வரலாற்றுப் படங்களின் வடிவம்

அன்புள்ள ஜெ

நலம்தானே

இந்த டிவீட் வைரலாகிறது. ஆதித்தகரிகாலனின் இந்த படத்தோடு.

பிறர் அறியாத ஆண்மகனின் துயர் தன்னந்தனி மதவேழத்தின் நோய் போன்றது. தெய்வங்கள் அன்றி பிறர் அதை அறியப்போவதில்லை. தெய்வங்களிடமும் அது முறையிடப்போவதில்லை.

இந்த வசனத்தை பொன்னியின் செல்வனில் பயன்படுத்தியிருக்கலாமோ?

செல்வக்குமார்

அன்புள்ள செல்வக்குமார்,

அது வெண்முரசில் கர்ணன் பற்றி வரும் வரி என நினைக்கிறேன். வெண்முரசை படித்தவர்தான் மணி. குறிப்பாக நீலம்.

ஆனால் இத்தகைய வசனங்களை இன்று திரைப்படத்தில் பயன்படுத்த முடியாது. சினிமாவில் வசனங்களின் காலம் முடிந்துவிட்டது.

(பொன்னியின் செல்வனிலும் இத்தகைய வசனங்கள் உள்ளன. “மனிதர்கள் பல முறை சாவதுண்டு, அது என் முதல் சாவு” ஆனால் காட்சிகளின் பிரம்மாண்டத்தால் அவை கவனிக்கப்படாமல் போகும் என அறிந்திருந்தேன். இன்னும் சில மாதங்களுக்குப் பின்னரே அவை கவனிக்கப்படும். உடனடியாக படத்தின் வெற்றிக்கு உதவாது)

வசனம் நீளமாக இருந்தால் அதில் செயற்கையான, உணர்ச்சிகரமான ஏற்ற இறக்கங்கள் தேவைப்படும். அது நாடகத்தன்மையை கொண்டுவரும். இன்றைய சினிமாவில் அது இயலாது. அப்படி இல்லாமல் நேராக நீண்ட வசனம் வந்தால் ஒப்பிப்பதுபோல் இருக்கும்.

நீண்டவசனம் சொல்லும்போது நடிக்கமுடியாது. ஷாட்களை ஃப்ரீஸ் செய்து பார்த்தால் கண்கள் உணர்ச்சியில்லாமல் வெற்றுப்பார்வையாக இருப்பதைக் காணலாம்.

மேலைநாட்டிலும் சாதாரணமாக நீளநீளமாகவே பேசுவார்கள். ஏன் சினிமாக்களில் ஒற்றைவரி வசனம்? ஏனென்றால் முகத்திலும் கண்களிலும் உணர்ச்சிகள் தெரியவேண்டும் என்றால் வசனம் நிறைய இருக்கலாகாது.

ஆனால் நாவலில் நீண்ட வசனங்கள் வரலாம். அவை வாசகனின் உள்ளத்தில் நிகழ்கின்றன. அவன் மனச்சொல்லோட்டத்துடன் கலந்துவிடுகின்றன. செவ்வியல் நாவலில் வசனம் என்பது கவிதைக்கு நிகராக வரலாம். ஏனென்றால் அது ஒரு இணைகாவியம்.

பொன்னியின் செல்வனின் வசனங்கள் மிகத்திட்டமிடப்பட்டு எழுதப்பட்டவை. ஏனென்றால் தமிழ் சினிமாவுக்கு அதற்கான ஒரு வரலாறு உண்டு.

தமிழில் தெருக்கூத்தில் இருந்து இசைநாடகம் வந்தது. அதிலிருந்து நாடகம். நாடகத்தில் இருந்து சினிமா. தெருக்கூத்தின் பெரும்பாலான கதைகள் புராணங்கள். ஆகவே தொடக்ககால நாடகங்களும் சினிமாக்களும் புராணங்களே.

