித்திரை ஒரு காட்சியிலுள்ள வெவ்வேறு பரப்புகளின் வெளிச்சவேறுபாடுகளை காட்டிக்கொடுக்காது. சின்னத்திரையின் காட்சிகளை பெரிய திரையில் போட்டால் எல்லாமே வெளிப்படையாக ஆகிவிடும். பெரிய திரையின் தொழில்நுட்பமே முற்றிலும் வேறு.

சரி, இவற்றையெல்லாம் எல்லா பார்வையாளர்களும் தெரிந்திருக்கவேண்டுமா? வேண்டாம். எளிமையான பார்வையுடன், ஆர்வத்துடன் திரையரங்குக்குச் சென்று கண்ணையும் உள்ளத்தையும் கொடுத்தாலே போதும். கருத்து தெரிவிக்கலாமா? தாராளமாக தெரிவிக்கலாம். ஒருவர் தனக்கு படம் பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்று சொல்ல எல்லா உரிமையும் கொண்டவர். அது அபிப்பிராயம். ஆனால் விமர்சனம் சொல்லவேண்டுமென்றால் கொஞ்சமேனும் சினிமாவும் பண்பாடும் வரலாறும் தெரிந்திருக்கவேண்டும். அந்த சினிமாவுக்கு கொஞ்சமேனும் கவனம் அளிக்கவேண்டும். அதாவது மணி ரத்னத்துக்கு ஆலோசனை சொல்லவேண்டுமென்றால் நமக்கும் கொஞ்சம் சினிமா தெரிந்திருக்கவேண்டும். (ஆனால் இலக்கியமே தெரியாமல் தாராளமாகவே எனக்கு இலக்கிய ஆலோசனை சொல்லலாம். நான் நகைச்சுவையை விரும்புபவன்)

நமது படங்களில் உள்ள நுட்பங்கள், ஆழங்கள் விமர்சகர்களால் பொதுவாகக் கவனிக்கப்படுவதில்லை.  உதாரணமாக, நான் பொன்னியின் செல்வன் சினிமாவில் எந்த விமர்சகராவது அதிலுள்ள நகைகளின் வடிவமைப்பில் இருந்த மிகப்பெரிய கற்பனை, உழைப்பு பற்றி ஒரு வரி சொல்கிறார்களா என்று பார்த்தேன். அது தனியாகவே ஒரு பெரிய படைப்புச் செயல்பாடு. கடம்பூர் மாளிகைக்கும், பழையாறை மாளிகைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை எவராவது சுட்டிக்காட்டுகிறார்களா என்று பார்த்தேன். மிகச்சுருக்கமாக பிரிவின் உணர்ச்சிநிலைகளைச் சொல்லும் சில வசனங்கள் அதிலுள்ளன. அதை ஒருவராவது சொல்கிறார்களா என்று பார்த்தேன். எவருமே சொல்லவில்லை. பொத்தாம்பொதுவாக கலை இயக்கம் பரவாயில்லை. வசனங்கள் சில இடங்களில் கூர்மை— இப்படித்தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

ரவிவர்மனின் ஒளிப்பதிவு பல இடங்களில்  கிளாஸிக் ஓவியத்தன்மையை கொண்டிருந்தது. அதற்காக ஒளியை அமைத்திருந்தார். பளிச் என ஒளியமைப்பு செய்தால் திரைப்பரப்பில் உருவங்கள் எழுந்து தெரியும். ஒருவகை மங்கல்தன்மை திரைப்பரப்பை ஓவியத்திரையின் texture கொண்டதாக ஆக்கும். உருவங்கள் திரைப்பரப்பில் தைலவண்ண, நீர்வண்ண பிம்பங்கள் போல கரைந்து பரவியிருப்பதாகத் தோன்றும். அது ஓர் ஒளிப்பதிவுச் சாதனை. இந்திய சினிமாவில் அரிதாகவே அடையப்பட்டுள்ளது. ஆனால் அதை ‘ஒளிப்பதிவு சுமார், தெளிவாக இல்லை’ என சில விமர்சகர்கள் எழுதினர். இதுதான் இங்குள்ள விமர்சகர்களின் பொது ரசனை. அரிதாக மேலெழுந்த மிக நல்ல விமர்சனங்களும் இருந்தன.

