அறுபது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடும் எனது மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய ஜெயமோகனுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்
உங்களின் விஷ்ணுபுரமே உங்களில் எனக்கோர் ஈர்ப்பை ஏற்படுத்தியது. தில் வந்த தத்துவ விசாரமும் தத்துவத்தை நீங்கள் புனைவாகக் கூறிய விதமும் நான் முன்னர் வாசிக்காத அனுபவம். அதனால் தான் அந்த மனிதரைக்காண நான் திருநெல்வேலியிலிருந்து ஒரு வாடகைக் கார் அமர்த்திகொண்டு பிரயாணம் பண்ணி உங்களைத்தேடி தக்கலை வந்தேன். ஒரு சில மணி நேரம் பேசினும் அது ஓர் மறக்க முடியாத சந்திப்பு
பின்னால் ஒருமுறை நான் ஹைதராபாத்தில் இருந்துகோயம்புத்தூர் வந்து பாலக்காடு ஊடாக கேரளா சென்றபோது கேரளாவில் யார்யாரைப் பார்க்கவேண்டும் அங்கு எவற்றைக் கவனிக்க வேண்டும் என வழிப்படுத்தியிருந்தீர்கள். அந்த ஆற்றுப்படுத்தல் எனக்கு மிக மிக உதவியது. அங்கிருந்து புறப்பட்டு நான் கன்னியாகுமரி வந்தபோது தக்கலை பஸ் நிலையமொன்றில் எனது மகன் போல என்னை எதிர்பார்த்துகொண்டு நின்றீர்கள். அந்தக் காட்சி பசுமரத்தாணிபோல மனதில் பதிந்துள்ளது.சில காட்சிகளை மனதில் இருந்து அழிக்கமுடியாதுஅழியாது.
அக்காலம் உங்களுக்கோர் சோதனைக்காலம்.எனினும் உங்கள் பிரச்சனைகளைப்புறம் தள்ளி என்னைப் பல இடங்களுக்கு அழைத்துசென்றீர்கள். கன்னியாயாகுமரியை அறியவும் அதனை உணரவும் வைத்தீர்கள். கொட்டும் அந்த அருவியில் நீராடிய அனுபவத்தை இன்றும் உணர்கிறேன்
நீங்கள் அழைத்துசென்று காட்டிய காடு, ரப்பர்தோட்டம், ஆதிகேசவர் கோவில், மஹாராஜ அரண்மனை எல்லாமே மனதில் பதிந்தவை. என்னை மேலும் அகட்டியவை. வாழ்வில் மறக்கமுடியாத அனுபவங்களும் சந்தர்ப்பங்களும் அவை.
உங்களை நானும் என்னைநீங்களும் அவரவர் பலத்தோடும் பலஹீனங்களோடும் அறிந்து வைத்துள்ளோம். அந்தப் புரிந்துணர்வே நமது நட்புக்கும் அன்பிற்குமான பலமான அத்திவாரம் .எனகு வயது 80 ஆகிறது. நீங்கள் 60 ஆவது ஆண்டில் காலடி வைக்கிறீர்காள்.இருபது வருட வித்தியாசம்.இருபது வருட வாழ்வனுப இடைவெளி..
அந்த வயதினடியாக நான் உங்களை ஆசீர்வதிக்கலாம் அல்லவா?
என் மனப்பூர்வமான ஆசிகள்
அன்புடன்
சி.மௌனகுரு தமிழ் விக்கி
சியமந்தகம் தொகைநூல் வாங்க
*