சாரு, கடிதங்கள்-2

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

அன்புள்ள ஜெ.

சாரு நிவேதிதா விஷ்ணுபுரம் விருது பெறுவது மனநிறைவை அளிக்கும் செய்தி. நான் அவரைப் பற்றி நண்பர்களிடம் பேசுவதுண்டு. அவரைப் பற்றிக் கருத்துசொல்லும் பலபேர் அவரை படித்ததில்லை. அவர் எழுதும் குறிப்புகள், அவரைப்பற்றிய வசைகள் வழியாகவே அறிந்திருக்கிறார்கள். அவர் எழுதியதை விட அவர் ஒரு கதாபாத்திரமாக முன்வைத்ததே மிகுதி என்று என் நண்பர்கள் சொல்வார்கள். கொஞ்சம் பேர் அவர் நடிக்கிறார், பொய் சொல்கிறார், முன்னுக்குப்பின் பேசுகிறார் என்பார்கள்.

பலபேருக்கு தெரிந்த இலக்கியம் சென்ற காலத்திலே எழுதப்பட்டது. அன்றைக்கு எழுதுபவன் தன் எழுத்தை முன்வைத்துவிட்டு பேசாமல் ஒதுங்கி மறைந்து இருக்கவேண்டும் என்ற கருத்து இருந்தது. ஸக்கி, பியரி லாக்ளோஸ் எல்லாம் தலைமறைவாக, பொய்ப்பெயரில் எழுதினார்கள். அது ஒரு காலம். இன்றைக்கு எழுத்தாளர்கள் எழுத்துக்குச் சமானமாகவே புனையப்படுகிறார்கள். மௌனியே ஒரு மாபெரும் புனைவுதானே?அந்தப்புனைவையும் தன் எழுத்துபோலவே ஒரு விளையாட்டகாச் செய்பவர் சாரு. சாரு நிவேதிதா என்ற எழுத்தாளரும் சாரு நிவேதிதாவின் புனைவுதான். புனைவு விளையாட்டுத்தான்.

சாரு எல்லாவகையிலும் தமிழில் கவனித்தே ஆகவேண்டிய எழுத்தாளர். பேசப்பட்டே ஆகவேண்டிய படைப்பாளி. இன்றைக்கு அவரை வசைபாடலாம், நாளை அவர் இடம் அவருக்கு உண்டு. அவரை இன்றே கௌரவிக்கும் விஷ்ணுபுரம் அமைப்புக்கு நன்றி.

எஸ்.மாதவ்.

***

அன்புள்ள ஜெ,

சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது என்பது ஒரு கலக்கலான செய்தி. சாருவின் எழுத்தும் சரி எழுத்துச் செயல்பாடும் சரி தமிழ்ச்சமூகத்தை உசுப்புவதும், கலங்கடிப்பதும்தான். விளையாட்டா வினையா என்று தெரியாமல் அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். தன்வரலாற்றுக்கும் புனைவுக்கும் இடைவெளி இல்லாமலாக்குகிறார். அவர் உருவாக்கிய அந்த கலங்கடிக்கும் விசயத்தையே இந்த விருதும் செய்கிறது. சரியான எதிர்வினை என்று நினைத்துக்கொண்டேன்.

காந்திராஜன்

முந்தைய கட்டுரைகே.ஆர்.எஸ் – கல்வித்தகுதிகள்
அடுத்த கட்டுரைநேரு மதிப்பீடுகள்