கௌதம் மேனன், துருவநட்சத்திரம், மீட்சி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு 

வணக்கம். ‘வெந்து தணிந்தது காடுதிரைப்படத்துக்கு நான் எழுதியிருந்த முகநூல் குறிப்பை தாங்கள் தங்கள் இணையதளத்தில் பகிரிந்திருந்திருக்கிறீர்கள். அதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் பெரிதும்  வியந்து மதிக்கும் ஆளுமைகளில் ஒருவரான தங்களிடமிருந்து கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரத்தை என் வாழ்வின் பொக்கிஷங்களில் ஒன்றாகக் கருதுகிறேன்.மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி

வெ..காபடம் குறித்து தங்களுக்கு முன்பே எழுத நினைத்தேன். ஒரு வெகுஜன சினிமா ரசிகனாக கெளதம் மீது எனக்குக் கொஞ்சம் பிரியம் உண்டு. சொல்லப்போனால் அண்மைய ஆண்டுகளில் மிக அதிகமாக ட்ரால் செய்யப்பட்ட அவருடைய படங்களையும் எனக்குப் பிடித்தே இருந்தன. அதே நேரம் அவர் மீது முன்வைக்கப்பட்ட சில விமர்சனங்களில் நியாயம் இருந்ததாகப் பட்டது. அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் தலையாயது அவர் போலிஸ் அல்லது காதல் கதை இரண்டில் ஒன்றை மட்டுமே மாற்றி மாற்றி எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பது. எனவே அவர் உங்களுடன் இணைந்திருக்கிறார் அதுவும் உங்கள் கதையைப் படமாக்க இருக்கிறார் என்று தகவலை கேள்விப்பட்டதும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்என்று போட்டுக்கொள்வதில் தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு ஒரு பேருவகை உண்டு. கெளதமும் தன்னுடைய எல்லா படங்களிலும் அதையே செய்திருக்கிறார். அந்தச் சூழலில் அவர் உங்களுடன் இணைந்தது எனக்கு ஆச்சரியம். அந்த ஆச்சரியம் இப்போது மகிழ்ச்சியாக, திருப்தியாக மாறியிருக்கிறது.

இந்தப் படம் தொடர்பாக தாங்கள் கொடுத்த பேட்டிகள் அனைத்தையும் கண்டேன் ,குறிப்பாக கலாட்டா இணையதளத்துக்கு நீங்கள் அளித்த பேட்டியில் இந்தப் படத்தை உள்வாங்குவதற்கான சரியான மனநிலையை உருவாக்கிவிட்டீர்கள் என்று சொல்லலாம். அதைக் கண்டிருக்கவில்லை என்றால் நான் படத்தை சரியாக உள்வாங்கிக்கொண்டிருப்பேனா என்பது சந்தேகமே. இந்தப் படத்தின் மீது நீங்கள் தனிப்பட்ட அக்கறை எடுத்து ரசிகர்களிடம் பேசியதுபோல் தோன்றியது. அதை நான் மிகவும் ரசித்தேன். நான் ஊகித்திருந்ததுபோலவே படம் வெளியாகி வெற்றிச் செய்தி வந்த மறுநாள்கெளதம்  நல்ல மனிதர். அவர்   வெற்றிபெற வேண்டும்என்று நீங்கள் விரும்பியதாக எழுதியிருந்தீர்கள். அவரும் எழுத்தாளராக உங்களுக்கு முழுமையான மதிப்பும் முன்னுரிமையும் அளித்து படத்தை உருவாக்கியிருந்தார். இது உண்மையாகவே ஜெயமோகன்கெளதம் படமாக உருவாகியிருக்கிறது. படம் நெடுக வசனங்களைக்  கடந்தும் உங்களின் இருப்பை உணர முடிந்தது. இதுவும் தமிழ் சினிமாவில் மிக அரிதானதேஆனால் தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களின் பங்கு அதிகரிக்க வேண்டும் இயக்குநர்கள் நல்ல கதைகளை வெளியிலிருந்து வாங்கிப் படம் எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்போர் யாரும் அது நிகழ்ந்திருக்கும்போது குறைந்தபட்சம் அது நிகழ்ந்திருப்பதையாவது அங்கீகரிக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது.  

எப்படி இருந்தாலும் உங்கள் இருவரின் இணைப்புவெ..கா 2’, ‘வேட்டையாடு விளையாடு 2’ எனத் தொடரப்போவதில்  உங்கள் இருவர் மீதும் அபிமானம் கொண்ட எளியவனாக எனக்கு பெரும் மகிழ்ச்சி.