புராணங்களையே அப்படியே நீட்டி வரலாற்றுப்படமாக ஆக்கினார்கள். (பழைய மன்னர் படங்களில் எப்போதுமே ஏராளமான நகைகளும்,  அடுகுக்குக்கிரீடமும் புஜகீர்த்திகளும் அணிந்தே அரசர்கள் வருவார்கள். தெருக்கூத்தின் காத்தவராயனின் அதே தோற்றம்.) ஆகவே அக்கால அரசப்படங்கள் எல்லாமே வசனநாடகங்கள்தான். அவை அன்று பெருவெற்றிபெற்றன.

ஆனால் சினிமா மாறிக்கொண்டிருந்தது. அச்சுமொழி வசனம் காலாவதியானது. காட்சிமொழி படங்களில் வலுப்பெற்றது. அதன்பின் நாடகப்படங்கள் தோல்வியடைய ஆரம்பித்தன. சரித்திரப்படங்களில் ராஜராஜசோழன் (1973) மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1978) இரண்டும் தோல்வி அடைந்தபின் எவரும் சரித்திரப்படம் எடுக்க முனையவில்லை.

ஏனென்றால் சரித்திரப்படத்துக்கான ‘திரைமொழி’ என்ன என்பதை வகுக்க முடியவில்லை. நாடகப்பாங்கை தவிர்க்கலாம். வசனத்தை என்ன செய்வது? இது தமிழில் மட்டும் மிகப்பெரிய பிரச்சினை. ஆங்கிலத்தில் பேச்சுமொழியும் அச்சுமொழியும் ஏறத்தாழ ஒன்றே. மலையாளம், தெலுங்கு, இந்தி எல்லாவற்றிலும் அந்த வேறுபாடு மிகமிகக்குறைவானது.

ஆனால் தமிழ் மிகத்தொன்மையான மொழி. பல அடுக்குகள் கொண்ட மொழி. (சங்ககாலத் தமிழ், காப்பியகாலத் தமிழ், சிற்றிலக்கியகாலத் தமிழ், நவீனத்தமிழ்) இங்கே பேச்சுமொழியை கதாபாத்திரங்களுக்கு அளிக்கவே முடியாது. கேலிக்கூத்தாகிவிடும். அச்சுமொழி மிகப்பழையது, மேடைப்பேச்சில் மட்டுமே எஞ்சுவது. நாடகத்தன்மை கொண்டது. அதை நாம் பேசுவதே இல்லை.

இந்த ஒரு சிக்கலால்தான் தமிழில் சரித்திரப்படங்கள் வரவில்லை. தெலுங்கில் வெளிவந்து வெற்றிபெற்ற இரு சரித்திரப்படங்கள் மகாதீரா, பாகுபலி. இரண்டுமே சரித்திரப்படங்கள் அல்ல, ஃபேண்டஸி படங்கள் மட்டுமே. அம்புலிமாமா கதைகள்போல. அவற்றில் வசனம், காட்சியமைப்புகள் எல்லாம் எப்படி இருந்தாலும் பெரிய சிக்கல் இல்லை. ஏனென்றால் ‘இது உண்மை’ என அந்தப்படம் ரசிகர்களிடம் சொல்லவில்லை. ரசிகர்களும் ஒரு வேடிக்கையாகவே அவற்றை ரசிக்கிறார்கள். வரலாறாக எண்ணுவதில்லை. மேலும் தெலுங்கில் பேச்சுமொழியும் அச்சுமொழியும் ஏறத்தாழ ஒன்றே.

தெலுங்கிலேயேகூட சரித்திரப் படம் என்றால் ருத்ரமா தேவி. அது தோல்வி அடைந்தது. அதன் வசனங்களை எப்படி அமைப்பது என்று தெரியவில்லை.  வடக்கே எடுக்கப்பட்ட படங்களிலேயே பெரும்பாலான வரலாற்றுப் படங்கள் தோல்வியடைந்தன. மெல்லிய வெற்றியை அடைந்தவை, சஞ்சய்லீலா பன்சாலி எடுத்தவை. அவை வடக்கே புகழ்பெற்ற ஜாத்ரா போன்ற புராணநாடகங்களின் தன்மை கொண்டவை. மிகையான இசை, மிகையுணர்ச்சி, செயற்கையான காட்சியமைப்புகள். அவை சினிமாத்தன்மை குறைந்தவை. இன்னொரு வகை, நாடகத்தன்மை கொண்ட படங்கள். உதாரணம் பிருத்விராஜ்.