(இங்கே  மிகக்கொஞ்சம்பேர் அவர்களுக்கு உகந்த அரசியல்கருத்து சினிமாவில் சொல்லப்பட்டால் ரசிப்பார்கள். அவர்களுக்கு சினிமாகூட முக்கியமல்ல. அதில் வெளிப்படையாகச் சொல்லப்பட்ட அரசியலே முக்கியம். சினிமா என்பது ஒருவகை அரசியல் மேடைப்பேச்சு என நினைக்கிறார்கள்)

இது மணி ரத்னத்தின் வாழ்நாள் முயற்சி. இருபதாண்டுகளாவது இப்படம் இரண்டு தலைமுறையினரால் பார்க்கப்படவேண்டும் என அவர் விரும்பினார். ஒருபோதும் அடுத்த தலைமுறை பார்த்து சிரிப்பதாக ஆகிவிடக்கூடாது. ஆகவே அனேகமாக செயற்கையான வரைகலைக் காட்சிகள் இல்லை. மனிதக் கண்ணால் பார்க்கத்தக்க காட்சிகளே படத்திலும் உள்ளன. பீரங்கிக்குண்டின் கூடவே காமிராவும் பறக்கும் காட்சிகள் இல்லை.

மிக விரிவான காட்சிகளை காட்டும் டிரோன் ஷாட்கள் இப்படத்தில் மிகக்குறைவு. சிலர் அவ்வாறு காட்டினால் காட்சிகளில் பிரம்மாண்டம் தெரியும், அது மணி ரத்னத்திற்கு தெரியாது என வகுப்பெடுத்திருந்தனர். அது மிக மிக எளிய உத்தி. டிரோன் ஷாட் வைத்தால் அந்த திரைப்பரப்பு முழுக்க நிறையும்படி காட்சிகளை வெட்டிஒட்டினால்போதும். அதைச்செய்ய மணி ரத்னம் தேவையில்லை. ஆனால் அந்த ஷாட் பார்வையாளன் ‘எங்கோ’ இருந்து படத்தை பார்ப்பதாக உணரச்செய்யும். பொன்னியின் செல்வன் கதைமாந்தர் வழியாக செல்லும்படம். இத்தகைய படங்களில் பார்வையாளர் காட்சிக்கு அணுக்கமாக, நிகழ்வுக்கு உள்ளே இருக்கவேண்டும். ஆகவேதான் வானில் இருந்து எடுக்கப்படும் டிரோன் ஷாட்கள் முதிர்ச்சியான சினிமாக்களில் தவிர்க்கப்படுகின்றன.

மேலும் ஒரு சினிமா பிரம்மாண்டமான போர்க்களத்தை காட்டியபின் வரலாற்றின் அன்றாட நிகழ்வுகளுக்குச் செல்ல முடியாது. ஒரு சினிமா தன் Scale என்று முதலிலேயே ரசிகனிடம் சொல்லவேண்டும். அந்த எல்லையை பேணவேண்டும். பிரம்மாண்டத்தில் இருந்து அரண்மனை உள்ளறைகளுக்குள் சென்றால் அது ஒரு அழகியல்பிசிறு. அரண்மனைகளுக்குள் செயற்கையாக பிரம்மாண்ட காட்சிகளை அமைத்து, விரிந்த காட்சிச்சட்டகத்தை உருவாக்கினால் அது அழகியல் பிழை. ஆகவேதான் போர்க்களம் அளவோடு காட்டப்பட்டுள்ளது.  ‘உங்களைவிட மணி ரத்னம் கொஞ்சம் சினிமா தெரிந்தவர், நம்புங்கள்’ என ஒருவருக்குச் சொன்னேன்.

செயற்கையான கதைச்சந்தர்ப்பங்கள் இதில் இல்லை.  உண்மையான உணர்ச்சிகள் போதும், மிகைநாடகங்கள் வேண்டாம் என்று இயக்குநர் எண்ணினார். மனிதனால் சாத்தியமான சாகசங்கள் போதும், எவரும் வானில் பறக்கவேண்டாம் என நினைத்தார். உண்மையை உருவாக்க மட்டுமே வரைகலை போதும், செயற்கையான வரைகலைக் காட்சிகள் வேண்டாம் என்றார்.