அடுத்து பொன்னியின் செல்வனைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்

அன்புடன்

.கோபாலகிருஷ்ணன்

அன்புள்ள கோபால கிருஷ்ணன்,

சினிமாவில் எழுத்தாளர்களின் பங்களிப்பு தேவை என்று சொல்பவர்கள் எவரும் உண்மையில் உத்தேசிப்பது தங்களுக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என்று மட்டுமேஅத்தனைபேரும் வந்து கதவை தட்டிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆகவே இன்னொரு எழுத்தாளரின் பங்கை மதிக்க அவர்களால் இயலாது. மட்டம் தட்டியே ஆகவேண்டும். அது அவர்களின் உலகம்.

நம்மவர் பொதுவாக நல்லபடம் என்று சொல்வது நேரடியாக அவர்களுக்கு உகந்த ஓர் அரசியல் செய்தியைச் சொல்லும் படத்தை மட்டுமே. உண்மையில் அவர்கள் ரசிப்பது எளிமையான ஹீரோ- வில்லன் கதையைத்தான்.வெந்து தணிந்தது காடு உயர்மட்ட போட்டியைச் சொல்லவில்லை, அடிமட்ட பூசலையே பேசுகிறது, அதில் வருபவர்கள்வில்லன்கள்அல்ல என்று படத்திலேயே சொல்லப்படுகிறது. முத்துவின் வாழ்க்கையும் கூடவே அதனுடன் ஒப்பிடத்தக்க இன்னொரு வாழ்க்கையும்தான் கதையே ஒழிய ஹீரோ பம்பாய் போய் தானும் வில்லன் ஆவது அல்ல. ஆகவே அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் விஷயங்கள் மட்டுமே படத்தில் உள்ளன. படத்தை நம் விமர்சகர்கள் பெரும்பாலும் உணரமுடியாது என எனக்கும் தெரியும். ஆகவேதான் முன்னரே அதைச் சொல்லிச் சொல்லி ரசிகர்களிடம் நிறுவினோம். அந்த உத்தி பயனளித்தமையால்தான் படம் வெற்றி அடைந்தது.

வெந்து தணிந்தது காடு படத்தில் ஓர் எழுத்தாளன் உருவாக்கக்கூடிய பல காட்சிகள் உள்ளன. தனித்து எடுத்தாலும் நுட்பமான சில உளச்சிக்கல்களை, குழப்பநிலைகளைச் சொல்லக்கூடியவை அவை. ‘கூஸ்பம்ப்தருணங்கள் அல்ல. விமர்சகர் பலர் தவறவிடலாம், அவற்றை ரசிகர்கள் சென்றடைந்துள்ளனர்.

படம் வெற்றி அடைந்து, தயாரிப்பாளரும் இயக்குநரும் நானும் அடுத்தபடத்துக்குச் சென்றுவிட்டோம். இனி இதைப்பற்றிப் பேசிப்பயனில்லை. முடிந்த கதை. வெற்றிக்கதைதான்.

நாம் இங்கே கவனிக்கவேண்டியது இங்குள்ள வன்மம் பற்றி. எழுத்தாளனாக என் மேல் காழ்ப்பை கக்கிக்கொண்டிருக்கும் பலர் உண்டு. அவர்கள் இச்சினிமா பற்றியும் கசப்பை கொட்டுகிறார்கள். அது என்னை ஒன்றும் செய்யாது. எனக்கு அவர்கள் பொருட்டும் அல்ல.

ஆனால் கௌதம் மேனன் பற்றிய கசப்பும் காழ்ப்பும், சிம்பு மீதான காழ்ப்பும் நேரடியாகவே அவர்களின் தொழிலை பாதிக்கிறது. வேண்டுமென்றே உருவாக்கப்படும் எதிர்மறை விமர்சனங்கள் சினிமாவுக்கு ஒட்டுமொத்தமாக மிகவும் தீங்கு செய்பவை. இந்தி சினிமா உலகம் அந்த வன்மப் போக்கினால் அடித்தளம் கலங்கி நின்றிருக்கிறது இன்று. அதை இங்கும் நாம் கொண்டுவந்துவிடக்கூடாது. தெலுங்கும் மலையாளமும் அவர்களின் ஒட்டுமொத்த நட்புணர்வால் மேலும் மேலும் உச்சம் தொட்டுக்கொண்டிருக்கின்றன. நம் முன்னுதாரணம் அவர்களாகவே இருக்கவேண்டும். 

