கே.ஆர்.எஸ் – கல்வித்தகுதிகள்

அன்புள்ள ஜெமோ,

நான் உங்கள் நெடுநாள் வாசகன். நீங்கள் கண்ணபிரான் ரவிசங்கர் குறித்து உங்கள் தளத்தில் எழுதியுள்ளீர்கள். (தூய்மைவாதிகள் வருக). அவர் தான் தமிழில் அல்லது ஒப்பியலில் கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றதாகச் சொல்லியிருந்தார்.மேலும் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் தமிழில் பேராசிரியராக இருப்பதாகவும் சொல்லியிருந்தார்.  சமீபத்தில் அவருக்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில்கூட கௌரவ முனைவர் பட்டம் கொடுத்தனர்.

ஆனால் பெர்க்லி பட்டம் முழுமையான பொய் என்று தெரியவந்துள்ளது. பாரிஸ் பல்கலைக்கழக வேலையும் பொய் என்று தெரியவந்துள்ளது. இவரைத்தான் திராவிட இயக்கத்தவர்கள் தமிழின் முதன்மை அறிஞர் என்று அறிமுகம் செய்து வந்தனர். அதுபோக தமிழ் இணையக் கல்விக்கழக ஆலோசனைக் குழுவிலும் பேராசிரியர் என்ற போர்வையில் இருக்கிறார். முதல்வரையும் சந்தித்தார். மேலும் இவர் தன்ட்விட்டர் தளத்தில் பார்ப்பனர்களை மிக மோசமான வசவு செய்துவந்தார். வசவு
என்றால் ஆபாச வார்த்தைகளில்.

தங்களின் கவனத்திற்கு..

https://thecommunemag.com/its-official-anti-hindu-dravidian-stockist-promoted-by-dmk-is-a-con-man-had-lied-about-his-phd-from-uc-berkeley/

https://thecommunemag.com/dmk-promoted-brahmin-baiting-dravidian-stockist-author-accused-of-faking-ph-d-from-uc-berkeley/

https://twitter.com/dinosaurnet/status/1564246361796640768?s=21&t=rGsuF83TnxDw7QMkapWiWw

https://twitter.com/Bagabondo512/status/1563579333175697409?t=wNwPKAGYRvoYuK9KvdnNIA&s=35

அவர் படிப்பு மற்றும் ஆராய்ச்சியை மட்டுமல்ல.. தன்னுடைய ஆசிரியர்கள்
(குருக்கள்) என ட்விட்டரில் குறிப்பிட்டவர்களும் கற்பனையே. பெயர்கள்
உட்பட.

கண்ணபிரான் ரவிசங்கர் சம்பந்தப்பட்ட பெரும்பாலானவை பொய்களாகவே இருக்கின்றன.அவர் தான் ஆராய்ச்சி செய்த, வேலை பார்த்த பல்கலைக்கழகங்கள் யாவும் இப்படிஒரு நபர் தங்கள் மாணவ, ஆசிரியர் ஏடுகளிலேயே இல்லை என கைவிரித்து விட்டன.

இவ்வளவு பொய்களைக் கொண்டு இத்தனை வருடங்களாக ஒருவர் தமிழ் சமூகத்தில்முக்கியமான அறிஞராக ஒரு குழு தொடர்ந்து முன்னிலைப்படுத்திய காரணம் என்னவாக இருக்கும்.ஏன் திராவிடர் கழகங்கள் பெரியாரின் யுனெஸ்கோ விருது உட்பட இதுபோன்றபடிப்பு மற்றும் விருதுக் குழப்பங்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்? அல்லது அறிவுசார் உலகம் இப்படியும் இயங்குகிறதா? (அரசியல் சார்புகளைத் தாண்டி!)

அன்புடன்,

தீனதயாளன்.

***

அன்புள்ள தீனதயாளன்,

நான் அமெரிக்க பல்கலைக்கழக பட்டம் என்பதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அங்கே சர்ச் யூனிவர்ஸிட்டிக்கள் உண்டு. ஒரு சின்ன கட்டிடத்திலேயே சட்டபூர்வமான பல்கலைக்கழகங்கள் இயங்கும். பட்டங்களும் அளிக்கப்படும். பலவகையான நோக்கங்களுடன் சமூகவியல் மானுடவியல் சார்ந்தும், கிறிஸ்தவ இறையியல் சார்ந்தும் முனைவர் பட்டங்களே அள்ளி வழங்கப்படுவதுண்டு. பெரிய பல்கலைகளிலேயே பணம் கட்டி படித்து வாங்கும் எளிமையான பட்டையப் படிப்புகளுண்டு.

