இனிய ஜெயம்
ஒரு சிறிய பயணம் முடிந்து இன்று மாலை கடலூர் வந்து இறங்கினேன். இரண்டு அரங்குகளில் வெந்து தணிந்தது காடு. காலை 5 மணி காட்சி முதலே அரங்கம் நிறைந்து ஓடிக்கொண்டிருக்கிறது என்று நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு இந்த படம் பிரத்யேகமானது. உங்கள் கதை கொண்டு வெளியாவதால் இதன் அதிரி புதிரி ஹிட் நிலையை ஆவலுடன் எதிர் நோக்கி இருந்தேன். மகிழ்ச்சி.
வீடு திரும்ப ரயில்வே ஸ்டேஷன் கடக்கயில் எப்போதும் போல கண்கள் இயல்பாக நரிக்குறவர் குடும்பத்தை தேடியது. இருந்தார்கள். இரவை எதிர்கொள்ள கொசுவலை கூடாரங்களை விரித்துக்கொண்டிருந்தார்கள்.
முன்பெல்லாம் கடலூர் போன்ற சிறு நகரங்களில் புதுப்பட வெளியீட்டில் அரங்கம் நிறைப்பவர்களாக முன்னணியில் நரிக்குறவர் கும்பலை பார்க்கலாம். எம்ஜியார் உருவாக்கி எடுத்தது இது. மிக சமீப காலம் வரை நீடித்தது. மால் கலாச்சாரம் வந்து அரங்குகள் வடிவம், கணினி வழியே முன்பதிவு என எல்லாம் மாறியவுடன் இந்த நிலை மறைந்து விட்டது.
இதோ இப்போது கொசு வலைக்குள் ஒரு அம்மாள் அமர்ந்து மொபைலில் விஜய் படம் பார்த்துக்கொண்டு இருக்கிறார். ஜியோ புரட்சி. இயல்பாக பத்ம பாரதி அவர்கள் நினைவு வந்தது. இதோ இப்போதுதான் அவர்களை வீட்டில் இறக்கிவிட்டு வந்தது போன்ற உணர்வு. அதற்குள் ஒரு மாதம் நகர்ந்து விட்டது. இடையில் கதை கவிதைகள் அளித்த எத்தனை வாழ்வு, இலக்கிய கூடுகை வழியே எத்தனை முகங்கள், சிறு சிறு பயணங்கள் கோயில்கள், வந்து சேர்ந்த வசைகள் பாராட்டுகள் எனது ஒரு மாதத்துக்குள் மூன்று மாத வாழ்வு மடித்து சுருட்டி வைக்கப்பட்டிருக்கிறது போல ஒரு உணர்வு.
மனம் நகரவேண்டி, வாட்ஸாப் செய்தி திறந்தேன். நரிக்குறவர்களை பழங்குடி பிரிவில் சேர்த்து, அரசு வழியே பழங்குடி கொள்ளும் அத்தனை சலுகையும் அவர்களுக்கும் உண்டு என்று இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக செய்தி வந்திருந்தது.
என் கண் முன்னால் நான் காணும் ஒரு சமூக மாற்றம். இனி இவர்கள் நிலையான கணக்கெடுப்புக்குள் வருவார்கள். பின்னர் ஓட்டு வங்கி என்று மாறி அரசின் முழு ஆதரவினை பெறுவார்கள். இன்னும் அரை நூற்றாண்டில் மேலும் பல விஷயங்கள் மாறும்.
கடலூர் சீனு
அன்புள்ள சீனு,
ஆறாண்டுகளாகவே இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. பல இடங்களில் பல தடைகள். நண்பர் ராஜமாணிக்கம் இதில் ஒரு குறிப்பிடத்தக்கப் பங்காற்றினார் என்பது நம் நண்பர்களுக்குத் தெரியும். அம்முயற்சியில் பெரும் உதவியாக இருந்தது கரசூர் பத்மாவதியின் நரிக்குறவர் இனவரைவியல் என்னும் நூல். அது கல்வித்துறை ஆவணம் என்பது கூடுதல் வலு சேர்த்தது. இப்போது இதன் அரசியல்சார்ந்த உரிமைகோரல்களுக்குள் செல்லவேண்டியதில்லை. ஒரு நல்ல ஆய்வு என்ன செய்யக்கூடும் என்பதற்கான சான்று இது
ஜெ