நத்தையின் பாதை வாங்க
நத்தையின் பாதையை இளவயதில் அமர்ந்து பார்ப்பேன். மழைபெய்தபின் அவை கிளம்பி வருகின்றன. ஈரமான நிலத்தில் உடலை நகர்த்திச் செல்கின்றன. ஒளி ஊடுருவும் இரு உணர்கொம்புகள் அசைய, தங்களுக்கான காலத்தில் விரைகின்றன. அவற்றுக்குப் பின்னால் ஈரத்தில் டீசலால் கோடிழுத்ததுபோல் ஓர் ஒளிர்தடம். அதில் தோன்றி மறையும் வானவில் வண்ணங்கள். சென்றால் அவ்வண்ணம் ஓர் ஒளித்தடம் விட்டுச் செல்லவேண்டும் என்று நான் கல்லூரிக்காலத்தில் ஒரு கவிதையில் எழுதினேன்.
விகடன் தடம் இதழ் தொடங்கப்பட்ட போது நான் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. இலக்கிய அழகியல் சார்ந்த கட்டுரைகள் இவை. இலக்கியத்தின் அழகியல் வரலாறு தத்துவம் அரசியல் ஆகிய களங்களில் ஊடாடி எப்படியெல்லாம் உருமாறி புதிய வடிவமும் வண்ணமும் கொள்கின்றது என்பதை இவை பேசுகின்றன.
இலக்கியம் விந்தையானதொரு கலை. முதன்மையாக அது கலையென நிலைகொள்கிறது. எது கற்பனையை தன் ஊடகமாக கொண்டுள்ளதோ அது கலை. ஆனால் இலக்கியமென்னும் கலை அறிவின் அனைத்துக் கிளைகளையும் தொட்டு விரிவதும்கூட. ஆகவே அது ஓர் அறிவுத்துறையாகவும் நிலைகொள்கிறது. ஆகவே அது பிற கலைகள் எவற்றுக்கும் இல்லாத விரிவை அடையமுடிகிறது. பிற கலைகளைப்போல் அன்றி நேரடியாகவே சமூக உருவாக்கத்தில், அரசியலில் பங்கெடுக்க முடிகிறது.
அந்த ஊடாட்டத்தின் சில புள்ளிகளை இக்கட்டுரைகள் தொட்டுப் பேசுகின்றன. பெரும்பாலும் சிந்தனைக்குரிய சில திறப்புகளை உருவாக்குவதை, சில வினாக்களை முன்வைப்பதை மட்டுமே செய்கின்றன. இலக்கியம் எழுதுவது, வாசிப்பதனால் மட்டுமல்ல தொடர்ச்சியான விவாதத்தாலும் நிலைகொள்ளவேண்டிய ஒன்று. இலக்கியத்தை அதன் வெவ்வேறு களங்களை முன்வைத்து விவாதிக்கும் இக்கட்டுரைகள் இலக்கியத்தை ஓர் அறிவியக்கமாக நிலைநிறுத்தவும் அதன் கலைப்பரப்பை விரிவாக்கவும் முயல்பவை.
இந்நூலை என் மதிப்பிற்குரிய நண்பர் டாக்டர் ரவி [மதுரை] அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.
ஜெ