நான் கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களை கவனித்தது, அவரிடமிருக்கும் மொழியடிப்படைவாத நோக்குக்காக. அது பாவாணர் மரபு வந்தது. அதை நான் ஏற்கவில்லை. ஆனால் அந்தத் தரப்பு முக்கியம், அது நம் பண்பாட்டுச்சூழலில் இருந்தாகவேண்டும், இல்லையேல் மொழியின் வேர்கள் பிடுங்கப்பட்டு அது பறந்துவிடும் என நினைக்கிறேன். அந்த மொழியடிப்படைவாதத்திற்கு ஒரு ஆழ்ந்த தமிழ்ப்பயிற்சி வேண்டும். அது அவருக்கு உண்டு. ஆகவே அவருடைய தமிழறிவை மதிக்கிறேன்.

அவருடைய பிராமண எதிர்ப்பு பற்றி. அதுவும் சூளை சோமசுந்தர நாயக்கர், மறைமலையடிகள், ஞானியாரடிகள், தேவநேயப் பாவாணர் ,இலக்குவனார் என தொடர்ச்சியாக மூன்று தலைமுறைகளாக இருந்து வருவதே. அதற்கும் ஆழமான பண்பாட்டுவேர்கள் உண்டு. தொடர்ச்சியாக தமிழின் தனித்தன்மையையும் தமிழ்ப்பண்பாட்டின் தனித்தியங்கும் தன்மையையும் மறுக்கும் பிராமணத் தரப்பு ஒன்று இங்கே இருந்தது.

நீங்கள் கே.என்.சிவராஜ பிள்ளை வாழ்க்கையை வாசித்தாலே தெரியும். அவர் அப்படிப்பட்ட ஒரு விவாத அரங்கில் சுப்ரமணிய ஐயர் எம்.ஏ என்பவரால் தமிழ் எள்ளிநகையாடப்பட்டு , கீழ்மைசெய்யப்பட்டதைக் கண்டு சீற்றம் கொண்டார். அதன்பின்னரே காவல்துறை அதிகாரியான அவர் தமிழாய்வில் ஈடுபட்டார். தமிழின் காலக்கணிப்பு முறையில் பெரும் பங்களிப்பை ஆற்றினார். ஆகவே அந்த எதிர்நிலையையும் புரிந்துகொள்கிறேன்.

நான் அதை ஏற்கவில்ல, எந்த எதிர்நிலையும் எனக்கு ஏற்புக்குரியதல்ல. ஆனால் அது ஒரு தனிநபர் காழ்ப்பு அல்ல. அந்த மேட்டிமைத்தரப்பு நேற்று இருந்தது, இன்று இல்லை என நானே பத்தாண்டுகளுக்கு முன்புகூட நினைத்திருந்தேன். அது அப்படியே, அதே காழ்ப்புடனும் நையாண்டியுடனும் நீடிக்கிறது என்பதை நண்பர்கள் என எண்ணிய சிலர் வழியாக அனுபவபூர்வமாக உணர்ந்தேன். அதில் இருக்கும் எதிர்மறை மனநிலையும், மானுடவெறுப்பும், மேட்டிமைத்தனத்தின் விளைவான உக்கிரமான காழ்ப்பும் எவரும் இணையவெளியிலேயே வாசிக்கத்தக்கவையாக கிடைக்கின்றன. அது இருக்கும் வரை இதுவும் இருக்கும்.

மற்றபடி, கண்ணபிரான் ரவிசங்கரின் படிப்புத்தகுதி, ஆய்வுத்தகுதி பற்றிய சந்தேகங்கள் கிளப்பப்பட்டுள்ளன. அவர் சொன்ன கல்விநிலையங்களில் அவர் சில வகுப்புகளில் கலந்துகொண்டாரே ஒழிய அந்தப் பட்டங்களை பெறவில்லை என்று சில ஆதாரங்களையும் சிலர் காட்டினர். தமிழ் விக்கி விழாவுக்காக சென்ற ஏப்ரலில் அழைக்கப்பட்ட சில பேராசிரியர்களே சொன்னார்கள் (அவர்கள் அவருடைய கருத்தியல் தரப்பைச் சேர்ந்தவர்கள்தான்). அவர்கள் அதை பொதுவில் வைக்கட்டும், கேஆர்எஸ் பதில் சொல்லட்டும் என்று விட்டுவிட்டேன்.

இப்போது, இந்த விவாதம் அடிப்படை ஆதாரங்கள் சிலவற்றுடன் எழுப்பப்பட்ட நிலையில் கே.ஆர்.எஸ் தன் பட்டங்கள், ஆய்வுகள் பற்றிய நேரடியான ஆவண ஆதாரங்களை வெளியிடவேண்டும். செய்வார் என நினைக்கிறேன். அவ்வாறில்லை, அவர் மிகையோ பொய்யோ சொல்கிறார் என்று ஆனால் கூட, அவருடைய தரப்பை ஒட்டுமொத்தமாக மறுக்க அதை ஆதாரமாக நான் கொள்ள மாட்டேன்.

ஜெ

தமிழ் விக்கி பதிவுகள்

முந்தைய கட்டுரைதொ.மு.சி.ரகுநாதன் கொடியேற்றி, இறக்கியவர்
அடுத்த கட்டுரைசாரு, கடிதங்கள்-2