வெ.த.கா – இன்னும்

அன்புள்ள ஜெ,

தனிப்பட்ட வன்மங்களால் மிகமோசமாக விமர்சிக்கப்பட்ட படம் வெந்து தணிந்தது காடு. வன்மம் கண்களை மறைத்ததனால் அந்தப்படத்தின் நுட்பங்கள் நிறைந்த பல தருணங்கள் (”என்னை சுட்டிருவியா?” “தெரியலை”.  “தெரியலையா?” “நான் இங்க இப்டி ஆவேன்னு எனக்கு முன்னாடி தெரியுமா?” போன்ற பல இடங்கள்) இங்குள்ள ‘விமர்சகர்கள்’ பலர் கண்களுக்குப் படவே இல்லை.

அது முத்து டான் ஆவதன் கதை என பலர் போகிறபோக்கில்  ‘புரிந்துகொண்டு’ எழுதியிருந்தார்கள்.  அது வன்முறை உருவாக்கும் மனநெருக்கடிகள் பற்றிய சினிமா. வன்முறையின் அர்த்தமின்மையைச் சொல்லும் கதை. பலர் வன்முறையை நியாயப்படுத்தும் கதை என்று நினைத்தார்கள். அதன்பின் அந்த வன்முறை போதிய அளவு நியாயப்படுத்தப்படவில்லை என எழுதினார்கள். இப்போது வாசிக்கும்போது விமர்சனங்கள் ஆச்சரியம் அளிக்கின்றன. அந்த சினிமாவின் கிளைமாக்ஸ் முத்துவும் ஸ்ரீதரனும் சந்திக்கும் சைலண்ட் மொமெண்ட் என்று எழுதிய விமர்சகர்களே நாலைந்துபேர்தான்.

ஆனால் ஃபேஸ்புக்கில் சாமானிய ரசிகர்கள் எழுதிய பல விமர்சனங்கள் அருமையானவை. ஆழமானவையும்கூட. அவர்களால்தான் படம் ஓடியது. இன்னும் அதிகம்பேர் பார்ப்பார்கள். இன்று, சற்றுமுன் இப்போது எழுதப்பட்ட ஒரு விமர்சனத்தை பார்த்தேன். அனுப்பியிருக்கிறேன்.

திவாகர்

வெந்து தணிந்தது காடு (முகநூல் விமர்சனம். 1-10-2022)

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “ஐந்து நெருப்பு” குறுநாவல் வெந்து தணிந்தது காடு என்ற பெரும் திரைப்படமாக விரிவடைந்துள்ளது.

ஐந்து நெருப்பு நாவல் முத்து முள் காட்டை வெள்ளாமையாக காவல் காப்பதில் துவங்கி மாமாவின் தற்கொலைக்கு பின் முத்து மும்பை செல்வதை உறுதி செய்வதுடன் முற்று பெறுகிறது. அவன் மும்பைக்கு போனானா? போய் யாரை பார்த்தான்? மேலும் அவன் வாழ்க்கை எப்படி தொடர்ந்தது? என்ற பல கேள்விகளை ஐந்து நெருப்பு குறுநாவலை வாசிக்கும் வாசகன் தன்னுள் எழுப்பிக் கொண்டு தனது சுய அனுபவத்தின் அடிப்படையில் கற்பனை மூலம் மேலும் அனுபவத்தை சென்றடைகிறான்.

வெந்து தணிந்தது காடு திரைப்படம் முத்து (சிம்பு) முள் காட்டை காவல் காப்பதில் துவங்கி மும்பை சென்றடைதல் அங்கு அவன் வாழ்கையின் திடீர் திருப்பங்கள், சம்பவங்கள் உள்ளிட்டவை காட்சி படுத்தப்பட்டதன் வழியே ஐந்து நெருப்பு குறுநாவல் பெரும் திரைப்படமாக உருமாற்றம் பெற்றுள்ளது.

