நாரயணகுருகுல துறவியர்

அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் ஊட்டி காவிய முகாமில் அதைத் துவக்கி வைத்து பேசும் ஒரு துறவியின் படத்தை வெளியிட்டிருந்தீர்கள். அவர் யார்? அவரைப் பற்றிய எந்தக் குறிப்பும் கட்டுரைகளில் இல்லையே?

ராம் சுதாகர்

அன்புள்ள ராம் சுதாகர்

முகாமை தொடக்கிவைத்துப் பேசியவரின் பெயர் சுவாமி வியாசப்பிரசாத்,. நித்ய சைதன்ய யதியின் மாணவர்.

சுவாமி வியாசப்பிரசாத்

சுவாமி வியாசப்பிரசாத் ஊட்டியிலேயே உள்ள உலகப்புகழ்பெற்ற சர்வதேசப்பள்ளியான லாரன்ஸ் பள்ளியில் பயின்றவர் . மேலைத்தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நித்யாவை ஆய்வுக்காக சந்திக்க வந்தவர் பின்னர் துறவியானார். அமெரிக்கா,ஆஸ்திரேலியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பல்வேறு பல்கலைகளில் வருகைப்பேரசிரியராக இருந்திருக்கிறார். மேலைத்தத்துவத்தில் இன்று இந்தியாவில் வாழும் பேரரறிஞர்களில் ஒருவர். பழங்கால தத்துவம் முதல் இன்றைய பின் நவீனத்துவ தத்துவம் வரை கற்று சீராக உரையாடக்கூடியவர்

அவரை ஒரு நல்ல தத்துவ அறிமுக வகுப்பு நடத்தச்சொன்னாலென்ன என்று நண்பர்கள் கேட்டார்கள்.. என்ன சிக்கல் என்றால் அவருக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும், தமிழோ அவரது தாய்மொழியான மலையாளமோ தெரியாது- லாரன்ஸ் பள்ளியின் கொடை அது. அன்றுகூட எவரிடமும் சரியாகப்பேசமுடியாததைப் பற்றி மனக்குறையுடன் சொல்லிக்கொண்டிருந்தார்.

லாரன்ஸ் பள்ளி குருகுலத்திற்கு கீழே உள்ளது.. சுவாமி மாணவராக அப்பகுதியில் உலவிய நாட்களில் பலமுறை நடராஜ குருவை அங்கே கண்டிருக்கிறார், ஆனால் அவர் யாரென அப்போது தெரியாது. பின்னர்தான் நித்யா அறிமுகம் கிடைத்தது என்றார்.

அன்று அவர் பேசியபோது மிகச்சுருக்கமாக ஓரிரு சொற்களே பேசினார்.நடராஜ குருவின் முனைவர் பட்ட ஆய்வேடு,கல்வி குறித்தது. சார்போன் பல்கலையில்உலகப்புகழ்பெற்ற தத்துவமேதை ஹென்றி பெர்க்ஸன் அவருக்கு வழிகாட்டியாக இருந்தார். யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற அந்த ஆய்வேட்டின் சிந்தனைகளை நீட்டிப் பின்னர் சிம்பனி ஆஃப் வேல்யூஸ் என்ற பேரில் நடராஜகுரு எழுதினார்

அதில் கல்வி என்பது,தத்துவம்-இலக்கியம்- கலைகள்- அறிவியல் ஆகிய நான்கும் சரியாக கலந்தவிதத்தில் இருந்தாகவேண்டும் என்கிறார் நடராஜ குரு. அதாவது அறிவியலோ தத்துவமோ இலக்கியமோ ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் கற்பிக்கப்பட்டால் முழுமை நோக்கிச் செல்லாது. ஒன்றின் போதாமையை இன்னொன்று நிரப்பும். அத்தகைய ஒரு ஞானத்தின் கூட்டு நடனமாக உங்கள் முகாம் அமையட்டும் என்று வியாசப்பிரசாத் வாழ்த்தினார்.

குருகுலத்தில் சமையல்வேலைகளையும் பிற வேலைகளையும் செய்து, வந்தவர்களுக்குப் பணிவிடையும் செய்தவர் சுவாமி ராஜீவ் கிருஷ்ணா. 16 வருடம் முறையாகக் கதகளி கற்றுப் புகழ்மிக்க கதகளி கலைஞராக இருந்தவர். காசி வித்யாபீடத்தில் சம்ஸ்கிருதத்தில் முதுகலை பட்டம் பெற்று மாகி கல்லூரியில் சம்ஸ்கிருத சிறப்புப் பேராசிரியராகப் பணி புரிகிறார். நித்ய சைதன்ய யதியை அவர் சில கூட்டங்களில் மட்டுமே பார்த்திருக்கிறார். இன்றைய குரு முனி நாராயண பிரசாத்திடமிருந்து துறவு பெற்றவர். துறவுக்குப்பின் மேடையில் தொழில்முறையில்ஆடுவதில்லை.

குருகுலம்,சுவாமி தன்மயா [ டாக்டர் தம்பான் ] அவர்களின் பொறுப்பில் உள்ளது. அவர் அலோபதி மருத்துவராக இருந்து துறவி ஆனவர். புகழ்மிக்க மருத்துவர். இப்போது இந்திய மருத்துவத்தில் ஆராய்ச்சியாளர். இந்திய மருத்துவமுறைகளை அமைப்புசார்ந்ந்து திரட்ட தேசிய அளவில் பணியாற்றி வருகிறார். ஆகவே அனேகமாக அவர் ஊட்டியில்இருப்பதில்லை. அன்று ஹைதராபாதில் ஒரு கருத்தரங்கில் இருந்தார். வியாசப்பிரசாத் தற்காலிகமாக அங்கே இருக்கிறார். தன்மயா சுவாமி கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப முகாமுக்காக ராஜீவ் கிருஷ்ணா அங்கே தங்கியிருந்தார்.

ஜெ

சுவாமி ராஜீவ் கிருஷ்ணாவின் கதகளியை விஜயராகவன் படமாக்கியுள்ளார். சுட்டிகள் இங்கே:

முந்தைய கட்டுரைபத்மநாபனின் செல்வம்- மேலும் விளக்கம்
அடுத்த கட்டுரைசங்கப்பாடல் நவீனவாசிப்புகள்