ஒன்றை மட்டும் உதாரணமாகச் சொல்கிறேன். சில இதழாளர்கள் கௌதம் மேனன் வேண்டுமென்றே ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ என்னும் சரியில்லாத படத்தை எடுத்து ஒரு தயாரிப்பாளரை நடுத்தெருவில் நிறுத்தியவர் என்று  சொன்னதைக் கண்டேன். ஆனால் உண்மை என்ன? அந்த சினிமாவின் உண்மையான தயாரிப்பாளரே கௌதம் மேனன்தான். இன்னொருவருடன் கூட்டு சேர்ந்து அவர் தயாரித்த படம் அது. அந்த இன்னொருவருக்கும் அப்படத்தின் கதைநாயகனுக்கும் அதற்கு முந்தைய படம் காரணமாக பணம் சார்ந்த சிக்கல் உருவாகி, உளச்சிக்கலாக ஆகி, மோதலாகி படம் நின்றுவிட்டது. படத்தின் முழுப்பொறுப்பும் கௌதம் மேனன் மேல் விழுந்தது. ஏனென்றால் அவர் பணம் முதலீடு செய்துவிட்டார். 60 சதவீதம் முடிக்கப்பட்ட அந்த படத்தின் எஞ்சிய பகுதிகளை வாய்ஸ் ஓவர் மூலம் இணைத்து அப்படம் வெளியிடப்பட்டது. வெளியிட்டே ஆகவேண்டும், செலவிட்ட பணத்தை இழக்கமுடியாதல்லவா?

அந்தப்படம் உருவாக்கிய சிக்கல்களால் கௌதம் மேனன் அந்த தயாரிப்பாளருடன் இணைந்து தயாரித்த துருவநட்சத்திரம் படமும் நின்றுவிட, கௌதம் மிகப்பெரிய நிதிச்சிக்கலில் மாட்டினார். ஐசரி கணேஷ் உதவியால்தான் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ வெளிவந்தது. இப்போது வெந்து தணிந்தது காடு படத்தின் பொருளியல் வெற்றி வழியாகவே கௌதம் மீண்டிருக்கிறார். இப்போது துருவநட்சத்திரம் வெளிவரவிருக்கிறது.

சினிமாவில் இதெல்லாம் அடிக்கடி நிகழ்வதுதான். எவரையும் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்ட முடியாது. ஒவ்வொருவரும் வெவ்வேறு இடங்களில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். எவரும் தன்முடிவாக எதையும் செய்யமுடியாது. சினிமா என்பதே ‘ஒருங்கிணைப்பதன் கலை’தான். அந்த ஒருங்கிணைப்பு எங்கோ சிதறினால் ஒன்றன்பின் ஒன்றாக எல்லாமே சரியக்கூடும். என்ன காரணம் என்றுகூட சிலசமயம் கண்டுபிடிக்க முடியாது. அத்தகைய சரிவில் இருந்து எந்த மேதாவியும் எளிதில் தப்பமுடியாது. பல பெரிய தயாரிப்பாளர்களே சிக்கி விழுபிதுங்கிய இக்கட்டு அது. ஏதாவது ஒரு வணிகத்துடன் உங்களுக்கு தொடர்பிருந்தால் நான் சொல்வது உங்களுக்கு புரியும். ஒரு சின்ன ஓட்டல், ஒரு சின்ன கூடைக்காய்கறி வியாபாரம் கூட இந்த சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டிருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு வணிகமும் நாம் அறிந்தும் அறியாததுமான ஒரு பெரிய மக்கள்த் திரளுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.

