அன்புள்ள ஜெ
டேனியல் பூர், வில்லியம் மில்லர் போன்ற கட்டுரைகளின் வரிசையில் ஒரு மகத்தான விக்கி கட்டுரை கிருபா சத்தியநாதன். நான் அங்கிங்கே உதிரிச்செய்திகளாகவே வாசித்திருக்கிறேன். அந்தக்கட்டுரையில் இருந்து போதகர் சத்தியநாதன் குடும்பத்தின் வெவ்வேறு ஆளுமைகளை வாசித்தேன். சத்தியநாதன், அவர் மனைவி அன்னா சத்தியநாதன், அவர் மகன் சாமுவேல் சத்தியநாதன், அவருடைய இரு மனைவிகளான கிருபா சத்தியநாதன், கமலா சத்தியநாதன், அவர்கள் நடத்திய பத்திரிகை என்று தொட்டுத்தொட்டுச் செல்லும் ஆறு கட்டுரைகளையும் வாசித்து முடிக்க இரவு மூன்றுமணி ஆகியது. அவ்வளவு உசாத்துணைகளும் இருந்தன. கிருபை பெற்ற குடும்பம் என நினைத்துக்கொண்டேன்.
டேவிட் தேவாசீர்வாதம்
*
அன்புள்ள டேவிட்
தமிழகப் பண்பாட்டுக்குப் பெருங்கொடை ஆற்றிய இரண்டு கிறிஸ்தவக் குடும்பங்கள் உண்டு. அதிலொன்று போதகர் சத்தியநாதனின் குடும்பம். தமிழ்விக்கி போன்ற ஓர் அமைப்பு, அறிஞர்களின் மேற்பார்வையில் இப்படிப்பட்ட பதிவுகளை உருவாக்கினால் மட்டுமே அவர்கள் கவனம்பெறுவார்கள். இனிமேல் ஒருவேளை நிறையவே எழுதப்படலாம்.
ஜெ