கொலாசிலாங்கூர் அருகே ஓர் அலையாத்திக் காடுகளுக்கு ம.நவீனுடன் சென்றது என் வாழ்க்கையின் மறக்கமுடியாத அனுபவங்களில் ஒன்று. அந்தி மயங்கியபின் படகில் அந்த அலையாத்திக் காடுகள் வழியாக, ஒரு சிறு சேற்றுத்தீவை ஓசையின்றி சுற்றிவந்தோம். மெல்லமெல்ல அந்த தீவுக்கு கண்கள் முளைத்தன. பல்லாயிரம் கண்கள். அது கரிய பட்டுக்குள் வைத்த வைரம்போல ஜொலிக்க ஆரம்பித்தது.
உலகமக்களின் சொத்து அந்த அலையாத்திக் காடு. உலகில் எஞ்சியிருக்கும் மகத்தான இயற்கைச்செல்வங்களில் ஒன்று. அதை சுற்றுலாவின்பொருட்டு அழிக்கவிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டபோது கொதிப்பாக இருந்தது. உலகின் மகத்தான இயற்கைச் செல்வத்தை அழித்து அங்கே கேளிக்கைநிலையங்கள் உருவாக்கப்படுவது சுற்றுலா என எவர் முடிவுசெய்கிறார்கள்?