அப்படி வாழ்க்கையின் எழுச்சி வீழ்ச்சி பற்றி கொஞ்சம் புரிதல் உள்ள ஒருவர் பெருந்தன்மை கொண்டவராகவே இருப்பார்.இப்படி சரிவில் சிக்கி, தன் தளரா முயற்சியால் அதை சந்தித்து, இறுதியில் வெற்றிகொண்டு மீளும் ஒருவர் மேல் பெரும் கரிசனமே கொண்டிருப்பார். ஏனென்றால் எவருக்கும் அது நிகழலாம். நான் வணிகமே செய்வதில்லை, என் அப்பாவின் ஆணை அது. ஆனாலும் நான் அத்தகைய சூழல்களில் இருப்பவர்கள் மேல் எப்போதும் பிரியமும் அவர்களின் முயற்சிமேல் மதிப்புமே கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்தவரை அவர்களுடன் இருப்பேன். நிபந்தனையே இல்லாமல் கூட நிற்பேன். ஒருபோதும் ஒருபோதும் அவர்களின் தோல்விகளையோ அதற்குக் காரணமான சிக்கல்களையோ கண்டு மகிழ்ச்சி அடைந்து கொண்டாடமாட்டேன். அதை வைத்து அவர்களை இழிவுசெய்வதோ, நக்கலடிப்பதோ எனக்கும் என் பரம்பரைக்கும் இழிவு சேர்க்கும் என்றே நினைப்பேன்.

நாம் இப்படி நினைக்கிறோம், ஆனால் சிலர் நேர்மாறாக அவர் அழியவேண்டும் என நினைக்கிறார்கள். வேறொன்றுக்குமாகவும் இல்லை. அவருடன் அவர்களுக்கு பகைஏதும் இல்லை. வெறுமே ஒரு குரூர திருப்திக்காக மட்டும். அதற்காக அத்தனை பொய்ச்செய்திகளை, அவதூறுகளை எழுதியிருக்கிறார்கள். ‘வெந்து தணிந்தது காடுவழியாக அவர் மீண்டு எழுந்து வந்துவிட்டதைக் கண்டு அவர்கள் அடைந்த ஏமாற்றமே சீற்றமாக மாறி அவரை சிறுமைசெய்ய அவர்களை தூண்டுகிறது. அந்தப்படம் தோல்வியடையவேண்டும் என முயன்றனர், வெற்றி என ஆனபின் அதை தோல்வி என பேசிப்பேசி காட்டிவிட முயல்கின்றனர். அவருக்கான வாய்ப்புகளை நிறுத்திவிடலாம் என்னும் நப்பாசைதான். ஆனால் சினிமாத்துறைக்கு வெற்றியும் தோல்வியும் உண்மையில் என்னென்ன என்று நன்றாகவே தெரியும்.

கௌதம் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் வழியாக ஒரு தயாரிப்பாளரை தெருவில் நிறுத்தினார் என சொல்லும் இதழாளர் எவரும் உண்மைகளை அறியாமல் சொல்லவில்லைஏனென்றால் அந்த சினிமா சார்ந்த பேச்சுவார்த்தைகள், நீதிமன்ற வழக்குகள் எல்லாம் பலகாலம் நடந்தவை. இதழ்களிலேயே வெளிவந்தவை. அனைவருமே நன்றாக அறிந்தவை. சரி, தெரியவில்லை என்றே கொள்வோம். ஒரு படம் முழுமையாக வராவிட்டால் அதன் இயக்குநர் ஏன் கடன்சுமையில் சிக்கவேண்டும், தயாரிப்பாளர் அல்லவா சிக்கிக்கொள்வார்? அதை யோசிக்க பொதுப்புத்தியே போதுமே.

எல்லாம் அனைவரும் அறிந்ததே. இருந்தும் அதை ஏன் சொல்கிறார்கள்? ஏன் வேண்டுமென்றே திரிக்கிறார்கள்? இரண்டு காரணங்கள். ஒன்று, வெவ்வேறுவகையான காழ்ப்புகள். இரண்டு, அக்காழ்ப்புகளுடன் எதிர்மறையாகப் பேசினால் மட்டுமே இங்கே கூட்டம் கூடி அவர்களைக் கவனிக்கிறது. ஹிட் கூடும்போது யூடியூப் பணம், விளம்பரப் பணம் கிடைக்கிறது. அந்தப் பணத்திற்காக உண்மையில் அவர்கள் செய்வது ஒரு கொலை. அதற்குமுன் தங்கள் மனசாட்சியை கொலைசெய்துவிட்டிருக்கிறார்கள்.

சினிமா என்று அல்ல, எந்த துறையிலும் இந்த வகையான மனநிலைகள் ஒரு சமூகத்திற்கு எவ்வகையிலும் நல்லது அல்ல. அவற்றை வளர்ப்பது நீண்டகால அளவில் அவற்றை வளர்ப்பவர்களுக்கே பெருந்தீங்கை உருவாக்குவது. குறுகிய கால தன்னலப் புத்தியால் இவற்றைச் செய்துவிட்டு தங்கள்  சொந்த வாழ்க்கையில், தங்கள் வாரிசுகளின் வாழ்க்கையில் அவற்றுக்கான விலையை கொடுக்காமல் சென்ற எவருமே இல்லை.