இந்தப்படத்தின் திரைக்கதையை ஒட்டியும் எனக்கும் மணிக்கும் நடுவே விவாதங்கள் இருந்தன. பொன்னியின் செல்வன் நாடகத்தில் உச்சகட்டங்கள் முழுக்க கதாபாத்திரங்களின் நேரடி உரையாடல்கள். அவை நாடகமாகச் சரிவரும். சினிமாவுக்கு அல்ல. அவ்வாறு பேசப்பட்ட பல செய்திகள் திரைக்கதையில்  காட்சிகளாக்கப்பட்டன. சாதாரணமாக வந்துசெல்லும் சில எளிய விவரணைகள் முழுமையான காட்சிகளாக ஆயின. என்ன என்று பொன்னியின் செல்வன் பார்த்துக் கண்டுபிடிக்கலாம்.

அத்துடன் நாவலில் இருந்து நுட்பமான சில மாற்றங்கள் தேவைப்பட்டன. பொன்னியின்செல்வனில் வந்தியத்தேவன் முதிராச்சிறுவன். அருண்மொழியும் அப்படித்தான். ஆனால் இங்கே கார்த்தியும் ஜெயம்ரவியும் நடிக்கிறார்கள். ஆகவே அக்கதாபாத்திரங்களின் இயல்புகள் கல்கி எழுதிய அதே குணச்சித்திரத்தை ஒட்டி மேலும் சில ஆண்டுகள் மூத்தவர்களின் இயல்புகளாக மாற்றப்பட்டன. அதையும் திட்டமிட்டே செய்யவேண்டியிருந்தது.

பொன்னியின்செல்வன் நாவலில் ராஷ்ட்ரகூடர்களுடனான போர்கள் இல்லை. ஆனால் சினிமாவுக்குத் தேவையாயின. அவ்வாறு சிலவற்றை மேலதிகமாகக் கூட்டியபோது சிலவற்றை வெட்டித் தள்ளினேன். மணி ரத்னம் அந்த நாவலின் விசிறி. அதில் வருத்தங்கள் இருந்தன அவருக்கு. ‘நான் வெட்டும் ஒவ்வொரு காட்சிக்கும் உங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்துகிறேன்’ என ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்.

நாடகத்தனமாக மாறிமாறிப் பேசிக்கொள்ளும் காட்சிகள் வழியாக எல்லாவற்றையும் இன்னமும் தெளிவாக விளக்கியிருக்கலாம். உதாரணமாக, ‘பெரிய பழுவேட்டரையர் சோழநாட்டுக்கே அடித்தளமான சிற்றரசர்களின் தலைவர். சோழராணுவமே அவருக்கு கட்டுப்பட்டது. அவர் என்னை தூக்கி வளர்த்த தாத்தா’ என குந்தவை ஒரு ஆவேசமான வசனம் பேசியிருக்கலாம். பலருக்கு எல்லாம் மட்டைக்கிரண்டாக புரிந்திருக்கும். ஆனால் நாடகம் வந்துவிட்டிருக்கும்.

இந்தப்படத்தில் எல்லாமே காட்சிகள்தான். காட்சிகளில் ஒன்றை உணர்த்தியதுமே அந்த சந்தர்ப்பம் முடிந்து அடுத்த சந்தர்ப்பம் வந்துவிடுகிறது. வசனம் வழியாகச் சொல்லப்படும் வரலாறோ செய்தியோ இல்லை. இதுதான் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற வரலாற்றுத் திரைப்படங்களின் பாணி. ஜப்பானிய, சீன திரைப்படங்களின் பாணியும்கூட. அதன் முழுமையான இந்திய வடிவம், முதன்முதலாக, பொன்னியின் செல்வன்தான்.

