விடுதலை, ஒரு கடிதம்

அன்புள்ள ஜெமோ

நீங்கள் எழுதிய துணைவன் பற்றிய சிறுகுறிப்பு கண்டேன். அதைப்பற்றி ஒன்று மட்டும் சொல்லவேண்டும் என்று தோன்றியது. நான் இடதுசாரி எம்.எல் இயக்கங்களில் இருந்திருக்கிறேன். நாம் தர்மபுரி காலகட்டம் முதல் அறிமுகமானவர்கள். இந்த துணைவன் கதையை விகடனில் வந்தபோதே வாசித்திருக்கிறேன். அதைப்பற்றி நாம் பேசியிருக்கிறோம். 

அந்தக்கதையில் எனக்கு மாறுபட்ட பல கருத்துநிலைபாடுகள் உண்டு.  இப்போதும் அந்தக்கதையின் மையமான உணர்வு புரட்சிகர மனநிலைக்கு எதிரான மனநிலையில் இருந்து எழுதப்பட்டது என்றுதான் நினைக்கிறேன். இன்றைக்கு நான் நிறையவே விலகி வந்துவிட்டேன். ஆனாலும் அதுதான் என் நினைப்பு.

ஆனால் நான் சொல்லவந்தது வேறொரு விஷயம் சம்பந்தமாக. அதாவது அதில் அந்த எம்.எல் தோழரின் பெயர் கோனார் என்று இருப்பது தவறு என்று சமீபத்திலே தமிழ் ஹிந்துவில் எழுதியிருந்தார்கள். எம்.எல் தோழர்கள் அப்படி சாதிசார்ந்து பெயர் வைத்துக்கொள்ள மாட்டார்கள், அவர்கள் புரட்சிகரமாக பெயர் வைத்துக்கொள்வார்கள் என்று எழுதியிருந்தனர். 

பிறகு தேடியபோது ஒரு பத்திரிக்கையாளர் அப்படி விரிவாக எழுதியிருந்ததை கண்டேன். அதை ஒட்டித்தான் இவர்கள் எழுதியிருக்கிறார்கள்.  அந்த பத்திரிக்கையாளர் எழுதியதை வைத்துப்பார்த்தால் அவருக்கு ஒன்றுமே தெரியாது. சினிமா பார்த்த அனுபவம்தான் இருக்கிறது என நினைக்கிறேன். பொதுவாக எம்எல் இயக்கங்களில் ஒரு பெயர் இருக்கும். அது ரகசியப்பெயர். அது வெளியே தெரியாது. அது குறியீட்டுப்பெயராக இருக்கும். மற்றபடி வெளியே தெரியும் பெயர் ரெண்டு. ஒன்று போலீஸ் போடும் பெயர். அதுதான் பொதுவாக பிரபலமாக இருக்கும். அது சாதி, மத அடையாளம் சார்ந்த பெயராகத்தான் இருக்கும். அல்லது ஊர் பெயராகவும் இருக்கும். 

அதேசமயம் அந்த எம்.எல் தோழர் எங்கே தலைமறைவாக இருக்கிறாரோ அதுக்கேற்ப அவர் ஒரு பெயர் வைத்துக்கொள்வார். அது மக்களோடு மக்களாக கலந்து அடையாளம் காணமுடியாத பெயராக இருக்கும். பெரும்பாலும் அப்படி ஒரு இடத்தில் ஒரு தோழர் தனக்காகச் சூட்டிக்கொண்ட தலைமறைவுப்பெயரே அவருடைய பெயராக நிலைத்துவிடும். போலீஸ் ரெக்கார்டிலும் அந்தப்பெயர் சிலசமயம் இருக்கும். எந்த தோழரும் புரட்சிப்பெயர் சூட்டிக்கொண்டு தலைமறைவாக இருக்கமாட்டார். எந்த தோழருடைய பெயரும் புரட்சி அடையாளத்துடன் இருக்காது. இருக்கவும்கூடாது. 

மக்கள் நடுவே மாட்டுத்தரகராக வாழ்ந்தவர் துணைவன் கதையில் உள்ள தோழர். அவர்செந்தோழன்’ ‘தீக்கனல்என்றெல்லாம் பெயர் வைத்துக்கொள்ள மாட்டார். அவர் படித்தவரும் கிடையாது. மார்க்ஸிசமோ கோட்பாடோ தெரிந்தவர் கிடையாது. ஆனால் ஆத்மார்த்தமானவர். அவருடைய குறைவான அறிவும் அதேசமயம் அவருக்கு இருந்த நக்கல் நையாண்டியும் கதையில் உள்ளது. கோனார் என்று பெயர் இருப்பதைக் கண்டதுமே அது போலீஸ் போடும் பெயர் என்றுகூட தெரியாமல் நம்மவர் இருக்கிறார்கள். கதை பற்றிக் கருத்தெல்லாம் சொல்கிறார்கள்.

என்ன சொல்ல வருகிறேன் என்றால் இன்றைக்கும் பல பழைய எம்.எல். தோழர்கள் வாழ்கிறார்கள். அதற்குள் அந்த இயக்கம், அந்த மனிதர்கள் பற்றி ஒன்றுமே தெரியாமல் ஆகிவிட்டது. சினிமா பார்த்து எம்.எல் தோழர்களெல்லாம் இடுப்பில் புல்லட்பெல்ட் தோளில் ரைஃபிள் செம்புரட்சிப்பெயர், அச்சுபோட்ட பாஷையில் டயலாக் எல்லாம் பேசிக்கொண்டு வாழ்வார்கள் என்று பத்திரிக்கையாளர்களே நினைக்கிறார்கள். இன்னும் கொஞ்ச காலத்தில் நிஜ எம்.எல் தோழர்கள் அப்படியே மறைந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். 

மற்றபடி நலம்தானே? கைதிகள் கதையும் ஒரு நல்ல படைப்பு.  அதைவிட நல்ல கதைகள் உள்ளன.

ஆர்

அன்புள்ள ஆர்,

பிரேம் நசீர் ஒரு படத்தில் சி.ஐடி. ஆக வருவார். படம்பெயர் சிஐடி நசீர். முதல்காட்சியில் அவர்ஞானொரு சி..டீ!” என்று ரயிலில் மக்கள் நடுவே பாய்ந்து பாய்ந்து பாடுவார்.

நம் இதழாளர்களின் தரம் இந்நிலையில் இருக்கிறது. அதிலும் இக்கட்டுரையை எழுதியவரை எனக்கு தெரியும். தனிவாழ்க்கையில் நான் சந்திக்க நேர்ந்ததிலேயே மிகப்பெரிய அசடு அவர். அசடுகளுக்கே உரிய அளவற்ற தன்னம்பிக்கை கொண்டவர். எனக்கு அவர்மேல் பரிதாபம்தான். அத்தகையோருடன் எந்த உரையாடலுக்கும் நான் தயாராவதில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைவிளிம்புகளில் ரத்தம் கசிய…[சுஜாதாவின் நாடகங்கள்]
அடுத்த கட்டுரைகே.ஆர்.எஸ்- கடிதம்,விளக்கம்