இணையத்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநர் தன் அம்மாவுக்கு தினசரி வெண்முரசு வாசித்துக் காண்பிப்பதைக் கண்டேன். என்ன ஒரு அற்புதமான விஷயம் என்னும் எண்ணம் ஏற்பட்டது. ஒரு அம்மாவுக்கும் மகனுக்கும் இடையே ஆழமான உறவு உருவாக இதுபோல ஒரு விஷயம் வேறு கிடையாது.
நான் ஒவ்வொரு நாளும் என் பிள்ளைகளுக்கு வெண்முரசு கதையைச் சொல்லிவருகிறேன். பன்னிருபடைக்களம் வந்துவிட்டேன். ஒவ்வொரு நாளையும் சுவாரசியமாகக் குழந்தைகளுடன் கழிக்க இது மிகச்சிறந்த வழியாக இருக்கிறது. இல்லாவிட்டால் டிவி பார்க்கவேண்டும். ஆளுக்கொரு திசையில் இருந்து அதைப் பார்க்கவேண்டும். அல்லது படிப்பு பற்றி பேச்சு வரும். அது பிள்ளைகளுக்கு எல்லா மனநிலையையும் டல் ஆக்கிவிடும்.
இன்றைக்கு குழந்தைகள் டிவி, கம்ப்யூட்டர் கேம்ஸ் என்று போய்விடாமல் தடுப்பதுதான் மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. அதற்கு இந்தமாதிரி கதையும் அதன் வழியாக உருவாகும் உறவும் மிக அவசியம் என்று எனக்கு தோன்றுகிறது.
ராமசுந்தரம்
***
அன்புள்ள ஜெ
வெண்முரசு முடிந்துவிட்டது, நீங்கள் சென்றுவிட்டீர்கள். நான் இன்னும் அதற்குள்தான் இருக்கிறேன். நாள்தோறும் வெண்முரசு படித்து 2021 ல் முடித்தேன். ஆனால் இப்போது மீண்டும் வெய்யோன் வரை புத்தகத்தில் படிக்கும்போதுதான் இது உண்மையில் எவ்வளவு பெரிய ஒரு சாதனை என்று புரிகிறது. அப்போது கதையோட்டமே முக்கியமாக இருந்தது. இப்போதுதான் டீடெயிலிங்குக்குள் செல்கிறேன். எவ்வளவு தகவல்கள். தசபுஷ்பம் என்றால் என்ன, அஷ்டமங்கலம் என்றால் என்ன. எவ்வளவு நுணுக்கமான செய்திகள். அதேபோல பேச்சில் எவ்வளவு அற்புதமான மன அவதானிப்புகள். மனுஷமனம் எப்படியெல்லாம் ஓடும் என்பதை இதைப்போல இவ்வளவு நுட்பமாகச் சொன்ன ஒரு தமிழ்ப்படைப்பும் இல்லை. இதை வாசித்தபின் எல்லாமே சின்னப்பிள்ளை விளையாட்டாகத் தோன்றுகிறது.
ஆர். கே.உமாபதி
வெண்முரசு – கல்பொருசிறுநுரை (25) வாங்க