ஒருவன் பொருளாதார ரீதியாக உறு பெற்று சமூகத்தில் தன்னை சரியாக பொருத்திக்கொள்ள நினைக்கிறான் ஆனால் சூழல் பொருத்தமாக அமையாதபோது சமூகத்தில் தன்னை சராசரியாக பொருத்திக்கொள்ள முடியாத நிலைக்கு செல்கிறான்.

முத்து படத்தின் துவக்க காட்சியில் நெருப்பிலிருந்து தன்னை காத்துக்கொள்ள தன் உடம்பை அனிச்சையாக எப்படி செயல்பட வைக்கிறானோ அதேபோல் மேன்ஷனில் தன்னை தாக்க வரும் மனிதர்கள் மீதும் இயந்திர கதியில் எதிர் தாக்குதல் நடத்தி தன்னை காத்துக் கொள்கிறான். நெருப்பாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் தன்னை தாக்க வருமாயின் அனிச்சையாக ஒருவன் வன்முறையை கையிலெடுக்க வேண்டிய சூழலின் நிர்பந்தம் சரியாக திரைக்கதையாக்கப்பட்டுள்ளது.

முத்து தனக்கு விருப்பமில்லாத சூழலை கடந்து செல்ல முயற்சி எடுக்கும் பொழுது மேலும் இறுக்கமாக அந்த சூழலில் சிக்கிக் கொள்கிறான்.

துப்பாக்கி ஒரு இயந்திரம் அதை கையிலெடுக்கும் ஒரு மனிதனை அந்த துப்பாக்கி இயந்திரமாக மாற்றிவிடும் என்பதை காட்சி வழியே மிக சரியாக காட்டப்பட்டுள்ளது.

படம் பார்க்கும் பொழுது பல நேரங்களில் “கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான், துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியால் சாவான்” என்ற வழக்கமான சொல்லாடல் அனுபவமிக்க பார்வையாளனுக்கு வந்து செல்லும்.

அனுபவமிக்க பார்வையாளனின் சிந்தனையை நுட்பமாக உணர்ந்த தீர்க்கதரிசி எழுத்தாளர் ஜெயமோகன் முத்துவின் மூலம் அதற்கான பதிலை அளிக்கிறார் “ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தால் சாவான் இருக்கட்டும் இந்த ஆயுதம் என்கிட்ட இருப்பதால்தான் என்னை எவனும் அவமானப்படுத்தாம இருக்கிறான் இது இருப்பதால் சாகும்வரை நிமிர்ந்து இருக்க முடியும்” என்று முத்து கதாநாயகியிடம் சொல்கிறான் இந்த இடத்தில் ஜெயமோகன் வன்முறையை நியாயப்படுத்த வில்லை மாறாக வன்முறைக்கு அழைத்து செல்லும் சூழலை சாடுகிறார்.

வன்முறையை கையிலெடுக்கும் எந்த அமைப்பும் துரோகத்தை தன் கூடவே சுமந்து வரும். மேன்ஷனில் முத்துவுடன் முதலில் நட்பாகும் சரவணன் இறுதியில் துரோகியாக மாறி வன்முறைக்கும் துரோகத்திற்கும் உலக நியதிப்படியான உறவை தக்கவைகிறான்.

கர்ஜி, குட்டிபாய் இந்த இரண்டு டான்களும் பெண்கள் விசயத்தில் மிக பலவீனமானவர்களாக காட்டப்பட்டு அதே பெண்கள் பலவீனத்தால் நேரடியாக ஒருவரும் மறைமுகமாக ஒருவரும் கொலை செய்யப்படுவது மிக சுவாரசியமான திரைக்கதை தொடர்ச்சியாக பின்னப்பட்டுள்ளது.

ஒரு தரமான கவிதை திரைப்படப் பாடலாக வடிவெடுக்கும் பொழுது அது வெகுஜனத்தை எளிதில் சென்றடைகிறது.

“மல்லி பூ வச்சி வச்சி வாடுது, அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுது, மச்சான் எப்போ வர போற”.

