தாமரை, சிறப்புக்குழந்தைகள் – கடிதம்

தாமரை, குறும்படம்

‘தாமரை’ வெளியீட்டுவிழா உரை

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு

ஆவணப்பட இயக்குநரும் கவிஞருமான ரவி சுப்பிரமணியன் அவர்கள் இயக்கியதாமரைகுறும்பட வெளியீட்டு விழாவில் நீங்கள் பேசிய ஆத்மார்த்தமான உரையைக் கேட்டேன்நான்கைந்து நாட்களாக உடல்நிலை மிகவும் தொய்வுற்று எவ்விதச் சிந்தனைக்குள்ளும் அகம் ஆட்படாது சோர்வுற்றிருந்த பின்னிரவில் கேட்ட அந்த உரை, ஓர் மருந்தைப்போல என்னை மீட்டெடுத்தது

உங்களது முக்கியமான உரைகளிலெல்லாம் குரு நித்ய சைதன்ய யதியை நினைவுகூர்ந்து, அவர்பகிர்ந்த எத்தனையோ அனுபவங்களை எங்களுக்கு அளித்துக்கொண்டே இருக்கிறீர்கள். இவ்வுரையிலும் சிறப்புக் குழந்தைகள்பற்றி யதி குறிப்பிடும், “ஒரு பிறவியில் ஒரு பாவமும் செய்யாமல் வாழ்ந்து செல்லக்கூடிய வாய்ப்பு ஒரு குழந்தைக்கு அளிக்கப்படுகிறதென்றால், அது ஓர் நிறைவைச் சென்றடைகிறது. பாவம் செய்யாத ஓர் வாழ்க்கை! பிழையிழைக்காத வாழ்வு! அதற்கு உதவி செய்யவேண்டியது உனது கடமைஎன்கிற வார்த்தைகளை கண்ணீரின்றி கடக்கவே இயலவில்லை. இறையுற்ற ஓர் மனம் எத்தகு எல்லைவரை தன் உள்ளொளியை நீட்டுவிக்கும் என்பதை யதி மீளமீள மெய்ப்பித்து உணர்த்துகிறார். அக்கணத்திலிருந்து மனம் சிறப்புக் குழந்தைகள் குறித்த எனது தனிப்பட்ட வாழ்வனுபவங்களுக்குள் சென்று ஆழ்ந்தது

என் வாழ்வில் முதன்முறையாக கவிஞர் தேவதேவன் அவர்களைச் சந்தித்தபொழுது அவர், “ஒரு குழந்தை இரண்டு, மூன்று வயதில் நம்மிடம் பொம்மை கேட்கும்போது நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதே குழந்தை முப்பது வயதில் பொம்மை கேட்டால் அதன் தாய்தந்தையர்கள் என்ன செய்வார்கள்?” என்று கேட்டார். அக்கேள்வி சுமந்திருந்த ஆழம் எனக்கு அன்று அச்சமூட்டியது. எத்தனைப் பெற்றோர்கள் தங்கள் வாழ்வு முழுதும் ஈந்து அத்தகையக் குழந்தைகளை இயல்பான ஆயுள்வரை அழைத்துப் போகிறார்கள்! அதற்காக எவ்வளவு பாரங்களை அவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள்! எண்ணும்போதே மனம் நெகிழ்கிறது.

திருவண்ணாமலையில் சிறப்புக் குழந்தைகள் காப்பகம் நடத்தும் தோழி ஒருவர் அந்தப் பிள்ளைகளோடு குக்கூ காட்டுப்பள்ளிக்கு வந்திருந்தார். அவரது எண்ணங்கள் பற்றி கேட்கையில் அவர், “இந்த உலகத்தின் கடைசித் தலைமுறை குழந்தைகள் எல்லோரும் இந்தக் குழந்தைகள் போலத்தான் பிறப்பார்கள்என்றார். நாங்கள் ஒருநிமிடம் உணர்வுகலங்கி, “அய்யோ அக்கா, ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?” எனப் பதறினோம். அதற்கு அவர் நிதானமாக, “இந்தக் குழந்தைகள் கைகாட்டும் திசையைப் பாருங்கள். அங்கு செடியோ, மரமோ, ஏதாவதொரு உயிரோ இருக்கும். இயற்கை நோக்கித்தான் இவர்களது கண்கள் பார்க்கிறது; கைகள் நீள்கிறது. நான் உறுதியாக நம்புகிறேன். நாம் செய்யும் அத்தனைப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு நம்மை நன்மையின் பாதையில் இயற்கைக்கு அருகாமையில் இவர்கள்தான் இறுதியில் அழைத்துப் போவார்கள். இவர்கள் பாவங்கள் அறியாதவர்கள்என்றார். அக்குழந்தைகளோடு இணைந்து வாழும் மனிதர்கள் பகிர்கிற வார்த்தைகள் மிகுந்த உண்மைப்பூர்வமாக விளங்குகிறது.