என் நண்பர்கள் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள், எனக்கு இந்த சினிமாவில் என்ன தனி ஈடுபாடு என்று. முழுக்க சினிமாக்காரன் ஆகிவிட்டேனா என்று. இதுதான் என் மெய்யான ஈடுபாடு. ஏன் கமல்ஹாசன் மேடைக்கு வந்து ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை பிரமோ செய்கிறார், ஏன் சிலம்பரசன் தேதி அளித்தார், ஏன் வெற்றிமாறன் உடன் நிற்கிறார் என்றால் அடிப்படையான மனிதாபிமானம் மற்றும் அறவுணர்வால்தான்.சரிவுகளில் இருந்து எழுபவருடன் உடன்நிற்பதே அறம் என்பதனால்தான். இதே உணர்வுடன் நான் வசந்தபாலனின் அடுத்த படத்துக்காக காத்திருக்கிறேன். அண்மையில் என் அறுபதாம் ஆண்டு நிறைவுக்கு பட்டீஸ்வரத்தில் வேண்டிக்கொண்டபோது வசந்தபாலனுக்காகவும் வேண்டிக்கொண்டேன். அந்த சினிமாவுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும். நண்பர்களே, மீட்சிகளை கொண்டாடுவோம், உடன் நிற்போம். மீட்சிகளில் வெளிப்படுவது மனிதனின் ஆற்றல். அந்த ஆற்றலை வாழ்த்தினால் அது நமக்குள்ளும் பெருகும். நமக்கும் வெற்றியே அமையும்.  

வெந்து தணிந்தது காடு அடைந்துள்ள இந்த வெற்றி கௌதமுக்கு மிகமிக அவசியமானது. இக்கட்டுகளில் மூழ்கி இருக்கையிலும் அவர் ஒரு சொல்கூட ஒருவரைக்கூட பழித்துச் சொல்லவில்லை. பழியை எவர் மேலும் போடவில்லை. புலம்பவில்லை.  “Ya,It happens…Nothing can be done.” அதிகபட்சம் அவர் சொல்லும் சலிப்புப்பேச்சு இதுதான். நான் மீண்டும் மீண்டும் கவனித்தது தனிமையில் பேசும்போதாவது அவர் எவரையாவது குறைசொல்கிறாரா என்றுதான். ஒரு சொல்கூட இல்லை. அனைவர் மேலும் மதிப்புடன், அவர்களின் நிலைமையை புரிந்துகொண்டு கனிவுடனேயே பேசினார். அவர் எவரையும் ஏமாற்றவில்லை. எவரிடமும் கெஞ்சவில்லை. படங்களில் நடித்து வட்டி கட்டினார். சொந்தப்பணத்தில் சிறுகச்சிறுக துருவநட்சத்திரம் படத்தை முடித்தார்.

அந்த நிமிர்வுதான் அவர்மேல் பெருமதிப்பு கொள்ளச் செய்கிறது. தோல்விச்சூழலில் வெளித்தெரிவதுதான் மனிதனின் தரம் என்பது. வெற்றிமாறனை சென்ற 13 ஆம் தேதி கொடைக்கானலில் சந்தித்தபோது இதே எண்ணத்தையே அவரும் சொன்னார். “அவரோட அந்த நிமிர்வு, எல்லாத்தையும் பொறுப்பேத்துக்கிட்டு எவரையுமே குறைசொல்லாம இருக்கிற அந்த ஃபைட்டர் ஆட்டிடியூட், அதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்” என்றார்.

இன்று இந்தப்படத்தின் வெற்றிக்குப்பின் கௌதம் மிகவும் மலர்ந்திருக்கிறார். இப்போது மும்பையில் அமர்ந்து அடுத்த மிகப்பெரிய படம் பற்றிப் பேசும்போது அவருடைய உற்சாகத்தைப் பார்க்கிறேன். சினிமாவுக்கு அப்பால் நான் அடையும் மனநிறைவு இது.

ஜெ

முந்தைய கட்டுரைமொழி, மொழிபெயர்ப்புக்காக ஒரு தளம்
அடுத்த கட்டுரைஇன்று சென்னையில் சிவரஞ்சனியும்…விமர்சனக்கூட்டம்