சியமந்தகம் தொகைநூல் வாங்க
கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள்
நன்றிகளும் வணக்கங்களும்
அன்பிற்கினியீர்,
வணக்கம்.
நலம் வளரட்டும்.
தொடர்ந்து உங்கள் எழுத்துகளைப் பல்லாண்டுகளாய்ப் படித்துக்கொண்டிருக்கிறேன்.
வாழ்வின் தரிசனங்களைக் காட்டுகின்ற , மொழியின் அழகுகளை, ஆற்றலைக் கொட்டுகின்ற எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் நீங்கள். சில நேரங்களில் இவர் ஏன் இப்படிக் கருத்துரைக்கின்றார், அவசரப்படுகின்றார் என்ற விமர்சனம், கருத்து வேறுபாடு உங்கள்பால் எனக்குள் எழுந்ததுண்டு. எனினும் இலக்கிய உச்சங்கள் பலவற்றைச் சாதித்த உங்கள் படைப்பியக்கத்தை எப்போதும் வியந்தும் போற்றியும் வருகிறேன்.கோவையில் நிகழ்ந்த ஜெமோ 60 செய்திகளையும் காணொலிகளையும் கண்டு மகிழ்ந்தேன். பொதுவாக நான் கடிதங்கள் எழுதுவதும் தொலைபேசியில் பேசுவதும் குறைவு. ஆனால் வாழ்வின் அரிய தருணமான இந்த 60 இல் உங்களையும் அரிய படைப்பாளிக்கு இதம் தந்துகொண்டிருக்கும் உங்கள் குடும்பத்தாரையும் வாழ்த்தாமல் இருக்கலாமா? வாழ்த்தி மகிழ்கிறேன்.
அன்புள்ள
ய.மணிகண்டன்.
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களே
வணக்கம் .
நான் சிலநாள் முன்பு உங்கள் முந்தைய நேர்காணல் ஒன்றைக்காண நேர்ந்தது. உங்களின் உள்சுயத்தொடு (inner self) ஒத்திசைவுள்ள, வாழ்க்கை இணையைக் கண்டு அறிந்தடைந்த கவிநயமான கொன்றை நேரங்களில் மட்டுமின்றி அவர்களை இணையாசிரியை என்று நீங்கள் ஏத்திய நொடிகளில், உரையிலி மோனத்தில் அவர்களின் உடல்மொழியூடே உங்கள் உணர்வு பூரணம் எய்தியதை பகிர்ந்தபோது மகிழ்வோடு கொண்டாடினேன். பெண்மை வாழ்க – அது மட்டும் அல்ல – மனிதம் வாழ்கவெனப் பாடுறும் பன்முகத்திறனர், அல்லவா? நீவிர் வாழ்க வளமுடன்.
உங்கள் மணிவிழாவில் கலந்து கொள்ளவே திடுதிப்பென்று கோவை வந்தும் திரும்பினேன். அப்போதுதான் நீங்கள் BSNL பணியிலிருந்து பத்தாண்டுகளுக்குமுன் ஒய்வு பெற்றமை பற்றி உங்கள் துணைவியிடம் கேட்டறிந்தேன்.வாழ்க்கைப் பாதையில், ஒரு சில இடங்களில் நான் உங்களோடு இனைந்து பயணம் செய்வதுபோல் ஒரு தோற்றம் எனக்கு… அதில் ஒன்று DOT/BSNL; 1985- முதல் 90களின் முன்பாதியில் உம்மை எனக்கு “சுபமங்களா” வாயிலாக அறிமுகம் செய்தவரும் 2000த்தின் முன்பாதியில் எனக்கு உங்களை மறு அறிமுகம் செய்தவரும் உங்களை படைப்பாளராக அறிந்த BSNL ல் உள்ளோரே.
