இசைரசனை முகாம், கடிதம்

அன்புள்ள ஜெ,

நலம். மேற்கத்திய இசை பயிற்சி முகாம் ஏற்பாடு செய்தமைக்கு நன்றி. அது ஒரு நல்ல அனுபவம். இசையை வெறும் இசையாக கேட்டு இரசித்துள்ளேன், பெரும்பாலும் நம் நாட்டு இசையை மட்டுமே அதிகம் கேட்பேன்.

ஆனால் இசையின் சாராம்சத்தை இப்போது தான் புரிந்து கொள்ள முயல்கிறேன். இசையிலும் கதை நடை உண்டு, இசையும் கதை சொல்லும் என்பதை அழகாக விளக்கினீர்கள்.

முதல் நாள் காலை 

மேற்கத்திய இசைக்கலைஞர்கள் பற்றிய ஓர் அறிமுகம், மிக அழகாக விவரிக்கப்பட்டது. பின்னர் பீத்தோவனின் புகழ்பெற்ற 5 வது சிம்பொனி. அதில் உள்ள ஒவ்வொரு மூவ்மெண்ட்டும் மிக அருமையாக விவரிக்கபட்டு பின் அது ஒலிக்கப்பட்டது.முன்னரே அதை கேட்டு இருந்தாலும் இந்த ஒரு கோணத்தில் அதை கண்டதில்லை.

பின்னர் மாலை பீத்தோவனின் 6வது சிம்பொனி, முதல் மூவ்மெண்ட் மெலடியில் தொடங்கி பின் கடைசி மூவ்மெண்ட் ஓர் இயற்கை புயல் கொந்தளிப்பு அதன் பின் வரக்கூடிய அமைதி , நன்றி அனைத்தையும் கண் முன் கற்பனை செய்ய முடிந்தது.

இரண்டாம் நாள்:

3 ஆம் சிம்பொனியில் தொடங்கியது.ஒவ்வொரு இசை வாத்தியமும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தை விவரித்தது. அவ்வளவு துல்லியமாக இசையை அணுகி அதன் சாராம்சத்தை உணர்ந்தோம்.

மாலை: 7வது சிம்பொனியுடன் நிறைவு பெற்றது. கிரேக்கிய கடவுளாக உருபெற்று எழுந்த இசை மிக அற்புதம்.

3வது நாள் :

9ஆம் சிம்பொனி, ஒரு மிக பெரிய தரிசனம். முதல் மூவ்மெண்டில் குழப்பமும் நிலை கொள்ளாமையும், அடுத்த மூவ்மெண்களில் ஓர் அழகிய அனுபவமும், கடைசி மூவ்மெண்டில் சந்தோஷமும் கொண்டாட்டமும் நம்மை இன்னும் அதிக உற்சாகம் கொள்ளும் அளவிற்கு கொண்டு சென்றது.

இசை என்பது எப்படி கேட்க வேண்டும், அதை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்று மிக அழகாக கூறப்பட்டு இருந்தது.

மூன்று நாட்கள் சென்றதே தெரியாமல் நம்மை இசையின் உள்ளேயே வைத்து ஓர் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தது.

இதே போல மேலும் அடுத்தக்கட்ட முகாம் நடத்துவதற்கு வாழ்த்துக்கள். உங்களின் இந்த முகாமினால் மேற்கத்திய இசையில் நாட்டம் கொள்ள விரும்பும் என்னை போன்றவர்களுக்கு இது ஓர் சிறந்த அனுபவமாக அமையும். அடுத்த முகாமை இன்னும் ஆர்வமுடன் எதிர்பார்கிறோம்.

நன்றி,

ஷர்மிளா.

முந்தைய கட்டுரைஎழுத்தறிவித்தல் நிறைவு
அடுத்த கட்டுரைஅறுபது, இரு கடிதங்கள்