இத்தகைய படத்தில் நகைச்சுவை கூட மிதமாக, ஒரு புன்னகைக்கு மேல் செல்லாததாகவே இருக்கவேண்டும். ஜெயராம் நடிப்பில் படப்பிடிப்பிலும் ஒலிச்சேர்ப்பிலும் பலரும் சிரித்த சில காட்சிகள் கூடுதலாகச் சிரிப்பூட்டக்கூடாது என்பதனாலேயே பின்னர் நீக்கப்பட்டன. கற்பனை செய்து பாருங்கள், ஒரு வரலாற்றுப்படத்தில் வெடிச்சிரிப்பு எப்படி பொருத்தமற்றதாக இருக்கும் என உங்களுக்கே தெரியும்.

எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது. படம் வெளியான உடனே அது தீர்ந்துவிட்டது. வழக்கமான ’கூஸ்பம்ப்’ ரசிகர்கள் வந்து அவர்களுக்கு இந்தப்படத்தில் நிறைவில்லை என்றார்கள். அவர்கள் அப்படிச் சொல்வார்கள் என முன்னரே எதிர்பார்த்திருந்தோம். இருபது சதவீதம் பேர் வந்து பார்த்து விலகிய பின்னரே இதற்கான ரசிகர்கள் வருவார்கள் என நினைத்தோம். ஆனால் இங்கே ஐந்து சதவீதம்பேர்கூட கூஸ்பம்பர்கள் இல்லை என தெரியவந்தது இனிய அதிர்ச்சி. கூஸ்பம்பர்கள் எல்லாருமே ஏதாவது விமர்சனம் எழுதுகிறார்கள். ஆகவே அவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

இன்று பத்தே நாளில் செயற்கையான எதிர்விமர்சனங்கள் அகன்று ஒற்றைக்கருத்து உருவாகிவிட்டது. இன்று குடும்பத்துடன் நாகர்கோயிலில் பொன்னியின் செல்வன் பார்க்கலாம் என முனைந்தேன். எங்கும் டிக்கெட் இல்லை. இத்தனைக்கும் திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் மட்டும்தான் படம். நாளையும் டிக்கெட் இல்லை. நாளைக் கழித்தே பார்க்கவேண்டும். ஆனால் ஏமாற்றமாக இல்லை.

*

இப்போது இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றபின் இதைப்பற்றிப் பேசுவது உகந்தது. எவரும் சப்பைக்கட்டு கட்டுவதாகச் சொல்லிவிட முடியாது. எவரையும் புண்படுத்த இதைச் சொல்லவில்லை. இதெல்லாம் சில அடிப்படைகள். சினிமா பார்ப்பதனாலேயே சினிமா தெரியும் என நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு இதை எவரேனும் சொல்லவேண்டியிருக்கிறது.

படம் வெளிவந்து பத்துநாட்களில் எல்லா கசப்புகளையும் கடந்து, இந்திய சினிமாவரலாற்றின் மாபெரும் நிகழ்வாக ஆகிவிட்டிருக்கிறது. இனி உங்கள் குரல்களால் ஆவதொன்றுமில்லை. ஆகவே இன்னொரு முறை நிதானமாக, காழ்ப்புகளும் கசப்புகளும் தன்முனைப்பும் இல்லாமல் அதை பார்க்கும்படி  கோருகிறேன். அனைவருக்கும் நான் சொல்ல ஒன்றே உள்ளது . உங்கள் கண்முன் தமிழில் காலம்கடந்தும் பார்க்கப்படும் ஒரு திரைப்படம் நிகழ்ந்திருக்கிறது. ஒரு வரலாறு இது. அதில் மனமுவந்து பங்கெடுங்கள். அது ஒரு வாழ்நாள் அனுபவம்

இது கலைப்படம் அல்ல. பொதுரசனைக்குரிய படம். கல்கியின் நாவலும் அத்தகையது. அந்த வகைமையில் இது ஒரு கிளாஸிக். ஏற்கனவே எல்லாம் தெரியும் என்னும் பாவனையை கொஞ்சம் கழற்றிவிட்டு பார்த்தீர்கள் என்றால் இது ஒரு கற்றல் அனுபவமும்கூட. சில்லறை அகந்தையால் இவ்வாய்ப்பைத் தவறவிடுவீர்கள் என்றால் இழப்பு உங்களுக்கே. படத்தை ஒரு சிறுவனுக்குரிய விரிந்த கண்களுடன், எளிய உற்சாகத்துடன் பார்க்க இயலாமல் உங்கள் அர்த்தமற்ற அகந்தை  உங்களை தடுக்கிறதென்றால் நீங்கள் எதை இழந்திருக்கிறீர்கள் என பாருங்கள்.