அடுத்து, “குறளறத்தில் “”பன்முகப்பொருளை அளிக்கும்போதுதான் கவிதை கவிதையாகிறது. முடிவிலாத வாசிப்புச்சாத்தியத்தை அளிப்பதே நல்ல கவிதை. முடிவிலாத வாசிப்புச்சாத்தியத்தைக் கண்டுகொள்வதே நல்ல வாசிப்பு.” என்ற வரிகளிலும் நம் கைகுலுக்கல் நீண்டது. ’தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்தூறும் அறிவு” என்றவரியை கற்கும்தோறும் அறிவு,தோண்டும்தோறும் ஊற்று என்று புரிந்துகொள்ளலாம். ஆனால் வள்ளுவர் மணற்கேணி என்கிறார். தோண்டுவதை நிறுத்தினால் விரைவிலேயே தூர்ந்து இல்லாமலாகி விடும் ஊற்று அது “என்று படித்தவுடன் இதுபோல நான் குறளை விளங்கிப்படிக்கவில்லையே, என்ற நினைப்பு வந்ததும், கைகளைத் தூக்கி கும்பிட்டுக்கொண்டேன்.
உங்களின் இசங்களில் [..isms] சிக்காத உண்மையின் தேடல்,அன்றியும் எனது தாயின் தற்கொலை – இப்படியாக நீள்கிறது நம் ஒத்தமைவுப் பட்டியல் ஆகட்டும். குறள் சூத்திரந்தான்… “நெஞ்சுக்குள் ஓட்டிக் கொண்டிருக்கும்போது அவை நம் வாழ்க்கையின் தருணங்களுடன் பொருந்தி நமக்குரிய பொருளை அடைகின்றன” என்பது என் சிறிய அனுபவமும் கூட. ஆயினும்
‘யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்’ என்ற வரி –
‘என்ன இது, என்ன இது என நோக்கி ஒவ்வொன்றாக விட்டு விலகியவன் அந்த அளவு அந்த அளவு துயரம் இல்லாதவன்’ – என்று நீங்கள் சொல்வது நல்லா இருக்கு.
இது நீங்களே கண்டடைந்த, வரம்பிலா வாசிப்புக்காகக் கொண்ட பாட பேதமா?
‘யாதனின் யாதனின்’ என்றே நான் பார்த்த அச்சுகள் உள்ளன. From what from what a man is free from that from that his torments flee – என்பது கவியோகியாரின் ஆங்கில மொழியாக்கம்அதாவது எதனின்றும் எதனின்றும் விலகி நிற்றல், அதனின்றும் அதனின்றும் நோதல் நீக்கும் அல்லவா? பதிலிடவும்.
நித்ய சைதன்யம் புரிகிறது. அது என்ன யதி? என்று கூறுங்கள் என் புரிதலுக்கு. உங்களது குருவை வணங்கக் கூசாத நலமும் எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் ஒத்துஉரிமை பூணும் மனமும் (அறத்திற்கு மட்டுமல்ல மறத்திற்கும் அன்பே சார்பு, அதாவது மிகுதியின் மேல்சென்று இடித்தல்))
கீதைக்கு மேல், சொல்ல என்னிடம் அறிவுரை ஒன்றுமில்லை எனும் தாழ்மைக்குணமும் புகழுரைகள் கேட்கக் கூச்சமும் என்னை வசீகரிப்பவை. உங்கள் முதற்கனல் வெண்முரசிலல்ல, ஆரம்பம் !! ,அதன் முதல் தரிசனம் உங்களுக்கு காசர்கோடு – கும்பளா அருகில் சூரியக்கனலில் ஒளிர்ந்த புழுவில் என நான் நினைக்கிறேன்.
அன்று மணிவிழாவில் திருமதி.பாரதி பாஸ்கர் சொன்னதுபோல், உங்கள் வெளி வாசக வட்டக்குரலாய் ஒலிப்பதுவே இது. ஆனால் அவர்கள் பெண் வாசகிகளை மட்டுமே அவ்வாறு குறித்தார்கள்.
நன்றி,
சாலை ஆதினாராயண ரெட்டியார்