ஆனந்தம் அடைந்தேன் உலகத்தை மறந்தேன் – இது சுவாமி ராஜீவ் கிருஷ்ணா நிகழ்த்திய கதகளி ஆட்டத்தில் ஒலித்த முதல் வரி .இதுவே இந்த மூன்று நாள் ஊட்டி காவிய முகாமுக்குப் பிறகு எனக்கு இருக்கும் மன நிலையாகும் .
ஊட்டி பற்றிய அறிவிப்பை சில மாதங்களுக்கு முன் அரங்கர் குழுவில் வெளியிட்ட உடனே ,அதாவது ஒரு பத்து நிமிஷத்திலயே உச்ச கட்ட ஆர்வத்தோடு பெயர்கொடுத்த ஆர்வக் கோளாறுகளில் ஒருவன் நான். வீட்டில் இலக்கியக் கூட்டம் ,காவியக் கூட்டம் என்று ஏதாவது சொன்னால் அம்மா என்ன மாதிரி ரியாக்ஷ்ன் கொடுப்பார் என்று எனக்குச் சந்தேகம் இருந்ததால் ,இந்த கூட்டத்தில் ஜெயமோகனே என்னை அழைத்துக் கலந்துகொள்ளச் சொன்னார் என்று ஒரு ‘பிட் ‘ போட்டு வைத்து இருந்தேன்.கடைசியில் அவளும் விஷ்ணுபுரம் படித்துவிட்டு நன்றாகப் போய் வா என்று எளிதாக முடிந்தது.அம்மாவின் கண்களுக்கு முன் எதையாவது மறைக்க முயன்றால் அது எனக்கு பெரும் தோல்வியையே தரும் .
ஜூலை 8,9, 10 தேதிகளில் ஊட்டியின் நாராயண குருகுலத்தில் இந்த முகாம் நடைபெறுவதாக உறுதி செய்ய பட்டிருந்தது .ஜூலை ஐந்து தேதி போலே சற்று இலக்கியக் காய்ச்சல் வந்து வாட்டத் தொடங்கியது. கம்பரை பற்றிக் கொஞ்சம் அறிந்து இருக்கிறேன்.எந்த ஒரு பாடலும் உருப்படியாகத் தெரியாது.எனது கம்ப ராமாயண அறிவு ” அவளும் நோக்கினாள்,அண்ணலும் நோக்கினான்” அளவிலயே இருந்தது. மெதுவாகக் குழுமத்தில் சுசீலாம்மா அளித்த விளக்கங்களை வைத்து வாசிக்கத் தொடங்கினேன்.பின்னர் தமிழ் ஹிந்து தளத்திலும் கம்பர் பாடல்கள் குறித்த சில கட்டுரைகளை வாசித்தேன் .கம்பன்,கவிதையும் கற்பனையும் கலந்த காவிய உலகின் உச்சம் .யதார்த்த எழுத்துகளுக்குப் பழகியவர்களுக்கு இது ஒரு மிகை நாடகீயமாகப் புலப்படலாம் எனும் ஜெ விடுத்த எச்சரிக்கை,படைப்பைப் புரிந்துகொள்ள முக்கிய திறவு கோலாகும் .
முகாமின் மற்றொரு காவியம் ரகுவம்சம் – மஹாகவி காளிதாசர் சம்ஸ்கிருதத்தில் இயற்றிய காவியம் .பள்ளிக் காலத்தில் இதன் ஒரு பகுதியை வாசித்தது நினைவுக்கு வந்தது .இணையத்தில் இதன் கதைச் சுருக்கத்தைத் தேடி வாசித்தேன் .ரகுவம்சம் என்பது சூரிய வம்சத்தின் கதை.திலீபன் எனும் அரசன் தொடங்கி ,ரகு ,அஜ, தசரதன் ,ராமன் ,குசன் என்று தொடர்ச்சியாகச் செல்லும் ஒரு வம்ச கதைப் பாடல்களின் தொகுப்பு .காளிதாசர் உவமைக்குப் பெயர் போனவர் என்று சொல்லப்படுவதுண்டு.
