கௌதம் மேனன், துருவநட்சத்திரம், மீட்சி
அன்புள்ள ஜெ
கௌதம் மேனன் மீட்சி பற்றி எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். சினிமா ஒருபக்கம் இருக்கட்டும். நிஜவாழ்க்கையில் இதைப் பார்க்கலாம். நமக்கு ஒரு வீழ்ச்சி என்றால் அனுதாபம் காட்டுவார்கள். நம்மைப்பற்றி நல்லதாகப் பேசுவார்கள். ஆனால் நாம் மேலே மீண்டு வர ஆரம்பித்தால் ஒட்டுமொத்தச் சொந்தமும் நட்பும் சேர்ந்து நம்மை மிதித்து கீழேதள்ள முயல்வார்கள். இது என் அனுபவம். அதை மீறி மேலே வந்தால் நாம் மீளவே இல்லை, அது பாவலா என்பார்கள். அதுவும் கடந்தால் எல்லாம் லக் என்பார்கள்.
ஏன் என்று சிந்தனை செய்திருக்கிறேன். நாம் வீழ்ச்சி அடையும்போது மற்றவர்களின் ஈகோ திருப்தி அடைகிறது. ஆனால் நாம் மேலே வரும்போது மற்றவர்களுக்கு நம் ஆற்றல் தெரிகிறது. அந்த ஆற்றல் அவர்களிடமில்லை என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் சீற்றம் அடைவது அதனால்தான்.
நான் கற்றுக்கொண்டது ஒன்று உண்டு. அவர்களை பொருட்படுத்தி வருத்தப்படக்கூடாது. அவர்களின் அடிகளை சவாலாக எடுத்துக்கொள்ளவும் கூடாது. ஏனென்றால் அவர்களை நாம் நினைத்தாலே நாம் கீழே போக ஆரம்பிப்போம். நாம் நம் வேலையில் ஒரு நுட்பத்தை கண்டுபிடித்து அதன்வழியாகத்தான் மீண்டு வருவோம். அந்த நுட்பத்தை அப்படியே வளர்க்க மட்டும்தான் முயலவேண்டும்.
அது ஒரு சினிமாக்கட்டுரை அல்ல. ஆழமான ஒரு வாழ்வியல் கட்டுரை.
அன்புள்ள
சிவா.
அன்புள்ள ஜெ,
நீங்கள் இங்குள்ள புரிந்துகொள்ளும் திறமையின்மை பற்றி அடிக்கடி எழுதி வருகிறீர்கள். நான் அதை கண்கூடாகவே பார்த்தேன். வெந்துதணிந்தது காடு வந்த நாட்களில் ஒருவர் ‘ஸ்குரூவுக்கு மிசின் என்ன செய்யுதுன்னு தெரியாதுங்கிறான். மிசினுக்கு மட்டும் அது என்ன செய்யுதுன்னு தெரியுமா?’ என்று இளித்தபடி கேட்டான்.
நான் அந்த வசனத்தை எடுத்துக் காட்டினேன். ‘நாம் இந்த மிஷினில் ஒரு ஸ்க்ரூ. ஸ்க்ரூவாலே மிஷின் என்ன செய்யுதுன்னு தெரிஞ்சுகிட முடியாது’ இதுதான் வசனம். இதில் ‘நாம் என்கிற ஸ்குரூவாலே நாம மாட்டியிருக்கிற இந்த ஒட்டுமொத்த மிஷினை தெரிஞ்சுகிட முடியாது’ என்பது அர்த்தம். ஸ்க்ரூவாகிய நாம் என்று சொல்லியிருந்தால் இவன்களுக்கு புரிந்திருக்கும் (அப்பவும் சந்தேகம்தான்) அந்த உவமைகூட புகழ்பெற்ற ஆங்கில பழமொழியை அடியொற்றியது என்று ஒருவருக்கும் தெரியவில்லை.
கொஞ்சநாள் முன்னால் சாவார்க்கர் சிறையில் இருக்கையில் சிறைக்குள் வரும் புல்புல் பறவையில் ஏறி அந்தமானில் இருந்து இந்தியா வந்து செல்வார் என்று கர்நாடக பாடப்புத்தகத்தில் ஒரு வரி வந்தபோது இங்கே ஒரே கேலி கிண்டல். மகாபெரிய அறிவாளிகள் ’புல்புல் பறவைமேல் மனிதன் ஏறமுடியுமா?” என்று கட்டுரைகள் எல்லாம் எழுதினார்கள். புல்புல் சுட்டுவிரல் சைஸ் உள்ள குருவி. உலகிலுள்ள எந்தப் பறவைமேலும் மனிதர்கள் ஏறமுடியாது. 2.0 சிட்டி ஜூனியர் ஏறலாம்.
அதை ஒரு கவித்துவமாக எழுதியிருக்கிறார்கள் என்றுகூட இவர்களுக்கு புரியவில்லை. புல்புல் மேலே மனுஷன் ஏறினானாம் ஹிஹி என்று ஒரு சிரிப்பு. உண்மையிலேயே ஆச்சரியம். இவ்வளவுதான் கற்பனை. இவ்வளவுதான் நகைச்சுவை உணர்ச்சி. நம் கல்விமுறையிலேயே இந்தச் சிக்கல் இருக்கிறது. எதையுமே கற்பனை செய்ய தெரியாது. இவர்களிடம் பேச நேர்வதுபோல மண்டையிடி வேறில்லை.
ஆர். சந்தானகோபாலன்