அகன்ற திரையில் இன்னும் மூன்றுமாதம் கடந்தபின் இந்தப்படத்தை பார்க்கவே முடியாமலாகலாம். முடிந்தவரை சிலமுறை பார்த்துவிடுங்கள். சில்லறை சாதியவம்புகள், அரசியல் வம்புகளுக்குச் செவிகொண்டுத்து இதைத் தவறவிட்டால் ஒருவேளை நீங்கள் பின்னர் வருந்தக்கூடும்.

சினிமாவைப் பயில்பவர்களுக்கு இந்தப்படம் போல் ஓர் அரிய வாய்ப்பு இந்திய சினிமாவில் பிறிதொன்றில்லை. ஒரு காட்சி எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது, ஏன் காமிரா ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது, ஏன் காமிரா சில இடங்களில் அலைபாய்கிறது என்றெல்லாம் பார்ப்பதென்பது ஒரு பெரிய திரைக்கல்வி. காமிராவின் நகர்வுக்கு இயக்குநருக்கு திட்டவட்டமான நோக்கம் இருப்பது மணி ரத்னம் போன்ற மிகச்சில இயக்குநர்களின் படங்களிலேயே உள்ளது. தமிழின் முதன்மை இயக்குநர்கள் கூட காட்சி காட்சியாக இப்படத்தை பயின்றுகொண்டிருக்கிறார்கள். எவரோ ஒன்றும் தெரியாமல் சொல்வதைக் கேட்டு உங்கள் அசட்டுத்தனத்தால் இதை தவறவிடாதீர்கள்.

இந்த சினிமாவை எடுப்பதற்கு மணி ரத்னம் காட்டிய படைப்பூக்கம் இந்திய சினிமாவில் மிக அரிதானது. அதைவிட அவருடைய தற்கட்டுப்பாடு மிக மிக அரிதானது. இந்தியா என்னும் பிரம்மாண்டமான தேசியக் கட்டுமானம் பலநூறு உள்முரண்பாடுகள் கொண்டது. குறிப்பாக வடக்கு -தெற்கு என்னும் வேறுபாடு. வடக்கே உள்ளவர்களுக்கு தெற்கின்மேல் ஒரு மனவிலக்கம், உதாசீனம் உள்ளது. தெற்கைப்பற்றி அவர்க்ளுக்கு ஒன்றுமே தெரியாது. அது ஒரு யதார்த்தம். அதை எவரும் கண்ணைமூடிக்கொண்டு கடக்கமுடியாது.

ஒரு படம் இந்தியா முழுக்க சென்று மாபெரும் வெற்றி அடையவேண்டும் என்றால் அதற்கு மிக எளிய வழி அதை எந்த கலாச்சார அடையாளமும் அற்ற வெறும் கேளிக்கைப்படமாக எடுப்பதுதான். 2.0 அத்தகையது. விக்ரம், கேஜிஎஃப் உட்பட எல்லா Pan Indian சினிமாக்களும் தனிப்பட்ட கலாச்சார அடையாளம் அற்றவை. பெரும்பாலான ஹாலிவுட் சினிமாக்களைப்போல. பாகுபலி கூட வட்டாரக் கலாச்சார அடையாளங்கள் இல்லாத அந்தரத்தில் நிற்கும் குழந்தைக்கதைதான். அதிலுள்ள அரண்மனைகள், கோட்டைகள் எல்லாமே எந்த கலாச்சாரத்தன்மையும் அற்றவை. அனிமேஷனால் உருவாக்கப்பட்டவை.

ஆனால் பொன்னியின் செல்வன் தெளிவான தமிழடையாளம் கொண்டது. அந்த தமிழடையாளம் எங்கும் மழுப்பப்படவில்லை. ஆடைகளில், அரண்மனைக் கட்டமைப்புகளில், ஆசாரமுறைமைகளில் எங்கும் அந்த தமிழ்த் தனித்தன்மை திட்டவட்டமாக கடைப்பிடிக்கப்பட்டது. அது வட இந்தியாவில் சினிமாவை அன்னியப்படுத்தும் எனத் தெரிந்தும் அங்குள்ளவர்களுக்காக ஒரு சமரசமும் செய்யப்படவில்லை. எந்தக் கேளிக்கையம்சமும் சேர்க்கப்படவில்லை.