மற்றொரு காவியம் ,ஹோமரின் இலியட் .பிராடு பிட் நடித்து வெளிவந்த ட்ராய் திரைப்படத்தின் மூலக் கதை சொல்லும் காவியம் .அந்தப் படத்தை நான்கு முறை கண்டிருக்கிறேன் ஆனால் இலியட் வாசித்ததில்லை. முகாமுக்காக இணையத்தில் தேடி வாசிக்கத் தொடங்கினேன்.மிக மிகக் கடினமாகவும் வறண்டும் இருந்தது போல் இருந்தது .இலியட் எப்படி வாசிக்க வேண்டும் என்று ஒரு இணைப்பு,அதுவே ஒரு ஐம்பது பக்கத்துக்கு மேல் சென்றது .ஹோமரின் காலகட்டம் ,ட்ரோஜன் போரின் காலகட்டம் ,அதில் ஈடுபடும் கிரேக்கக் கடவுளர்களின் பெயர்கள், ட்ரோஜன் வீரர்களின் பெயர்கள்,கிரேக்க வீரர்களின் பெயர்கள் என்று ஏகக் குளறுபடி .கொஞ்சம் மெனக்கெட்டுக் கதைச் சுருக்கத்தை வாசித்து வந்தேன்.
கிளம்பும் முன்தினம் ஸ்ரீனிவாசன் அவர்களிடம் பேசிவிட்டு, அரங்கருக்குத் தகவல் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.ஜெ விற்கு சென்ற முறை சந்தித்தபோது எடுத்து வந்த மருந்து எதுவும் வேண்டுமா என்று கேட்டேன் ,எங்கு எடுத்து வந்துவிடுவேனோ என்று பயந்து அவசர அவசரமாகப் பதட்டத்தோடு மறுத்தார் .( அப்பாடா மருந்து வேல செய்ய ஆரம்பிச்சுடுச்சு :)) .கையோடு ஒரு ஐம்பது விசிட்டிங் கார்டுகளையும் பையில் போட்டு கொண்டேன் ( பின்ன நாங்களும் எப்டித்தான் வியாவாரம் பாக்குறது ).கிளினிக் முடித்துக்கொண்டு கோவைக்கு பர்வீன் பஸ்ஸில் இரவு 9.30 க்குக் கிளம்பினேன் .நல்ல வேளை எதுவும் படம் போடவில்லை.ஆனாலும் உறக்கம் பெரிதாக வரவில்லை நாளையை எண்ணி மனம் கற்பனையில் ஓடியது
குழுமத்தில் அறிமுகமான பெயர்களின் உருவமும் அவர்களின் குரலும் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்து கொண்டிருந்தேன். எல்லோர் முகமும் ஏதோ ஒரு நடிக நடிகையர் முகச் சாயலிலயே வந்து முடிந்தது கொடுமை தான் .ஜடாயு எனும் பெயரைப் பூரணம் விஸ்வநாதன் வைணவப் பெரியவராக வேடம் பூண்டால் எப்படி இருக்குமோ அப்படித் தொடர்பு படுத்தி கொண்டேன் .ஸ்ரீநிவாசன் அவர்களைக் கமலஹாசனோடு, ஜாஜாவை ஹேராம் படத்தில் கமலின் நண்பனாக வருவாரே சௌரப் சுக்லா அவரைப் போல் இப்படி எக்கசக்கமாக மனம் தாறுமாறாகக் கற்பனை செய்து கொண்டது .புதிதாகக் கல்லூரிக்குச் செல்லும் முன் முதல் நாள் ஏற்படுமே அத்தகைய இன்பமான anxiety ஏற்பட்டது .
தூங்கியது போல் இருந்தது ,தூங்கினேனா என்று நிச்சயமாகச் சொல்வதற்கு இல்லை .
