ஊட்டி காவிய முகாம் – சுனில் கிருஷ்ணன் -2

நாஞ்சில் அண்ணாச்சியையும் கவிஞர் தேவதேவனையும் நான் காண்பது இதுவே முதல் முறை.நாஞ்சிலார் எழுத்துக்களில் நதியின் பிழை – கட்டுரை தொகுப்பும் ,இணையத்தில் உள்ள சில கதைகள் மட்டுமே வாசித்ததால் அவரிடம் சென்று அறிமுகம் செய்து கொண்டு பேசக் கொஞ்சம் தயங்கினேன் .இறுதி நாளில் அவருடனான கேள்வி பதில் அவர் பழகுவதற்கு எத்தனை எளிமையான மனிதர் என்பதை உணர்த்தியது. அதன் பின்பே அவரோடு தயக்கமின்றிப் பேச முடிந்தது.தேவதேவன் – கவிஞனுக்கே உரித்தான அமைதியுடன் இருந்தார்.கிளம்பும் முன் அவர் விற்காமல் இருந்த கவிதைத் தொகுப்புகளை இலவசமாக அங்கு வந்துள்ள நண்பர்களை எடுத்துக் கொள்ளச் சொன்னார்.ஏனோ வருத்தமாக இருந்தது,நானும் மூன்று புத்தகம் எடுத்துக் கொண்டேன். ஆனால் ஒரு விதக் குற்ற உணர்வு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இத்தகைய கவிஞருக்கு எதுவுமே செய்யவில்லை என்னும் உணர்வு. இலவசம் என்றதும் எடுத்து அவசர அவசரமாகப் பையில் வைத்துக் கொண்டோமே என்னும் சிறுமை உணர்வு.விஷ்ணுபுரம் வட்டம் சார்பில் யானை டாக்டர் புத்தகமும்,ஆஸ்ரமத்தின் சார்பில் – நாராயண குரு வாழ்க்கை தொடர்பாக ஒரு புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது .

சுவாமி வியாசப்பிரசாத்

[சுவாமி வியாசப்பிரசாத்- சிறிய தொடக்கவுரை]

நீண்ட நடைப்பயணங்களின் ஊடே காட்டு எருதுகளைப் பார்த்தது, ஆஸ்ரமத்தில் பூத்த விதவிதமான பூக்கள் ,ரோட்டில் பார்த்த மண்ணுளிப் பாம்பு ,மலைகள் ,மயிர் கூச்செறியும் குளிர் என்று இயற்கையின் எல்லையற்ற கணங்களை உணர்ந்த நாட்கள்.குழும அறிமுகம் உண்மையில் தங்குதடையின்றிக் குழுமத்தில் உள்ள அனைவரிடமும் பழக உதவியது.கிருஷ்ணன் ,அரங்கர் ,சிறில்  ,ஸ்கந்தா,சுரேஷ் பாபு மற்றும் பலருடன் நல்ல நட்பு ஏற்பட்டதாகவே எண்ணுகிறேன். எங்களுக்குத் தேநீர் கொடுப்பது சுடுதண்ணீர் தருவது என்று ஒரு ‘ஹாஸ்டல் வார்டன் ‘ போல் எங்களைக் கவனித்த நிர்மால்யா ,மொழி பெயர்ப்புக்காக இந்த வருடம் சாகித்ய அகாடமி வாங்கி உள்ளார் என்பது ஆச்சர்யமாக இருந்தது .நாஞ்சிலார் நிர்மால்யா பற்றியும் அவரது சேவை மனத்தைப் பற்றியும் ஸ்லாகித்துக் கூறினார் .தோற்றத்தைக் கொண்டு மதிப்பிடும் முட்டாள் தனத்தை என் மனம் மாற்றி கொள்ளவேண்டும். ஜெ, வினய் சைதன்யா எனும் ஆளுமையைப் பற்றி ஒரு நாள் இரவு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.எங்கும்,எதற்கும் அடங்காத , ஞான தாகத்தோடும் ,அபார இலக்கிய ஆழத்தோடும் ,பீடி வலிக்கும் சாமிஜி ! ஜெ சளைக்காமல் பேசிக் கொண்டே இருந்தார் ,சுற்றி ஒரு பத்துப் பதினைந்து பேர் எப்பொழுதும் நின்று கொண்டே இருந்தோம் ,எங்கிருந்து இந்த மனிதனுக்கு இத்தனை சக்தி ஊற்றெடுக்கிறது என்பது வியப்பாக இருந்தது .இரவு உறங்கும் நேரம் ,காலைக் கடன்களை முடிக்கும் நேரம் தவிர்த்து எல்லா நேரங்களிலும் ஏதோ ஒரு விவாதம் நடந்துகொண்டே இருந்தது .அவை எதுவும் வெட்டி வம்பாக இருக்கவில்லை.

மூன்று நாட்களின் முடிவில் ஒரு நிறைவும் ,ஏக்கமும் சம அளவில் குடைந்தது  உண்மை .இறங்கி மேட்டுப்பாளையம் வந்த பின்பு அநீயோடு – அந்த மாருதி வேனில் நடந்த விவாதங்கள் சுவாரசியமானவை .parallel universe,ufo,,alien invasion ,சுண்ணாம்பு கேட்ட யட்சி ,சிற்பக் கலை – அதில் உள்ள குறியீடுக்ள் என்று விறுவிறுவென்று போனது .இவரோடு ஊட்டியில் இருக்கும் வரை சரியாகப் பேசவில்லையே என்று தோன்றியது .

எல்லாவற்றையும் சிறப்பாக ஏற்பாடு செய்து ,நல்ல முறையில் நடத்தி அனைவருக்கும் நல்ல அனுபங்களையும் ,புதிய நட்புக்களையும் கொடுத்த ஏற்பாட்டாளர்களுக்குச் சிறப்பு நன்றிகள் உரித்தாகுக .

[சிறில் அலெக்ஸ்- அரவிந்தன் நீலகண்டன்]

என்னைப் பொறுத்தவரை கம்பனையும்  ,காளிதாசனையும் மொத்தமாகப் புரிந்து கொண்டேன் என்று சொல்ல முடியாது ,ஆனால் புரிந்து கொள்ள முயலும் ஒரு முயற்சியின் தொடக்கமாக இது இருக்கும் என்றே எண்ணுகிறேன் .மொத்தமாக என் மன நிலையைச் சொல்ல வேண்டுமென்றால் – this is where i belong .

குறிப்பு – என்னால் முடிந்தது மனவெழுச்சி இருக்கும் சமயத்தில் அதை முழுமையாகப் பதிவு செய்வது மட்டுமே.நான்கைந்து நாட்களுக்குப் பின்னால் ஒரு வேலையில் அது நீர்த்து விடலாம்.இன்னமும் கூடப் பல நினைவுகளும் ,நண்பர்களும் உள்ளனர்.இன்னமும் கூட எழுதித் தீர்க்க விஷயம் உண்டு என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன்

மொழியாக்கத்துக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற நிர்மால்யாவுக்குப் பாராட்டு

https://picasaweb.google.com/cyril.alex/2011?authuser=0&feat=directlink

முந்தைய கட்டுரைஇலியட்டும் நாமும் 3
அடுத்த கட்டுரைஇலியட்டும் நாமும் 4