‘கூளமாதாரி’ ‘நிழல்முற்றம்’ போன்ற நாவல்கள் ‘திருச்செங்கோடு ‘ பீக்கதைகள்’ போன்ற சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றின் ஆசிரியரான எழுத்தாளர் பெருமாள் முருகன் இப்போது நாமக்கல்லில் பேராசிரியராக வேலைபார்க்கிறார். ஆர்.ஷண்முகசுந்தரம் நாவல்களைப் பற்றிய அவரது முனைவர் பட்ட ஆய்வேடு முக்கியமானது என்று குறிப்பிடப்படுகிறது. பழந்தமிழ் ஆராய்ச்சி மற்றும் பதிப்புகளைப்பற்றிய ஆராய்ச்சி ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். பலவருடங்களாக அவர் நாமக்கல்லில் ‘கூடு’ என்ற ஆராய்ச்சிக்குழுவை நடத்திவருகிறார்.
ஏறத்தாழ முப்பதுபேர் வரை பங்குகொள்ளும் இந்த குழுமம் மாதம் ஒரு முறை கூடுகிறது. அதிகமும் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்களும் மாணவர்களும் அடங்கியது. பெருமாள் முருகனின் வீட்டு மொட்டைமாடிதான் கூடும் இடம். பங்கேற்பவர்கள் முன்னரே அறிவிக்கப்பட்ட தலைப்புகளில் கட்டுரைகள் கொண்டுவந்து வாசிக்க அவற்றின் மேல் விரிவான விவாதம் நிகழும். நாமக்கல்லின் முக்கிய இலக்கிய ஆய்வாளர் பொ.வேல்சாமி [‘பொற்காலங்களும் இருண்டகாலங்களும்’, ‘கோயில் நிலம் சாதி’ போன்ற நூல்களின் ஆசிரியர்] பெரும்பாலும் கலந்துகொள்வார்.
நான் இரு வருடங்களுக்கு முன்னால் பொ.வேல்சாமியைப்பார்க்க நாமக்கல் சென்றிருந்தபோது கூடு குழும நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறேன். பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினேன். உற்சாகமூட்டும் உரையாடலாக இருந்தது. பொதுவாக தமிழாய்வு மானவர்களின் மனத்தேங்கல் நம்மை சோர்வடைய வைக்கும். எங்கும் எப்போதும் ஒரே கேள்விகளையே கேட்பார்கள். அங்கிருந்த மாணவர்கள் வேறுவகையாக, இலக்கிய அடிபப்டைகளில் நன்கு அறிமுகம் கொண்டவர்களாக இருப்பதைக் கண்டேன். அது பெருமாள் முருகனின் பங்களிப்பு என்று புரிந்தது.
இத்தகைய சிறிய தொடர்முயற்சிகள் பெரும்பாலும் பெருமாள் முருகன் போன்ற தனிநபர்களின் சலியாத இலக்கிய ஆர்வத்தின் சாட்சியங்கள். அவை நிகழும்போது சாதாரணமாக இருக்கும். பங்கேற்பாளர்களிந் ஈடுபாடு சட்டென்று குறைவதும் காரணமில்லாமல் எழுவதுமாக பொறுமையைச் சோதிக்கும். ஆனால் நம்மையறியாமலேயே ஒரு வரலாறு உருவாகிக் கொண்டிருப்பதை சற்று கழிந்துதான் அறிவோம். கலையிலக்கியத்துறைகளில் நிகழும் எதுவும் வீணாவதில்லை, முற்றாக மறக்கப்படுவதும் இல்லை.
கூடு நிகழ்வு அதன் ஆவது கூட்டத்தை முடித்திருப்பதை அப்படிபப்ட்ட ஒரு வரலாற்றுப் புள்ளியாகச் சொல்லவேண்டும். அதில் பங்கெற்ற நண்பர் ஒருவர் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்.
” ‘கூடு’ என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழாவும் 25ஆவது அமர்வும் நாமக்கல்லில் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் இல்லத்தில் சிறப்பாக (20.07.2008 மாலை 4.00 – 7.00 ) நிகழ்ந்தது. இதில் ப.செயப்பிரகாசம் மற்றும் பிரபஞ்சம் ஆகியோர் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்கள்
ப.செயப்பிரகாசம் ‘வட்டார இலக்கியம்’ என்ற தலைப்பிலும் பிரபஞ்சன் ‘கதைகளினூடே பயணம்’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர். மூன்று பெண்கள் உள்பட முப்பது ஆண்கள் கலந்துகொண்டனர். பெரும்பாலானோர் தமிழ் ஆய்வாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வு முருங்கை மரத்தின் கீழ் நடைபெற்றதால் நிகழ்ச்சியினைத் தொடங்கிவைத்து உரையாற்றிய பெருமாள் முருகன் பிரபஞ்சனின் ‘பிருமம்’ என்ற கதையினை நினைவுகூர்ந்து பேசினார். முருங்கை மரத்தினைப் பிரபஞ்சன் ‘பிருமம்’ என்று அக்கதையில் கூறியிருந்தார். நிகழ்வில் திரு. ப. செயப்பிரகாசம் மொழியின் முக்கியத்துவம், வட்டாரச் சொற்களின் அழிவு, கரிசல் எழுத்தாளர்கள் வட்டாரமக்களின் புழங்குபொருள் சார் வழக்காறுகள் போன்றன பற்றி விளக்கிக்கூறினார். இவரது உரை தஞ்சை மற்றும் கரிசல் வட்டார இலக்கியத்தைப் பற்றி மட்டும் இருந்தது.
திரு. பிரபஞ்சன் கதை படிப்பதன் நோக்கம் என்ன, கதையைப் படைப்பதன் நோக்கம் என்ன, சிறந்த கதை எவ்வாறு இருக்கும் என்று பல்வேறு சிறுகதைகளை எடுத்துக்கூறி விளக்கினார். வரலாற்று மீட்டுருவாக்கக்கதைகள் என்ற போர்வையில் எழுதப்படும் விசம்தோய்ந்த கதைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இரண்டுபடைப்பாளர்களும் தங்களின் உரையில் உதாரணத்திற்காகக் கூடத் தாங்கள் எழுதிய கதைகளைப் பற்றிக் கூறவில்லை என்பது இலக்கிய அவையடக்கத்திற்குச் சான்றாக இருந்தது.
சிறப்புரைகளைத் தொடர்ந்த கலந்துரையாடல் நிகழ்ந்தது. பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதோர் இலக்கியம் பற்றியும் கணிப்பொறிப் பயன்பாட்டினால் ஏற்படும் வட்டார வழக்குச் சொற்களின் அழிவு பற்றியும் வட்டார இலக்கியங்களின் பயன் குறித்தும் வினாக்கள் எழுப்பப்பட்டு விடைகள் பெறப்பட்டன.
நிகழ்ச்சியின் நன்றியுரையில் சரவணன் மறைந்த எழுத்தாளர் திரு. நா.பார்த்தசாரதி நடத்திய ‘தீபம்’ இலக்கிய அரங்குபோலக் ‘கூடு’ இலக்கிய அரங்கும் அழிந்துபடக் கூடாது என்று தனது ஆதங்கத்தை முன்வைத்துப் பேசினார்.
சிறப்பு விருந்தினருக்குப் பெருமாள் முருகன் அவர்கள் நினைவுப் பரிசாகப் புத்தகம் வழங்கினார். தேனீர் விருந்துடன் அரங்கு கலைந்தது. நிகழ்ச்சியினை ம. நடராஜன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
– சரவணன்