சரியாக ஐந்து மணிக்குப் பேருந்து காந்திபுரத்தில் நின்றது.லேசாக வானம் ஒழுகிக் கொண்டிருந்தது ,மெல்லிய தூறலும் தூறும் துளிகளை எல்லாம் திமிறி வரும் பக்தர்களை வழி நடத்தும் காவலர் போல காற்று ஒரே திசையில் சாய்த்து விழச் செய்தது .இறங்கியவுடன் அரங்கருக்கு போன் அடித்தேன்.ரயில்வே நிலையத்துக்குப் போகச் சொன்னார்.மேலும் கடலூர் சீனு எனும் நண்பரின் தொடர்பு எண்ணையும் கொடுத்தார் .காந்திபுரம் பஸ் நிலையித்திலிருந்து டவுன் பஸ் பிடித்து ரயில்வே நிலையம் சென்றேன். அங்கு இறங்கி சீனுவிற்கு அழைத்தேன் .கரும் பச்சையும் கருப்பும் கலந்த ஒரு வித சட்டையை நான் அணிந்து இருந்தேன்.நீல நிற சட்டையை அவர் அணிந்து இருந்தார்.ஒரு மாதிரி தடவித் தடவி அடையாளம் கண்டு கொண்டேன்.சரியாக ஸ்டேஷனின் வாயிலில் ஒரு ஐந்தாறு பேர் எனக்கு முன்பே குழுமி இருந்தனர் .
அமைதியாக அறிமுகப் படலம் நிகழ்ந்தது.இருவர் நாங்கள் ப்ரெசிடென்ட் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர் (சித்தார்த் ,கமலக்கண்ணன் ) என்று சொன்னார்கள்.பின்பு பழைய படத்து சத்தியராஜ் போல் ஒருவர் வந்தார் -விழியன் என்று சொன்னார் .பெயரா,புனை பெயரா என்று கேட்டேன்.புனை பெயர் என்று சொன்னார்.உண்மைப்பெயரையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன் .குழந்தைகளுக்காக இரண்டு நாவல்களும் ஒரு கவிதைத் தொகுப்பும் வெளியிட்டதாகச் சொன்னார் .ஊருக்குத் திரும்பி வந்ததும் நாமும் ஒரு நல்ல புனைபெயரை யோசிக்க வேண்டும் ,அப்படி வைத்து எழுதினாலாவது ஏதாவது தேறுமா என்று யோசித்தேன் ,சுனில் கிருஷ்ணனன் சுருக்கி சுகி என்று வைத்து கொள்ளலாமா என்று யோசித்தேன் – இந்தப் பெயருக்கு ஒரு வித ‘மிஸ்டிக் டோன் ‘ கிடைப்பது போல் இருந்தது ,ஆர் எனும் எனது இனிஷியலைச் சேர்த்து ராசுகி என்று வைத்து கொள்வோமா என்று ஒரு யோசனை வந்தது .சாதாரண ‘மிஸ்டிக்’கிலிருந்து இப்பொழுது நித்யானந்தா வகை மிஸ்டிக் நோக்கிப் பெயர் போவதாக பட்டது .
யோசனையிலிருந்து மீண்டு மீண்டும் பேச்சு தொடர்ந்தது .சீனுவுடன் பேசியதும்தான் தெரிந்தது,அவர் எத்தனை பெரிய வாசகர் என்று.என் வாழ்நாளில் அவரளவிற்கு வாசிக்கும் திறனும் பொறுமையும் கைவரப் பெறுவேனா என்று தெரியவில்லை .ஜெ அவரைப் பற்றி இணைமனம் என்று கூறி வெளியிட்ட கடிதங்கள் பற்றிச் சொன்னார் ,உண்மையில் இணை மனம் தான் .அவர் எழுதிய நீண்ட பத்துப்பக்கக் கடிதங்களைத் தொகுத்துப் புத்தகங்களாகப் போடப்போவதாக ஜெ சொன்னதாகச் சொன்னார் .விஷ்ணுபுரத்தின் வேததத்தனின் சில கூறுகளை சீனு எனக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார் .
