சாரு கடிதங்கள்

Subhan Peer Mohammed

அன்பின் ஜெ!

இன்று சாரு தன் வலைதளத்தில் விஷ்ணுபுர விருது பற்றிய கடிதங்கள் “குகை வாழ்க்கை” என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார். அதில்

’ எனக்கு எப்போதுமே உற்சாகம்தான்.  டிசம்பர் 18 அன்று ஒரு பெண், “உங்களுக்கு என் ஆயுளில் பாதியைத் தருகிறேன்” என்றாள்.  இப்போது சமீபத்தில் ஒரு பெண் “பகவதி அம்மனிடம் வேண்டுதல் செய்தேன்” என்கிறார்.  இதை விட வேறென்ன வேண்டும்?

என்றொரு வரி வருகிறது. டிசம்பர் 18 அன்று விழா என்பதாக பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. வழக்கமாக கடைசி வாரம் தானே நம் விருது விழா நிகழ்ச்சி இருக்கும். அதுவும் அதிகாரப்பூர்வமாக தாங்கள் விழா தேதி குறித்து எதுவும் அறிவிக்கவில்லையே. ஒருவேளை சாருவிடம் தாங்கள் உத்தேசமாக கூறியதைத்தான் அவருடைய வாசகர் இந்த டிசம்பர் 18 என்று கூருகிறாரா என்பது தெரியவில்லை.

எதற்கும் இருக்கட்டுமே என்று 17-18 & 24-25 டிசம்பர் கோவையில் இருக்கும்படி என் ரயில் பயணத்தை போட்டுக் கொள்கிறேன். ஆனால் எல்லோருக்கும் இந்த luxury வாய்க்காது. சிலர் விமானத்திலும், சிலர் ரயிலின் மிக நீண்ட பயணத்திலும் வரக் கூடியவர்கள், அவர்கள் அனைவரும் உரிய ஏற்பாட்டை செய்துகொள்ள விழா தேதிகள் முடிவாவது அவசியம்.

இதெல்லாம் தங்களுக்கும் முன்கூட்டியே அனுமானிக்க முடியுமென்றாலும் விஷ்ணுபுரம் என்பதில் என் சொந்த உணர்வு என்ற எண்ணம் உருவாகிறது. அதனால் இந்த மின்னஞ்சலை எழுதுகிறேன்.

கொள்ளு நதீம்

 

அன்புள்ள கொள்ளு நதீம்,

விழாத்தேதி இன்னும் முடிவாகவில்லை. தெரியுமே, நாங்கள் சிக்கனமாகவே விழாவை நடத்துவோம் – ஆனால் முடிந்தவரை கிராண்ட் ஆகவும் நடத்துவோம். அதற்கு உகக்கவே இடம் பதிவுசெய்யப்படும்.

இம்முறை முன்னரே விழாத்தேதிகள் அறிவிக்கப்படும் என நினைக்கிறேன்

ஜெ

 

அன்புள்ள ஜெ

சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது என்பது இலக்கியத்தின் எல்லைகளைக் காட்டுவது என நினைக்கிறேன். இலக்கியத்திலே எல்லாமே உண்டு. இலக்கியம் இலக்கியமல்ல என்பதுக்கான அளவுகோல் ஒன்றே. தீவிரமாக, தனக்குத்தானே தோன்றியபடி எழுதப்படுவது இலக்கியம். ஒரு பயிற்சியினால், வாசகனின் ரசனைக்காக எழுதப்படுவது. சாரு அவருடைய ஓர் உலகை அப்படி ஒரு தீவிரத்துடன் முன்வைத்துவரும் எழுத்தாளர். அவர் இங்கே உள்ள எல்லாவற்றுக்கும் வெளியே ஒரு உலகைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். அந்த உலகைச் சொல்ல அவரை விட்டால் இங்கே ஆளில்லை.

வே.சுந்தர்

விஷ்ணுபுரம் விருது,2022

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி: மலேசியக் கலைக்களஞ்சியம் அறிமுக விழா
அடுத்த கட்டுரைஎஸ்.ஏ. கணபதி- வீரநாயகர்