கவிஞர் தாமரை எழுதிய இந்த பாடலின் சரணத்தில் உள்ள வரிகள் கவிதைக்கு நிகரான அனுபவத்திற்கு அழைத்து செல்கிறது.

துவக்கத்தில் மிக மென்மையாக துவங்கும் பாடல் படிப்படியாக கொண்டாட்ட நிலைக்கு வேகமெடுக்கிறது.

ஏ. ஆர். ரகுமான் இந்த பாடலை மென்மையான சோகமும், அதிரடியான கொண்டாட்டமும் கலந்த கலவையாக அமைத்து ரசிக்க வைத்துள்ளார்.

பாடல் காட்சியமைப்பு கட் செய்யாமல் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருப்பது மிக அருமை. பாடலின் இடையில் முத்து (சிம்பு) குத்தாட்டம் போடுவது வழக்கமான சிம்புவை நினைவுபடுத்தினாலும் கதையுடன் பொருந்தி வருகிறது. பாடலில் ஒரு பெரிய குறை தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை.

சமீபத்தில் பூமணியின் வெக்கை நாவல் அசுரன் என்ற பெயரில் படமாக வெளிவந்தது. தற்போது ஐந்து நெருப்பு நாவல் வெந்து தணிந்தது காடாக வெளிவந்துள்ளது. தமிழ் சினிமா ஜெயகாந்தன் காலத்திற்கு பின் தற்போது தொடர்சியாக இலக்கிய ஆளுமைகளின் கீழ் உட்படுவது மிக ஆரோக்கியமான போக்கை காட்டுகிறது.

Lakshmana Samy

அன்புள்ள திவாகர்,

வன்மம் நிறைந்த விமர்சனங்கள் ஒரு பகுதி. இன்னொரு பகுதி அவசர அவசரமாக எதையாவது பார்த்து எதையாவது எழுதுவது. முந்திக்கொண்டு எழுதவேண்டும் என்னும் வெறி. பொறுமையில்லாமல் பார்ப்பதனால் எந்தப் படத்தைப் பார்த்தாலும் ’கொஞ்சம் ஸ்லோ’ ‘கத்திரி போட்டிருக்கலாம்’ என்றே எழுதுகிறார்கள். விளைவாக தமிழ் சினிமா ரசனையையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

’நானே வருவேன்’ படத்தைப் பற்றியும் அப்படி எழுதியிருந்தனர். ஒரு கச்சிதமான அழகான படம் அது. உளவியல் சார்ந்து கொஞ்சம் கவனித்திருந்தாலே அந்தப்படத்தை புரிந்துகொண்டிருக்கலாம். ’தனுஷ் இரட்டைவேடம்’ என்றதுமே ஒரே டெம்ப்ளேட்டில் படம் பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

ஏன் இரட்டைவேடம்? அது வெறுமே ஸ்டார் படம் என்பதனால் அல்ல. அவர்கள் சகோதரர்கள் என்பதனால். ஒருவருக்குள் இருப்பது இன்னொருவருக்குள்ளும் இருக்கிறது என்பதுதான் படம். சாந்தமான கதாபாத்திரத்தின் ஏதோ ஓர் ஆழம்தான் அந்த சகோதரன்.

இந்த பொன்னியின் செல்வன் பேரலையில்கூட குறிப்பிடத்தக்க அளவு திரையரங்குகளில் வெந்து தணிந்தது காடு நீடிக்கிறது. நாம் சாமானிய ரசிகர்களை நம்பலாம், அவர்கள் கைவிடவே மாட்டார்கள் என்பதையே வெந்து தணிந்தது காடு எனக்குக் கற்பித்தது. அந்த வெற்றி அளித்த நம்பிக்கை ஒரு பரிசு. (பணமும்தான்)

ஜெ

முந்தைய கட்டுரைஇசைரசனை வகுப்பு – கடிதம்
அடுத்த கட்டுரைஒரு விமர்சகனுக்காகக் காத்திருத்தல்