’ரத்தம் ரணம் ரௌத்ரம்’ தெளிவான தெலுங்கு அடையாளம் கொண்டது. ஆனால் அது வடநாட்டு ரசிகர்களுக்காகச் செய்துகொண்ட மாபெரும் சமரசம் என்பது இறுதிக்காட்சிகளில் தெலுங்குப் பண்பாட்டு நாயகர்களை தெருக்கூத்துபோல ராமன், அனுமன் வேடம் போடச்செய்ததுதான். உடனடியாக படம் ஓடலாம், ஆனால் நீண்டகால அளவில் அது அந்த வரலாற்றுநாயகர்களை கேலிச்சித்திரங்களாகவே ஆக்கும்.

அத்தகைய எந்த கீழிறங்கலும் இன்றி மணி ரத்னம் இந்தப்படத்தை எடுத்திருக்கிறார். அதற்கு தன் கலைமேல் ஒரு நம்பிக்கை, ஒருவகை தெனாவெட்டு தேவை. (ஆனால் இங்குள்ள விமர்சகர்கள் பலர் அந்த சமரசமில்லாத நிலையையே மணி ரத்னத்தின் குறைபாடாகச் சுட்டிக்காட்டிய பரிதாபத்தையும் கண்டேன். ‘வடக்கே ஓடாது’ என்னும் அபத்தமான ஆரூடங்கள், ஆலோசனைகள்…)

எண்ணியபடியே ஒரு சிறுசாராரால் ஆந்திரத்திலும் வடநாட்டிலும் இப்படம் உதாசீனம் செய்யப்பட்டாலும்கூட பெருவாரியான மக்கள் ஏற்பைப் பெற்று வெற்றிபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் சற்று புரியாமலிருந்த பகுதிகள்கூட பத்து நாட்களுக்குப்பின் தெளிவடைந்து திரையரங்குக்கு ரசிகர்களை மீண்டும் வரச்செய்துள்ளன.

இது மணி ரத்னத்தின் வெற்றி. அவருடைய படம். அதில் திரைக்கதையாளனாக, வசன எழுத்தாளனாக, தரவுகள் அளிப்பவனாக ஒரு பங்கை ஆற்றியிருக்கிறேன். நிறைவான அனுபவம் அது.

ஜெ

கணவர்: சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல? பிரகாஷ் ராஜின் பிள்ளைகள் யாரெல்லாம்?

மகள்: விக்ரம், திரிஷா, ஜெயம் ரவி

கணவர் : பொன்னியின் செல்வனின் இன்னொரு பெயர் என்ன?

மனைவி : அருண்மொழி வர்மன்

கணவர்: அந்த ரெண்டு கேரக்டரும் செய்பவர் ஒருவர். அவர்தான் ஜெயம்ரவி…சரியா? இனி என்ன சந்தேகம் என்றாலும் படம் முடிந்தபின் சொல்லித்தருகிறேன்

பிறகு

மகள்: யார் அது சோழனும் பாண்டியனும்?

மனைவி: செத்துப்போன கிழவர் ஐஸ்வரியா ராய்க்கு என்ன உறவு?

மகள் : கப்பலில் யார் அது கடைசியிலே பட்டாசு வெடித்தது?

மனைவி :ஆத்யத்தே கரிகாலனின் (முதல்கரிகாலன்) சித்தப்பா பையனா இல்லை மச்சானா மதுராந்தகன்?

பிறகு

வரும் பெண்: பொன்னியின் செல்வனின் கிராஷ் கோர்ஸ் நடக்கும் இடம் இதுதானா?

கணவர்: ஆமா ஜாயின் பண்ண வந்தீங்களா?

பெண்: ஆமா சேர்ந்துக்கலாமா?

கணவர் : ஆமாம், நல்ல டஃபாக்கும். கவனமா இருக்கணும் கிளாஸிலே…

முந்தைய கட்டுரைரகுவம்சம்
அடுத்த கட்டுரைவாசிப்புப் பயிற்சி முகாம், கடிதம்