கூந்தல்!

2000-க்குப்பிறகு எனக்கு பிரபல இதழ்களில் எழுதுவதற்கு அழைப்புகள் வந்தன. அவர்கள் எவரும் என்னிடம் பிரபல வாசிப்புக்கான எழுத்தை எழுதும்படி கூறவும் இல்லை. நான் விரும்புவதை எழுதலாம் என்றனர். பெரும்பாலும் அவர்கள் வெளியிட்ட இலக்கியச் சிறப்பிதழ்களில் அல்லது தனி மலர்களில் நான் எழுதினேன். கூந்தல் குமுதத்தில் எழுதப்பட்ட கதை என்று இப்போது படித்துப்பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. உரையாடல் வழியாகவே இருதலைமுறைகளின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் அப்படைப்பை குமுதம் வாசகர்கள் எப்படி எதிர்கொண்டிருப்பார்கள் என்றொரு திகைப்பு எனக்கு இருந்தது.

ஆனால் பதினைந்து ஆண்டுகளுக்குபின் அறிமுகமான ஒரு இளைஞர் இலக்கியமென தனக்கு முதலில் அறிமுகமானது குமுதத்தில் வெளிவந்த ‘கூந்தல்’ எனும் கதை என்று எனக்குச் சொன்னார். அந்தக்கதை அதுவரை வாசித்த அத்தனை கதைகளிலிருந்தும் வேறுபட்டிருந்தது. கற்பனையை அற உணர்வை உலுக்கியது. அதைவிட அதிகமாக அது பாதி புரிந்தும் பாதி புரியாமலும் அமைந்து பல நாட்கள் அலைக்கழித்தது. கூந்தலை பறிகொடுக்கும் ஒரு யுகத்திலிருந்து கூந்தலை தானாக வெட்டும் ஒரு யுகம் வந்திருக்கிறது. கூந்தலை வளர்ப்பது விடுதலையாக இருந்த காலம் சென்றுவிட்டது. இன்று கூந்தலை இழப்பது விடுதலையாக ஆகிறது. அந்தக்கதையினூடாக தான் நெடுந்தூரம் சென்றதாகவும் அதன் வழியாகவே ஜானகிராமனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் சென்றதாகவும் அந்த நண்பர் சொன்னார். குமுதத்தில் எழுதியது வீணாகவில்லை என்ற எண்ணத்தை அடைந்தேன்.

இத்தொகுதியிலுள்ள பல கதைகள் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு மனநிலைகளில் எழுதப்பட்டவை. எல்லா நிலையிலும் அவை இலக்கியப்படைப்புகளே என் தேடல் சென்று முட்டிய சில புள்ளிகள் அவை. வாசகர்களுக்கு என்னுடைய கண்டடைதல்களைப்போலவே தயக்கங்களையும் தடுமாற்றங்களையும் அவை காட்டக்கூடுமென்று நினைக்கிறேன். இதன் முதல் பதிப்பை வெளியிட்ட கவிதா பதிப்பகம் சொக்கலிங்கத்திற்கும் இப்போது மறுபதிப்பை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

ஜெ

நாகர்கோவில்

14.06.2022

கூந்தல் சிறுகதைத்தொகுப்பு வாங்க

துளிக்கனவு சிறுகதைத்தொகுப்பு வாங்க

முந்தைய கட்டுரைசித்தூர் சுப்ரமணிய பிள்ளை, சாதிமாற்றம்!
அடுத்த கட்டுரைஅக்டோபர் 1,2 வாசிப்பு பயிற்சி முகாம் இடங்கள் நிறைவு