இன்று கோவையில்…

இன்று கோவையில் என் அறுபதாண்டு நிறைவுக்கு நண்பர்கள் விழா ஒன்று எடுக்கிறார்கள். என் பிரியத்திற்குரியவர்கள் அனைவரும் என்னை சந்திப்பார்கள். என் வாழ்க்கையில் நிறைவான ஒரு நாள்.

அறுபது என எண்ண முடியவில்லை. அறுபது என்பது முதுமை என இளமை முதலே பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறேன். என் அப்பா மறைந்தபோது இருந்த வயதை அடைந்துவிட்டிருக்கிறேன். இன்னும் ஓராண்டில் அவரை கடந்துவிடுவேன். எங்கோ இருந்து புன்னகைத்துக் கொள்வாரா என்ன?

இந்த அகவை வரை என் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கையில், 1986, அதாவது என் இருபத்துநான்கு வயது முதல் இக்கணம் வரை என் வாழ்க்கையை நானே நடத்தியிருக்கிறேன். அத்தனை அனுபவங்களையும் நேர்நின்று அடைந்திருக்கிறேன். நாட்களை வீணடிக்கவில்லை.

இன்னும் பயணம் செய்யவேண்டிய நிலங்கள் ஏராளம். இமையமலைப் பயணங்கள் இன்னும் நிறைய செய்யவேண்டும், இமையமலையில் நிறையவே தங்கவேண்டும் என்பது என் ஆசை. இனி அதற்கு முயலவேண்டும்.

இன்னும் எழுதப்படாத நாவல்கள் பல உள்ளன. குறைந்தது மூன்று நாவல்கள். அவற்றை நான் எழுதவேண்டும். அசோகவனம் சீக்கிரமே முடிக்கப்படத்தக்கது. அதைச் செய்யவேண்டும். ஒவ்வொரு நாளையும் தமிழ்விக்கி பணி எடுத்துக்கொள்கிறது. அதில் செய்ய நிறையவே இருக்கிறது.

திபெத் வழியாக சீனா சென்று ஈரான் வழியாக ஐரோப்பா வரை காரில் பயணம் செய்யும் ஒரு கனவு இருக்கிறது. இரண்டுமுறை திட்டமிட்டும் நடக்கவில்லை. கல்கத்தா வழியாக பர்மா வழியாக சிங்கப்பூர் வரை காரில் செல்லும் ஒரு திட்டமும் உள்ளது. அவற்றை விட்டுவிடக்கூடாது.

எழுத தொடங்கி நிறுத்திவிட்ட இருநூல்கள் கீதை, பதஞ்சலி யோகம். அவற்றை சரிவர எழுதவேண்டுமென்றால் மகாபாரதம் தேவை என தோன்றியமையால் வெண்முரசுக்குச் சென்றேன். அவற்றுக்கு மீளவேண்டும்.

விசித்திரமாக, அறுபதில் ஓய்வுபெறவேண்டும் என எண்ணிய எனக்கு இப்போதுதான் என் சினிமாத்தொழிலின் உச்சம் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து படங்கள். அவற்றை முடிக்கவேண்டும்.

இந்நாளில் அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து நினைத்துக்கொள்கிறேன். நேரமில்லை. அறுபது என்பது ஓர் அறிவிப்பும்கூட. இன்னமும் விசைகூட்டவேண்டியிருக்கிறது.

முந்தைய கட்டுரைஅறத்தொடு நிற்றல்
அடுத்த கட்டுரைசாரு கடிதங்கள்