அறத்தொடு நிற்றல்

அறம் என்னுடைய இலக்கிய வாழ்க்கையில் நிகழ்ந்த முன்நகர்வுப் படிகளில் ஒன்று. திரும்பிப்பார்க்கையில் ரப்பர் வழியாக அறிமுகமானது முதல்படி. அதன் பிறகு விஷ்ணுபுரம், அதன்பிறகு கொற்றவை, அதன்பிறகு அறம் என்று அவ்வாறு சில படிகளை நான் அடையாளம் காண்கிறேன். ஏறத்தாழ அதே காலகட்டத்தில் தான் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பை உருவாக்கிக்கொண்டிருந்தேன். இன்று பல கிளைகளாக சில ஆயிரம் பேரை இணைத்துக்கொண்டு தமிழகத்தின் மிக முதன்மையான இலக்கிய இயக்கம் ஒன்றை நடத்தும் இன்றைய மனநிலையின் தொடக்கமும் ‘அறம்’ எழுதப்பட்ட காலத்தில் தான் நிகழ்ந்திருக்கிறது.

இன்று இந்தக் கதைகளை எழுதிய காலகட்டத்தை திரும்பிப்பார்க்கிறேன். என்னுடைய இணையதளம் தொடங்கப்பட்டு, அதில் ஒவ்வொரு நாளும் வாசகர்களுடைய எதிர்வினைகள் வரத்தொடங்கி, அவர்களுடன் தொடர் உரையாடலில் நான் ஈடுபடத்தொடங்கிய காலம் அது. அதற்கு முன்பு வரை நான் சமகால அரசியலில் பெரிதாக கவனம் செலுத்தியதோ எதிர்வினை ஆற்றியதோ இல்லை. அன்றும் இன்றும் அரசியல் சமூக நிகழ்வுகளில் எழுத்தாளன் உடனடியாக எதிர்வினை ஆற்றக்கூடாது, அது அவனுடைய புனைவுத்திறனுக்கு எதிராகவே செல்லும் என்ற எண்ணமே எனக்கு உள்ளது. ஆனால் இணையதளத்தின் வீச்சும் தொடர்ச்சியாக கேட்கப்பட்ட கேள்விகளும் என்னை அரசியல் விவாதங்களுக்குள் கொண்டு சென்றன. அது ஒரு கட்டத்தில் இன்றைய நடைமுறை சார்ந்த பார்வையை அளித்தது.

இன்று யோசிக்கையில் இன்னொன்றும் தோன்றுகிறது. 2005-ல் நான் திரைப்படத்திற்குள் நுழைந்தேன். அடுத்த ஐந்தாறு ஆண்டுகளில் திரைத்துறை வழியாக இந்தியாவின் அரசியல், பொருளியல்களங்களில் முதன்மையாகத் திகழும் ஆளுமைகளை சந்திக்கவும், அந்த உலகில் புழங்கவும் என்னால் இயன்றது. நாம் நடுத்தர உலகில் பேசிக்கொண்டிருக்கும் எளிமையான விழுமியங்கள், அறங்கள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு உலகம் அது. தொடர்ந்த சமரசங்களும் தொடர்ச்சியான எல்லை மீறல்களும் கொண்டது. அங்கு செல்பவர் ஒன்று துல்லியமான தன்னலவாதியாக ஆவார் அல்லது அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து கசப்பும் சோர்வும் கொண்டவர் ஆவார். எனக்கு அந்த இரண்டாம் நிலை வாய்த்தது.

இங்கு சமூகவலைதளச்சூழலிலோ, நமது அன்றாட உரையாடல் சூழலிலோ நாம் பேசும் எதுவும் அங்கு சென்று சேர்வதில்லை. அங்குள்ள நெறிகள் வேறு. ஆனால் அவைதான் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. நாம் வெறுமே கூச்சலிடுவதற்கும் அதன் வழியாக ஒரு மெல்லிய திருப்தி அடைவதற்கும்தான் அரசியலையும் சமூகத்தையும் வெவ்வேறு கொள்கைகளையும் பேசிக்கொண்டிருக்கிறோம். உச்சத்தில் எல்லா அரசியல் தரப்பும் ஒன்றுதான். எல்லா வணிகத் தரப்பும் ஒன்றுதான். அரசியலும் வணிகமும் வேறு வேறல்ல.

ஏறத்தாழ அக்காலத்தில் தான் இந்தியாவின் உச்ச ஊழல்கள் சார்ந்து செய்திகள் வெளிவந்தன. என் நினைவு அறிந்த நாளிலிருந்தே அரசியலில் ஊழல்வெளிப்படுத்தல்கள் தான் முதன்மை நிகழ்வாக இருந்திருக்கின்றன. உண்மையில் மிக இளம் வயதில் ‘நகர்வாலா ஊழல்’ குற்றச்சாட்டை நான் வாசித்தறிந்தேன். அதிலிருந்து போஃபர்ஸ் வழியாக 3G ஊழல் வரைக்கும்.

அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கம் வழியாக இந்திய அளவில் குறைந்தபட்சம் ஊழல் ஒரு முதன்மையான அரசியல் சிக்கல் என்றும், அது இந்தியாவின் ஆத்மாவை அழியச்செய்கிறது என்றும், நீண்டகால அடிப்படையில் நம் தேசத்தின் பொருளியலுக்கே எதிரானது என்றும் சாமானியர்கள் உணர்வார்கள் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் மிக விரைவாகவே அந்த அலை அடங்கி மேலும் நம்பிக்கையின்மையை உருவாக்கியது.

அக்காலகட்டத்தின் ஒட்டுமொத்தச் சோர்விலிருந்து வெளிவருவதற்காக மீண்டும் மீண்டும் நான் என் நம்பிக்கைக்குரிய இடங்களைத் தொட்டு தேடினேன். ‘இன்றைய காந்தி’ அவ்வாறு என்னுடைய தேடலின் விளைவு. காந்தி முழுக்க நடைமுறைவாதி, முழுமையான லட்சியவாதி. நடைமுறை லட்சியவாதம் என்பதற்கு இன்று காந்தியத்திற்கு அப்பால் ஒரு வடிவம் இல்லை. இந்தத் தேடலில் நான் சென்றடைந்த இடம் என்று அறம் கதைகளை சொல்வேன்.

அறம் கதைகள் என்னுடைய பிற கதைகளைப்போல எனக்குள்ளே நானே நிகழ்த்திக்கொண்ட கனவுகள் அல்ல. பிற கதைகளில் என்னுடைய மரபை, என்னுடைய உணர்வு ஆழங்களை, என்னுடைய ஆன்மீகத்தேடல்களை எனக்குள்ளே புனைவுகளாக விரித்துக்கொண்ட தன்மை தெரியும். அறம் கதைகளில் ஓர் உரையாடல் உள்ளது. இக்கதைகள் முதன்மையாக என்னுடைய படைப்புகளில் வாசகனை முன்வைத்து எழுதப்பட்டவை. அக்காரணத்தினாலேயே பிற கதைகளைவிட நேரடித்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் உணர்ச்சிகரத்தன்மையும் கொண்டவை. அதனாலேயே என்னுடைய எந்தக் கதைகளை விடவும் இக்கதைகள் மேலும் புகழ் பெற்றன. என்னை பல்லாயிரம் வாசகர்களுக்கு கொண்டு சேர்த்தன. தமிழிலும் மலையாளத்திலும் இப்போது ஆங்கிலத்திலும் மிகப் பரவலாக படிக்கப்படுகின்றன.

இக்கதைகளை நான் கண்ட லட்சியவாதிகளை எனது சோர்வு நிலையிலிருந்து எழுந்து சென்று தொட முயன்றிருக்கிறேன். அவர்கள் வெவ்வேறு வகையானவர்கள். ஒரு சாமானியனின் உள்ளத்தில் புகுந்து கொண்ட மதப்பணியாளரான சாமர்வெல், தன்னுடைய உணர்வு நிலையின் கீழ்மையிலிருந்து உச்சம் ஒன்றை நோக்கி எழ முயலும் மயில்கழுத்தின் கதைநாயகன், தன் மாணவனுக்காக இறங்கி விழிநீர்விடும் பேராசிரியர், இவ்வுலகையே அள்ளத்துடிக்கும் விரிந்த கரங்களுடன் நிற்கும் காரி டேவிஸ். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அந்த லட்சியவாதத்தின் வெவ்வேறு முகங்களைத் தொடுகின்றன. ஒன்றை எழுதி முடித்தவுடன் அதில் விடுபடக்கூடிய சிறுபகுதியைத்தான் அடுத்த கதை சென்று தொடுகிறது என்று இப்போது தோன்றுகிறது. அந்தக் கதைகளின் வரிசையிலேயே அந்தத் தன்மை உள்ளது. ‘உலகம் யாவையும்’ எழுதி முடித்தபோது நான் நிலைபெற்றிருந்தேன், மீண்டு விட்டிருந்தேன்.

ஒவ்வொரு நாளும் இக்கதைகள் எனது தளத்தில் வெளிவந்தன. ஒவ்வொரு மின்னல் தாக்குவது போல என்றொரு வாசகர் அதை எழுதியிருக்கிறார். தமிழ் இலக்கிய உலகில் இவ்விதம் ஒரு நிகழ்வு முன்னர் நிகழ்ந்ததில்லை. பல்லாயிரம் வாசகர்களும் ஒரு எழுத்தாளரும் ஒரே அலைவரிசையில் புனைவுகளினூடாக ஒரு தொடர் உரையாடலில் இருந்த நாட்கள். இன்று வரை அந்த விசை குறையாது நீடிக்கிறது. மிக அண்மையில் கோவை புத்தகக் கண்காட்சியில் அதே விசையில் அறம் ஏற்றுக்கொள்ளப்படுவதை நேரில் கண்டபோது புனைவின் ஆற்றல் என்ன என்று எனக்குத்தெரிந்தது.