பின்னர் வெளியில் நிற்கும் வெள்ளை நிற டெம்போவுக்கு ஆறு மணிக்குச் சென்றோம் .பைகளை எல்லாம் அடுக்கிவிட்டு வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்தோம் ,ஒவ்வொருவராக வர அறிமுகப் படலங்கள் நடந்தன.அமைதியாக மூக்கில் இன்ஹலேர் உறிஞ்சியபடி அநீ நின்று கொண்டிருந்தார் ,பின்பு உமாசங்கர், திருமலை ராஜன் ,தினேஷ் நல்ல சிவம் ,டாக்டர்.வெங்கடப்பன் ,ஆனந்த் என ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள்.டெம்போ ஒரு பாடாக சுமார் 6.45 க்குக் கிளம்பியது .கடைசி இரண்டு சீட்டில் அமர்ந்து கொண்டு வண்டி புறப்பட்டவுடன் பேச்சு தொடங்கியது .நானும் ,பெங்களூரிலிருந்து வந்த மென்பொறியாளர் உமாஷங்கரும் பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்தோம் .ஜெயமோகன், டால்ஸ்டாய் ,காந்தி ,ஆரண்ய காண்டம் , அரசியல் நிலவரங்கள் ,அவரவர் வாசித்த புத்தகங்கள் அவர்களின் அனுபவங்கள் என்று நேரம் போவதே தெரியாமல் சுவையாகச் சென்றது.
இத்தகைய முகாம்களின் வெற்றியே என்னைக் கேட்டால் இத்தகைய பரிமாற்றங்களிலயே உள்ளது என்பேன் .புதிய மனிதர்களும் அவர்களது ரசனைகளும் பழக்கங்களும் நமக்குத் தரும் அனுபவங்கள் மிக உன்னதமானவை .குன்னூர் தாண்டி ஓரிடத்தில் சுடச்சுடத் தேநீர் அருந்தினோம் .விழியன் வாங்கிக் கொடுத்த வர்க்கியும் காலைப் பசியைச் சற்றே அமிழ்த்தி வைத்தது .
ஒன்பதரை மணிக்கு நாராயண குருகுலம் வந்தடைந்தோம் .ஏற்கனவே அங்கு நண்பர்கள் குழுமி இருந்தனர்.அனைவரும் ஒரு பெரும் கும்பலாக ஜெயைச் சுற்றி நின்று பேசிக் கொண்டிருந்தனர் .தூரத்திலிருந்து அவருக்கு ஒரு சலாம் வைத்துவிட்டு சங்கத்தில் ஐக்கியம் ஆனோம் .குழும நண்பர்கள் ஒவ்வொருவராகத் தேடிச் சென்று அறிமுகப்படலம் நடந்தது. ஜடாயுவும் ,ஜாஜாவும் என் கற்பனையை அடித்து நொறுக்கினார்கள். ரிச்சர்ட் கேரே போல வெள்ளி நிற முடியுடன் இருந்தாலும் இளமையாக இருந்தார் ஜடாயு .அதே போல் ஸ்ரீநிவாசன்,ஜாஜா எல்லாரும் முற்றிலும் வேறு தோற்றத்தில் இருந்தார்கள் .நானும் கூட அவர்களின் கண்களுக்கு வித்தியாசமாகப் பட்டிருப்பேன் என்று எண்ணுகிறேன் .
பின்னர் வடை பொங்கலுடன் சிற்றுண்டி,பசி மயக்கத்தில் பல் தேய்ப்பதை மறந்து விட்டேன் , குளிக்கலாம் என்றால் தண்ணீர் மிகவும் பயமுறுத்தியது.பெரும் வரிசை வேறு ,மேலும் காலை நானும் ஆனந்தும் பாத்ரூமைத் தேடி ஒவ்வொரு இடமாக அலைந்தோம் .நாஞ்சிலார் கடைசியில் வழி காட்டினார் . அற்புதமான உயிரோட்டமான சிலை வடிவில் குரு வடிவம் தென்பட்டது .வெளியில் மலையே சிறு சிறு படிகளாகச் செதுக்கி வைத்தது போல் தென்பட்ட தேயிலைத் தோட்டம் சூழ்ந்து இருந்தது .
