அறம், முதல்வருக்கு…

சந்திப்புகளில் பரிசு

அறம் நூலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கும் செய்தியின் புகைப்படத்தை நண்பர் கதிரேசன் அனுப்பியிருந்தார். மகிழ்ச்சியாக இருந்தது. முன்பென்றால் அதிலென்ன இருக்கிறது என நினைப்பேன். இன்று, மொத்த தமிழகமே வாசிப்புக்கு எதிரான ஒரு மனநிலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் சூழலில் அது மிக முக்கியமான ஒரு குறியீட்டு நிகழ்வு என நினைக்கிறேன். இந்த அரசு நூல்களை மதிக்கிறது என்பதற்கான சான்று அது. நூல்களை முன்னிறுத்துவதன் அடையாளம் அது.

அதை பல்லாயிரம்பேர் பார்க்கிறார்கள். சிலருக்காவது நூல்களின் முக்கியத்துவம் சென்று சேரலாம். சிலருக்காவது அதை வாசிக்கவேண்டும் என்னும் எண்ணம் உருவாகலாம். நூல்களை பரிசு கொடுக்கும் வழக்கம் உருவானால் நூல் விற்பனை பெருகும். அது நலிந்துகொண்டிருக்கும் நூல்வெளியீடு என்னும் இந்த துறை மேலும் நீடிக்க வழிவகுக்கும். நூல்வெளியீட்டுத்துறை நீடிக்கும்போதே எழுத்தும் வாசிப்பும் நீடிக்க முடியும்.

அரசு நிதி உதவி உட்பட பல நடவடிக்கைகளைச் செய்யலாம். ஆனால் அனைத்தையும்விட முக்கியமானது இந்த நடவடிக்கை. எல்லா அரசும் ஒருவகை குறியீடே. அரசுச்செயல்கள் எல்லாமே குறியீட்டுச் செயல்பாடுகள். ஸ்டாலின் இன்று தமிழகத்தின் அதிகாரபூர்வ அடையாளம். அவருக்கு அந்நூல் வழங்கப்பட்டது நிறைவளிப்பது அதனால்தான்.

முந்தைய கட்டுரைசாரு, கடிதங்கள்
அடுத்த கட்டுரைம.வே.பசுபதி