அறுபது, இரு கடிதங்கள்

சியமந்தகம் தொகைநூல் வாங்க

கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள்

நன்றிகளும் வணக்கங்களும்

அன்புள்ள ஆசிரியருக்கு ,

உங்களை நான் நேரில் சந்தித்தது ஒரே ஒரு முறைதான் ஆனால் மனத்திற்குள்ளாக அந்தச்  சந்திப்பு பல நூறு முறை நடந்து முடிந்து விட்டிருந்தது. அல்லிமலர் விரி சிறு குளத்தைத் தாண்டி, சாரதா நகர் வீட்டில் தங்களைச்  சந்தித்த அந்தத் தருணம் என்றும் எனக்குள்ளாக பூரித்து நிறைந்திருக்கும். வாஞ்சையுடன் என் மகளை தழுவிக்கொண்டதை கண்டபோது தங்கள் மகனும் மகளும் எவ்வளவு பாசமிகு ஒரு தந்தையின் குழந்தைகள் என உணர முடிந்தது.

ஆகப்பெரும் இலக்கிய  ஆளுமை , மிகச்சிறந்த பயணி , தேர்ந்த விவாதி ,நேர ஆளுமையின் உச்சம்  மற்றும் தற்போதைய தமிழ் சினிமா உலகின் உதடுகள் உச்சரிக்கும் திரைக்கதையாளர் இன்னும் பல,.. எனும் உச்சங்களை தொட்டிருக்கும் ஒருவரை   சந்திக்கும் சிறு உதறுதலுடன்தான் தங்களை ஆகஸ்ட் 2022 ,16 ம் தேதி அன்று காண வந்திருந்தேன் .

ஆனால் எந்த ஒரு கிரீடத்தையும் தன் தலையில் சூடாத,எவர் ஒருவரையும் இயல்பாய் உணர வைக்கிற ஒரு அற்புத மனிதரைத்தான் அன்று சந்தித்தேன். நேரம் கருதியும் முதல் சந்திப்பின் பதட்டத்திலும்  என்னால் கோர்வையாய் பேச முடியவில்லை. அந்தச் சிறு சந்திப்பிலும், பெருகி வரும் எதிர்மறை எண்ணங்கள் குறித்த தங்களது ஆதங்கத்தையும் சிறிதும் அவற்றை பொருட்படுத்தாது பெருகிவரும் ஓரு  சிறு இளைஞர் கூட்டத்தையும் பற்றி பகிர்ந்து கொண்டீர்கள்.

ஏன் இத்தனை எழுத்தாளர்கள் இருக்கையில் ஆசிரியர் ஜெயமோகனை எனக்கு அணுக்கமாக உணர்கிறேன் , நிச்சயம் அது அறம் சிறுகதைகள் தொகுப்பிலிருந்துதான். முன்பே தங்களது பல படைப்புக்களை அணுகியிருந்தபோதும், (பின்குறிப்பு இன்னும் விஸ்ணுபுரம் ,வெண்முரசு நாவல்களை துவங்க முடியாத அடிப்படை வாசகன்தான்  நான்) எந்த ஒரு சாமானியனுக்கு புரியும் வகையில் தத்துவ விளக்கங்கள் இல்லாத அதே சமயம் தத்துவ விலக்கங்களும்  இல்லாத சிறுகதைகளின் தொகுப்பு அது.

அதேபோல் தங்கள் படைப்புகளில் வரும் நீலியும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கே என்றான இயற்கை வர்ணனைகளும் மனதிற்கு நெருக்கமாக உணரவைக்கின்ற கிரியா ஊக்கிகள். படைப்புகளில் மட்டுமல்லாது அன்றாட வாசகர் உரையாடல்களில் தாங்கள் வலியுறுத்தும்  நெறிகள், நேர்மறை கருத்துக்கள்,சலிப்பே இல்லாது இலக்கிய முன்னோடிகளை முன் நிறுத்தும்  அந்த மாறா விசை இவை போதாதா எந்த ஒரு வாசகனுக்கும் தங்களை அணுக்கமாக உணர வைக்க?

மனதில் கட்டுக்கடங்காத வரிகள் ததும்பி நிறைகின்றன, இருந்தும் அடுத்த முறை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமையும் போது அவற்றை மடை திருத்தி கோர்வையாய் முன்வைக்க முனைகிறேன்.

ஜெயமோகன் 60 விழா நடைபெற்ற இந்த நன்னாளில், எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு பூரண ஆரோக்கியத்தையும், இன்று போல் என்றும் மாறாத அன்பை பொழியும் மனதையும், எழுத்து வல்லமையையும் தந்து, தமிழ் வாசகர்களுக்கு கருணை பொழிய வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்

ஜெயக்குமார்

***

அன்புள்ள ஜெ,

நலமாக இருக்க வேண்டிக்கொண்டு, தங்களுடைய மூன்று சிறுகதைகள் படமாக்கப்படுகின்றன என்பதை இணையவழி அறிந்து கொண்டேன். துணைவன், ஐந்து நெருப்பு, கைதிகள். இந்த முன்று கதைகளையும் சென்ற வருடம் வாசித்து இருந்தேன். எனினும் மீளவும் இவற்றை அண்மையில் வாசித்த போது மனதில் திரைப்படத்துக்கான சித்திரத்துடன் வாசித்த போது மனதுக்குள் கிளர்ச்சியடையவே முடிந்தது. துணைவன் கதையில் தாங்கள் குறித்த நிலச்சூழலை நன்றாக விபரணமாக்கியதை அறியமுடிந்தது. வாத்தியாரான கோனாரின் கதாபாத்திரம் நமக்கு ஒருக்களிப்பது என்ன என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டேன். வீரம் என்பது பயம் இல்லாதது போல நடிப்பது என்று கமல் ஹாஸன் குருதிப்புனலில் கூறிய வாசகங்கள் ஞாபகம் வந்தது. கிட்டத்தட்ட கைதிகள் கதையும் அதிகாரத்தின் வன்முறையை நுணுக்கமாகக் காட்டியதை உணரமுடிந்தது. ஐந்து நெருப்பு கதையில் முத்துவுக்கு துப்பாக்கி கிடைத்ததும் என்ன ஆகும் என்று பல யோசனைகள் மனதில் உருண்டோடி இருந்தன. வெந்து தணிந்தது காடு திரைப்படத்தைப் பார்த்த பின்பு மனதில் இருந்த கற்பனை ஓரளவுக்குச் சமன் செய்யப்பட்டது.

அண்மையில்தான் தங்களுடைய புனைவுக் களியாட்டு தொகுப்புக்களுடன் இணைத்து இன்னும் சில புதிய நூல்களை வாங்கியிருந்தேன். இதில் உள்ள கதைகள் தொகுப்புக்கள் ஆக முன்பே இவற்றை தங்களுடைய இணையத்தில் படித்திருந்தேன். மிக நீண்ட இடைவேளைக்குப் பின்பு இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகின்றேன். இந்த இடைவேளையில் தங்களுடைய வெண்முரசு நூல்களை வாசித்துக்கொண்டு இருந்தேன். அலாதியான பயணத்துக்கு ஒப்பாக வெண்முரசினை நான் அணுகுகின்றேன்.

இ.சுயாந்தன்

இலங்கை.

முந்தைய கட்டுரைஇசைரசனை முகாம், கடிதம்
அடுத்த கட்டுரைசி.மணி நினைவுக்குறிப்பு