சாரு, கடிதங்கள்

வணக்கம் அண்ணா.

மணிவிழா நிகழ்வை புகைப்படங்களோடு சமூகவலைத்தளங்களில் நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். நிறைவாய் இருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்னும் சென்றடைய வேண்டிய உங்கள் இலக்குகள் குறித்து எழுதி இருந்ததை வாசித்த போது உற்சாகம் பற்றிக் கொண்டது. வாழ்த்துகள்.

சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டதும் சமூகவலைத் தளங்களில் கொட்டித் தீர்க்கப்பட்ட வசைகளும், மூர்க்கமான எதிர் வினைகளும் ஆற்று நீராய் விரவி மெல்ல, மெல்ல வற்றிப் போய் விட்டது. விரவிய போதும், வற்றிய போதும் நீங்கள் எந்த எதிர்வினைகளையும் நிகழ்த்தாமல்  அவைகளை இடக்கையால் புறந்தள்ளி நின்றீர்கள். ஒருவேளை, அப்படி இல்லாது போயிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மையத்தில் இருந்து விலகி உங்கள் கருத்துகளோடு இன்னும் மூர்க்கமாக சமர் செய்வதில் வேகமெடுத்திருப்பார்கள் என்பதே என் எண்ணம். தான் அறிந்தவைகளை அல்லது தன்னிடமிருக்கும் அளவுகோள்களை மட்டும் வைத்துக் கொண்டு சாருவை சகட்டு மேனிக்கு வசைபாடியவர்களுக்கும், பாடிக் கொண்டிருப்பவர்களும் இந்த விருது அறிவிப்பு தந்த கோபமாக அவைகள் இருந்தன என்பதே எதார்த்தம்.

பிறழ்வெழுத்துகளில் தமிழுக்குரியவராக சாருவை சுட்டியும், அந்த வகை எழுத்துகள் குறித்தும் நீங்கள் காட்டிய அறிமுகம் என் போன்ற வாசகர்களுக்கு அவ்வகை எழுத்து பற்றிய ஒரு அறிமுகத்தை தந்தது. கூடுதல் அறிதலுக்கான நகர்வு சாருவின் படைப்புகளை நெருங்கச் செய்தது. குழு மனப்பான்மையோடு இயங்கி வரும் இன்றைய இலக்கிய பரப்பில் எந்த ஒரு படைப்பாளியையும் இளம் தலைமுறைக்கு முன்னேராய் நகரும் நாங்கள் (விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்) பார்ப்பதில்லை என்பதையும், கசப்புணர்வு மனப்பான்மை என்ற தனிப்பட்ட காரணங்களுக்கான முரன்களை தூர வைத்து அப்படி முரன்பட்டு நிற்கும் மனிதரின் – படைப்பாளியின் –  படைப்பாக்கத்தை பார்ப்பதே விஷ்னுபுரம் விருதின் நோக்கம் என்பதையும் சாருவுக்கான இந்த விருது அறிவிப்பு சொல்லாமல் சொல்கிறது.

சிநேகமாய்

மு. கோபி சரபோஜி

அன்புள்ள ஜெ

நலம்தானே?

சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். பலர் பலவகையாக விமர்சனம் செய்தாலும் எனக்கு சாரு தனிப்பட்ட முறையில் முக்கியமான எழுத்தாளராகவே இருந்து வந்திருக்கிறார். அவருடைய கதைகளில் ஔரங்கசீப் முக்கியமானது என்பது என் எண்ணம். அதில் வரலாற்றை இன்னொரு கோணத்தில் திரும்ப எழுதியிருக்கிறார். ஆனால் அதுவே உண்மையான வரலாறு என்றும் சொல்லவில்லை. எல்லாமே வரலாறும் எல்லாமே புனைவும்தான் என்றுதான் சொல்கிறார். ஔரங்கசீப் பற்றி இன்னும் கூட நல்ல வாசிப்புகள் வரவில்லை. சாருவே உருவாக்கும் சர்ச்சைகள், மற்றவர்களின் வசைகள் வழியாக அல்லாமல் சாருவின் படைப்புகள் வழியாகச் சாருவைப் பற்றி ஒரு நல்ல வாசிப்பு உருவாக இந்த விருது வழிவகுக்குமென்றால் சிறப்பு

சந்திரசேகர்

விஷ்ணுபுரம் விருது,2022

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

முந்தைய கட்டுரைவெந்து தணிந்தது காடு, வெற்றிவிழா
அடுத்த கட்டுரைகனவுகள் குவியும் களம்