இந்தக்கதைகளில் நான் ஆளுமைகளை முன்வைத்திருக்கிறேன், யானை டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி போல. நவீன எழுத்தாளன் பொதுவாக அவ்வாறு ஆளுமைகளை முன்வைப்பதில்லை. அதற்கு துதிபாடும் தன்மை அல்லது போற்றிப்பாடும் தன்மை தனக்கில்லை என்று அவன் காரணம் சொன்னாலும் அது உண்மை அல்ல. அவனுக்குள் அவனைத்தவிர எவரையும் முன்வைப்பவனல்ல என்பதுதான் காரணம். வெவ்வேறு வகையில் தனது சங்கடங்களை ஒவ்வாமைகளை கனவுகளை விழைவுகளை முன்வைக்கும் அவன் தனக்குத்தானே ஒரு போற்றிப்பாடலைத்தான் செய்துகொண்டிருக்கிறான். எல்லா நவீனத்துவ எழுத்தாளர்களும் தற்புகழ்ச்சிக்காரர்களே.

நான் நவீனத்துவத்தைக்கடந்து வந்த எழுத்தாளன். என்னைப் பின்நவீனத்துடன் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. பின் நவீனத்துவ கூறுமுறைகளில் எனக்கு ஆர்வம் இருந்தாலும் என்னை செவ்வியல் படைப்பாளியாகவே வைத்துக்கொள்கிறேன். பாரியைப் பாடிய கபிலனைப்போல. நாயகர்களை வரலாற்றில் நிறுத்துவதும் கலைஞனின் பணியே என்று நினைக்கிறேன். நான் எழுத வருவதற்கு முன்பு ஒரு எளிய அஞ்சலிக்கட்டுரையில் ஹிந்து பத்திரிகையில் முடிந்துவிட்டிருந்த யானை டாக்டரின் வரலாறு இன்று பள்ளிப்பாடங்களில் பல்லாயிரம் மாணவர்களால் படிக்கப்படுகிறது. ஒரு தலைமுறைக்கே டாக்டர் கே அறிமுகமாகியிருக்கிறார். அவர் இன்று ஒரு வரலாற்று ஆளுமையாக மாறிவிட்டிருக்கிறார். புனைவின் ஆற்றல் என்ன என்பதற்கான சான்று அது.

அதுவும் என்னை நான் கண்டுகொண்ட தருணம். எனது படைக்கலம் என்பது புனைவென்று நான் உணர்ந்த தருணம். அறம் கதைகளின் வழியாக நான் நெடுந்தூரம் வந்தேன். நிலைபேறு கொண்டேன். அதன்பிறகு ஐயங்கள் கொள்ளவில்லை. அந்த ஐயமற்ற குரலே விஷ்ணுபுரம் முதல் தமிழ் விக்கி வரைக்கும் இத்தனை அமைப்புகளையும் செயல்பாடுகளையும் உருவாக்குவதற்கான ஆற்றலை எனக்கு வழங்குகிறது. அது என் ஆற்றல் அல்ல, நம்பிக்கை கொண்ட ஒரு குரல் அதே நம்பிக்கையை பிறரிடம் உருவாக்குவதன் விளைவு மட்டும் தான்.

அறம் கதைகளை என் நண்பர் பவா செல்லத்துரை அவர்களுக்கு பிரசுரத்திற்காக அளித்தேன். வம்சி பதிப்பகம் இளம்படைப்புகளை வெளியிட்டு இழப்புகளுக்கு ஆளாகித் தள்ளாடிக்கொண்டிருந்த ஒரு காலத்தில் அதை முழுமையாக மீட்டெடுக்க இந்த தொகுப்பு உதவியிருக்கிறது. இன்று எனது நூல்கள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட விஷ்ணுபுரம் பதிப்பகம் வழியாக இதன் அடுத்த பதிப்பு வெளிவருகிறது. இது இன்னும் சில தலைமுறைக்கு தொடர்ந்து வெளிவரவேண்டும். இதிலிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையின் குரல் இங்கு என்றும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இத்தருணத்தில் இக்கதையின் நாயகர்களில் இன்றிருப்பவர்களுக்கும் பவா செல்லத்துரைக்கும் இதை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கும் எனது நன்றிகளை வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜெ

நாகர்கோவில்

18.08.2022

(அறம் விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீட்டுக்கான முன்னுரை)

***

அறம் வாங்க விஷ்ணுபுரம் பதிப்பகம்

முந்தைய கட்டுரைஎஸ்.ஏ. கணபதி- வீரநாயகர்
அடுத்த கட்டுரைஇன்று கோவையில்…