ஆக, மணிரத்னம் செய்திருப்பது ஒரு புதிய வழிதிறப்பு. முழுக்க முழுக்க ஒரு சோதனை முயற்சி. சரித்திர சினிமாவை இந்திய பாணியில் எடுப்பதற்கான மாதிரிவடிவம். அதற்கான வசனம் நவீன சினிமாவுக்கு உகந்த முறையில் ‘சாதாரண உரையாடலாக’ இருக்கவேண்டும் என முடிவுசெய்தேன். ஆனால் அது அச்சுமொழியாக இருக்கவேண்டும். இன்றைய பேச்சுமொழி வரக்கூடாது. அதேசமயம் படம் தொடங்கி ஐந்து நிமிடத்திற்குள் சாதாரணமாக நாம் பேசுவதுபோல ரசிகர்களுக்குத் தோன்றவும் வேண்டும்.

சொல்லிச்சொல்லி எழுதிய வசனங்கள் அவை. ஒவ்வொரு வசனத்திலும் எத்தனை சொற்கள் என விரல்விட்டு எண்ணி எழுதியவை. எல்லா வசனத்தையும் நானே உரக்கச் சொல்லி நடித்துப் பார்த்திருக்கிறேன். அவற்றை பதிவுசெய்து ஓடவிட்டு மீண்டும் கேட்டேன். அதிரடி வசனம், அழகான வசனம் அல்ல என் நோக்கம். அச்சுமொழி பேச்சுமொழியாக காதில் ஒலிப்பது மட்டுமே. ஒற்றைவரியில் வேடிக்கையும், கூர்மையும் வெளிப்படுவது மட்டுமே.

பல கூர்வரிகள் உள்ளன. அவை ரசிக்கப்படுகின்றன. சில வரிகள் சாதாரணமாக பொதுரசிகர்களுக்கு பிடிகிடைக்காது. உதாரணமாக, ‘அடிபட்ட புலிதான் யானைக்கு எதிரி’ என்ற வரி. யானை ராஷ்ட்ரகூடர்களின் இலச்சினைகளிலொன்று. ஆனால் அவை காலப்போக்கில் புரிந்துகொள்ளப்படும்.

அதை நிகழ்த்தி, அதை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு, கண்முன் மாபெரும் வெற்றியைக் கண்டபின்னரே இதைச் சொல்கிறேன். இன்று எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க விமர்சனங்கள் அனைத்திலும் வசனம் பாராட்டப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க திரையரங்குகளில் வசனத்திற்கு பெரும் கைதட்டலையும் ஆரவாரத்தையும் பார்க்கமுடிகிறது.

(இந்த ஒரு காரணத்தாலேயே பொன்னியின் செல்வனை கொஞ்சம் கழித்தே நான் பார்க்க முடியும். நான் நடித்து உச்சரித்தபடி வசனங்கள் என் மனதில் பதிந்துள்ளன. இன்னொருவர் அதை சொல்லக்கேட்க ஒரு விலக்கம் இருக்கிறது)

சரித்திரப்படங்களை இனி நம்பி எடுக்கலாம். இதுதான் இனி வசனத்தின், திரைமொழியின் முன்னோடி வடிவம். தமிழுக்கு மட்டுமல்ல, இந்திய திரையுலகுக்கே. அதைத்தான் இக்கணம் வரை இந்தியத் திரையுலகின் முதன்மை இயக்குநர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அழைத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு ஏராளமான சரித்திரம் உள்ளது. கடந்த ஐம்பதாண்டுகளாக நாம் சரித்திரத்தை திரையில் இருந்து விலக்கியே வைத்திருக்கிறோம். அந்த தடையை இனி கடக்கலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைவல்லிக்கண்ணன்
அடுத்த கட்டுரைமணிவிழா -ரம்யா கடிதம்