சாரு நிவேதிதா – தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ,
சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது என்பது சிறப்பான செய்தி. தமிழில் எழுதிவரும் ஓரு முக்கியமான எழுத்தாளர். அவருடைய எழுத்தை ஒரு தனிக்கதை, ஒரு தனி நாவல் என எடுத்துக்கொள்ள முடியாது. ஒட்டுமொத்தமாக அவர் உருவாக்கும் ஒரு உலகம் உண்டு. அதுதான் அவர் எழுதுவது. அங்கே கற்பனையும் நிஜமும் கலந்து கிடக்கின்றன. விட்டேத்தியான நிலையும் மிகையான உணர்ச்சிநிலையும் ஒரே சமயம் உள்ளன. அவரைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. அவரை இதுவரை எழுதப்பட்ட விசயங்களைக்கொண்டு புரிந்துகொள்ள முடியாது. அவரை புரிந்துகொள்ள நாம் இலக்கியம், அழகியல், தர்மம் என்றெல்லாம் என்னென்ன நினைக்கிறோமோ எல்லாவற்றையும் கொஞ்சம் கலைத்துக்கொள்ளவேண்டும். அதன்பின் அவரிடம் பேசமுடியும். சாருவிற்கு அளிக்கப்படும் இவ்விருதுக்கு என் பாராட்டுக்கள்.
கரசூர் பத்மபாரதிக்கு அளிக்கப்பட்ட விருது மாதிரியே இதுவுமொரு முக்கியமான விருது. வேறொரு களத்துக்குள் செல்வது மாதிரியான விருது.
என்.செல்வக்குமார்
***
அன்புள்ள ஜெ
நான் சாரு நிவேதிதாவின் படைப்புக்களைச் சரியாக படிக்கமுடியாமல் அவரைப்பற்றிச் சொல்லப்படும் அக்கப்போர்களை மட்டுமே படித்து அதைப்பேசிக்கொண்டிருந்தவன். பிறழ்வெழுத்து என்று நீங்கள் எழுதிய கட்டுரைதான் அவர் எழுதுவது என்ன ஜானர், அவருடைய சாராம்சமான விஷயங்களெல்லாம் என்னென்ன என்று எனக்குக் காட்டியவை. அந்தக் கட்டுரையின் வெளிச்சத்தில் அவருடைய எக்ஸைல் நாவலை வாசித்தேன். சிரிப்பு நையாண்டி என செல்லும் அந்த நாவல் நம்முடைய sanity யுடன் விளையாடுவது என்று புரிந்துகொண்டேன். முக்கியமான ஒரு தொடக்கம் அது. விருதுக்கு வாழ்த்துக்கள்.
ஆர்.என்.கிருஷ்ணா
***