இத்தனை புத்தகங்கள் ,அதுவும் கம்யூனிசம் தொடங்கி க்வாண்டம் பிசிக்ஸ் வரை பல்வேறு புத்தகங்கள், உலகில் வேறு இடங்களில் காணக் கிடைக்காத அபூர்வ சேகரிப்பு ,சாதரணமாக ஒரு ஆன்மீக ஆஸ்ரமம் என்றால் அதைத் தோற்றுவித்தவர் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு ,பின்னர் நாலைந்து மத நூல்கள் இருக்கலாம்.ஆனால் இங்கு இருப்பது போல இத்தனை விசாலமாக அனைத்து அறிவுத் துறைகளையும் பிரதிநித்துவப் படுத்தும் வகையில் உலகின் மிகச்சிறந்த நூல்களின் தொகுப்பு வேறு எந்த அமைப்புக்களிலும் இருக்காது , நிச்சயம் நாராயண குருகுலம் வெறும் ஒரு மதக் கட்டமைப்பு அல்ல என்பதையே இது வலியுறுத்துகிறது .ஜெ பேச்சின் ஊடாகச் சொன்னார்,நடராஜா குரு ,அறிவியல், கலை ,நுண்கலை ,ஆன்மீகம் ஆகியவை எல்லாம் சங்கமிக்கும் வண்ணம் ஒரு கல்வி முறையை உருவாக்க அவர் பாடுபட்டார் என்று .எந்த ஒரு இலக்கிய நிகழ்வும் அறிவியல் ,நுண்கலை இல்லாது நிறைவடையாது என்று சொன்னார் .அது சத்தியமானது.
நாஞ்சில் அண்ணாச்சியின் பாலகாண்டப் பாடல்களோடு கம்பராமாயணம் துவங்கியது .கீழே அமர்வது சற்று சிரமமாக இருந்தது.ஆனால் சுதந்திரமாக இருந்தது ,கால் விபத்திற்குப் பிறகு கீழே அவ்வளவாக அமர்ந்ததில்லை என்றாலும் என்னளவில் இங்கு பல மணிநேரம் கீழே அமர்ந்தது ஒரு சாதனை தான் .நாஞ்சில் அண்ணாச்சி பாடலை வாசிக்கப் பின்பு பொருள் கூறுவார் ,அதன் பின்பு ஜெ வாசிப்பார் மீண்டும் பொருளைக் கூறுவார்.பின்பு இன்னொருவரால் வாசிக்கப்படும். இவ்வண்ணம் பாடல் நன்றாக மனதில் பதிய செய்ய முயன்றனர் .
அனைத்து வேளைகளிலுமே உணவு மிக எளிமையாகவும்,சுவையாகவும் முக்கியமாக சூடாகவும் இருந்தது . என்னதான் செவிக்கு உணவு என்றாலும் வயிற்றுக்கு சரியாக ஈயப்பட்டால் தானே அதுவும் எடுபடும் .தேநீர் ஒவ்வொரு முறையும் மிக சுவையாக இருந்ததைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் .
முகாமிற்கு வந்திருந்த அனைவருமே ஒருசேர ஆச்சரியப்பட்டது ஜடாயுவின் திறமை மற்றும் அவரது ஆழ்ந்த ஞானம் கண்டு .வெகு சாதாரணமாக அனேகக் கம்பப் பாடல்களை சந்தத்தோடு பாடினார். உண்மையில் ஜெ சொல்லியது போல் உலகம் ஒரு மிக சிறந்த தமிழாசிரியரைக் கணினித் துறையிடம் இழந்தது என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.வடமொழியிலும் ,தமிழிலும் அவரது புலமை அபாரமானது .
இந்த முகாமைப் பொறுத்தவரை நான் முக்கியமாக நினைப்பது அல்லது தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடித்தது காலையிலும் மாலையிலும் ஜெவோடு நண்பர்கள் நாங்கள் சென்ற நடைப் பயணங்களும் ,பின்பு அங்கு புல்வெளியிலும் ,பாலத்திலும் ,சாலையிலும் ,தேயிலைத் தோட்டத்திலும் அமர்ந்து பேசிய / கேட்ட பேச்சுக்களுமே.ஒவ்வொன்றும் முக்கியமானவை .இறுதி நாள் காலைப் பேச்சு மட்டும் அவர் கேட்க நாங்கள் உளறியதால் அத்தனை சுவாரசியமாக இல்லாமல் போனது .