திருமதி காமாட்சி சுவாமிநாதன் போன்ற கொள்கைப் பிடிப்புள்ளோர் நிகழ்த்தும் அவைதனில், முன்னோடி ஆசிரியர்களாகவும் வழிகாட்டிகளாகவும் திகழ்ந்திட்ட கிருத்துவ மனிதர்களாக எம்லின், ஜெம்ஸ்லின்ச், பிரப் போன்றவர்களை நீங்கள் நினைவுகூர்ந்து வணங்கிப் பேசியது உண்மையிலேயே என்றும் போற்றத்தக்க ஒன்று. முள்ளும் கல்லுமாய் இருந்திட்ட வனத்தில் வழிப்பாதையை அமைத்திட அவர்கள் எத்தனைச் சிராய்ப்புகளையும் சறுக்கல்களையும் சந்தித்திருப்பார்கள் என ஓரளவு யூகிக்க முடிகிறது. அந்த ஆசிரியர் பெருமக்கள் அனைவரையும் உங்கள் வழியாக நாங்களும் மனதார வணங்கிக்கொள்கிறோம்

கைத்தறி நெசவினை சிறப்புக் குழந்தைகளிடம் எவ்வாறு கல்வியாக எடுத்துச்செல்வது என்பது குறித்து திருமதி காமாட்சி சுவாமிநாதன் அவர்கள் நூற்பு சிவகுருவிடம் தொடர்ந்து உரையாடி வருகிறார். நல்லோர்களின் ஆசியினால் அதுகுறித்த ஒரு செயற்திட்டமும் விரைவில் நிறைவேறக்கூடும். அதுமட்டுமன்றி, வெவ்வேறு துறைகளில் உள்ள களச்செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆளுமைகளை ஒருங்கிணைத்து அக்குழந்தைகளுக்கு பயனளிக்கும் நிறைய முன்னெடுப்புகளை செய்துவருவதாக அறிந்தோம். ஆகவே, காமாட்சி அம்மாவையும் இக்கணம் பணிந்து வணங்குகிறோம்.

சிறப்புக் குழந்தைகள் பற்றிய புரிதலை உண்டாக்கும் உரையாடல் நீட்சியை இத்திரைப்படம் நிச்சயம் துவங்கிவைக்கும் என நம்புகிறோம். மேலும், இத்திரைப்படத்தில் தோழமைகள் அய்யலு குமரன், அங்கமுத்து, மணி ஆகியோர்கள் பங்கேற்று கலையாளுமை ரவி சுப்ரமணியன் அவர்களுடன் பணியாற்றியது மிகவும் நிறைவுதரக் கூடியதாக அமைந்தது

பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும்துயரமடைந்தோர் அறிக. பிறர் பொருட்டு துயர்கொள்ளுதலே மானுடமனம் கொள்ளும் உணர்வுகளில் மகத்தானது. வலிகொள்பவர் அறிக. பிறர்பொருட்டு கொள்ளும் வலியே உடல்கொள்ளும் உணர்வுகளில் மகத்தானது.

கொல்லப்பட்டோர் அறிக. நீதியின் பொருட்டு கொல்லப்படுதலே மானுடனுக்குத் தரப்படும் உயர்ந்த வெகுமதி. அவமதிக்கப்பட்டோர் அறிக. நீதியின்பொருட்டு அவமதிக்கப்படுதல் நம் பிதாவின் முன் உயர்ந்த வெகுமதி என்று வைக்கப்படும்!” என்ற வரிகளை இக்கணம் உச்சரித்துக் கொள்கிறேன். இத்தகு குழந்தைகளின் வாழ்வுக்கு உதவும் எல்லா மனிதர்களுக்கும் அகபலம் குறையாது நிறைய இயற்கையை மன்றாடி வேண்டிக்கொள்கிறேன்.

நன்றியுடன்,

சிவராஜ்

குக்கூ காட்டுப்பள்ளி

முந்தைய கட்டுரைதத்தமில் கூடினார்கள்- மரபின்மைந்தன் முத்தையா
அடுத்த கட்டுரைசி.வை.தாமோதரம் பிள்ளை- தமிழ்த்தலைமகன்