துணைவன்

விடுதலை என் சிறுகதை ஒன்றிலிருந்து விரித்தெடுக்கப்பட்ட கதை. பொதுவாகச் சிறுகதைகளே சினிமாவுக்கு உகந்தவை. எம்.டி.வாசுதேவன் நாயரின் புகழ்பெற்ற திரைக்கதைகளெல்லாம் சிறுகதைகளை அடியொற்றியவையே. நாவலை சினிமாவாக ஆக்குவது கடினம். அதை பல மடங்கு சுருக்கவேண்டும். அதன் உச்சங்களை, முக்கியமான கதைமாந்தரை, கதைக்களத்தின் ஒரு பதியை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். சிறுகதையில் ஒரே உச்சம்தான் இருக்கும். களமும் கதைமாந்தரும்  எல்லாம் குறைவானவை. உண்மையில் சினிமா என்பது ஒரு சிறுகதை, அல்லது குறுநாவல். ஆனால் வெந்து தணிந்தது காடு ஒரு நாவலின் கட்டமைப்பு கொண்டது.

விடுதலை நம் சூழலில் கண்ணெதிரே நிகழ்ந்த ஒரு கதை. மிக எளிமையான ஒரு வினாதான் அதிலுள்ளது. இங்கே மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் காவலர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? அவர்களும் அந்த மக்களிடமிருந்தே எழுபவர்கள். அவர்களும் வறுமையை, ஒடுக்குமுறையை, சுரண்டலை அறிந்தவர்கள். அவர்களுக்கு என்ன ஆகிறது?

நான் திருப்பத்தூரில் இருக்கையில் அறிந்த இடதுசாரிக்குழுத் தலைவர் ஒருவரின் நையாண்டியும் , அப்பாவித்தனமும் கலந்த பேச்சு என் நினைவில் இன்றுமுள்ளது. மிக அடிப்படைக்களத்தில் இருந்து வந்தவர். கற்றவரல்ல, ஆகவே கற்றவரிடம் இல்லாத நம்பிக்கையும் தீவிரமும் அவரிடமிருந்தது. அவரையும் நான் தர்மபுரியில் பணியாற்றியபோது நேரில் சென்று அறிந்த வாச்சாத்தி தாக்குதலின் சித்திரங்களும் கலந்து உருவானது விடுதலை கதை

என் இணையப்பக்கத்தில் நான் எழுதிய எல்லாமே இருக்கும். என் பயணங்கள் அவற்றில் தெரியும். ஒரு நண்பருக்கு அளித்த வாக்குறுதிக்காக இரண்டு பகடிக்கட்டுரைகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. துணைவன் இணையப்பக்கத்தில் முன்பு வெளியாகியது. சினிமாவுக்காக மறைக்கப்பட்டது. முன்பு விகடனில் வெளியானது அது. தொகுப்புகளிலும் அது இல்லை. சினிமாவுக்குப்பின் வெளியிடுவேன்.

முந்தைய கட்டுரைலக்ஷ்மி – அடக்கம்!
அடுத்த கட்டுரைபுத்தகக் கண்காட்சியில் மேடைப்பேச்சாளர்கள்