அதுவும் குறிப்பாக இரண்டாம் நாள் காலையில் ஆறு மணிக்கு நடக்கத் தொடங்கி எட்டு மணி வரை சாலையில் பேசிக் கொண்டிருந்த பேச்சு நிச்சயம் மிக மிக முக்கியமானது .பல புதிய விஷயங்களும் கோணங்களும் எங்களுக்குக் கிடைத்தன.கலைக்கான definition தமிழக சூழலில் அசல் எண்ணங்கள் மூலம் நகர்த்திச் சென்ற ஆளுமைகளைப் பற்றிய விவாதங்கள் , பழங்குடி மனம் vs நவீன மனிதன் ,காந்தி மீதான விமரிசனங்களுக்கான பதில் ,குப்பைகள் பற்றிய பேச்சு இப்படி பல முக்கியமான பேச்சுக்கள் .இதே போல் ,முதல் நாள் சாயங்காலம் அனந்த பத்மநாப சுவாமியின் புதையலில் தொடங்கி , இந்திய ராஜ்யங்களைப் பற்றியும் ,அதன் வழமைகளைப் பற்றியும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க விவாதம் நடந்தது – எவ்வாறு பாலைவனப் பிரதேசங்களில் உள்ள மக்கள் பிற தேசங்களுக்குப் படை எடுத்தனர் என்பதைப் பற்றியும் surplus ,demand பண்டைய சமூகங்களில் எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றியும் நீண்ட விவாதங்கள் .
ரயில்வே ட்ராக்கை நோக்கி இறங்கிய இரண்டாம் நாள் மாலை நேர நடையின் பொழுது – ஜாதிய முறைகள்,இலக்கியத்தில் பெண்களின் பங்கு, அவரைப் பாதித்த இலக்கியப் படைப்புகள் என்று சென்றது .இதில் ஒரு புதிய பார்வையைப் பதிந்தார் – ஒரு நான்கு மணி நேரப் பயணத்தின் பொழுது தன்னால் ஒரு நாவலை உருவாக்கி அதை முழுமை செய்ய முடியும் என்றார்.குறைந்தது அம்மாதிரி அவரின் எழுதப்படாத நாவலின் அளவுகோலையாவது எட்டும் படைப்புகள் மட்டுமே தன்னால் வாசிக்கப் படும் என்றார் .இது ஒரு முக்கியமான செய்தி .
முதல் நாள் இரவு சென்னை a.g.s சுரேஷ் அவர்கள் மிமிக்ரி ,பாடல்கள் என்று அசத்தினார் இரவு பதினொன்று வரை நீடித்தது இது .குறிப்பாக ஹனீபா குரல் மறக்கவே முடியாது ,ஸ்ரீனிவாசன் சாரும் தன் பங்கிற்குப் பாடி அசத்தினார் .போதாக் குறைக்கு பாகவதர் ராம் வேறு அமெரிக்காவிலிருந்து அரங்கரின் செல்லுக்கு அழைத்துப் பாடினார். மூன்று பாடல்கள் அதை மைக்கில் அனைவரும் கேட்டுகொண்டே கண்ணயர்ந்தோம் .பகலில் அத்தனை குளிராக இல்லை.ஆனால் இரவிலும் காலையிலும் குளிர் நடுக்கியது , சுமார் முப்பது பேர் அங்கு நூலகக் கட்டிடத்திலே உறங்கினோம்.சிலர் தங்குவதற்குப் பக்கத்தில் அறை ஏற்பாடு செய்ய பட்டிருந்தது .இரண்டாம் நாள் இரவு இலக்கியம் தொடர்பாக சில கேள்விகள் ஜெயிடம் கேட்கப்பட்டது ,காடு நாவல்,ஏழாம் உலகம் ஆகியவை மிகக் குறைந்த காலகட்டத்தில் உருவானதாகச் சொன்னார் .
