முதற்காலடி

திசைகளின் நடுவே வாங்க

திசைகளின் நடுவே மின்னூல் வாங்க

திசைகளின் நடுவே என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. 1990ல் திருவண்ணாமலையில் நடந்த கலை இலக்கிய இரவில் நண்பர் பவா செல்லதுரை எனக்கு அன்னம் அகரம் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் மீராவை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது என்னுடைய புகழ் பெற்ற சிறுகதைகள் வெளியாகிவிட்டிருந்தன. மீரா ஒரு சிறுகதைத்தொகுப்பு வெளியிடும் எண்ணத்தை என்னிடம் சொன்னார்.

என்னிடம் எங்கும் பிரசுரமாகாத சிறுகதைகள் பல இருந்தன. ஏனெனில் அன்று நான் சிற்றிதழ்களில் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தேன். சிற்றிதழ்களில் பக்க வரையறை இருந்தது. நீளமான கதைகளை வெளியிட இதழ்கள் இல்லை. மும்மாத இதழ்கள் மட்டுமே அன்று வந்துகொண்டிருந்தன. அவையும் ஓர் இதழிலிருந்து இன்னொரு இதழுக்கு இடையே பலமாத கால இடைவெளிகள் விடுவது வழக்கமாக இருந்தது. சிறுகதை சற்று நீண்டுவிட்டால் அதைக் குறுநாவல் என்று பெயர் சூட்டி கணையாழி குறுநாவல் போட்டிக்கு அனுப்புவது அன்றைய ஒரே வழி. கணையாழி ஆண்டுக்கு பன்னிரண்டு குறுநாவல்களை தி.ஜானகிராமன் நினைவு குறுநாவல் போட்டி என்னும் திட்டத்தின் கீழ் வெளியிட்டு வந்தது. என்னுடைய பல குறுநாவல்கள் அதில் வெளிவந்தன.

கையிலிருந்த கதைகளுடன் பிரசுரமான கதைகளையும் தொகுத்து மீராவுக்கு அனுப்பி வைத்தேன். மீரா அவற்றில் பலகதைகளை மீண்டும் படித்துவிட்டு உணர்ச்சிகரமாக எனக்கொரு நீண்ட கடிதம் எழுதியிருந்தார். அகரம் பதிப்பகத்தில் பிழை பார்த்துக் கொண்டிருந்த சுந்தர பாண்டியன் என்பவர் கதைகளைப்பற்றி மிகவும் உயர்வான கருத்தை என்னிடம் சொன்னார்.

தொகுதி வெளிவந்ததும் மிகப்பெரிய அளவில் ஒரு கவனம் அதற்கு உருவாயிற்று. மிக அரிதாகவே நம் சூழலில் அவ்வாறு ஒரு முதல் சிறுகதைத்தொகுதி இலக்கிய கவனத்தைப் பெறுகிறது. எனது தலைமுறையில் கோணங்கியின் மதினிமார்களின் கதை, என்னுடைய திசைகளின் நடுவே என இரு தொகுதிகளுக்கு மட்டுமே அவ்வாறு ஒரு கவனம் அமைந்தது. அத்தொகுதியில் அமைந்த பல கதைகள் ஏற்கனவே புகழ் பெற்றிருந்தன. ‘திசைகளின் நடுவே’ காலச்சுவடு ஆண்டு மலரில் வெளிவந்தது. ‘படுகை,’ ‘போதி’ ஆகியவை நிகழ் இதழில், ‘மாடன் மோட்சம்’ பொன் விஜயன் நடத்தி வந்த புதிய நம்பிக்கை இதழில் வெளிவந்தன. ‘ஜகன்மித்யை’ கோமல் சுவாமிநாதனின் சுபமங்களாவில் வெளிவந்தது. அவை வெளிவந்த ஆண்டுகளில் தமிழ் இலக்கியச் சூழலில் முதன்மை விவாதத்திற்குரியவையாக அக்கதைகள் அமைந்திருந்தன. இன்று முப்பதாண்டுகளுக்குப்பிறகு அவற்றில் பல கதைகள் அதே வீச்சுடன் இருப்பதைக்காண முடிகிறது.

சென்ற மே 31ம் தேதி கொலம்பியா பல்கலைக்கழக பேராசியரும் தமிழாய்வாளருமான டெய்லர் ரிச்சர்டை நியூ ஜெர்சியில் சந்தித்தபோது படுகை கதையைப்பற்றி வியந்து பரவசமாகப் பேசிக்கொண்டிருந்தார். அதன் மூன்றடுக்கு கதை சொல்லும்முறை தமிழ் பண்பாட்டின் மூன்று அடுக்குகளாகவே அவருக்குத் தெரிந்தது. எழுதப்பட்ட காலத்தைவிட ‘படுகை,’ ‘மாடன் மோட்சம்’ஆகியவை மேலும் வளர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. ஜெயலலிதா நாட்டுப்புற தெய்வங்களுக்கு ஊன்கொடையை தடை செய்தபோது மாடன் மோட்சம் மிகத்தீவிரமான ஒரு மறுவாசிப்புக்குள்ளாகியது. இன்று அதன் உள்ளடுக்குகள் மேலும் அரசியல் அழுத்தத்துடன் வாசிக்கப்படுகின்றன.