சனிக்கிழமை மாலை நேர நிகழ்ச்சியை யாரும் மறக்கவே முடியாது .இது இந்த முகாமிற்கே முத்தாய்ப்பான நிகழ்வு என்றால் அது நிச்சயம் மிகை அல்ல .என்னை மாதிரி அழுமூஞ்சி வாசகர்கள் அவர்களின் உணர்வு உச்சத்தைத் தொட்டிருப்பார்கள் .ராஜீவ் கிருஷ்ணா சுவாமி – சாதாரணமாக இருந்தவர் ,அந்தக் கதகளி கோலத்தில் ஆளே அடையாளம் தெரியவில்லை.அவர் உருவாக்கிய புதிய நடன முறையைத் தமிழில் ஒரு பாட்டிற்கு ஆடிக் காட்டினார் .பின்பு நடந்ததெல்லாம் என்னவென்று சொல்லுவது – குசேலன் கிருஷ்ணரை சந்தித்து உதவி பெற எண்ணி வந்துவிட்டு ஏதும் பெறாமல் திரும்பும் அந்தக் காட்சி நெகிழ்ச்சி என்றால் ,ராவணன் கைலாசத்தை அசைத்துத் தூக்கிப் பந்தாடி வாயில் வெற்றிலை போடுவதை என்னவென்று சொல்லுவது ? அவர் கையை மடக்கி நிற்கும் சமயம் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு மலை அவரது கரங்களில் இருப்பது போல இருந்தது .
இந்த நிகழ்ச்சியின் உச்சம் என்று நான் கருதுவது பூதனை மோட்சம் என்பதில் சந்தேகமே இல்லை.பூதனையின் உள் இருக்கும் பெண் வெளிவந்து எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது .இது ஒரு நெகிழ்ச்சியான அனுபவம்.இதைக் காவியங்களின் நீட்சியாகவே பார்க்க வேண்டும் .இதைப் பற்றி எவ்வளவோ சொல்ல வேண்டும் ,அது கொடுத்த மன எழுச்சி அத்தகையது .இத்தனைக்கும் அவர் முழு கதகளி உடை அணியவில்லை , மேளங்கள் இல்லை வெறும் கைத் தாளங்களுக்கு ஏற்ப அவர் காட்டிய பல முத்திரைகள் வியப்பைக் கொடுத்தது , பிடி யானை நடந்து வருவது போல் ,சர்ப்பம் போல்,ஆதிசேஷன் போல் இன்னும் எத்தனையோ பாவங்களும் முத்திரைகளும் வியப்பின் எல்லைக்கே அழைத்துச் சென்றது .இது வரை நடன நிகழ்சிகளை நேரில் ,அருகில் பார்த்திடாத எனக்கு இது ஒரு திறப்பு.நடனக் கலை அதுவும் சுத்த கலை வடிவமான கதகளி போன்றவை என்ன அளிக்க முடியும் என்பதை அன்றே உணர்ந்தேன் .
ரகுவம்சம் – எனக்குக் கம்பனைக் காட்டிலும் நெருக்கமாக இருப்பது போல் இருந்தது.அதன் உவமைகள் அனைத்தும் நாம் அன்றாட இயற்கையில் காணும் கவனிக்க மறந்த நிகழ்வுகள் .வெகு நுணுக்கமாகப் பதிவு செய்தது உவமைகள் அனைத்தும் மிக அற்புதமாக இருந்தது.ஜெ இராமாயணப் பகுதியையும் ஜடாயு மிகுதிப் பகுதியையும் பற்றிய பாடல்களைச் சொன்னார்கள் .அதன் ஆசாகியல் மிக எளிதாக இருந்தது .எனக்குக் காடு நாவலை நினைவு படுத்துவது போலிருந்தது .
மூன்றாம் நாள் -இன்றோடு இந்த முகாம் முடியப் போகிறது என்னும் நிதரிசனம் மனதில் அழுத்தியது.பள்ளி சுற்றுலா சென்று விட்டு மீண்டும் பள்ளிக்குச் செல்லப் பிடிக்காமல் இருக்கும் பிள்ளையைப் போல் உணர்ந்தேன் .ஜெ இலியட் பற்றிப் பேசினார் .அதில் உள்ள காவிய உச்ச பகுதிகள் – வாசிக்கும் பொழுது பெரிதாகப் படவில்லை ,ஆனால் ஜெ – குறிப்பாக இலியடின் இறுதி அத்தியாயம் பற்றி வாசிக்கும் பொழுது அதன் உக்கிரம் சுட்டது .பின்பு நாஞ்சிலாரோடு நடந்த கேள்வி பதில் சுவையாக இருந்தது .