‘திசைகளின் நடுவே’ ‘போதி’ போன்ற கதைகள் இன்றைய அரசியல் சூழலுக்கு மேலும் தீவிரமான பொருள் தருபவை என்று தான் தோன்றுகிறது. அண்மையில் ‘மாடன் மோட்சத்’தை மொழியாக்கம் செய்து மலையாள மனோரமா இதழுக்கு அனுப்பினேன். அவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு கதையை என்னிடம் கேட்டு வாங்கிப்போடுவதுண்டு. மலையாள மனோரமாவின் ஆசிரியர் நண்பர் கே.சி.நாராயணன் அக்கதையை வெளியிடமுடியாது என்று எனக்குச் சொன்னார். இன்றைய அரசியல் சூழலில் மலையாள மனோரமா போன்ற ஒரு கிறித்தவ பத்திரிக்கை மீது கடுமையான மதவாத அழுத்தம் இருக்கையில் இந்துத்துவ மயமாதலை எதிர்க்கும் அந்தக் கதையை பிரசுரிக்க இயலாது, வேறு கதையை அனுப்பமுடியுமா என்று கேட்டிருந்தார். எனக்கு அதற்குப் பொழுதில்லை. கைப்பிரதியாகவே அந்தக்கதை எஞ்சியிருக்கிறது. இடதுசாரி இதழில் அதை வெளியிட எனக்கு உடன்பாடில்லை. அது நடுநிலைக்கதையாகவே இருக்கவேண்டும். இன்னொரு அரசியலுக்கான கருவியாக விடக்கூடாது என்று எண்ணியிருக்கிறேன்.

திசைகளின் நடுவே தொகுப்பிலுள்ள பல கதைகள் ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. மிக அண்மையில் ஆங்கிலத்தில் மீண்டும் மொழியாக்கம் செய்யப்பட்ட ‘மாடன் மோட்சம்’ மிகத்தீவிரமான வாசிப்புக்குள்ளாகியது. இக்கதைகளை நான் கடந்துவந்த பாதை என நினைக்கவில்லை. அவை நான் வாழ்ந்த களங்கள். அவற்றை நான் கடந்து வரவில்லை. அங்கு மேலும் மேலும் புதியவற்றை தேடிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லலாம்.

இத்தொகுதியை முதலில் வெளியிட்ட அன்னம் பதிப்பகம் மீராவுக்கும் அதற்கு உதவிய பவா செல்லதுரைக்கும் மறுபதிப்புகளை வெளியிட்ட நண்பர்களுக்கும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி.

ஜெ

14.07.2022

குமரித்துறைவி வாங்க
வான் நெசவு சிறூகதைத்தொகுப்பு வாங்க
பத்துலட்சம் காலடிகள் சிறுகதைத்தொகுப்பு வாங்க
தங்கப்புத்தகம் சிறுகதைத்தொகுப்பு வாங்க
ஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத்தொகுப்பு வாங்க
வாசிப்பின் வழிகள் வாங்க
ஆனையில்லா சிறுகதைத்தொகுப்பு வாங்க
ஐந்து நெருப்பு சிறுகதைத்தொகுப்பு வாங்க
தேவி சிறுகதைத்தொகுப்பு வாங்க
அந்த முகில் இந்த முகில் – நாவல் வாங்க
எழுகதிர் சிறுகதைத்தொகுப்பு வாங்க
முதுநாவல் சிறுகதைத்தொகுப்பு வாங்க
பொலிவதும் கலைவதும் சிறுகதைத்தொகுப்பு வாங்க
பின்தொடரும் நிழலின் குரல் அச்சுநூல் வாங்க
இருகலைஞர்கள் சிறுகதைத்தொகுப்பு வாங்க
மலை பூத்தபோது சிறுகதைத்தொகுப்பு வாங்க
இலக்கியத்தின் நுழைவாயிலில் அச்சு நூல் வாங்க
நத்தையின் பாதை அச்சு நூல் வாங்க
மைத்ரி நாவல் வாங்க
ஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்க
இந்துமெய்மை ஆன்லைனில் வாங்க
சாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்க
வணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்க
ஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்க
கதாநாயகி ஆன்லைனில் வாங்க
ஒருபாலுறவு ஆன்லைனில் வாங்க
அனல் காற்று ஆன்லைனில் வாங்க
வெண்முரசு – நீர்ச்சுடர் (23) வாங்க
ஞானி ஆன்லைனில் வாங்க
நான்காவது கொலை ஆன்லைனில் வாங்க
விசும்பு ஆன்லைனில் வாங்க
வெண்முரசு – களிற்றியானை நிரை (24) வாங்க
முந்தைய கட்டுரைஏ.பெரியதம்பிப் பிள்ளை -ஆசிரியர்களும் மாணவர்களும்
அடுத்த கட்டுரைஓராண்டு- ரம்யா